கர்நாடக சங்கீதத்தை களமாகக் கொண்டு வந்த படங்கள் வெகு குறைவாகத்தான் இருக்கும். அந்தக் குறைந்த படங்களுக்குள் அதிக படங்கள் எடுத்தவர் என்று பேரெடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பி.யாகத்தான் இருக்கும். அவரின் படங்களில் சிகரம் தொட்ட படங்கள் என்று மிகப்பெரிய பட்டியலே உண்டு. அந்தப் பட்டியலில், சிகரங்களின் மேலே மேடை அமைத்து அமர்ந்த படம் என்றுதான் இதைச் சொல்லவேண்டும். அந்தப் படம் ‘சிந்து பைரவி’.
மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் உறவும் நட்பும் வைத்துக்கொள்கிற கதை என்று சொல்லமுடியுமா? அது வேறொரு நிறமாகிவிடும். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று சொல்லலாமா? இது மொத்த வாழ்வியலையே சொல்லும் கதையாயிற்றே! அபரிமிதமான அன்பு கொண்ட ரசிகையின் சரிதம் என்று சொன்னால் என்ன? சொல்லலாம்... ஆனால், கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் சொல்கிற மிகப்பெரிய பொறுப்புமிக்க, கெளரவம் மிக்க படமாயிற்றே...! குடும்பக் கட்டமைப்பின் உன்னதத்தை உயிர்ப்புடன் சொன்ன செல்லுலாய்டு ஆயிற்றே! இப்படி பொத்தாம்பொதுவாகச் சொன்னால், ஒவ்வொரு வாத்தியக் கருவிகளும் எழுந்து வந்து, கோபித்துக்கொள்ளும். அப்படியொரு ஜீவபடைப்புதான் சிந்துபைரவி!
ஜே.கே.பி. எனும் கர்நாடக இசைக்கலைஞர். அவர் பாடினால், மொத்த அரங்கமும் வாய் பொத்தி, காது கூர்மையாக்கிக் கேட்கும். கண்மூடிக்கிறங்கும். தலையாட்டி ரசிக்கும். ஜேகேபி கச்சேரி என்றால் ஹால்... ஹவுஸ்ஃபுல். ஆல் டைம் ஹால் ஹவுஸ்ஃபுல்.
சமூகத்தில் மிகப்பெரிய கெளரவம். ரசிகர்களிடம் அபரிமித அன்பு. உடனுள்ள கலைஞர்கள் காட்டுகிற மரியாதை. இவ்வளவு இருந்தும் ஜே.கே.பிக்கு ஒருகுறை... அவர் மனைவி பைரவிக்கு இசை கேட்கும் ஞானம் கடுகளவும் இல்லை. அந்த பைரவிக்கு ஒரேயொரு குறை... குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்பதால் உருகிக் கொண்டிருப்பவர். ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள காலநேரம் வரவில்லையே என்று மருகிக் கொண்டிருப்பவர்!
» தீபாவளிக்கு 'மாஸ்டர்' டீஸர்?
» ஆனந்த ஷங்கர் படம்; 4 நாட்கள் படப்பிடிப்பில் விஷால் கலந்துகொள்ளாதது ஏன்?- வதந்திக்கு முற்றுப்புள்ளி
ஒருநாள்... கச்சேரியை ரசிக்க வருகிறாள் சிந்து. இடையே பேசுகிறாள். கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு, வடமொழியிலும் தெலுங்கிலுமாகப் பாடினால் போதுமா. தமிழில் பாடினால் எல்லோரும் ரசிப்பார்களே என்கிறாள். கர்நாடக சங்கீதத்தில் தமிழைச் சேர்ப்பதா? என்று கோபமாகிறார் ஜே.கே.பி. அங்கே, அவளுக்கு மைக் தரப்படுகிறது. பாடுகிறாள். தமிழில் பாடியவள் முடிக்கும்போது அப்படியே வடமொழிக்குள் சஞ்சாரிக்கிறாள். ஒருபக்கம் கோபம், இன்னொரு பக்கம் வலி. மொத்தமாக அவமானம். ஜே.கே.பி. முகத்திலும் மனத்திலும் எள்ளும்கொள்ளும் வெடிக்கிறது.
அடுத்தடுத்த தருணங்களில் பேசக் கிடைக்கிற வாய்ப்பில், பரஸ்பரம் புரிந்துகொள்கிறார்கள். இன்னும் புரிந்துகொள்ளப் பேசுகிறார்கள். அப்படிப் பேசிக்கொள்வதற்காகவே சந்தித்துக்கொள்கிறார்கள். சந்தித்துப் பேசுவதற்காகவே பொய் சொல்கிறார்கள். பொய் சொல்லும்போதே குற்ற உணர்வும் இது வேறு எங்கோ இட்டுச் செல்கிறதே எனும் ஜாக்கிரதை கலந்த பய உணர்வும் பொங்குகிறது. ஆனால் ஜாக்கிரதை உணர்வையும் பய உணர்வையும் காதலும் காமமும் சேர்ந்து கூட்டணி போட்டு ஜெயிக்கிறது.
கர்நாடக சங்கீதத்தில் தமிழை இணைத்தது போல் தன் வாழ்க்கைக்குள்ளும் சிந்துவை இணைத்துக்கொள்ள முனைகிறார் ஜே.கே.பி. ஆனால் அப்படியெல்லாம் விடத்தயாராக இல்லை பைரவியும் பைரவியின் மீது பிரியம் கொண்ட இசைகோஷ்டியைச் சேர்ந்தவர்களும்!
சிந்துவைச் சந்தித்து, உருட்டி, மிரட்டி ஊரைவிட்டே அனுப்புகிறார்கள். அவள் எங்கே? தெரியவில்லை. அவளில்லாமல் இசையில்லை எனும் முடிவுக்கு வந்துவிடுகிறார் ஜே.கே.பி. பாடுவதில்லை. கச்சேரி பண்ணுவதில்லை. மேடை ஏறுவதே இல்லை. எவருடனும் பேசுவதுமில்லை. இசைத்தேனில் மூழ்கி முத்தெடுத்தவர், மதுபோதைக் கோப்பையில் தன்னையே இழக்கிறார். மதிப்பு, மரியாதை, கெளரவம், பெயர், அந்தஸ்து என சகலத்தையும் இழந்து திரிகிறார். தன் இசையால் கேட்பவர்களை மூழ்கச் செய்தவர்... மதுவில் மூழ்கிப் போகிறார்.
பைரவியால் தன் கணவரை அப்படிப் பார்க்கமுடியவில்லை. விளம்பரம் செய்து சிந்துவை வரவழைக்கிறார்கள். வருகிறேன் என வாக்குறுதி கொடுக்கிறார். மீண்டும் ஜே.கே.பி. என்ற விளம்பரத்துடன் மேடையும் கச்சேரியும் பெருங்கூட்டமுமாக இருக்க... அங்கே பழைய உற்சாகத்துடன் கம்பீரமாக ஜே.கே.பி. பாட... சிந்து வருகிறாள். கச்சேரி களைகட்டுகிறது. குடும்பத்துக்குள்ளேயே அவளைச் சேர்க்க பைரவி தயாராக இருக்கிறாள். தன் வாழ்வில் பங்கிட்டுக்கொள்ள, சிந்துவுக்கு இடம் கொடுக்க முடிவு செய்கிறாள். ஆனால் சிந்து தயாராக இல்லை. மாறாக, பரிசொன்று தருகிறாள். ஜே.கே.பி. - பைரவி தம்பதிக்கு, ஜே.கே.பி.யின் வாரிசையே பரிசாகத் தருகிறாள். விடைபெறுகிறாள்.
அந்தக் கச்சேரியில் இருந்தும் சிந்து - பைரவி - ஜே.கே.பி.யின் உணர்வுக்குவியல்களில் இருந்தும் அந்தக் குடும்பத்தினரிடம் இருந்தும், முக்கியமாக... அந்த இசையில் இருந்தும்... நம்மால்தான் விடைபெற்றுக்கொள்ள முடியவில்லை.
கலைஞர்களுக்கு அது பாட்டோ பரதமோ, எழுத்தோ ஓவியமோ... இப்படியொரு ரசிகரோ ரசிகையோ கிடைப்பார்கள். அப்படிக் கிடைத்து, அவர்களே வாழ்க்கைத்துணை எனும் இடத்துக்கு வர நேர்ந்தால், வரும் சூழல் உருவானால், என்னாகும் என்பதை ஆர்மோனியப் பெட்டியின் ஸ்ருதி விலகாத திரைக்கதையுடன் ஸ்வர சஞ்சாரம் செய்திருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு சாதாரண கதைதான். ஆனால் உள்ளார்ந்து பார்க்கும்போதுதான், சிக்கல்களும் சிடுக்குகளும் கஷ்டங்களும் நஷ்டங்களும் புரியவரும். ஒரு பாட்டுக்கு நோட்ஸ் எழுதுகிற அளவுக்கான பேப்பரில் எழுதிவிடுகிற கதைதான். ஆனால், அதை திரைக்கதை ஜாலங்கள் கோர்த்துக் கோர்த்து, ஒரு வீணையின் நாதம் போல் திரையாக்கியிருப்பார் பாலசந்தர்.
சிவகுமார் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் ஜே.கே.பி. என்கிற கதாபாத்திரம், சிவகுமாரின் வாழ்நாள் கேரக்டர். ஓர் இசைக்கலைஞனாகவே அவதானித்திருப்பார். சிந்துவாக சுஹாசினி. படபட துறுதுறு பட்டாசு. பொதுவாகவே கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவரின் பல படங்களின் நாயகிகள் அப்படித்தான் இருப்பார்கள். இதில் சிந்துவாக, அப்படித்தான் பண்ணியிருப்பார் சுஹாசினி. அதிலும் அந்த கள்ளமில்லாச் சிரிப்பு... சுஹாசினிக்கு பலம். அது சிந்துவுக்கும் பலம் கொடுத்தது!
பைரவியாக சுலக்ஷணா. அப்பாவி. அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது சமையலும் கணவனின் உடல்நலமுமாகத்தான் இருக்கும். மிக அழகாக, நேர்த்தியாக, கண்களாலும் உடல்மொழியாலும் பிரமாதப்படுத்தியிருப்பார் சுலக்ஷணா.
இசைக்குழுவில் உள்ள டெல்லிகணேஷும் அவரின் கோபமும் போதையும் செம ரகம். ஜனகராஜும் அவரின் உண்மை சொல்லத் துடிக்கிற, வெடிக்கத் தயாராகிற தலையும் உண்மையிலேயே தூள். அந்த பென்ஷன் தாத்தா சின்ன சீன். பெரிய டச். மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி, ஜேகேபியின் டிரைவர். ‘டேய். பசிக்குதுடா காசு கொடுடா’ என்று கேட்பார் ஜேகேபி. ஆனால் அது தண்ணி வாங்குவதற்கு! பணத்தை எடுத்தவர், ‘அண்ணா, வாங்கண்ணா, பக்கத்துலதான் ஹோட்டல் இருக்கு. வந்து சாப்பிடுங்கண்ணா’ என்றதும் ‘டேய் போடாபோடா’ என்று அலட்சியமாய்ச் சொல்லிவிட்டுச் செல்ல, துவண்டு நிற்பார் அந்த துணை கேரக்டர்.
ஜேகேபியின் குடும்ப நண்பரின் குடும்பம் டி.எஸ்.ராகவேந்தரும் மணிமாலாவும். இந்த மணிமாலா வேறு யாருமல்ல. இவருக்கும் யாரோ ஒருவருக்கும் பிறந்தவர்தான் சுஹாசினி. இது தெரிவதற்கு முன்னதாக, ஜேகேபியுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளச் சொல்லி சுஹாசினியை, அசிங்கம் அசிங்கமாகப் பேசுவார் மணிமாலா; ஏசுவார். ஆனால் தன் மகள் என்று தெரிந்ததும் பாசத்தில் பொங்கி, அன்பில் குழைந்து, வாஞ்சையில் மயங்கி.. ஆஹா... மணிமாலாவையெல்லாம் தமிழ்சினிமா இன்னும் நன்றாகவே பயன்படுத்தியிருக்கலாம்.
டி.எஸ்.ராகவேந்தர் வீட்டு டிரைவர் கிருஷ்ணா, சுஹாசினி வீட்டின் கீழே பிரஸ் வைத்துக்கொண்டு, காதலை சுஹாசினியிடம் பிரஸ் பண்ணிச் சொல்லும் பிரதாப் போத்தன் என சின்னச் சின்ன ரோல்கள்... ஆனால் எல்லா கதாபாத்திரங்களும் நெஞ்சமெல்லாம் நிறைந்துவிடுவார்கள்!
’பத்மஸ்ரீ விருதுன்னா?, எல்லாருக்கு முன்னாடியும் பேரெழுதி, பேப்பர் கொடுப்பாங்க. ஜனாதிபதி கொடுப்பாரு’ , அவ்ளோதானா. ஒரு கப்புகிப்பு, மெடல்கிடல்னு தங்கம் எதுவும் கிடையாதா?’ என்று கேட்க, ‘பேருதான் பெரிய இசைக்கலைஞர் ஜேகேபியோட பொண்டாட்டி. ஆனா சங்கீதம்னா..’ என்று சொல்லிமுடிக்க, ‘கிலோ என்ன விலை’ என்று கத்தரிக்காய்க்காரனிடம் கேட்பார் சுலக்ஷணா.
சிவகுமாரும் சுஹாசினியும் ஒருவாரம் பேசிக்கொள்ளமாட்டார்கள். சண்டை. ஆனால் அந்த ஒருவாரத்தை படபடவென ஓடுகிற காலண்டர் பேப்பராகக் காட்டினால் இது நாலாயிரத்துச் சொச்சமான படமாகிவிடுமே! அந்த ஒரு வாரத்தை... ஒவ்வொரு நாளும் வருகிற குமுதம், விகடன், கல்கி, இதயம் என்பதைக் கொண்டு காட்டியிருப்பார். அதுதான் பாலசந்தர் டச். டைரக்ஷன் டச்.
சண்டை ஓய்ந்துவிட்டதாக மனம் சொல்லும். சிவகுமாரைப் பார்க்க மனம் தவிக்கும். சுஹாசினி பிரஸ் வழியே கிளம்பிச் செல்வார். அங்கே, மிஷினின் அருகில் அதேசமயம் சிவகுமாரின் போஸ்டர். அந்த போஸ்டரின் முகத்தில் கால் வைத்திருப்பார் மிஷின் மேன். ‘அண்ணே ஒரு நிமிஷம்’ என்று போஸ்டரை எடுத்து அழகாக மடித்துவைப்பார். இதுவும் பாலசந்தர் டச்.
சுலக்ஷணாவுக்கு கையில் சிராய்ப்பு. என்ன என்று கேட்பார் சிவகுமார். அவர் காரணம் சொல்லுவார். கட் பண்ணினால், காமிரா அப்படியே சுருண்டு உருண்டு சுருண்டு உருண்டு போகும். அங்கப்பிரதட்சணம் என்பதை அழகாய்க் காட்டிவிடுவார். இதுவும் பாலசந்தர் டச்.
‘மன்னி நான் குடிக்கலை மன்னி. சும்மா குடிச்சிட்டுப் பேசினா, ஒண்ணும் தெரியாது. அதான் மன்னி, குடிச்ச மாதிரி நடிச்சேன்’ என்பார் டெல்லிகணேஷ். இதில் நடிப்பிலும் மிருதங்கத்திலும் வெளுத்துவாங்கியிருப்பார் அவர்.
’நானொரு சிந்து’ பாடலில், கன்றும் பசுவுமாக இருக்கிற சிலை. சிவகுமாரும் சுஹாசினியும் நடந்து வரும் போது, மெல்ல மெல்ல விரல்கள் உரச, கைகள் உரச, தோள்கள் உரச... அப்போது இசையும் உரசிக்கொண்டு உயிரையே உலுக்கிப்போடும்.
சிந்து ஊருக்குப் போய்விட்டாள் என்பதை, சின்னப்பசங்க ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தபடி ரயில்விளையாட்டு விளையாடுவதைக் காட்டுவார். பாலசந்தர் டச்.
பாட்டு கேட்டுக் கொண்டிருப்பார் சிவகுமார். மிக்ஸி அரைத்துக்கொண்டிருக்கும் சுலக்ஷணா. அப்போது சுலக்ஷணாவை வந்து திட்டுவார் சிவகுமார். டெல்லி போறீங்களே... பருப்புப் பொடி பண்றேன் என்பார். இதைத்தவிர எதுவுமே தெரியாதா என்று எரிந்து விழுவார். லதாமங்கேஷ்கரோட மீரா பஜன் கேட்டுக்கிட்டிருக்கேன், ஞானசூன்யம் என்று திட்டுவார். உடனே சுலக்ஷணா, ‘லதாமங்கேஷ்கரா உங்களுக்கு பருப்புப் பொடி பண்ணித்தரப்போறா’ என்பார். தியேட்டரின் கைத்தட்டல் அந்த லதாமங்கேஷ்கருக்கே கேட்டிருக்கும்.
இப்படி படத்தை சிலாகித்து சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். சிவகுமாரும் சுஹாசினியும் கூடிவிட்டார்கள் என்பதையும் அவரின் காமம் கட்டற்றுப் போனது என்பதையும் அழகியலோடு காட்டியிருப்பார். பாலசந்தர் டச்.
படத்தின் கதாநாயகன் சிவகுமார்தான். ஆனால் முதல் கதாநாயகன் இளையராஜா. அவரின் இசைதான் சிந்துபைரவியின் நாதம், கீதம், வேதம், சாரம் எல்லாமே! முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதத்தை மிகுந்த சாந்நித்தியத்துடன் படைத்து வார்த்து பரிமாறியிருப்பார் இசைஞானி!
’மஹாகணபதிம்’, ’மரிமரி நின்னே’, ’நானொரு சிந்து’, ’பாடறியேன்’, ’பூமாலை வாங்கி வந்தால்’, ’கலைவாணியே...’ என்று பாடல்கள் மொத்தமும் திருவையாறு ஸ்பெஷல். ’ஏய் தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ பாடல், ராகமாலிகையின் டப்பாங்குத்து. அதேபோல வைரமுத்துவின் வரிகள், நம்மை என்னவோ செய்யும். அந்த வரிகளின் மென்மை கூட, நம் மனசைக் கீறிவிட்டுச் செல்லும். ஜேசுதாஸின் ஐஸ்க்ரீம் குரல், நம் மன வெப்பத்தையெல்லாம் தணித்து ஜில்லாக்கிவிடும். சிவகுமாருக்கு தண்ணி ஊத்திக் கொடுத்து, அவரின் கம்பீரம் குலைக்கும் சிவரஞ்சனி கேரக்டர் பெண்ணும், சிவசந்திரனும் நமக்கு கோபத்தை வரவழைப்பார்கள்.
இயக்குநர் வஸந்தும் எழுத்தாளர் பாலகுமாரனும் உதவி இயக்குநர்கள். சுரேஷ் கிருஷ்ணா இணை இயக்குநர். கதை வசன உதவி, அனந்து எனும் தூண். வழக்கம்போல் ரகுநாத ரெட்டியின் காமிரா ஜாலம் காட்டும். உங்க படத்துக்கு சம்பளமே வேணாம் என்று கடலும் அலையும் கரையும் மிகச் சிறப்பாக நடித்துவிட்டுப் போகும்.
தன் கணவருக்கு இரண்டாவது மனைவியாக சுஹாசினியை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து, அதை டெல்லி கணேஷ் வீட்டுக்கு வந்து, அவரின் குழந்தையைக் கொண்டு, சுவாமி படங்களுக்கு முன்னே எடுக்கச் சொல்லி முடிவு செய்வார். அப்படி என்பதற்குள் முடிந்துவிடுகிற காட்சிதான். ஆனால், அங்கே உள்ள சுவாமி படங்கள் எல்லாமே, இரண்டு மனைவியர் கொண்ட சுவாமி படங்களாக மாட்டி வைத்திருப்பார். இதுதான் பாலசந்தர் டச். டைரக்டர் டச்.
ஒரு நல்ல ஓவியத்தை, அழகான ஆங்கிளுடன் கொண்ட படத்தைச் சட்டமிட்டு பத்திரப்படுத்தி, மாட்டிவைத்துக்கொள்வோம்தானே! மனசில் பத்திரமாய் உட்கார்ந்திருக்கிறார்கள் சிந்துவும்பைரவியும் சிந்துபைரவியும்! மேடையிட்டு அமர்ந்திருக்கிறார்கள் ஜேகேபியும்... முக்கியமாக கேபியும்! ‘பாடறியேன்’ பாடிய சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது. பாலசந்தரும் இளையராஜாவும் இணைந்த முதல் படம் இது. முதல் படத்திலேயே ராக சங்கமம் நிகழ்த்தியிருப்பார்கள்.
இப்படியொரு நடிப்புடன், தெளிந்த திரைக்கதையுடன், ஜீவனுள்ள இசையுடன்... இன்னொரு ’சிந்துபைரவி’ பிறக்க வாய்ப்பே இல்லை. ஜென்மத்துக்கும் நம் மனதுள் இருக்கிற சிந்துபைரவிக்கு இறப்பே இல்லை. தலைமுறையைக் கடந்து ஜீவித்துக்கொண்டே இருக்கும் காவியம்!
1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியானது ‘சிந்து பைரவி’. படம் வெளியாகி 35 வருடங்களாகின்றன. சங்கீதத்தை மையமாகக் கொண்டு, இசைக்கலைஞனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ரசிகையின் மனதைச் சொல்லி, இசைக்கலைஞனின் மனைவியின் தவிப்பைச் சொல்லி, எல்லாவற்றுக்கும் மேலாக, கர்நாடக இசையின் அடர்த்தியைச் சொல்லி... இந்த 35 வருடங்களில்... இப்படியொரு படம் வரவில்லை. அப்படியே வந்தாலும் ‘சிந்து பைரவி’ தொட்ட சிகரத்தையும் இயக்குநர் சிகரத்தையும் அந்தப் படம் தாண்டுமா என்பதும் கேள்விக்குறிதான்!
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago