மறக்க முடியாத ‘பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர், கோபி’... 39 ஆண்டுகளாக நினைவில் நிற்கும் ‘அந்த 7 நாட்கள்’! 

By வி. ராம்ஜி

மிகப்பெரிய கனமான விஷயத்தைக் கூட நகைச்சுவையுடன் சொல்வது என்பது சாதாரண விஷயமல்ல. கலைவாணர் என்.எஸ்.கே. தொடங்கி பலரும் இந்த விஷயத்தை எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள். இதில், கண்களில் நீர் கசியச் செய்துகொண்டிருக்கும் போதே, குபுக்கென்று சிரிக்கவைப்பதும், வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் போதே, பொசுக்கென்று அழவைப்பதும் என தடக் தடக் என்று நம்மை இப்படியும் அப்படியுமாக ஆக்கியவர் கே.பாக்யராஜ். காதலையும் காதல் தோல்வியையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பார் பாக்யராஜ். முக்கியமாக, மனித கண்ணியத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்!

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைக்க வேண்டும். பதறவைக்க வேண்டும். பரிதவிக்கவைக்கவேண்டும். கோபமூட்ட வேண்டும். வேதனையுறச் செய்யவேண்டும். நம்மைத் தவிக்க விடவேண்டும். இப்படி எல்லாமுமாகச் செய்ததில்தான் அடங்கியிருக்கிறது பாக்யராஜின் திரைக்கதை மாயாஜாலம். இப்படி ஏழு தலைமுறை கடந்தும் நினைவில் நிற்கும் காவியமாக அவர் படைத்ததுதான் ’அந்த 7 நாட்கள்’.

’சுவரில்லாத சித்திரங்கள்’ பாக்யராஜ் இயக்கத்தில் முதல் படம். அடுத்து ‘ஒரு கை ஓசை’. இதன் பின்னர் மிகப்பெரிய பாய்ச்சலாக வந்ததுதான் ‘மெளன கீதங்கள்’. இதன் பின்னர், ‘இன்று போய் நாளை வா’ தந்தார். வித்தியாச முயற்சியாக ‘விடியும் வரை காத்திரு’ வழங்கினார்.இதன் பிறகுதான் ‘மெளன கீதங்கள்’ அளவுக்கு எல்லோரையும் ஈர்க்கும் வகையில், குறிப்பாக பெண்கள் அனைவரையும் போற்றும் வகையில் ‘அந்த 7 நாட்கள்’ கொடுத்தார்.

திரைக்கதை எனும் உத்திதான், சினிமாவுக்கான ஆணிவேர். அந்த திரைக்கதையில் ஜித்து வேலைகள் செய்யும் மாயக்காரர் பாக்யராஜ். இந்தப் படமும் அவரின் திரைக்கதைக்கும் கதை சொல்லும் திறனுக்குமான ஆகச் சிறந்த ஒருசோறு பதம்.

படத்தின் டைட்டில் ஆரம்பமாகும். அப்போது, திருமணக்கோலத்தில் நாயகி அம்பிகா அமர்ந்திருக்க, கல்யாண வேலைகள் நடந்துகொண்டிருக்கும். ‘பரவாயில்லியே... படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகற மாதிரி எடுக்கறதுக்கே தில்லு வேணும்பா’ என்று விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருப்போம். இறந்துவிட்ட தன் முதல் மனைவியின் குழந்தையுடன் டாக்டர் ராஜேஷ் மணமேடைக்கு வருவார். ஆடியன்ஸ் முகத்தில் ஆச்சரியம் புருவம் உயர்த்தும். ‘அட...’ போடுவோம். டைட்டில் ஓடிக்கொண்டே இருக்கும். தாலிகட்டுவார். டைட்டில் முடியும்.

வயதான, நோய்வாய்ப்பட்டு, படுத்தபடுக்கையாகிக் கிடக்கிற அம்மாவிடம் மனைவியை அறிமுகப்படுத்தி வைப்பார் டாக்டர். அன்றிரவு... முதலிரவு. பேசிக்கொண்டிருக்கும் போதே மயங்கிச் சரிவார் அம்பிகா. மாத்திரை, ஊசி. ‘சரியான தூக்கமில்லை. சாப்பிட்டது ஒத்துக்கலை போல’ என்று தன் அப்பாவிடம் சொல்வார் டாக்டர் ராஜேஷ். ஆனால் மருத்துவருக்குத் தெரியும்... முதலிரவு வேளையில், மனைவி தூக்கமாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் என்பது!

பிறகு, காரணம் கேட்க, பிளாஷ்பேக் விரியும்.

பாலக்காட்டு மாதவன் தன் சிஷ்யனுடன் வருவார். ஒரு ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு, கவலை என்று ஆரம்பித்த கதை, அப்படியே வேறொரு தளத்துக்குள் நுழைந்து, நம்மை அப்படியே கட்டிப்போடுகிற செப்படிவித்தை... இதுதான் பாக்யராஜ் ஸ்டைல்.

பணத்தை எடுக்க பாத்ரூம் செல்லுவதும் அம்பிகாவின் ஹேர்பின்னையே சாவியாகப் பயன்படுத்திக் கொள்வதும் பிறந்தமேனியில் குளிப்பதைப் பார்த்த கோபத்தில், குத்தாட்டம் போடுகிற காஜாஷெரீப்பை வெளுத்தெடுப்பதும் என படம் முழுக்க வருகிற காமெடி ரகளைகள், புது தினுசு.

கேரள வரவான அம்பிகா தமிழ்ப் பெண்ணாகவும் நம்மூர் பாக்யராஜ், பாலக்காட்டு மாதவனாகவும் வழக்கம்போல் அவரின் கல்லாபெட்டி சிங்கார நகைச்சுவைகளும் என படம் மகிழவும் நெகிழவும் மாறிமாறி நம்மை ஆட்படுத்திக்கொண்டே இருக்கும்.

‘மனசுக்குப் பிடிச்சவரோட சேரவிடாம பிரிச்சிட்டாங்க. கட்டாயக்கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க’ என்பதையெல்லாம் ராஜேஷ் தெரிந்துகொண்டதும்... ‘எங்க அம்மா இன்னும் ஒருவாரத்துல இறந்துருவாங்க. அவங்க நிம்மதிக்காகத்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க அம்மாவுக்காக ஒருவாரம் இங்கே இரு. அதுக்குள்ளே உன் காதலன் எங்கே இருக்காருன்னு கண்டுபிடிச்சு, நானே உன்னை சேர்த்துவைக்கிறேன்’ என்று ராஜேஷ் சொல்ல, அந்த டாக்டர் கேரக்டர் உயர்ந்த, சிறந்த மருந்தென நமக்குள்ளே புகுந்து நம் மனதை என்னவோ செய்யும்.

காதலி இன்னொருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் தற்கொலைக்கு இறங்குகிறாள். காப்பாற்றி விவரம் கேட்ட கணவன், அவளை காதலுடனேயே சேர்த்துவைப்பதாக உறுதி கொடுக்கிறான். அதன்படி காதலனை சந்தித்து, மிகப்பக்குவமாகப் பேசி, சேர்த்துவைப்பதற்கான முயற்சிகள் எடுக்கிறான். இப்படியொரு கதை, அதை எள்ளளவும் முகம் சுளிக்கச் செய்யாமலும் நகம் கடிக்க வைக்காமலும் ‘நல்லா சொல்றாங்கய்யா சமூகத்துக்கு நீதி’ என தலையிலடித்துக் கொள்ளாமலும் செய்திருப்பதில்தான் பாக்யராஜின் வெற்றி சீக்ரெட் அடங்கியிருக்கிறது.

‘இந்த உலகத்துல பசிக்காம இருக்கறதுக்கு என்னென்ன டெக்னிக் இருக்கோ அது அத்தனையும் எங்க ஆசானுக்குத் தெரியும். என்று துணியில் தண்ணீரை நனைத்து வயிற்றில் கட்டிக் கொள்வார் என்று காஜாஷெரீப் சொல்ல, அம்பிகா, அங்கே ஆர்மோனியத்தில் டியூன் போட்டுக்கொண்டிருக்கும் பாக்யராஜைப் பார்ப்பார். ‘ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான்தன்னே...’ என்று பாடிக்கொண்டிருப்பார் பாலக்காட்டு மாதவன். ’அப்ப உனக்குடா என்று அம்பிகா கேட்க, இந்த விஷயத்துல எங்க ஆசான். கரெக்ட்டா இருப்பாருங்க. எனக்கு இட்லி வாங்கித்தின்ன காசு கொடுத்துட்டாரு’ என்பார் காஜாஷெரீப்.

நவராத்திரி கொலு. பொம்மையின் மூலமாக காதலைச் சொல்லும் அம்பிகா, அந்தக் காதலை பொம்மை மூலமாகவே மறுக்கும் பாக்யராஜ், கடைகளில் திருடிய சாமான்களை பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் காஜாஷெரீப். அந்தப் பொருட்களையெல்லாம் அள்ளிக்கொண்டு போகும் போலீஸ். பொருட்கள் விரித்த சினிமா போஸ்டர். அதில், ’திருடாதே’ பட போஸ்டர். காட்சிக்குத் தகுந்தது போலவும் பட டைட்டில். தன் ஆதர்ஷ எம்ஜிஆரையும் காட்டுகிற புத்திசாலித்தனம்.

இன்னொன்றையும் யோசிக்க பிரமிப்பாகத்தான் இருக்கிறது. படம் இசை சம்பந்தப்பட்ட காதல், சமூகக் கருத்து கொண்ட படம். இசைதான் அடித்தளம். ஆனால் படத்தில் வதவதவெனப் பாடல்கள் இருக்காது. எம்.எஸ்.வி. யின் இசையும் பாடலும் படத்தின் கனத்தை இன்னும் உணர்த்தின.

ஒருவழியாக, ராஜேஷ், பாக்யராஜைப் பார்த்துவிடுவார். ‘நான் ஒரு சினிமா எடுக்கறேன். நீங்கதான் மியூஸிக் போடுறீங்க’ என்று அவரை அழைத்துக்கொண்டு, ஓரிடத்தில் தங்கவைப்பார். படத்தின் கதையைச் சொல்கிறேன் என்று பாலக்காட்டு மாதவன், வசந்தி, டாக்டர் ஆகியோரின் வாழ்க்கையை கதை போல சொல்லுவார் ராஜேஷ்.

ஒருநாள்... ஒரு காட்சி. போன் வரும். வேலைக்காரர் பேசுவார். ‘அம்மா, இறந்துபோயிட்டாங்கய்யா’ என்பார். அம்மா இறந்த துக்கம், வலி, அனைத்தையும் அடக்கிக்கொண்டு இறுக்கமாய் வருவார். அந்த சமயத்தில் பாத்ரூம் போய்விட்டு, வேஷ்டியை சரிசெய்துகொண்டே, ‘ஆ ஹீரோவோட அம்மை கேரக்டர், மரிச்சுப் போயியா... பிழைச்சுப் போயியா சாரே...’ என்பார். கண்ணீரைக் கட்டுக்குள் வைத்தபடி, ‘அவங்க செத்துட்டாங்க’ என்பார் ராஜேஷ். உடனே பாக்யராஜ், ‘சூப்பர் சாரே. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி இருந்தாத்தான் சாரே சரியாயிட்டு இருக்கும்னு நெனைச்சேன்’ என்பார். இந்தக் காட்சிக்கு அழவும் வைத்து சிரிக்கவும் செய்திருப்பார் பாக்யராஜ்.
‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ’, ‘எண்ணியிருந்தது ஈடேற..’ என்று எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆக, படம் பார்ப்பவர்கள் அனைவரும் பாக்யராஜூம் அம்பிகாவும் சேரணுமே சேரணுமே...’ என்று தவித்துக்கொண்டிருப்பார்கள். தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற அந்த க்ளைமாக்ஸ்... யாராலும் அவ்வளவு சுலபமாக கடப்பதோ மறப்பதோ முடியவே முடியாது.

மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை என்றும் அதைப் பற்றி யார் மூலமோ தெரிந்து கொண்ட பாக்யராஜ், பின்னாளில் இதையே ஒரு கருவாக, கதையாக, திரைக்கதையாக, சினிமாவாக உருவாக்கினார் என்றும் சொல்வார்கள்.

ஸ்ரீதரின் ‘கல்யாணப்பரிசு’ வசந்தி கேரக்டர் போலவே ‘அந்த 7 நாட்கள்’ வசந்தியையும் மறக்கவே முடியாது. அம்பிகாவின் மிகச்சிறந்த நடிப்பாற்றலை, வெகு அழகாக வெளிப்படுத்தியிருப்பார் இயக்குநர். டாக்டராக வரும் ராஜேஷின் பண்பட்ட நடிப்பையும் அவரின் அக்மார்க் அன்பு ததும்பும் குரலையும் பண்பையும் சொல்லியே ஆகவேண்டும்.

‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். ஆனால் உங்களுடைய மனைவி ஒருபோதும் எனக்குக் காதலியாக முடியாது’ என்று சொல்லிவிட்டு, ‘இது கொஞ்சம் ஓல்டு க்ளைமாக்ஸ்தான். ஆனா ஓல்டு இஸ் கோல்டு’ என்று ஆர்மோனியப் பெட்டியுடன் நடந்து போக... கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் கார்டு விழும். மொத்த தியேட்டரும் கைத்தட்டி வரவேற்றது... அந்த முடிவையும் பாக்யராஜையும்!

1981ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி வெளியானது ‘அந்த 7 நாட்கள்’. தீபாவளி வெளியீடாக வந்து மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. படம் வெளியாகி, 39 ஆண்டுகளாகின்றன. ஆனாலும் தமிழ் சினிமா இருக்கும் வரை, ‘அந்த 7 நாட்கள்’ படத்தையும் படத்தின் க்ளைமாக்ஸையும் முக்கியமாக... பாலக்காட்டு மாதவனையும் நினைவில் வைத்து கொண்டாடிக்கொண்டே இருக்கும்! கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள் ரசிகர்கள்!

பாக்யராஜுக்கும் நாயகன் பாலக்காட்டு மாதவனுக்கும் ‘அந்த 7 நாட்கள்’ குழுவினருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்