’உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே’, ‘சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு!’; ரஜினி, ஏவி.எம்., எஸ்.பி.எம்., இளையராஜாவின் ‘நல்லவனுக்கு நல்லவன்!’ - 36 ஆண்டுகளாகியும் இன்னும் ‘நல்லவனுக்கு நல்லவன்’ தான்! 

By வி. ராம்ஜி

ரவுடியைக் காதலிப்பதும் ரவுடியை ரவுடியாகவே ஏற்றுக்கொள்வதும் இன்றைக்கு சினிமாவில் டிரெண்டாகிவிட்டது. ஆனால் ரவுடியாக இருந்தவனைக் கல்யாணம் செய்துகொண்டு, அவன் ரவுடியாக இருந்தாலும் நல்ல குணங்கள் கொண்டவன் என்பதை அவனுக்கே உணர்த்தி, பழைய குணங்களையெல்லாம் கார்ப்பரேஷன் குப்பை லாரியில் பேக் பண்ணி எறிந்துவிட்டு, அவனை ‘நல்லவனுக்கு நல்லவன்’ என்று ஊரே சொல்லும்படி மாற்றிக் காட்டுகிறாள் மனைவி என்பதும் மனைவியே உலகம் என்று அவன் கண்ணியமாக வாழ்கிறான் என்பதும்தான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

ஏவி.எம். தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி,ராதிகா, கார்த்திக், துளசி, வி.கே.ராமசாமி, விசு, ஒய்.ஜி.மகேந்திரன் முதலானோரின் நடிப்பில் வெளியானதுதான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

அடிதடி, அடியாள், கெட்டதைத் துணிச்சலுடன் செய்யும் குணம், நல்லதைச் செய்கிற மனசு என்று இருக்கிறான் நாயகன். உறவென்று சொல்லிக்கொள்ள யாருமில்லாமல், தன்னிச்சையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவனிடம் அடைக்கலம் தேடி யதார்த்தமாக வருகிறாள் நாயகி.

பின்னர், அவளின் வீடுவாசலை அறிந்துகொண்டு அவளை அங்கே அழைத்துச் சென்று சேர்க்கிறான். ஆனால் உறவுகளின் மோசமான குணங்கள் தெரியவர, மீண்டும் அழைத்துச் செல்கிறான், வீட்டுக்கு. போலீஸ் உதவியுடன், உறவுக்கூட்டம் வந்து நாயகியை அனுப்பக் கேட்கிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ள அங்கே முடிவு செய்கிறார்கள். திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அவனின் அடாவடித்தனத்தையும் ரவுடித்தனத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்துகிறாள். நாயகனின் மீது அக்கறை கொண்ட போலீஸ் அதிகாரி, மிகப்பெரிய தொழிற்கூடம் வைத்திருக்கும் செல்வந்தரிடம் சிபாரிசு செய்கிறார். நாயகனை அவருக்குப் பிடித்துவிடுகிறது. வாழ்வில், மெல்ல மெல்ல உயருகிறான் நாயகன். உயர்த்துகிறார் அவர். ஒருகட்டத்தில், சொத்துகளையும் தொழிற்சாலையையும் நாயகனிடம் ஒப்படைக்கிறார். ஆனால் முதலாளியின் உறவுக்கூட்டம் ஆவேசமாகிறது.
தொழிற்சாலைக்கு முதலாளியாகிறார். நல்லவன் என்று பேரெடுக்கிறார். அவர்களுக்கு ஒரு மகள். ஒரிஜினல் முதலாளியின் மகன், நாயகனின் மகளைக் காதலிக்கிறார். குடி, கூத்து என்று இருப்பவனை திருமணம் செய்துகொள்ளாதே என்று தடுக்கிறார். ஆனால்., வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார்.

இதில் மனமுடைந்த நாயகி, இறந்துவிடுகிறார். தனிமரமாக நிற்கும் நாயகன், சொத்துகளையெல்லாம் ஒரிஜினல் முதலாளியின் மகனுக்கே கொடுத்துவிடுகிறார். அங்கே, சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி நடக்கிறது. மகளையும் மருமகனையும் காப்பாற்றுகிறார் நாயகன் என்பதுடன் நிறைவுறுகிறது திரைப்படம்.

படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான். ரவுடியாக இருக்கும் போது ஸ்டைலும் ஆக்‌ஷனும் அமர்க்களப்படும். மனைவி ராதிகாவிடம் சரண்டராகும் போது, ரஜினிக்குள் இருக்கும் அப்பாவித்தனமும் வெள்ளந்தி மனசும் வெளிப்படும். போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தர்ராஜனிடம் மரியாதையுடனும் முதலாளி விசுவிடம் விசுவாசத்துடனும் என கேரக்டரை உணர்ந்து நடிப்பில் அசத்தியிருப்பார்.

ரஜினியின் மனைவியாக ராதிகா. அவரின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. கெஞ்சி, கொஞ்சி, அதட்டி, மிரட்டி கணவனை நல்லவனாக்குவதற்கு ராதிகா எடுக்கும் முயற்சிகளிலெல்லாம் அவரின் நடிப்பு அமர்க்களப்படும்.

வழக்கம் போல் மேஜர் மிடுக்காக நடித்திருப்பார். விசு கலகலக்க வைத்திருப்பார். அவரின் வசனங்கள், பல இடங்களில் கைத்தட்டல்களை அள்ளிக்கொள்ளும். துறுதுறுவென இருக்கும் கார்த்திக்கின் நடிப்பும் பிரமாதம். ரஜினி மகளாக துளசியும் அழகுடனும் நடிப்புடனும் மின்னியிருப்பார். ‘சகலகலாவல்லனில்’ கமலுக்கு தங்கை. இதில் ரஜினியின் மகள்.

மனைவியிடம் மரியாதையும் மகளிடம் அன்பும் காட்டுகிற இடங்களிலெல்லாம் ரஜினியின் நடிப்பைப் பார்க்கமுடியும். ‘உங்க அம்மாவுக்குத் தெரியாம உன் லவ்வரோட சினிமாவுக்கு அனுப்பறேன். ஜாலியா... அதேசமயம் ஜா....க்கிரதையா வரணும்டா’ என்பார். மகளின் காதலுக்கு உதவிசெய்துவிட்டு, மனைவி ராதிகாவிடம் மாட்டிக்கொள்ளும் இடத்தில் அசடு வழியும் காமெடி ரஜினியையும் நிறைய இடங்களில் பார்க்கலாம்.

மருமகன் மாட்டிக்கொண்டுவிட்டான், ஆபத்து என்று தகவல் தெரியும் போது, ஆவேசத்துடன் நடந்து வருவார் வயதான ரஜினி. அப்போது பழைய ரவுடி ரஜினி, இந்த ரஜினி, பழைய ரஜினி, இந்த ரஜினி என்று கட் ஷாட்டுகள் வைக்க... தியேட்டரில் விசில் பறக்கும்.

ரஜினி வீட்டு பங்களா பிரமாண்டம். செட் போட்டிருப்பதே தெரியாது. சண்டைக்காட்சிகளும் அதகளம் பண்ணும். ‘யாரையும் அடிக்கக்கூடாது’ என்று சத்தியம் வாங்கியிருப்பார் ராதிகா. வழியில் ரஜினியை மடக்கி அடிப்பார்கள். அவரும் அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிக்காமல் வருவார். ’யாரையும் கைநீட்டி அடிக்கக்கூடாதுன்னுதான் சொன்னேன். அடி வாங்கிட்டு வானு சொல்லலை’ என்று சொல்லி உசுப்பேற்றுவார். திரும்பச் சென்று அவர்களை விட்டு வெளுத்தெடுப்பார். அந்த ஹீரோயிஸக் காட்சி, ரஜினியிஸக் காட்சி, படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று.

மகள் வீட்டை விட்டு போய்விட்டதும் கலங்குமிடம், ராதிகா இறந்ததும் ரஜினி துவளும் காட்சி என ரஜினியை நினைக்காமல், ரஜினியின் கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து அந்தக் காட்சிகளை வைத்திருப்பார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருப்பார் இளையராஜா. வெஸ்டர்ன் ப்ளஸ் டப்பாங்குத்து கலந்து ‘வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ பாடலும் படமாக்கிய விதமும் அபாரம். இந்தப் பாடலை ஜேசுதாஸிற்குக் கொடுத்திருப்பார்.

‘உன்னைத்தானே தஞ்சமென்று நம்பி வந்தேன் நானே’ என்ற பாடலை ஜேசுதாஸும் சுனந்தாவும் பாடியிருப்பார்கள். படத்தின் மிகப்பெரிய ஹிட் பாடல் இது. பின்னர், இந்தப் பாடலின் நான்கு வரிகள், ராதிகா இறந்ததும் பேத்தாஸ் பாடலாக வரும். இரண்டுமே நம் உள்ளம் உசுப்பிவிடுகிற பாடல்கள்தான்.

கார்த்திக், துளசிக்கு ‘முத்தாடுதே முத்தாடுதே’ பாடல் அழகான டூயட். தொழிலாளர்கள் கூடியிருக்கும் விழாவில், ‘நம்ம முதலாளி நல்ல முதலாளி’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. மகள் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்துகொண்டதும் ‘சிட்டுக்கு செல்லச்சிட்டுக்கு’ பாடல் மனதைக் கனக்கச் செய்து, கண்ணில் நீர் கசியச் செய்தது. வீட்டில் இப்படி காதலுக்காக வெளியேறியவர்களை நினைத்தும் குழந்தைகள் வெளியேறிவிடக்கூடாதே என்றும் காட்சியில் ஒன்றிப் போய் ஆடியன்ஸ் அழுது ரசித்தார்கள்.

ரஜினியின் மிகப்பிரமாண்ட வெற்றிப் படங்களின் வரிசையில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்துக்கு முக்கியமான இடம் உண்டு. அவரின் மார்க்கெட் வேல்யூ ஏற்றிய படங்களில் இதுவும் ஒன்று.

ஏவி.எம்., ரஜினி, இளையராஜா, எஸ்.பி.முத்துராமன் முதலானோரின் கூட்டணியில் வந்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ 1984ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி தீபாவளி வெளியீடாக வந்தது. பல ஊர்களில் வெள்ளிவிழா எனப்படும் 175 நாட்களைக் கடந்து ஓடியது. சில ஊர்களில், 200 நாட்களைக் கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலையும் ரசிக மனங்களையும் அள்ளினான் ‘நல்லவனுக்கு நல்லவன்’.

படம் வெளியாகி, 36 ஆண்டுகளாகின்றன. ரஜினியின் மாஸ் டாப் சூப்பர் படங்களில் என்றைக்குமான கம்பீரமாக அமர்ந்துகொண்டிருக்கிறான் ‘நல்லவனுக்கு நல்லவன்’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்