தமிழக முதல்வரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வரை நேரில் சந்தித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறாமல் இருந்தது. திரையரங்குகளும் மூடப்பட்டதால் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு சின்னதிரை படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள், 100 பேர் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் எனப் படிப்படியாக திரையுலகிற்குத் தளர்வுகளை அளித்தது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசு திரையரங்க அறிவிப்புக்கு அனுமதியளித்துவிட்டாலும் தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இதனிடையே, இன்று (அக்டோபர் 20) திரையரங்க உரிமையாளர்கள், முதல்வர் பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்கள். அப்போது அவருடைய தாயார் மறைவு குறித்து துக்கம் விசாரித்துவிட்டு, திரையரங்குகள் திறப்பதற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திரையரங்க மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை அபிராமி ராமநாதன் தலைமையில் பன்னீர்செல்வம், அரூர் ராஜா, இளங்கோ, சீனிவாசன், வெங்கடேஷ், சுப்பு மற்றும் பலர் அடங்கிய குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து துக்கம் விசாரித்தனர். பின்பு திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் திரையரங்குகளைத் திறப்பதற்கு ஆவன செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்.

கடந்த எட்டு மாதங்களாகத் திரையரங்குகள் பூட்டி இருப்பதோடு வேலை ஆட்கள் மற்றும் இதர செலவுகளால் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம். ஆதலால் எல்.பி.டி வரி எட்டு சதவீதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டோம். அதற்கும் மற்றவர்களுடன் ஆலோசித்து ஆவன செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்"

இவ்வாறு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE