'800' பட சர்ச்சை; 'கோமாளி' பட இயக்குநர் மாறுபட்ட கருத்து: நெட்டிசன்கள் சாடல்

'800' படம் தொடர்பாக 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்த கருத்துகளுக்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து பெரும் சர்ச்சை உருவானது. இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்தச் சர்ச்சை ஒருவழியாக நேற்று (அக்டோபர் 19) முடிவுக்கு வந்தது. தனது பயோபிக்கிலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார் முத்தையா முரளிதரன். இதனை ஏற்று விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.

விஜய் சேதுபதி விலகியதைத் தொடர்ந்து பாராட்டியும், எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் ட்விட்டர் தளத்தில் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார் 'கோமாளி' இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"பயோபிக் என்பது எவரைப் பற்றியும் எடுக்கலாம் என்று நான் நினைத்தேன். மதர் தெரசாவோ, ஹிட்லரோ, அந்த நபர் தவறானவர் என்று நினைத்தால், தவறான ஒரு நபரைப் பற்றிய படமாக இருக்கட்டுமெ. அதேபோல அவர் நல்லவர் என்றால், நல்லவர் ஒருவரைப் பற்றிய படமாக இருக்கட்டுமே. ஏன் அதைத் தடுக்க வேண்டும்? வீரப்பன், பின்லேடன் ஆகியோரைப் பற்றிய பயோபிக்குக்கு மட்டும் அனுமதி உண்டோ?"

இவ்வாறு பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்.

இந்த ட்வீட்டின் பின்னூட்டத்தில் பலரும், பிரதீப்பைக் கடுமையாகச் சாடி கருத்துகளைப் பதிவிட்டார்கள்.

அந்தக் கருத்துகள் அனைத்தையும் படித்துவிட்டு, "எதிர்வினைகளைப் பார்க்கும் போது அதைச் சுற்றியிருக்கும் அச்சம் எனக்குப் புரிகிறது. அனைவருக்கும் என் மரியாதை" என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE