’அழகிய கண்ணே உறவுகள் நீயே... ’, ‘ஆசீர்வாதம்’, ’நான் செஞ்சதுலயே பெரிய தப்பு இதுதான்!’; 41 ஆண்டுகளாகியும் உதிராத பூக்களாக... ‘உதிரிப்பூக்கள்!’

By வி. ராம்ஜி

இரண்டரை மணி நேரப் படம் நம்மை என்னவேண்டுமானாலும் செய்யும். கிச்சுக்கிச்சு மூட்டும். புருவம் உயர்த்தி வியக்கச் செய்யும். நெகிழ வைக்கும். நெக்குருகச் செய்யும். மனம் கனக்கச் செய்யும். விகசித்து அழவைக்கும். சில படங்களின் போஸ்டரே நம்மை இப்படி மனம் துடிக்க வைத்துவிடும். ஜெமினி கணேசன் நடித்த ‘ராமு’ திரைப்படத்தின் போஸ்டர் ஞாபகம் இருக்கிறதா? ஜோல்னாப் பையுடன் கையில் சிறுவனைப் பிடித்துக்கொண்டு நிற்கும் ஜெமினி, போஸ்டரில் இருப்பார். இதுவே நம்மை ஏதோ செய்யும். கே.பாலசந்தரின் ‘அக்னிசாட்சி’ படத்தின் போஸ்டரும் அதிலுள்ள சரிதாவும் மறக்கவே மறக்காது நமக்கு. இரண்டரை மணி நேர சினிமா செய்யவேண்டிய விஷயத்தை, இரண்டே இரண்டு நிமிடத்தில் போஸ்டர் நமக்குக் கடத்துகிற கனமும் சோகமும் படத்தின் வீரியத்தை உணர்த்திவிடும். சிறுவனையும் சிறுமியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்தத் தாய் நிற்கும் போஸ்டரும் பேப்பர் விளம்பரங்களும் நம்மை இப்படித்தான் உலுக்கின. பொசுக்கென்று நம்மையறியாமலே கண்ணீர்ப் பூக்கள் வெளிப்பட்டன. அப்படி கண்ணீர் உதிர்க்க வைத்த, மனம் கனக்க வைத்த படம்தான்... ‘உதிரிப்பூக்கள்’.

அத்திப்பூத்தது போல், எப்போதாவது ஒரு படம் வந்து, அப்படியே உலுக்கியெடுத்துவிடும். ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகம் அந்தப்படத்தைக் கொண்டாடித் தீர்க்கும். ரசிகர்கள், சிலாகித்து சிலிர்ப்பார்கள். படம் ரிலீசாகி, நூறு நாள் கடந்து ஓடி, அடுத்த படம் வரும் வரைக்கும் பரவலாகப் பேசுவார்கள். பிறகு அந்தப் படத்தை மறந்தேவிடுவார்கள். அல்லது படம் பற்றி எப்போதாவது பேசுவார்கள். ஆனால் இன்றைக்கும் ஒரு படத்தைப் பற்றி, வியந்து, நெகிழ்ந்து, நெக்குருகி, கனத்த இதயத்துடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது ‘உதிரிப்பூக்கள்’ படைப்புக்கும் படைப்பாளி மகேந்திரனுக்குமான கெளரவம். கம்பீரம். .

அழகிய கிராமம். ரயில்வே ஸ்டேஷன். ரயிலில் சரத்பாபு மனைவியுடன் வந்து இறங்குவார். ஹெல்த் சென்டர் அதிகாரி. அதே ரயிலில், அதே ஊருக்கு சத்யன் வந்து இறங்குவார். இவர் பள்ளிக்கு வந்திருக்கும் வாத்தியார். பள்ளி நிர்வாகி விஜயன். இந்த விஜயனுக்கு அடுத்தவர்கள் நன்றாக இருப்பது பிடிக்காது. பிடிக்காது என்றால் சுத்தமாகவே பிடிக்காது. எதிரில் இருப்பவர் நல்ல சட்டை போட்டாலும் பிடிக்காது. அடுத்தவனுக்கு நல்ல பொண்டாட்டி அமைவதும் பிடிக்காது. சரியான சாடிஸ்ட் குணம்!

விஜயனின் மனைவி அஸ்வினி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மனைவியை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பதுதான் விஜயனுக்கு வேலை. ‘உங்க அப்பாவையும் தங்கச்சியையும் ஊரை விட்டு போகச் சொல்லு’ என்பார். ‘உங்க அப்பனை, எங்கிட்ட வாங்கின கடனை அடைக்கச் சொல்லு’ என்பார். இப்படித்தான் அஸ்வினியின் ஒவ்வொரு நாள் பொழுதும் போய்க் கொண்டே இருந்தது.

ஊரில் முடி திருத்தும் தொழில் செய்யும் சாமிக்கண்ணு. ஓடிப்போன மனைவி குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கும் குமரிமுத்து, வயோதிகமும் வறுமையும் கலந்து கட்டி சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அஸ்வினியின் அப்பா சாருஹாசன், கவலைகளைத் தூரப்போட்டுவிட்டு, கஷ்டம் மறந்து சிரித்து வளைய வரும் மதுமாலினி. இப்படியாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை. இப்படியாகத்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது இவர்களின் வாழ்க்கை.

புதிதாக வந்த வாத்தியாரும் அஸ்வினியின் தங்கையும் காதலிப்பார்கள். ’அவளை நீங்களே ஏன் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது என விஜயனுக்கு தூபம் போடுவார்’ அல்லக்கை ஒருவர். அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும். ஆனால் சாருஹாசனும் அவரின் மகள்களும் இன்னும் இன்னுமாக நொந்துபோவார்கள்.

ஊரில், ஹெல்த் சென்டருக்கு வந்திருக்கும் சரத்பாபு, ஒருகாலத்தில் அஸ்வினியைப் பெண் கேட்டிருப்பார். இப்போது அவளின் துயரங்களை அறிந்துகொள்வார். இந்த விஷயம், விஜயனுக்குத் தெரியவர... இதைக் காரணம் காட்டியே மனைவியின் தங்கையை கட்டிக்கொள்ளப் பார்ப்பார். ஆனால், அது நடக்காமல் போகும். விஷயம் பஞ்சாயத்து வரை போகும். அஸ்வினியை தரம் தாழ்த்திப் பேசுவார். அறுத்து விடுகிறேன் என்பார். பிரிந்துவிடுவார்கள். அஸ்வினி, அப்பாவின் வீட்டில் இருக்க, குழந்தைகள் விஜயனிடம் இருப்பார்கள். நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிவிடுவார் அஸ்வினி. பார்க்கக்கூட வராமல் இருப்பார் விஜயன். படுக்கையிலேயே இறந்துவிடுவார் அஸ்வினி.

இதன் பின்னர், வாத்தியாருக்கும் அஸ்வினி தங்கைக்கும் திருமணம் உறுதி செய்யப்படும். இதனிடையே அஸ்வினி இறந்த உடனேயே விஜயன் வேறொருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டிருப்பார்.

இந்தநிலையில், திருமணத்துக்கு முதல்நாள், அக்கா கணவரின் வீட்டுக்குச் செல்வார் தங்கச்சிக்காரி. ‘என் அக்கா பசங்களை எங்கிட்ட குடுத்துரு’ என்பார். கதவு சார்த்தி, அவளின் ஆடைகளை ஒவ்வொன்றாக உருவிப் போடுவார் விஜயன். ’உன்னைத் தொடமாட்டேன். இதுதான் உனக்கு ஆசீர்வாதம், ஆசீர்வாதம்’ என்று சொல்லுவார். ’இதுதான் உனக்கு தண்டனை. சாகறவரைக்கும் இதை நீ மறக்கவே மாட்டே’ என்பார்.

விஷயம் ஊருக்குத் தெரியவர, கொந்தளித்துப் போவார்கள் மக்கள். ஊர் திரண்டு, விஜயனைப் பிடிக்கும். ஊர் கூடி முடிவெடுக்கும். விஜயன், ஊர்மக்கள் தலைமையில் ஆற்றங்கரைக்கு வருவார். ‘நீங்களாம் உங்களை மாதிரி என்னை மாத்தணும்னு நெனைச்சீங்க. ஆனா என்னை மாதிரி, உங்க எல்லாரையும் மாத்திட்டேன். நான் செஞ்சதுலயே மிகப்பெரிய தவறு இதுதான்’ என்று சொல்லிவிட்டு, ஆற்றில் இறங்கி மூழ்கி இறந்து போவார்.

அம்மாவை இழந்து, அப்பாவையும் இழந்து, அந்த இரண்டு குழந்தைகளும் உதிரிப்பூக்களாகியிருக்கும். ஆற்றங்கரையில், அப்பாவைத் தேடியபடி ஓடிக்கொண்டிருக்க... படம் முடிந்துவிட்டிருக்கும். நம் கண்ணில் இருந்து வழிகிற கண்ணீர்தான், தொடர்ந்து வழிந்துகொண்டே இருக்கும்.

சைலண்ட் கில்லர் என்ற வாசகம் விஜயனுக்கு பொருந்தும். அந்தக் கேரக்டருக்குப் பொருந்தும். சைக்கோ என்பதும் பொருந்தும். இயலாமையால் புழுங்கும் தந்தை சாருஹாசன், அன்பே இல்லாத கணவனிடம் மாட்டிக்கொண்டு வேதனைப்படும் அஸ்வினி, ‘உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். சம்மதமா’ என்று கேட்கும் சரத்பாபு, பிறகு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு ஊருக்கு வந்திருக்க, அஸ்வினி படும் வேதனையைப் பார்த்து தவிக்கும் ஈர மனசு, விடலை மாறாதிருந்தும் அக்கா குழந்தைகள் மீது வாஞ்சையுடன் இருக்கும் மதுஷாலினி, ‘இன்னும் பையனுக்கு மொட்டை போடலியேம்மா’ என்று கேட்கும் முடிதிருத்தும் சாமிக்கண்ணு, ரெண்டாந்தாரமாய் வாக்கப்பட்டு மாட்டிக்கொண்டதை பளிச்சென்று சொல்லும் விஜயனின் மனைவி சாருலதா என அத்தனைக் கதாபாத்திரங்களும் வாழ்ந்திருப்பார்கள். முக்கியமாக, அஸ்வினியின் குழந்தைகளாக காஜா ஷெரீப்பும், பேபி அஞ்சுவும் மனம் கனக்கச் செய்துவிடுவார்கள்.

‘உங்க பொண்ணை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்பார் விஜயன். ‘நான் என் பொண்ணுக்கு அப்பாவாவே இருக்கேன். புரோக்கராக விரும்பலை’ என்பார் சாருஹாசன்.

கை விரல் ஆட்டி விளையாடிக் கொண்டிருப்பார் மதுஷாலினி. என்னம்மா இது என்பார் சாருஹாசன். விளையாட்டுப்பா என்பார். ‘நாளைக்கு காலைல இந்த ஊரை விட்டு போறோம்’ என்பார். ஏம்பா என்பார். ‘இதுவும் ஒரு விளையாட்டுதாம்மா’ என்பார்.

அஸ்வினி சாகக்கிடப்பார். கன்னம் தடவி, முத்தமிட்டு, கை பிடித்திருப்பார் குழந்தை அஞ்சு. அஸ்வினி இறந்துவிடுவார். அவரின் வளையல்களை தள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை.பார்க்கிற நமக்கு நெஞ்சே அடைத்துவிடும்.

அஸ்வினி இறந்ததும், மகனான சிறுவன் காஜாஷெரீப் மொட்டையடிக்க வேண்டும். ‘என்னால மொட்டையடிக்க முடியாதுங்க. ஒவ்வொரு முறையும் கேட்டுக்கிட்டே இருந்தேன். காலம் வரட்டும் காலம் வரட்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க அம்மா. இதுதான் அந்தக்காலம்னு நினைக்கும் போது, என்னால முடியலீங்க’ என்று கதறுவார் முடி திருத்தும் சாமிக்கண்னு.

ஒரு சின்ன கிராமம். கிராமத்தின் நாலு தெருக்கள். ஆறு. ஆற்றங்கரை. இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, அசோக்குமாரின் கேமிரா ஜாலம் காட்டியிருக்கும். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையை, அழகியல் கூட்டி திரைக்கதையாக்கி, காவியம் படைத்திருப்பார் மகேந்திரன்.

ஆற்றங்கரையில் விஜயனும் சரத்பாபுவும் பேசிக்கொள்வார்கள். கருத்து மோதல் கைகலப்பாகும். ஆனால் சண்டையைக் காட்சிப்படுத்தாமல், ஆறு, செடிகொடி, தரையில் விழுந்திருக்கும் மூக்குக்கண்ணாடி, வீசப்பட்ட துண்டு, கரையில் உள்ள நாணல், எங்கிருந்தோ ஒரு சிறுவன் தலை திருப்பிப் பார்ப்பது என்றெல்லாம் காட்டிவிட்டு, கேமிரா சரத்பாபுவைக் காட்டும். ரத்தம் வழியும் மூக்கைக் கழுவிக்கொண்டிருப்பார் சரத்பாபு. மிகப்பிரமாதமான காட்சி.
மச்சினியின் உடலில் இருந்து ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் போடுவார் விஜயன். வார்த்தைக்கு வார்த்தை ‘ஆசீர்வாதம் ஆசீர்வாதம்’ என்பார். விஜயனை அடித்துக் கொன்றுவிடலாமா என்று தோன்றும்.

'வீட்டை விட்டு போகவிடாம என்னைத் தடுத்து நிறுத்தற பலம் உங்களுக்கு இருக்குதான். ஆனா, உங்களுக்குப் போடுற சாப்பாட்டுல, விஷம் கலந்து உங்களைக் கொன்ன பாவத்துக்கு என்னை ஆளாக்கிடாதீங்க’ என்று விஜயனின் இரண்டாவது மனைவி சொல்லும் போது, தியேட்டரே கைத்தட்டி, ‘அதைச் செய் முதல்ல’ என்று ஆமோதிக்கும்.

ஊர் சூழ்ந்திருக்க, செய்த தப்புக்குத் தண்டனையாக, கடைசியாக ஆற்றில் இறங்கி மூழ்கிச் சாக யத்தனிக்கும் வேளையில், குழந்தைகளை அழைத்து, ‘நல்லாப் படிக்கணும் நல்லவன்னு பேரெடுக்கணும். போயிட்டு வாங்க. முத்தம் கொடுங்க’ என்று கேட்கும் போது, அவ்வளவு காலமும் விஜயன் செய்த தப்பையெல்லாம் ‘போய்த்தொலையுது. மன்னிச்சிருவோம்’ என்று நம்மை நினைக்கவைத்துவிடும் அந்தக் காட்சி.

’உதிரிப்பூக்கள்’ படத்தின் நாயகன் விஜயன், மகேந்திரன், கதை என்று சொன்னாலும் உண்மையான ஹீரோ இளையராஜாதான். பின்னணி இசையின் மூலமாக, கதையின் கனத்தை, காட்சிகளின் சோகத்தை, சோகத்தின் வீரியத்தை, வீரியத்தில் உறைந்து கிடக்கும் துயரத்தை இசை வழியே நமக்குள் கடத்திவிடுவார் இளையராஜா. அந்த ‘அழகிய கண்ணே...’ பாடல் கேட்டு, மனம் கனக்காமல் எவருமே இருக்கமுடியாது.
‘உதிரிப்பூக்கள்’ மாதிரி ஒரு படம் எடுக்கமுடியாது என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ‘உதிரிப்பூக்கள்’ என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

1979ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி வெளியானது ‘உதிரிப்பூக்கள்’ . படம் வெளியாகி 41 ஆண்டுகளாகின்றன. இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் ‘உதிரிப்பூக்கள்’ தமிழ் நெஞ்சங்களில் என்றென்றைக்கும் உதிராத பூக்களாக, நிழலாடிக்கொண்டே இருக்கும். அஸ்வினிக்காகவும் குழந்தைகளுக்காகவும் இளையராஜா போட்ட அந்த பின்னணி இசை மனசுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்