எண்பதுகளில் சினிமாவுக்கு அடுத்தபடியாக பாட்டுக்கச்சேரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, பாடல்களைக் கேட்பதிலும் முணுமுணுப்பதில் மிகப்பெரிய ஆர்வமும் ஈர்ப்பும் இருந்த காலகட்டம் அது. இளையராஜாவின் இசை, எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருந்தது. ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் அவற்றின் அட்டைகளும் பார்த்தே குதுகாலமான ரசிகர்கள் உண்டு. வானொலிகளின் மீது மாறாக் காதல் கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில், பாடல் ஒலிபரப்புவார்கள். ஆனால், அந்த நேரத்துக்கும் முன்னதாகவே ரேடியோவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அலைவரிசைகளை சரியாக வைத்துக்கொண்டு, தவம் கிடந்தவர்களெல்லாம் இன்றைக்கு செல்போனில் எழுபதுகளின் பாடல்களையும் எண்பதுகளின் பாடல்களையும் பதிவிறக்கம் செய்துகொண்டு, அவ்வப்போது கேட்டுக்கொண்டு, பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அப்படிக் கேட்ட பாடல்கள் பல்லாயிரம். அந்த ஆயிரத்தில் ஒரு பாடலாக... மறக்கவே முடியாத பாடலாக அமைந்ததுதான் அந்தப் பாட்டு. அது... ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே... ஹோ ஹோய்...’.
கர்நாடக சங்கீதத்தில், வயலினுக்கு தனியிடமும் உயரமும் சிம்மாசனமும் போட்டுக்கொண்டவர்களில் மிக முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன். தன் வயலினைக் கொண்டு, கர்நாடக சங்கீதத்தை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்ததிலும் எளிய மாந்தர்களுக்குள்ளே புகுந்து தலையசைக்க வைத்ததிலும் மிகப்பெரிய பங்கு குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உண்டு.
பக்திப் பாடல்கள், சினிமாப் பாடல்கள், சாஸ்திரியப் பாடல்கள் என்கிற பாடல்களையெல்லாம் கோடு கிழித்துக் கொள்ளாமல், பிரித்துக்கொள்ளாமல் எல்லாம் இசையே என்று நமக்கு உணர்த்தியவர் குன்னக்குடி வைத்தியநாதன்.
சரி... குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’வுக்கும் என்ன சம்பந்தம்?
இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் இவர்தான். இந்தப் பாடலைப் பாடியவரும் இவரே. எத்தனையோ படங்களுக்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன், இந்தப் படத்தை இசையமைத்து இயக்கினார். மேலும் இந்தப் பாடலை அவரே பாடினார். அந்தப் படம்... ‘தோடி ராகம்’.
’படங்களுக்கு இசையமைக்கிற நாம், ஒரு படத்தை இயக்கவேண்டும்’ என்று மனதில் நினைத்தார் குன்னக்குடி வைத்தியநாதன். மனதில் கதை ஒன்று உருவானது. இசை சம்பந்தப்பட்ட அந்தக் கதைக்கு, பொருத்தமான நடிகராக யாரைப் போடுவது என்று நினைத்துக்கொண்டே இருந்தார்.
ஒருமுறை, திருச்சிக்கு கச்சேரிக்கு வந்தார் குன்னக்குடி வைத்தியநாதன். கச்சேரி முடிந்ததும் காரில் சென்னைக்குக் கிளம்பினார். திருச்சி பேருந்து நிலையம் வழியே கார் வந்தது. அங்கே பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் அவர். அவரும் கர்நாடக இசையுலகில் மறக்கமுடியாத மாமனிதர்தான். மதுரையில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்காமல், சாதாரண பஸ்சில் வந்தவர், திருச்சி வரைக்கும் வந்தார். திருச்சியில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்குமா எனக் காத்திருந்தார். அவரைப் பார்த்ததும் காரை அருகில் சென்று நிறுத்தச் சொன்னார். ‘எங்கே இங்கே?’ என்று கேட்டுக்கொண்டே காரில் இருந்து இறங்கினார்.
இருவரும் முகம் மலரப் பேசிக்கொண்டார்கள். ‘சென்னைக்குப் போகணும். எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்கல’ என்றார். ‘வாங்க நம்ம கார்லயே போகலாம்’ என்று அவரை குன்னக்குடிவைத்தியநாதன் ஏற்றிக்கொண்டார். இருவரும் காரில் பேசிக்கொண்டே வந்தார்கள். பேச்சு குடும்பம் குறித்தும் இசை குறித்தும் என விரிந்தது. சினிமாவில் வந்து நின்றது. படமெடுக்கும் ஆசையைச் சொன்னார் குன்னக்குடி வைத்தியநாதன். ‘அட... கதையெல்லாம் ரெடியா?’ என்று சுவாரஸ்யமானார் அவர்.
கதையைச் சொன்னார் குன்னக்குடியார். ‘ஆஹா... நல்லாருக்கே. யார் நடிக்கிறாங்க?’ என்று கேட்டார் அவர். ‘இன்னும் ஹீரோதான் கிடைக்கல. நீங்களே ஹீரோ மாதிரிதான் இருக்குறீங்க. மியூஸிக் சப்ஜெக்ட். நீங்களே நடிங்களேன்’ என்றார் குன்னக்குடி வைத்தியநாதன். கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் வெட்கப்பட்டு, கொஞ்சம் யோசித்து, ‘சரி... நடிச்சிட்டாப் போச்சு’ என்றார். சென்னை வருவதற்குள் படத்துக்கு நாயகன் கிடைத்துவிட்டார் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு. அந்தப் படம்... ‘தோடி ராகம்’. அந்த நாயகன்... ‘மதுரை டி.என்.சேஷகோபாலன்’. நடிகை நளினி நாயகியாக நடித்தார்.
‘தோடி ராகம் பாடினேன்’ என்பது உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் இசையின் உன்னதங்களை நமக்கு உணர்த்தின. குன்னக்குடி வைத்தியநாதனின் மேதமையை வெளிப்படுத்தும் பாடல்களாக அமைந்தன. அதேசமயம் வெகுஜன ரசிகர்களை எப்போதும் கவருகிற குன்னக்குடி வைத்தியநாதன், இந்தப் படத்திலும் அப்படியொரு பாடலைக் கொடுத்தார். அந்தப் பாடலை அவரே பாடினார். அதுதான் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ பாடல்!
‘நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா’ என்று குழைவார் குன்னக்குடி வைத்தியநாதன்.
‘மீசை எனக்கிருக்கு
மோகம் நிறைஞ்சிருக்கு
சிங்காரத் தோப்பிருக்கு
சிவந்த பழம் அங்கிருக்கு
சிணுங்காம அங்கே வந்தா
வெக்கப்படாம வாங்கிக்கலாம்
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹஹா... என்று வெளுத்து வாங்குவார் பாடலில்!
இளநீரு காய்ச்சிருக்கு
மரம் ஏற ஆளிருக்கு
தாகம் உனக்கிருந்தா
தணிய வைக்க நானிருக்கேன்
பரிசம் போடணும்னா
பக்கத்துலே வாடியம்மா
என்று சொல்லிவிட்டு, பாடிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பார்.
முகமோ சிவந்திருக்கு
மொழுமொழுன்னு உடம்பிருக்கு
இடையோ இளைச்சிருக்கு
இளவட்டம் தனிச்சிருக்கு
இருட்டுமுன்னே கட்டிக்கவா
விடியவிடிய ஒட்டிக்கவா
என்று நாட்டுப்புற பாடலாக, கிராமத்துப் பாடலாக, தெம்மாங்குப் பாடலாக, குத்தாட்டப் பாடலாக கொடுத்து அசத்தினார் குன்னக்குடி வைத்தியநாதன்.
83ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 14ம் தேதி வெளியான குன்னக்குடி வைத்தியநாதனின் ‘தோடி ராகம்’ சரியாக ஓடவில்லை. ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது. அப்போதெல்லாம் செகண்ட் ரிலீஸ், தேர்டு ரிலீஸ் என்றெல்லாம் உண்டு. அந்த வரிசையில் ரவுண்டி கட்டவில்லை; கல்லாவும் கட்டவில்லை. ஆனாலும் இந்தப் பாடல் மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வானொலிகளில், டீக்கடைகளில், கல்யாண வீடுகளில், பாட்டுக் கச்சேரிகளில் என்று தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இன்னமும் ‘கொட்டம்பட்டி ரோட்டிலே’ பாடலை பல ரசிகர்கள் மறந்திருக்கவில்லை.
குன்னக்குடி வைத்தியநாதனின் ‘தோடி ராகம்’ வெளியான நாள் இன்று. வெளியாகி, 37 வருடங்களாகின்றன. கொட்டாம்பட்டி என்று ஊரின் பெயர் சொல்லும்போதே, நம் நினைவுக்கு வருவது இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago