எம்ஜிஆர் படமென்றாலே அதுவொரு எனர்ஜி பூஸ்டர்தான். படம் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உற்சாகமாகிவிடுவார்கள். எம்ஜிஆரைப் பிடிக்காதவர்களே கூட பார்த்தால், அவரின் உற்சாகத்தையும் சிரிப்பையும் பார்த்து சொக்கித்தான் போவார்கள். அறுபதுகளிலேயே தொடங்கிவிட்டது எம்ஜிஆர் ஃபார்முலா. அதை இன்றைக்கும் வைத்துக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இப்போது அதற்குப் பெயர் ஹீரோ ஃபார்முலா. இந்த ஃபார்முலாக்களை உருவாக்கிய மாஸ் ஹீரோ... எம்ஜிஆர்தான். அவரின் அட்டகாசமான படங்களில் ஒன்றுதான் ‘எங்கள் தங்கம்’.
மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில், எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ, அசோகன், ஏவிஎம்.ராஜன், புஷ்பலதா முதலானோர் நடித்து வெளியான படம் ‘எங்கள் தங்கம்’. எம்ஜிஆர் படத்துக்கே உண்டான காதல், மோதல், பழிவாங்குதல், குடும்பம், தங்கை, நீதி, நேர்மை என்று சகலமும் கொண்ட கதையும் திரைக்கதையுமாக, தங்கமென ஜொலித்தது ‘எங்கள் தங்கம்’.
அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட எம்ஜிஆர் படம். கலைஞரின் ‘எங்கள் தங்கம்’ என்றுதான் டைட்டில் போடப்பட்டது. புரட்சித்தலைவர் என்று அரசியலுக்கு வந்த பிறகு எம்ஜிஆர் தன் கட்சியினரால் கொண்டாடப்பட்டார். அதற்கு முன்னதாக ‘புரட்சி நடிகர்’ என்ற பட்டம் அவருக்கு இருந்தது. அப்படி ‘புரட்சி நடிகர்’ எனும் பட்டத்துடன் எம்ஜிஆர் பெயர் டைட்டிலில் இடம் பெற்றது, இந்தப் படத்தில். அதுமட்டுமா? ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., எம்.எல்.ஏ.’ என்றுதான் டைட்டிலில் போட்டார்கள். அப்போது எம்ஜிஆர் எம்.எல்.ஏ.
‘கலைஞரின் எங்கள் தங்கம்’ என்று டைட்டிலில் போட்டாலும், படத்துக்குக் கதையோ வசனமோ தயாரிப்போ கலைஞர் கருணாநிதியின் பெயர் இடம்பெறவில்லை. கதை, வசனம், தயாரிப்பு என்று முரசொலி மாறன் பெயரே இடம்பெற்றது. அப்போது முரசொலி மாறன் எம்.பி., என்பதால், முரசொலி மாறன் எம்.ஏ., எம்.பி. என்றே டைட்டிலில் பெயர் இடம்பெற்றது.
எம்ஜிஆர். அவரின் பார்வையற்ற தங்கை புஷ்பலதா. கெட்டவனாகவும் குடிகாரனாகவும் திருடுபவனாகவும் இருக்கிற ஏ.வி.எம்.ராஜன். ஒருசூழலில், புஷ்பலதாவிடம் போதையில் தகாத உறவு கொண்டுவிடுவார். பிறகு எம்.ஜி.ஆருக்குத் தெரியவரும்.
கொள்ளைக் கூட்டத்துடன் தொடர்பில் இருக்கும் ஏ.வி.எம்.ராஜனைக் காப்பதற்காக, எம்ஜிஆர் திருட்டுப் பழியை ஏற்றுக்கொள்வார். போலீஸ் தேடும். இன்னொரு பக்கம் வில்லன் கூட்டமும் தேடும். கடைசியில், வில்லக் கூட்டத்தை போலீஸில் பிடித்துக் கொடுப்பார். தங்கையையும் ஏ.வி.எம் ராஜனையும் நன்றாக வாழவைப்பார். தன் காதலி ஜெயலலிதாவுடன் சேருவார்.
இந்தக் கதைக்குள் சகல விஷயங்களையும் கொண்டு வந்திருப்பார்கள். முதலாவது, படத்தில் டிரைவர் கேரக்டரில் எம்ஜிஆர் வருவார். சிறுசேமிப்புத் துறை துணைத்தலைவர் என்று எம்ஜிஆர் தொப்பி, கூலிங்கிளாஸ், சால்வை சகிதமாகவும் ஒருகாட்சியில் வருவார். பின்னர், 70ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அண்ணாவும் கலைஞரும் நெடுஞ்செழியனும் வருவது போலவும் காட்சிகள் இணைத்திருப்பார்கள்.
படத்தில் அண்ணாவின் ஆட்சி குறித்தும், லாட்டரிச் சீட்டு குறித்தும் வசனங்கள் எழுதப்பட்டிருக்கும். ‘வாத்யாரே... உன்னைத் தொட்டுப் பாத்துக்கட்டுமா’ என்பார் சோ. ‘மாசாமாசம் தோட்டத்துக்கு வந்து பணம் கட்டிடுறேன்’ என்பார். இப்படிப் படம் நெடுக, எம்ஜிஆரைக் கொண்டாடுகிற விதமாக வசனங்களை எழுதியிருப்பார் முரசொலி மாறன்.
எம்ஜிஆர் சுடப்பட்டு பிறகு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதைக் குறிக்கும் வகையில், ‘நான் செத்துப் பொழச்சவன்டா’ என்ற பாடலும் படத்தில் இடம்பெற்றது. மிகப்பெரிய வெற்றிப் பாடலாகவும் பின்னர் அரசியல் களங்களிலும் இந்தப் பாடல் அதிகமாக உற்சாகப்படுத்தியது.
படத்தில் இன்னொரு ஸ்பெஷல்... மொட்டைத்தலை விக்குடன் கதாகாலட்சேபம் பண்ணுபவராக எம்ஜிஆர் நடித்திருப்பார். இது தவிர, படத்தில் இன்னொரு மாறுவேடமும் போட்டிருப்பார் எம்ஜிஆர். தேங்காய் சீனிவாசன், சோ இருவரும் நடித்திருப்பார்கள்.
எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். சினிமாக்களில், கண்ணைக் கட்டிக்கொண்டு வில்லன் தன்னுடைய ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார். அப்படிச் செல்லும் வழியையெல்லாம் குறித்துக்கொண்டே வருவார் ஹீரோ. பிறகு அதேபோல் சென்று கண்டுபிடிப்பார். இதிலும் சவப்பெட்டியில் எம்ஜிஆரை கொண்டு செல்வார்கள். பிறகு சோ கார் ஓட்ட, அதேபோல் எம்ஜிஆர் வந்து கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடிப்பார்.
எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட். வண்ணப்படம் வேறு. ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘என் அண்ணன்’ படம் வந்தது. இதே 70-வது வருடத்தில், ப.நீலகண்டன் இயக்கத்தில் ‘மாட்டுக்கார வேலன்’ வந்தது. வாணிஸ்ரீயுடன் நடித்த ‘தலைவன்’ படமும் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் ‘தேடிவந்த மாப்பிள்ளை’யும் வந்தது.
‘தலைவன்’ படம் தவிர, மற்ற எல்லாப் படங்களும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றன. ‘எங்கள் தங்கம்’ படத்திலும் ‘ஒருநாள் கூத்துக்கு’ பாடல் ஹிட்டானது. ‘தங்கப்பதக்கத்தின் மேலே’ பாடல் வெற்றியைப் பெற்றது. ’டோண்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து தமிழுக்கு வரும் பாடலும் உண்டு.
1970-ம் ஆண்டு வெளியானது ‘எங்கள் தங்கம். புகழ்பெற்ற கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள். படம் வெளியாகி, 50 வருடங்களாகிவிட்டன.
படம் குறித்து இன்னொரு சுவாரஸ்யமான தகவல்.
முக்கியமான பாடல்... ‘நான் அளவோடு ரசிப்பவன்’ பாடல். மெல்லிசை மன்னர் டியூன் போட்டார். அதற்கு ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்று வாலி எழுதிவிட்டார். அதற்கு அடுத்த வரி சிக்கவில்லை. தவித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அப்போது கலைஞர் வந்தார். ‘என்னய்யா கவிஞரே... பாட்டுத் தயாரா?’ என்று கேட்டார். ‘முதல் வரி எழுதியாச்சு. அடுத்த வரி விழுந்துருச்சுன்னா மளமளன்னு எழுதிடவேண்டியதுதான்’ என்றார். உடனே கலைஞர் ‘முதல் வரி என்ன சொல்லுய்யா’ என்றார்.
உடனே வாலி, ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்றார். சட்டென்று கலைஞர்... ‘எதையும் அளவின்றி கொடுப்பவன்’ என்று சொன்னார். இதையடுத்து சில நிமிடங்களில் பாடல் வரி மொத்தத்தையும் எழுதிவிட்டார் வாலி. பின்னர் எம்ஜிஆர் வந்தார். பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டிருந்தது. எம்ஜிஆர் பாடலைக் கேட்டார். வாலி வந்தார். அவரை அப்படியே அணைத்து முத்தம் கொடுத்தார் எம்ஜிஆர். ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்று எழுதியதைக் குறிப்பிட்டார். அதைக் கேட்ட வாலி, ‘இந்த வரிக்காகத்தான் முத்தம் என்றால், நீங்கள் இந்த முத்தத்தை கலைஞருக்குத்தான் கொடுக்கணும். இந்த வரியைச் சொன்னதே கலைஞர்தான்’ என்று எம்ஜிஆரிடம் சொன்னார் கவிஞர் வாலி.
70-ம் ஆண்டு வெளியானது ‘எங்கள் தங்கம்’. 50 வருடங்களானாலும் இன்றைக்கும் எம்ஜிஆரை ‘எங்கள் தங்கம்’ என்று தமிழக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago