’சோலைக்குயிலே’, ‘ஒருகிளி உருகுது’,  ’ஆசையக் காத்துல தூது விட்டு’; எண்பதுகளில் இனிய குரலின் நாயகி... எஸ்.பி.சைலஜா; - சைலஜா பிறந்தநாள் ஸ்பெஷல் 

By வி. ராம்ஜி

வித்தியாசமான குரல் கொண்ட பாடகர்களையும் பாடகியரையும் ஒரு போதும் நாம் மறப்பதே இல்லை. அப்படியான பாடகியரை எண்பதுகளில் தேடித்தேடி அறிமுகப்படுத்தினார் இளையராஜா. பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம் முதலானோருக்கு அடுத்த கட்டமாக பல பாடகியரை அறிமுகப்படுத்தினார் இளையராஜா. அவர்களின் குரல் வழியே வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மயிலிறகு. தேன் குழைத்த குரல்கள். அப்படியான தேன் குரலும் மயிலிறகு இதமும் கொண்ட குரலுமானவர்தான் எஸ்.பி.சைலஜா.

ஹரி கதா சொல்லும் குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் சைலஜா. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தன் குரலால் நம்மை தன் வசமாக்கிக்கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சகோதரிதான் சைலஜா. அண்ணனுக்கும் தங்கைக்குமாக அப்படியொரு குரல்வளத்தை, குரல் குழைவை, குரலிசையை இறைவன் கொடுத்திருக்கிறான்.இசையால் இறைவனையே வசப்படுத்தலாம் என்பார்கள். அண்ணனும் தங்கையுமாக தம் குரலால் இசையுலகையே வசப்படுத்திக்கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

அப்போதெல்லாம் விவிதபாரதியும் சிலோன் ரேடியோவும் மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த விஷயங்கள். ஒருநாளைக்கு நான்கு முறையாவது அந்தப் படத்தின் பாடலை ஒலிபரப்பிவிடுவார்கள். மக்களும், அந்தப் பாடலைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பார்கள். ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ என்ற பாடலைக் கேட்டதும் உற்சாகமாகிவிடுவார்கள். ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ என்ற படம், அந்தப் படத்தின் பாடல்களாலேயே அதிக அளவில் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தின் ‘ஓரம்போ’ பாட்டு துள்ளவைத்தது. இன்னொரு பாட்டு நம்மை அமைதிப்படுத்தியது.

அந்தப் பாடலை, ரேடியோவுக்கு அருகில் காது வைத்துக்கொண்டு கேட்டார்கள். வீட்டுக்கூடத்தில் அமர்ந்துகொண்டு கேட்டார்கள். திண்ணையில் குழுவாக உட்கார்ந்துகொண்டு கேட்டார்கள். ரேடியோவுக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டே கேட்டார்கள். ஆனாலும் இந்தப் பாடல் பாடத் தொடங்கியதும், அந்தக் குரல், நம்மை அழகிய வனத்துக்குள் கைபிடித்து அழைத்துச் சென்றது. மலையும் பசுமையும் கொண்ட நீளமான சாலையில், ஒரு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நம்மை அழைத்துச் சென்றது. அந்தப் பாடல்... ‘சோலைக்குயிலே... காலைக்கதிரே’. பாடியவர் எஸ்.பி.சைலஜா. தமிழில் இதுதான் சைலஜாவுக்கு முதல் பாடல். இளையராஜாதான் அறிமுகப்படுத்தினார்.


1979ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ வெளியானது. இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் இளையராஜா பாடினார். மலேசியா வாசுதேவனோ எஸ்.பி.பி.யோ பாடவில்லை. அதேபோல், ஜென்சி பாடியிருந்தார். சரளா என்றொரு பாடகியும் பாடியிருந்தார். சைலஜாவை இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் இளையராஜா. ‘சோலைக்குயிலே காலைக்கதிரே’ என்ற பாடலின் தொடக்கத்தில் ஒரு ஹம்மிங். அந்த ஹம்மிங்கிலேயே நம் காதுகளையெல்லாம் திருடிவிடுவார் சைலஜா.

சைலஜாவின் குரலில் உள்ள மேஜிக்கையும் மேக்னெட்டையும் இளையராஜா அறிந்து வைத்திருந்ததால்தான் தொடர்ந்து அப்படியான பாடல்களைக்கொடுத்தார். இதையடுத்து வந்த ‘கல்யாண ராமன்’ படத்தில், ’மலர்களில் ஆடும் இளமை புதுமையே’ என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

சுசீலா குரல் ஒருவிதம். ஜானகியம்மாவின் குரல் ஒருவிதம். அந்த சமயத்தில், ஜென்ஸியின் குரலும் சைலஜாவின் குரலும் தனியே தெரிந்தது.


மணிவண்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், ‘இளமைக்காலங்கள்’ திரைப்படத்தில், ‘படிப்புல ஜீரோ நடிப்புல ஹீரோ ரோட்டிலே ரோமியோ’ பாடலை அவ்வளவு ஸ்டைலாகவும் நையாண்டித்தனமாகவும் பாடியிருப்பார். எஸ்.பி.பி., ஒரு பாட்டுக்குள் என்னென்ன சேஷ்டைகளெல்லாம் செய்வாரோ, சைலஜாவும் இந்தப் பாட்டுக்குள் அனைத்தையும் செய்திருந்தார். ‘பட்டிக்காட்டு மாமா படிப்பை மறக்கலாமா? அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு என்று இருக்கலாமா?’ என்று பாடும் போது அந்த ‘மா’வுக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வித அழுத்தம் கொடுத்திருப்பார்.

இப்படி ஒவ்வொரு பாடலுக்குள்ளேயும் சங்கதிகளிலும் பிர்காக்களிலும் தன் குரலால், தனித்துவத்துடன் பாடியிருப்பார் சைலஜா. அதுதான் சைலஜா ஸ்பெஷல்.
ரஜினி நடித்த ‘தனிக்காட்டு ராஜா’ படத்தில், ‘ராசாவே உன்ன நான் எண்ணித்தான்’ என்ற பாடலை இன்றைக்குக் கேட்டாலும் சைலஜாவின் மந்திரக்குரலில் வியந்து கிறங்குவோம். ஜானி படத்தில், ‘ஆசையக் காத்துல தூதுவிட்டு’ பாடலும் அந்த ஹம்மிங்கும் என்னவோ செய்யும். பாட்டுக்கு நடுவே உச்சஸ்தாயிக்கு லேசாகச் சென்று விட்டு வருவார்.

இப்படி எத்தனையோ பாடல்கள் சைலஜாவின் குரலில், தனித்துத் தெரிகிற பாடல்களாகத் தெரிந்தன. கே.விஸ்வநாத்தின் ‘சலங்கை ஒலி’யில், நடிகையாகவும் நடித்தார். எப்போதும் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டும் சிடுசிடுவெனப் பேசிக்கொண்டும், துறுதுறுவென வளையவரும் சைலஜா நடிப்பிலும் தேர்ந்தவர் என்பதை நிரூபித்தார். இன்னும் இன்னுமாக எத்தனையோ பாடல்களின் தன் குரலால் நம்மை வசீகரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ரேகா, தேவயானி முதலானோருக்கு டப்பிங் குரலும் கொடுத்தவர்... இன்றைய தேதி வரைக்கும் தனிக்குரலரசியாகவே ஜொலிக்கிறார். அண்ணன் எஸ்.பி.பி.யுடன் இவர் பாடிய டூயட் பாடிய பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட். ‘பூந்தளிர்’ படத்தில், ‘மனதில் என்ன நினைவுகளோ’ பாடலில் இவரின் குரலும் ‘லலலா’ என்று வருகிற ஹம்மிங்கும் நம்மைக் கொள்ளைகொள்ளும்!

41 ஆண்டுகளாகப் பாடிக்கொண்டிருக்கும் தனித்துவக் குரல் நாயகி சைலஜாவுக்கு இன்று அக்டோபர் 9ம் தேதி பிறந்தநாள்.

பாடகி எஸ்.பி.சைலஜாவை வாழ்த்துவோம்!


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்