’’ ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் நான் செய்த மிஸ்டேக், இதுவரை யாருக்கும் தெரியாத டெக்னிக்கல் மிஸ்டேக். இப்போது மனம் விட்டுச் சொல்லுகிறேன்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
‘’20 நாளில் ‘சிகப்புர ரோஜாக்கள்’ படத்தை எடுத்தேன். அந்த பங்களா கிடைக்காமல் அலைந்தேன். படத்தில் வரும் கருப்புப்பூனைக்காக நாங்கள் பட்ட பாடு மறக்கவே முடியாது. பூனைக்காக கேஸ் போட்டார்கள்’’ என்று இயக்குநர் பாரதிராஜா ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் சேனலில் இயக்குநர் பாரதிராஜா, தொடர்ந்து தன் திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
அதில் அவர் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் குறித்து தெரிவித்திருப்பதாவது:
‘’சிட்டி சப்ஜெக்ட் படத்தை நான் எப்படி எடுப்பேன் என்று பத்திரிகைகளில் அப்போது எழுதினார்கள். முதல் இரண்டு படங்களான ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ இரண்டு படங்களும் கிராமத்துக் கதை. இதில் இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படம், ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது. சென்னை தேவி தியேட்டரில் ஒரு வருடத்தைக் கடந்து ஓடியது. அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ படம் ஒரு தீபாவளிக்கு வந்து அடுத்த தீபாவளி வரை ஓடியது.நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலும் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள்.
அந்தக் கோபத்தோடு செய்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. நெகட்டீவ்வான கதையை, இரண்டு ஹீரோக்கள் ஒத்துக்கொள்வதில்லை. கமல்தான் உடனே சம்மதித்தார். புதுமைகளைச் செய்வதில் அப்போதே கமல் அப்படித்தான்.
அந்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ பங்களாவைத் தேடித் தேடி அலைந்தோம். தி.நகரில் ஒரு பங்களாவை பார்த்தோம். பிடித்திருந்தது. கமல் கேட்டார். சம்மதித்தார்கள். மூன்றே நாளில், படத்தில் எங்கெல்லாம் ட்ராலி ஷாட் வருகிறதோ அவற்றையெல்லாம் எடுத்துமுடித்தேன். மொத்த படத்தையும் இருபதே நாளில் எடுத்து முடித்தேன்.
படத்தில் கறுப்புப் பூனை. அதை ஒருவரிடமிருந்து வாங்கி வந்து படமாக்கினோம். மூன்றாவது நாள் பூனையைக் காணோம். பூனை வளர்ப்பவர் கேஸ் போட்டுவிட்டார். அவரை சமாதானப்படுத்தி கேஸை வாபஸ் வாங்கவைத்தோம். அந்தப் பூனை என்னானது என்றே இதுவரை தெரியவில்லை.
இன்னொரு விஷயம்...
படத்தில் டெக்னிக்கலாக ஒரு மிஸ்டேக். இதுவரை எவர் கண்ணிலும் படவில்லை. இப்போது சொல்கிறேன். ’சிகப்பு ரோஜாக்கள்’ படம் பார்த்தீர்களென்றால், அதில் மிகப்பெரிய டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கும். பாக்யராஜ் தன்னை அடையாளம் சொல்லிவிடுவார் என்று கமல் உணர்ந்துகொள்வார். ‘இன்றிரவு உன்னுடன் தான்’ என்பது போல் ஸ்ரீதேவியிடம் சொல்லிவிட்டு, கமல் பாக்யராஜைப் பார்க்க கிளம்புவார்.
அன்றிரவு. ஸ்ரீதேவி தனியே இருப்பார். ஜன்னல் வழியே பார்ப்பார். மழை பெய்யும். அதை வேடிக்கை பார்ப்பார். பொம்மையைத் தொட்டுப் பார்ப்பார். இங்கே போவார். அங்கே போவார். வீட்டில் தனியே இருக்கும் பெண்ணின் உணர்வுகளையும் காத்திருப்பையும் சொல்லியிருப்பேன்.
ஜன்னல் வழியே பார்ப்பார். மழை விட்டிருக்கும். புல்வெளியைப் பார்ப்பார். பூமிக்குள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சி வந்துகொண்டிருக்கும். பைப் ஏதேனும் உடைந்துவிட்டதா என்று பார்ப்பார். அப்போது பூமிக்குள்ளிருந்து ஒரு கை வெளியே வரும். புதைக்கப்பட்ட உடலிலிருந்து ஒரு கை வெளியே வரும். ‘பம்... பம்... பம்...’ என்று இளையராஜா பிரமாதமாக மியூஸிக் போட்டிருப்பான்.
அப்படியே பயந்து கதறி, ஓடி, எங்கே போகிறோம் என்றே தெரியாமல் ஒரு அறைக்குள் ஓடிச் சென்று விழுவாள். அந்த அறையை மட்டும் கமல் காட்டியிருக்கமாட்டார். அந்த அறைக்குள் சென்று அங்கே இருக்கும் பொருட்கள், எழுதப்பட்ட வாசகங்கள், இளம் வயது திலீப்பின் புகைப்படம் (கமலின் பெயர் திலீப்). ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும். அதன் பின்னர் ஒரு இடத்தில் ப்ளாஷ்பேக் முடியும்.
இதிலொரு கேள்வி என்ன தெரியுமா?
திலிப்பீன் இளமைக் காலம், என்ன நடந்தது என்பதெல்லாம் திலீப்பின் பார்வையில் இருந்துதானே ப்ளாஷ்பேக்காக விரியவேண்டும். ஸ்ரீதேவிக்கு எப்படி இளமை விஷயங்கள், அந்தந்த கேரக்டர்கள் தெரியும்? ஆனால், சாமர்த்தியமாக அதை மறைத்துவிட்டேன். இதுதான் சினிமாவின் வெற்றி. ஏமாற்றுவேலை.
ஆனாலும், ‘சிகப்பு ரோஜாக்கள்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதெல்லாம் தேவி தியேட்டரில் இருந்து அண்ணா சிலை வரைக்கும் க்யூ நிற்கும். அப்படி இருந்தார்கள் சினிமா ரசிகர்கள். ஒருகாலத்தில் சினிமா எப்படி இருந்தது பாருங்கள். இன்றைக்கு செல்போனில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago