ஒரு படத்தின் நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும். ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைப்பதென்பது எப்போதாவது பூக்கிற அத்தி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், தமிழ் சினிமாவில், ‘அம்மா கேரக்டருக்கு இந்த அம்மாதான், பிரமாதமா இருப்பாங்க. இவங்க நடிக்கிறதால, இன்னும் பத்து பக்கத்துக்கு வசனத்தை தாராளமா எழுதுங்க’ என்று திரையுலகம், அம்மா கேரக்டர் நடிகையின் மீதும் அவரின் நடிப்பின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தது. அவர்... பி.கண்ணாம்பா.
எத்தனை பக்க வசனங்கள் என்றாலும் ஏற்ற இறக்கங்களுடன் பேசி கைதட்டல் வாங்குவாரே சிவாஜி. கண்ணாம்பாவும் அப்படித்தான். ‘கண்ணாம்பா அளவுக்கு அனல் பறக்கும் வசனங்களை எவரும் பேசவே முடியாதுப்பா’ என்று கொண்டாடினார்கள். அட்சரம் பிசகாமல், அழகுத்தமிழை, உச்சரிப்பு பிசகாமல், பாவம் மாறாமல், உணர்ச்சிப் பெருக்குடன் பேசி கரவொலிகளை அள்ளிய கண்ணாம்பாவிறு தெலுங்குதான் தாய்மொழி. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ்ப் பாடலை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு பாடுவது போலத்தான், கண்ணாம்பா, தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு வசனங்கள் பேசினார்.
ஆந்திரத்தில், சிறுவயதில், 16வது வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டார் கண்ணாம்பா. ‘அரிச்சந்திரா’ நாடகத்தில் இவர் சந்திரமதி கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது. இவரின் நடிப்பைக் கண்டு, பார்வையாளர்கள் கதறி கண்ணீர்விட்டார்களாம். அனுசுயா, யசோதை, சாவித்திரி முதலான நாடகங்களில் நடித்தார் கண்ணாம்பா. புராணக் கதாபாத்திரங்களை அப்படியே கண்ணுக்கு முன்னே மேடையில் உலவவிட, கண்ணாம்பாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சிறுவயதிலேயே பேரும்புகழும் பெற்றார்.
» 543 திரையரங்குகள் தற்காலிக மூடலா?- ட்விட்டரில் சினிவேர்ல்ட் பகிர்வு
» திரைப்படத்தின் மூலம் மீண்டும் நிதி திரட்ட முடிவு: மலையாள நடிகர் சங்கத்தின் கூட்டு முயற்சி
நாடக சமாஜத்தின் நிர்வாகிகளில் ஒருவரான கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவுக்கு 23 வயது இருக்கும்போது திருமணம் செய்துகொண்டார். கண்ணாம்பா, ராஜராஜேஸ்வரி அம்பாளின் தீவிர பக்தை. அதனால் புதிதாக நாடகக் கம்பெனி தொடங்கி, அதற்கு ‘ஸ்ரீராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி’ என்று பெயர் வைத்து, ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் என்று பல மாநிலங்களிலும் நாடகங்களை மேடையேற்றினார்கள்.
1935ம் வருடம், தெலுங்கில் புகழ்பெற்ற ஸ்டார் கம்பைன்ஸ், ‘அரிச்சந்திரா’ படத்தைத் தயாரித்தது. இதில் கண்ணாம்பா, சந்திரமதியாக நடித்தார். இவரின் நடிப்புக்காகவே, ரசிகர்கள் திரும்பத்திரும்ப வந்து பார்த்தார்கள். நடிகர் வி.நாகையாவின் முதல் படமான ‘கிரஹலட்சுமி’ படத்தில் கண்ணாம்பா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி, பொருத்தமான ஜோடி என்று பாராட்டப்பட்டது. இந்தப் படம்தான் தமிழகத்தின் பக்கம் கண்ணாம்பாவை சிகப்புக் கம்பளமிட்டு வரவேற்பதற்கான படமாக அமைந்தது. தியாகராஜ பாகவதருடன் ‘அசோக்குமார்’ படத்தில் நடித்தார். இதில் வில்லி கதாபாத்திரம்தான். ஆனால் மிரட்டியெடுத்திருந்தார் தன் நடிப்பால்!
தமிழ் சினிமாவில் வசனங்களுக்காக பேசப்பட்ட முதல் திரை எழுத்தாளர் இளங்கோவன்., இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார். அத்துடன் கண்ணாம்பாவுக்கான வசனங்களை, பேசிப்பேசி புரியச் செய்தார். அவர் சொல்லுகிற வசனங்களை, தெலுங்கில் எழுதிக்கொண்டு, தமிழில் பேசி நடித்தார். தியாகராஜ பாகவதரின் வசன உச்சரிப்பை விட, கண்ணாம்பாவின் வசனம் பிரமாதம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். திரையுலகம் வியந்தது. பத்திரிகைகள் பாராட்டிக்குவித்தது.
ஜூபிடர் நிறுவனம், இளங்கோவனின் வசனத்தில் ‘கண்ணகி’ படத்தை எடுத்தது. அந்தப் படமெடுக்க தூண்டுகோலாக அமைந்தது கண்ணாம்பாவும் அவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும்தான் என்றது தமிழ் சினிமா. உணர்ச்சி ஒருபக்கம், கண்ணீர் ஒருபக்கம், துக்கம் ஒருபக்கம், ஆவேசம் ஒருபக்கம் என உணர்ச்சிப் பெருக்கெடுத்து கண்ணாம்பா பேசிய வசனங்களுக்கு கண்ணீருடன் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். கோவலனாக பி.யு.சின்னப்பா நடித்தார்.
நாகையா - கண்ணாம்பா ஜோடி தெலுங்கில் பேசப்பட்டது போல், தமிழில் பி.யு.சின்னப்பா - கண்ணாம்பா ஜோடி பேசப்பட்டது.
இளங்கோவனுக்கு அடுத்து கலைஞரின் வசனங்கள், திரையில் அனல் பறக்கவைத்தன. எல்.வி.பிரசாத் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘மனோகரா’ படத்தில், சிவாஜிக்கு அம்மாவாக நடித்திருந்தார் கண்ணாம்பா. ‘பொறுத்தது போதும் மனோகரா பொங்கியெழு’ என்று கண்ணாம்பா பேசப்பேச, கட்டப்பட்ட இரும்புச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வருவாரே சிவாஜி... இங்கே ஒவ்வொரு ரசிகர்களும் அப்படித்தான் வெறி கொண்டு எழுந்தார்கள். ஆவேசக் குரல் எழுப்பினார்கள்.
இதையடுத்த காலகட்டங்களில், நாகையா - கண்ணாம்பா ஜோடி, பி.யு,சின்னப்பா - கண்ணாம்பா ஜோடி என்பதெல்லாம் மறைந்து, சிவாஜிக்கு அம்மாவா... கண்ணாம்பா, எம்ஜிஆருக்கு அம்மாவா... கண்ணாம்பா எனும் நிலை வந்தது. ஹீரோவுக்கு அம்மா என்று ஒரு கேரக்டர் இருக்கவேண்டும் என்பதற்காக கண்ணாம்பாவை புக் செய்யமாட்டார்கள். அந்த அம்மா கேரக்டருக்கு வலுவான நடிப்புத் திறமையும் வசன உச்சரிப்பும் கொண்ட நடிகை இருந்தால்தான் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று கண்ணாம்பாவை புக் செய்தார்கள். அப்படி கண்ணாம்பாவை போட்டுவிட்டோம் என்பதற்காகவே இன்னும் வசனங்களில் கவனம் செலுத்தி, அழுத்தமான வசனங்களெல்லாம் கொடுத்தார்கள்.
தேவர் பிலிம்ஸ், எம்ஜிஆர் கூட்டணிப் படங்களில், கண்ணாம்பாதான் எம்ஜிஆருக்கு அம்மா. ’உத்தமபுத்திரன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘நிச்சயதாம்பூலம்’ என்று எண்ணற்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார் கண்ணாம்பா.
அநேகமாக, தமிழ் சினிமாவின் இலக்கணங்களுக்கு உட்பட்ட ஒரு அம்மா எப்படி இருக்கவேண்டும் என்பதை வெகு அழகாக தத்ரூபமாக வெளிப்படுத்தி, பின்னாளில் வந்த அம்மா நடிகைகளுக்கெல்லாம் ரோல்மாடல் அம்மாவாகத் திகழ்ந்தவர் கண்ணாம்பாவாகத்தான் இருக்கவேண்டும்.
1911ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி பிறந்த கண்ணாம்பா, 1964ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி காலமானார். இன்று அவரின் 109வது பிறந்தநாள்.
கண்ணாம்பாவையும் அவரின் அனல் தெறிக்கும் வசன உச்சரிப்புகளையும் காலம் உள்ளவரை மறக்கவே மறக்காது திரையுலகம்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago