கடவுள் துரோகம் இழைத்துவிட்டார்; என் உயிர் என்னைவிட்டுப் பிரிந்தது: எஸ்பிபியின் பால்யகால நண்பர்கள் உருக்கம்

By செய்திப்பிரிவு

எஸ்பிபியின் பால்யகால நண்பர்களான முரளி மற்றும் சுப்பாராவ் அவரைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எஸ்பிபியின் பால்யகால நண்பர்கள் முரளி மற்றும் சுப்பாராவ் கலந்து கொண்டனர். இருவருமே ஒன்றாக மேடையேறி எஸ்பிபி குறித்துப் பேசினார்கள்.

முரளி பேசியதாவது:

"எல்லோருக்கும் வணக்கம். நாங்கள் பால்யகால நண்பர்கள். நெல்லூரில் இசைக்குழு வைத்து பாட்டுக் கச்சேரி செய்துள்ளோம். அப்போதிலிருந்தே எஸ்பிபிக்கு இசையில் ஆர்வம் இருந்தது. நெல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இசைக் குழு எங்களுடையதே. முக்கிய நிகழ்வுகளுக்குக் கச்சேரி நடத்தியிருக்கிறோம். நாங்கள் அதன் மூலம் வருமானம் ஈட்டவில்லை. இசைக் கலைஞர்களுக்கு மட்டும் 50 ரூபாய் கொடுப்போம்.

எஸ்பிபிக்கு முறையாக சங்கீதம் தெரியாது. ஆனால், மகா ஞானம். அவரது பெற்றோரிடமிருந்து அவருக்கு அந்த ஞானம் வந்திருந்தது. பலரது பாராட்டையும் பெற்றவர்.

எஸ்பிபியின் சகோதரருக்கு எஸ்பிபி திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் எஸ்பிபியும் வாய்ப்பு தேட சென்னை வந்தோம். இங்கு ஐ.ஈ.டி கல்விக் கூடத்தில் ரேடியோ இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். இருவரும் கோடம்பாக்கத்தில் ஒரு அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு சமையல் தெரியும் என்பதால் நான் சமைப்பேன். எங்கள் நிதிநிலை அப்போது மோசமாக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தோம்.

பின் ஒரு நாள் கோதண்டபாணி மூலமாக எஸ்பிபிக்கு முதல் வாய்ப்பு வந்தது. வா சைக்கிளில் செல்வோம் என்று கூறி என்னுடன் சைக்கிளில் வந்தார். முதல் பாடல் பதிவு முடிந்தது. அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

நீ மிகப்பெரிய நிலைக்கு வருவாய் என்று நான் அவரிடம் கூறினேன். நாங்கள் நினைத்ததை விட அதிகமான உச்சத்தை, இமாலய உயரத்தை அடைந்தார்.

அவர் இங்கு ஒலிப்பதிவுக் கூடம் கட்டிய சமயத்தில் நான் நெல்லூரில் ரேடியோ பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தேன். அந்தக் கடையை மூடிவிட்டு நீ என்னுடைய ஒலிப்பதிவுக் கூடத்தில்தான் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். கோதண்டபாணி ஒலிப்பதிவுக் கூடத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை நான் பணியாற்றினேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட இரண்டு முறை எனக்குச் செய்திகள் அனுப்பினார். பல விதமான செய்திகளால் நான் கவலைகொள்வேன் என்பதால், ''நான் பாதுகாப்பாக சென்னையில் இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்'' என்று சொல்லியிருந்தார். காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை அனுப்பினேன். அதை வணங்குவதாகப் பதில் அனுப்பினார்.

கரோனா பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்குச் சென்று பார்க்க முடியவில்லை. காலமான பிறகே பார்க்க முடிந்தது. நாங்கள் உயிர் நண்பர்கள். என் உயிர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டது.

அவர் நீல வண்ண உடை அணிந்து ஒரு புகைப்படத்தில் இருப்பார். அதை வாட்ஸ் அப்பில், அழகா என்று குறிப்பிட்டுப் பகிர்ந்தேன். ''டேய், அழகா என்று சொன்னதற்குப் பதிலாக நல்ல நண்பா என்று சொல்லியிருக்கலாமே'' என்று அதற்குக் குரல் செய்தி அனுப்பினார். அதுதான் அவரது நெறி.

அவர் கற்பூரம் போல. அவ்வளவு எளிதில் சட்டெனக் கிரகித்துக் கொள்வார். இசையமைப்பாளர்கள் நினைத்ததைப் புரிந்துகொண்டு பாடுவார். காகிதத்தில் கற்பூரத்தைப் பொட்டலம் கட்டினால் அந்தக் காகிதத்திலும் கற்பூர வாசனை இருக்கும். கற்பூரம் எஸ்பிபி, அந்தக் காகிதம் நான். அவரிடம் எவ்வளவோ கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில் பணியாற்றியபோது அவரை முதலாளியாகவும், என்னைத் தொழிலாளியாகவும்தான் நினைத்துக் கொண்டேன். நான் அவரை வாடா போடா என்று அழைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். நான் அப்படி அழைக்கக் கூடாது என்பேன்.

எஸ்பிபி உயர்ந்த மனிதர். எங்கும் செல்லவில்லை. அவரது சுவாசம் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறது. என்றும் அவரை நினைத்துக்கொண்டே இருப்பேன்.

சரண்! நீ அப்பாவைப் பெருமைப்படுத்த வேண்டும். உன்னை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் என்று ஊர் போற்ற வேண்டும். அப்பாவின் பெயரையும், ஒழுக்கத்தையும் காப்பாற்ற வேண்டும். இதுதான் என் ஆசை. உன் குடும்பம் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் அனைவரும் எஸ்பிபியின் குடும்பத்தை ஆசிர்வதிக்க வேண்டும்''.

இவ்வாறு முரளி பேசினார்.

பின்பு சுப்பாராவ் பேசியதாவது:

"எங்களுடையது 60 வருட நட்பு. இளம் வயதில் நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனால் எஸ்பிபி வளர வளர அவரிடமிருந்து நிறைய கற்றோம். அவரும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் எங்களுக்கு ஒரு பல்கலைக்கழகத்தைப் போல. அவர் மூலம் பல பெரிய மனிதர்களைச் சந்தித்திருக்கிறோம்.

அவரது நல்ல குணங்கள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். மற்றவர்களுக்கு உதவும் இயல்பு, அது எப்படி என அவரிடம்தான் கற்க வேண்டும். அவருக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் பாடல் பதிவு, கச்சேரிகளில் சிறப்பாகப் பாடுவார். அது அவரது அர்ப்பணிப்பு. இவரைத் தனது ஒலிப்பதிவுக் கூடத்தில் பணிக்கு வரச் சொன்னார் இல்லையா, இவர் ஒரு வருடம் வரவே இல்லை. அதுவரை அந்தப் பணிக்கு யாரையும் சேர்க்கவில்லை. இவருக்காகக் காத்திருந்து இவரையே அதில் நியமித்தார். இப்படிச் சொன்ன வார்த்தையில் நிற்பதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை.

மிக உயர்ந்த மனிதர். இன்னொரு பாலசுப்பிரமணியன் இந்த உலகில் கிடையாது. அவரது நட்பு கிடைத்தது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம். எங்களது துரதிர்ஷ்டம் கடந்த இரண்டு மாதங்களாக அவரைப் பார்க்க முடியாமல், பேச முடியாமல் போனதுதான். அந்த விதத்தில் கடவுள் எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்”.

இவ்வாறு சுப்பாராவ் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்