‘’இசையிலும் பாடல்களிலும் நானும் எஸ்.பி.பி.யும் விளையாடினோம். போட்டிப்போட்டுக்கொண்டு பாடினோம். 51 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்துகொண்டு குழந்தை எவ்வளவு கஷ்டப்பாட்டானோ?’’ என்று பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி உருக்கமும் கண்ணீருமாக தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25 அன்று சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
செப்டம்பர் 26ம் தேதி எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி. குறித்து பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
’’சுப்ரமணியன். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அப்படித்தான் கூப்பிடுவேன். நெல்லூர் பக்கத்தில் கூடூர் என்கிற ஊரில்தான் அவனை (எஸ்.பி.பி) முதன்முதலில் பார்த்தேன். அங்கே ஒரு பாட்டுப்போட்டி. அதில் வென்றவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக, என்னை அழைத்திருந்தார்கள். நான் போயிருந்தேன். அப்போது எல்லோரும் பாடினார்கள். பாலசுப்ரமணியனும் பாடினான். ரொம்பப் பிரமாதமாக இருந்தது அவர் பாடிய விதம். ஜெயித்தவர்களைப் பாடச் சொன்னார்கள். அவனும் பாடினான். அந்தக் குரல் அத்தனை இனிமையாக இருந்தது. தன்னுடைய ஒரிஜினல் வாய்ஸில், ஸ்டைலில் பிரமாதமாகப் பாடினான்.
கடவுள் நமக்கென்று ஒரு குரல் கொடுத்திருக்காரில்லையா? எவரையும் இமிடேட் செய்யாமல், அவனுடைய குரலில் பாடினான். அவ்வளவு சிறப்பாகப் பாடினான். ’ரொம்பப் பிரமாதமா பாடுறே கண்ணா. சினிமால பாடினா, நீ பெரியாளா வருவே’ என்று சொன்னேன். நமஸ்காரம் பண்ணினான். ஆசீர்வாதம் பண்ணினேன். அப்புறம்... மெட்ராஸ் வந்தான். சினிமாவில் பாட ஆரம்பித்தான்.
பிறகு, எந்த ஸ்டேஜாக இருந்தாலும் எந்த விழாவாக இருந்தாலும் ’ஜானகியம்மா சொன்னாங்க, சினிமாவுக்கு வந்தேன்’, ‘ஜானகியம்மா ஆசீர்வாதம் பண்ணினாங்க. அதனால முன்னுக்கு வந்தேன்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
நாம் நிறைய பேரை இப்படி வாழ்த்துவோம். ‘நீ நல்லாப் பாடுறே கண்ணா’, ‘நீ நல்லா பாடுறேம்மா’, ‘நீ முன்னுக்கு வருவே’ என்று வாழ்த்துவோம். ஆனால் எல்லோரும் முன்னுக்கு வந்துவிடுகிறார்களா? அந்தப் பையனுக்கு (எஸ்.பி.பி.) நல்ல ஆசீர்வாதம் இருந்தது. மிகப்பெரிய திறமை இருந்தது. அதிர்ஷ்டமும் இருந்தது. அதனால் முன்னுக்கு வந்தான். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நான் சாதாரணமாக ஆசீர்வாதம் பண்ணினேன், அவ்வளவுதான். ஆனாலும் எஸ்.பி.பி. சொல்லிக்கொண்டே இருப்பான் என்னை.
சென்னைக்கு வந்த பிறகிலிருந்து அவனும் நானும் சேர்ந்து பாடிக்கொண்டே இருந்தோம். எத்தனை டூயட் பாடியிருக்கிறோம் என்று கணக்கே இல்லை. தினமும் சந்திப்போம். தினமும் ரிக்கார்டிங் இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு பாஷை. ஏதாவது ஒரு மொழிக்காகப் பாடிக்கொண்டே இருந்தோம். ரிக்கார்டிங் நடந்துகொண்டே இருக்கும். இருவரும் சேர்ந்து எத்தனைப் பாடல்கள் பாடினோம் என்ற கணக்கே இல்லை.
ரிக்கார்டிங்கில் சண்டை போட்டுக்கொள்வோம். பிறகு சேருவோம். பாட்டுடன், இசையுடன் விளையாடுவோம். போட்டி போட்டுக்கொண்டு பாடுவோம். ’நீ நல்லாப் பாடுறியா, நான் நல்லாப் பாடுறேனா’ என்று போட்டியுடன் பாடுவோம். இதுபோல், எத்தனையோ மொழிகளில், எத்தனையோ பாடல்களை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறோம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.பி., மைசூர் வந்தார். அங்கே அவருடைய பாட்டுக்கச்சேரி. அதற்காக வந்தார். நான் இப்போது மைசூரில்தான் இருக்கிறேன். முதல்நாள் மாலையில், என் வீட்டுக்கு வந்தார். என்னுடனும் என்னுடைய மகனுடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பாட்டெல்லாம் கேட்டு, எங்களுடன் சாப்பிட்டு, ரொம்ப நேரம் இருந்துவிட்டுச் சென்றார்.
நான் என்னுடைய கடைசி ப்ரோகிராமை மைசூரில் பாடினேன். அவரும் தன்னுடைய கடைசி ப்ரோகிராமை மைசூரில் பாடினார். இதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை. கச்சேரி பண்ணவே இல்லை.
இன்னொரு விஷயம்... நான் இசையமைத்த படத்தில் அவர் பாடினார். அவருடைய இசையில் நான் பாடினேன்.அவர், எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நல்ல நல்ல பாடல்களையெல்லாம் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அதிலெல்லாம் நான் பாடியிருக்கிறேன். நான் தெலுங்கில் இசையமைத்த படத்தில், தமிழில் கூட டப்பிங் செய்திருந்தார்கள். அந்தப் படம் ‘மவுனப் போராட்டம்’. அதிலேயும் அவர் பாடியிருக்கிறார்.
இப்படி நானும் எஸ்.பி.பி.யும் அடிக்கடி சந்திப்போம். சேர்ந்து பாடியிருக்கிறோம். நாம் ஒரு பாடகர், உடன் பாடுபவர் இவர் என்றில்லாமல் ஃப்ரெண்ட்லியாக, நண்பர்களாக இருந்தோம். நண்பர்கள் என்றுதான் எங்களைச் சொல்லவேண்டும். எங்கள் வீட்டில் உள்ள ஒரு உறுப்பினரைப் போலத்தான் எஸ்.பி.பி.
கடைசியில், ஹைதராபாத் போய்விட்டு வந்து, உடல் சரியில்லாமல், 51 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, எவ்வளவு கஷ்டப்பட்டானோ குழந்தை,. கடைசியில் நம்மையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விட்டான். வருவான், வருவான் என்று சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நடக்கவில்லை. போயாச்சு. கடவுளிடம் போய்ச் சேர்ந்துவிட்டார்.
எஸ்.பி.பி.யின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். வீட்டில் எல்லோருக்கும் ஆறுதலைச் சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். கவலைப்படாதீர்கள். நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
இவ்வாறு பாடகி எஸ்.ஜானகி உருக்கமும் நெகிழ்வுமாக பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago