இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது. வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை தேறியது.
இதனிடையே திடீரென்று இன்று அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது. அவருடைய மறைவு இந்தியத் திரையுலகினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுச் செய்தி வெளியானவுடன் கண்ணீர் மல்க தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.சரண் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.
» சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது: எஸ்பிபி உடல்நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர் மல்க பேட்டி
எஸ்.பி.பி கடந்து வந்த பாதை
ஜூன் 4, 1946-ம் ஆண்டு, எஸ்.பி. சாம்பமூர்த்தி - ஷகுந்தலாம்மா தம்பதிக்குப் பிறந்தவர் ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்பிரமணியம், அதாவது நம் அனைவருக்கும் பிடித்தமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தந்தை சாம்பமூர்த்தி, ஹரிகதா கலாட்சேபம் செய்யும் அற்புதமான இசைக் கலைஞர் என்பதால் சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. சிறுவயது முதலே பொது நிகழ்ச்சிகளில் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரிய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இசையில் ஞானம் பெற்றிருந்தார். பொறியியல் படிப்பு முடித்து அரசு வேலை பெறுவதே எஸ்பிபியின் லட்சியமாக இருந்தது. இசைத்துறையில் நுழையும் எண்ணம் அப்போது அவருக்கு இருந்திருக்கவில்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது எஸ்பிபியின் நண்பர் ஒருவர், அவரது பெயரை இசைப் போட்டியில் கொடுக்க, அதில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தவர் பாடகர், இசையமைப்பாளர் கோதண்டபாணி.
பாடகராக அறிமுகமான தருணம்
எஸ்.பி.பியின் திறமையைப் பார்த்துத் தான் இசையமைத்த 'ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் எஸ்.பி.பியைப் பாடகராக அறிமுகம் செய்தார் கோதண்டபாணி. பின்பு கன்னட மொழியிலும் பாடகராக அறிமுகமானார். 3 ஆண்டுகள் கழித்து 1969-ம் ஆண்டு தமிழில் பாட ஆரம்பித்தார். தமிழில் இவர் முதலில் பாடியது, 'ஹோட்டல் ரம்பா' என்ற திரைப்படத்துக்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து அத்தானோடு இப்படி இருந்து என்ற பாடலே. ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகவில்லை.
தொடர்ந்து 'சாந்தி நிலையம்' திரைப்படத்திலும் பாடியிருந்தார். ஆனால் 'அடிமைப்பெண்' திரைப்படத்தில் 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடலே எஸ்பிபியின் பெயரைத் தமிழகமெங்கும் பிரபலமாக்கியது. இத்தனைக்கும் அந்தப் பாடல் பாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு டைஃபாய்ட் காய்ச்சல் வந்து ஒரு மாதம் ஓய்விலிருந்தார் எஸ்பிபி. "அவர் இந்தப் பாடலுக்கு ஒத்திகை பார்த்தபின் தன் கல்லூரியில், நண்பர்களிடமெல்லாம் சந்தோஷமாகப் பாடிக் காட்டியிருப்பார். திரைப்படத்தில் வேறொருவர் பாடினால், எம்.ஜி.ஆருக்கு எஸ்பிபியின் குரல் பிடிக்கவில்லை போல என்று பேசுவார்கள். அது அவருக்கு நல்லதல்ல. எனவே அவரே குணமாகி வந்து பாடட்டும்" என எம்.ஜி.ஆர். எஸ்பிபிக்காக ஒரு மாதம் காத்திருக்கச் சொன்னதாக எஸ்.பி.பியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மொழிகளைக் கடந்து பயணம்
தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாக, முக்கிய தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தொடர்ந்து பாட ஆரம்பித்தார் எஸ்பிபி. எல்லா திரை இசையமைப்பாளர்களுக்கும் பிடித்தமான, அனைவரும் வேண்டும் என்று கூறும் பாடகராகக் குறுகிய காலத்திலேயே எஸ்பிபி உருவெடுத்தார். தாய்மொழி தெலுங்கை விட கன்னடத்தில் எஸ்பிபி மிகப் பிரபலம். ஒரே நாளில் 17 பாடல்களை கன்னட மொழியில் எஸ்பிபி பாடி பதிவு செய்திருப்பதாகச் செய்தி உண்டு. இதுவரை எஸ்பிபி 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இதில் படகா, கொங்கணி, துளு உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.
70-களில் ஆரம்பித்து, இந்தத் தலைமுறை வரை, எஸ்பிபி பாடலுக்கு வாயசைக்காத நடிகர்கள் மிகக் குறைவு. பாடாத இசையமைப்பாளர்களும் குறைவு. எஸ்பிபி - இளையராஜா இணையின் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்பவை. இந்திய சினிமாவில் இவர்களைப் போல வெற்றிகரமான ஒரு இசை இணை இல்லை என்றே சொல்லுமளவுக்கு, இவர்களின் பாடல்கள் பிரம்மாண்ட வெற்றிகளையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும், மொழிகள் கடந்து பெற்றுள்ளன.
குவிந்த விருதுகள்
1980-ம் ஆண்டு, 'சங்கராபரணம்' திரைப்படத்தில் கர்நாடக இசையை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடி முதல் முறையாகச் சிறந்த பாடகர் என்ற தேசிய விருதைப் பெற்றார். அடுத்த ஆண்டே 'ஏக் துஜே கே லியே' படத்தில் பாடியதற்காக மீண்டும் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை மீண்டும் வென்றார். அதிலிருந்தே இந்தியிலும் எஸ்பிபியின் குரலுக்கு வரவேற்பு கூடியது. தேசிய அளவில் முக்கியமான பாடகர் என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார். சல்மான் கானின் ஆரம்பக் கால காதல் படங்களில் எஸ்பிபி பல பாடல்களைப் பாடியிருந்தார்.
'சாகர சங்கமம்', 'ருத்ரவீணா', 'சங்கீத சாகர கனயோகி பஞ்சாக்ஷர கவை', 'மின்சார கனவு' ஆகிய படங்களில் பாடிய பாடல்களுக்கும் எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மொத்தம் 6 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் எனத் தேசிய அளவில் உயரிய அங்கீகாரங்களைப் பெற்றிருக்கும் எஸ்பிபி ஆறு முறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார்.
இவை தவிர, சிறந்த பாடகர், சிறந்த டப்பிங் கலைஞர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த உறுதுணை நடிகர் எனப் பல்வேறு பிரிவுகளில், ஆந்திர மாநில விருதான நந்தி விருதுகளை 25 முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தோடு சேர்த்து நான்கு முறை சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் மாநில விருது, 3 முறை கர்நாடக அரசின் மாநில விருதுகளை வென்றுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என எண்ணற்ற விருதுகள் எஸ்பிபியைத் தேடி வந்துள்ளன.
திரைப் பாடல்கள் மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், தொலைக்காட்சித் தொடர் முகப்பு இசைப் பாடல்கள் என அதிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்பிபி. மொத்தம் 45 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் எஸ்பிபி பங்காற்றியுள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களைத் தயாரித்தும் வெற்றி கண்டுள்ளார். உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளிலும் எஸ்பிபி பாடியுள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர்
'மன்மத லீலை' தெலுங்கு டப்பிங்கின்போது நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் கலைஞராகவும் மாறினார் எஸ்பிபி. அன்றிலிருந்து இன்று வரை, தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் பெரும்பாலான கமல்ஹாசனின் படங்களில் அவருக்குப் பின்னணி பேசியிருப்பது எஸ்பிபிதான். இதைத் தவிர இன்னும் பல திரைப்படங்களில் பல நடிகர்களுக்கு, 100 படங்களுக்கும் மேல் பின்னணி பேசியிருப்பார். தமிழில் வெளியான 'ஸ்ரீ ராம ராஜ்யம்' திரைப்படத்தில் நாயகன் பாலகிருஷ்ணாவுக்குத் தமிழில் பின்னணிக் குரல் கொடுத்தது எஸ்பிபியே.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார் எஸ்பிபி. 'கேளடி கண்மணி', 'சிகரம்', 'குணா', 'திருடா திருடா' என பல படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ஈநாடு தொலைக்காட்சியில், 'பாடுதா தீயகா' என்ற என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியைக் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்பிபி. இந்தியாவில் ஒரே தொகுப்பாளரால் அதிக வருடங்கள் நடத்தப்பட்ட இரண்டாவது நிகழ்ச்சி என்ற பெருமை இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. தமிழிலும் சில பாடல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கவுரவ நடுவராகப் பங்கேற்றுள்ளார்.
கரோனா காலத்தில் உதவிய நல்லுள்ளம்
எஸ்பிபி தனது தந்தையின் நினைவாக எஸ்பிஎஸ் அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் பல நல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார். தனது அறக்கட்டளை மூலம் மட்டுமில்லாமல் எண்ணற்ற அமைப்புகளுக்கு, நல்ல காரியங்களுக்குத் தன்னால் ஆன பொருள், பண உதவிகளை எஸ்பிபி செய்து வந்திருக்கிறார். கடந்த சில மாதங்களில் கூட, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள் கேட்கும் பாடல்களைப் பாடி, கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வந்தார் எஸ்பிபி. மேலும் பிஎம் கேர்ஸ் (பிரதமர் நிவாரண நிதி) திட்டத்துக்கும் ரூ.5 லட்சம் நிதி அளித்திருந்தார். இது தவிர பல மாநிலங்களைச் சேர்ந்த எஸ்பிபி ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த அறக்கட்டளை ஒன்றும் பல நல உதவிகளைச் செய்து வருகிறது.
பாடகர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், சமூக ஆர்வலர், மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் எனப் பன்முகம் கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி இன்னும் பல விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவருடைய இழப்பு கண்டிப்பாக இந்தியத் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு. இசைத் துறையில் இவர் ஆற்றிய சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago