’’கேமிராவில் ஃபிலிம் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கமல். ‘என்ன தேனிக்காரரே... ஃபிலிம் இருக்கா, நடிக்கலாமா?’ என்று கமல் கிண்டல் செய்வார். காந்திமதி அம்மாதான் எனக்கு காசு தருவார். சிகரெட் வாங்கக் காசு கொடுப்பார்’’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இயக்குநர் பாரதிராஜா, தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் ‘என் இனிய தமிழ்மக்களே’ எனும் இணையதள சேனலில் சொல்லி வருகிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
’16 வயதினிலே’ படம். முதலில் இதற்கு வைத்த டைட்டில் ‘மயிலு’. என்னுடைய காட்ஃபாதர், முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள், ஒருநாள் அழைத்தார். பாண்டிபஜாரில் ஒரு சிறிய லாட்ஜ். அங்கே தங்கியிருந்தோம். ’உங்ககிட்ட என்ன கதை இருக்கு, சொல்லுங்க’ என்றார். நான் என்ன நினைத்தேனென்றால்... அவருக்கு கதையாவது விற்போம் என்று எண்ணிக்கொண்டு, மூன்று கதைகள் சொன்னேன். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, ’சிகப்பு ரோஜாக்கள்’ கதை ஒன்று, அடுத்து ‘பதினாறு வயதினிலே’ கதை ஒன்று.
அவர், மூன்று கதையில் ‘மயில்’தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். ’என்னங்க இது... ஆர்ட் பிலிம் மாதிரி வரும். ஒரு பிளாக் அண்ட் ஒயிட் படமா, குறைந்த செலவுல பண்ணலாம்னு இருந்தேன். ஒருலட்ச ரூபாய்க்குள்ளே பண்ணலாம்னு இருந்தேன். நீங்க கமர்ஷியலா பண்ணும்போது, இந்தக் கதை இடிக்குமே’ என்று சொன்னேன். ’அதெல்லாம் ஒண்ணுமில்ல. டைரக்டரே... இந்தக் கதை ஓகே. நான் சொல்றதைக் கேளுங்க’ என்றார். ’யாருகிட்ட கொடுக்கப்போறீங்க?’ என்றும் கேட்டார்.
நான் நினைத்தேன்... ’எஸ்.பி.முத்துராமனோ, தேவராஜ் - மோகனோ யார்கிட்ட வேணாலும் கொடுங்க’ என்று சொன்னேன். உடனே அவர், ‘நான் ஒரு டைரக்டர் வைச்சிருக்கேன். அவர்தான் பண்ணுவாரு’என்று ராஜ்கண்ணு சொன்னார். ’இல்லீங்க... நீங்கபாட்டுக்கு ஊர்லேருந்து யாரையாவது கூட்டிக்கிட்டு வந்து டைரக்ட் பண்ண விட்டுடாதீங்க. முதல்படம்’ என்று நான் சொன்னேன்.
அப்படியே பாண்டிபஜாரில் நடந்துபோய்க்கொண்டே இருந்தோம். ‘எனக்கொரு டைரக்டர் இருக்காரு. அவர்தான் டைரக்ட் பண்றாரு டைரக்டரே’ என்று சொல்லிவிட்டு, ஒரு ஐந்து ரூபாயை என் பாக்கெட்டில் வைத்தார். ’நீங்கதான் அந்த டைரக்டர்’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஷாக்காகி நின்றுவிட்டேன். ’நீங்கதான் டைரக்டர்’ என்று மீண்டும் மீண்டும் சொன்னார். எனக்கு டவுட். ‘படம் பண்ணுவாரா? இல்ல ஏமாத்துறாரா?’ என்று. சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பாண்டிபஜாரில் பறக்கிறேன். ’நான் டைரக்டரா? செளகார் ஜானகி அம்மா சொன்னது மாதிரி, மூணே மாசத்துல நான் டைரக்டராகிட்டேனா’ என்று வியந்துகொண்டே இருக்கிறேன்.
‘ஆபீஸ் பாருங்க’ என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். ஒருபக்கம் ஆபீஸ் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னொருபக்கம், பீச்சுக்குப் போய் உட்கார்ந்துவிடுவேன். எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்றெல்லாம் யோசனை.
அப்புறம் வந்தார். ஆபீஸ் வைத்தோம். ’மயில்’ என்று தலைப்பிடப்பட்ட படம்தான் ‘16 வயதினிலே’.
இந்தப் படத்தின் போது வந்த சிக்கல்களையெல்லாம் சொல்லவேண்டும் உங்களிடம். படத்தை கலரில்தான் எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் ராஜ்கண்ணு. கலர்ப்படம் என்றால் காஸ்ட்லி. அப்போது ஆர்வோ ஃபிலிம். அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. ஆனாலும் எல்லோருக்கும் பரிச்சயமில்லை. ஒளிப்பதிவாளர் நிவாஸ், ‘ஆர் ஓ ல எடுத்துடலாம்’ என்றார். ’ஆர் ஓ பிலிமை பயன்படுத்தும் முறை எப்படி?’ என்று புத்தகமெல்லாம் வாங்கிப் படித்தார் நிவாஸ்.
அப்போது ஃபிலிம் கிடைப்பது கஷ்டம். புக் பண்ணவேண்டும். பெங்களூருக்கு வரும். அங்கிருந்து ஒருவர் வாங்கிக் கொண்டு வரவேண்டும். ஆயிரம் அடிதான் கிடைக்கும். ஐநூறு ஐநூறு அடியாக கிடைக்கும். ஸ்ரீதேவியிடமெல்லாம் சொல்லிவிட்டேன். ஒரு முகபாவம் எடுத்தால் கூட, பக்கத்தில் பாக்யராஜிடம் எவ்வளவு அடி ஆகியிருக்கிறது என்று கேட்பேன். ‘அஞ்சு அடி சார்’ என்பார்.இதையெல்லாம் குறித்துக்கொண்டே வருவோம். இப்படித்தான் படமெடுத்தோம்.
கமல் அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்ட நடிகர். ஃபிலிம் எங்களுக்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது. கமலின் கால்ஷீட் வேஸ்ட்டாகிவிடக்கூடாதே. அதற்காக என்ன பண்ணினேன் தெரியுமா? கேமிராவில் ஃபிலிமே இல்லாமல் நடிக்கவைத்தேன். ‘16 வயதினிலே’ படத்தில், பசங்களெல்லாம் ஓணானை அடிப்பார்கள். கமல் வேண்டாம் என்று சொல்லுவாரே... அந்தக் காட்சி. ட்ராலியெல்லாம் போட்டுவிட்டோம். ஃபிலிம் இல்லை என்பது எனக்கும் ஒளிப்பதிவாளருக்கும் மட்டும்தான் தெரியும்.
’ஸ்டார்ட்... ஆக்ஷன்’ என்று சொன்னதும், கமல் நடிக்கிறார். ட்ராலி நகர்ந்துகொண்டிருக்கிறது. நடித்துக்கொண்டே இருந்த கமல், சட்டென்று நின்றுவிட்டார். கேமிராவில் இருந்து சவுண்ட் வரவில்லை. ஃபிலிம் இல்லை என்பதை கமல் கண்டுபிடித்துவிட்டார். மெல்ல என் பக்கத்தில் வந்து, ‘என்ன நடக்குது இங்கே?’ என்று கேட்டார். ’ஃபிலிம் இல்லைல... கேமிரா காட்டிக்கொடுத்திருச்சே... அப்புறம் என்ன?’ என்று கமல் சொல்ல, ஆடிப்போய்விட்டேன். ’வேணும்னா படம் நான் கொடுக்கிறேன். இப்படிலாம் படம் எடுக்கக்கூடாது’ என்றார்.
‘இல்ல இல்ல... பெங்களூர்லேருந்து ஃபிலிம் வந்துக்கிட்டே இருக்கு. பண்ணிடலாம்’ என்று சொன்னேன். இப்படியெல்லாம் நடந்து, பண்ணப்பட்ட படம் ‘16 வயதினிலே’. அதன் பிறகு, ‘என்ன தேனிக்காரரே... ஃபிலிம் இருக்குல்ல. நடிக்கலாம்ல’ என்று கிண்டல் செய்துகொண்டே இருப்பார்.
எல்லோருமே அதில் கஷ்டப்பட்டு உழைத்தார்கள். காந்திமதி அம்மா. அவர்கள்தான் எனக்கு செலவுக்குக் காசு கொடுப்பாங்க. தினமும் சிகரெட் வாங்குவதற்கு காந்திமதி அம்மாதான் காசு கொடுப்பார்கள்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago