நடித்தது குறைந்த அளவிலான படங்கள்தான். நடித்த வருடங்களும் அதைவிடக் குறைவுதான். ஆனால், இன்றைக்கும் மறக்கமுடியவில்லை அந்த நடிகையை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி அசத்திய நடிகை... ஆனால் வாழாமலேயே இறந்துவிட்டார் என்பதுதான் தமிழ் சினிமாவின் ஆறவே ஆறாத வலி. ஒரு தென்றலைப் போல் வந்து, நம் வாழ்வில் இன்றைக்கும் புயல் வீசிக்கொண்டிருக்கிற அந்த நடிகை... ஷோபா.
குண்டான பூசின உடம்பு இல்லை. தொத்தலான உடம்புதான். கவர்ச்சியாகவோ கிளாமராகவோ நடித்ததில்லை. ஆனால் புடவையில் பாந்தமாக இருப்பார். மாடர்ன் உடையில் அழகெனப் பொருந்தி நிற்பார். ஷோபா நடிகையாக இருக்கலாம். ஆனால், அவரை நடிகையாகவே ரசிகர்கள் பார்க்கவில்லை. தங்கள் தெருவில் வசிக்கும் பெண்ணைப் போல் பார்த்தார்கள். தங்கள் வீட்டுப்பெண்ணாகவே பார்த்தார்கள். தங்களின் சகோதரியாகவே பார்த்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவின் எந்தவொரு நடிகையையும் இப்படி உறவாகவோ, பாசமாகவோ, பிரியமாகவோ பார்க்கவில்லை ரசிகர்கள். அதுதான் ஷோபா எனும் நடிகையின் தனித்துவமும் மகத்துவமும்!
அந்த முகம். அந்த வெள்ளந்திச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமும் இல்லாத, பொய்யில்லாத, நடிப்பில்லாத, பாசாங்கில்லாத மழலை முகம். அந்த குழந்தைமை முகமும் முதிர்ச்சியான குரலும் இன்னும் கொள்ளை கொண்டது தமிழகத்தின் மனதை. ஒரு இன்னசெண்ட் கலந்த மெச்சூரிட்டி பாடி லாங்வேஜும் மிக கனமான கதாபாத்திரங்களும் மிக எளிதாக அமைந்தது ஷோபாவுக்கு.
கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’தான் ஷோபா தமிழுக்கு அறிமுகமான முதல் படம். ஆனால் அந்த முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பார். ’திலகம்’ எனும் கதாபாத்திரத்தில், அந்தக் கேரக்டருக்கே திலகமிட்டு கெளரவப்படுத்திய ஷோபாவை, மொத்தத் திரையுலகமும் திலகமிட்டு வரவேற்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்தவருக்கு, தமிழில் அட்டகாசமாகத் திறந்தது கோடம்பாக்க வாசல்.
‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சுமித்ராதான் நாயகி. கமல்தான் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். ஹனுமந்துவுக்கும் கனமான கேரக்டர். ஆனாலும் அவர்களையெல்லாம் தாண்டி, நம் மனதுக்குள் வந்து உட்கார்ந்துகொள்வார் ஷோபா. அந்த யதார்த்தமான நடிப்பும் கள்ளமில்லாச் சிரிப்பும் குறும்புப் பார்வையும் யாரைத்தான் ஈர்க்கவில்லை?
மகேந்திரனின் இயக்கத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தில், வள்ளி எனும் கேரக்டரில், ரஜினியின் தங்கையாக வாழ்ந்திருப்பார். ரஜினியின் தங்கையாக அவர் நடித்தாலும் ஒட்டுமொத்த தமிழுலகமும் அவரை, தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்தது. ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட முகபாவனைகள் காட்டினார். சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அப்படியொரு க்ளோஸப் ஷாட்டுகள் ஷோபாவுக்கு வைக்கப்பட்டன. ‘அடிப்பெண்ணே... பொன்னூஞ்சலாடுது இளமை’பாடலும் அப்படித்தான்!
’மூடுபனி’ படத்தில் சைக்கோ கொலைகார பிரதாப்பிடம் ஷோபா சிக்கிக் கொண்டதும் பதைபதைத்துப் போனது ரசிகர் கூட்டம். போதாக்குறைக்கு, பிரதாப்பிடம் சிக்கிக்கொண்ட கலக்கத்தையும் நடுக்கத்தையும் பதட்டத்தையும் பரிதவிப்பையும் தன் முகத்தாலும் கண்களாலும் காட்டியதற்கு இணையாக இதுவரை எந்த நடிகையும் காட்டவில்லை என்கிறார்கள் எண்பதுகளின் சினிமா ரசிகர்கள். ‘அந்த முட்டைக்கண்ணை வைத்துக்கொண்டு இந்த பிரதாப்பு, முழுங்கிடற மாதிரி பாக்கறாம்பா. நம்ம ஷோபாவை எதுனா செஞ்சிருவானோன்னு பயமா இருந்துச்சு’ என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு, சொல்லிப் புலம்பும் அளவுக்கு நம் எல்லார் மனங்களிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார் ஷோபா.
பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் ஆகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார். காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டி கொண்டாடினார்கள். ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை. ‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ்.
தியேட்டரில் வேலை பார்க்கும் சாமானியப் பெண், மிகப்பெரிய நடிகையாக உயர்வதை வெகு அழகாக தன் நடிப்பால் வெளிப்படுத்திய ‘ஏணிப்படிகள்’ படத்தையும் ‘பூந்தேனில் கலந்து’ பாடலையும் யாரால்தான் மறக்கமுடியும்?
விஜயகாந்தின் ஆரம்பகட்ட ‘அகல்விளக்கு’ படத்தில், ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் ஷோபாவின் நடிப்பும் ஏற்படுத்திய சலனம், என்றைக்குமாக நம் மனதில் தங்கிவிட்ட ஒன்று. விஜயகாந்துடன் நடித்த அந்தப் படம் ஓடியதோ இல்லையோ... அந்தப் படம் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் - ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம்.
’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’யும் மெச்சூரிட்டியான நடிப்பால் உள்ளம் கவர்ந்திருப்பார்.
இயக்குநர் துரையின் இயக்கத்தில் ‘பசி’ படம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. குப்பத்துக் கதாபாத்திரத்தை ஷோபாவை விட வேறு யார் பொருந்தியிருக்கமுடியும்? நடித்திருக்க முடியும்? ஷோபாவின் தன் மொத்த நடிப்பையும் மொத்தத் திறமையையும் கொடுத்திருப்பார். ஒரு பக்கம் வறுமை... இன்னொரு பக்கம் ஊதாரித் தந்தை, நடுவே லாரி டிரைவரின் காமப்பசிக்கு ஏமாறுவது என அத்தனை துயரங்களையும் நம் கண்முன்னே வாழ்ந்து காட்டியிருப்பார். அதனால்தான் அந்தப் படத்துக்காக அவருக்கு ‘ஊர்வசி’ விருது கிடைத்தது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வாங்கிய நடிகை ஷோபாதான்!
அழுக்கு உடையும் குப்பைச் சாக்குமாக வலம் வந்த ஷோபாவை, இன்னும் கொண்டாடினார்கள். கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இளம் வயதுதான். எல்லாமே அவசரம் அவசரமாக வந்தது. மரணம் உட்பட! ஷோபா எனும் கனவுலகின் நிஜ தேவதையாகவே திகழ்கிறார் ஷோபா.
1962ம் ஆண்டு பிறந்த ஷோபா, 78ம் ஆண்டு ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமான ஷோபா, 1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இறந்தார். பதினெட்டு வயது கூட நிறைவுறாத அந்தத் தேவதையின் தொடர்கதை, பாதியிலேயே தன்னை முடித்துக் கொண்டு முற்றும் போட்டுக்கொண்டது.
1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி, அந்த நடிப்புக்கு தனி ஒருத்தியாகத் திகழ்ந்த ஷோபா, இறந்தார். ஷோபா மறைந்து, 40 ஆண்டுகளாகின்றன. ஆனாலும் நம் இதயத்தில், எந்தவொரு நடிகைக்கும் கொடுக்கப்படாத சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஷோபா 62ம் ஆண்டு பிறந்தார். 80ம் ஆண்டில் மறைந்தார். ஷோபா காலமான போது அவருக்கு வயது 18. செப்டம்பர் மாதம் 23ம் தேதி பிறந்தவர், இருபது வருடங்கள் கூட வாழவில்லை. எண்பதாம் வருடத்தில் காலமான ஷோபா, இறந்து 40 வருடங்களாகியும் இன்னமும் நம் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார். இருப்பார்.
- இன்று ‘ஊர்வசி’ ஷோபா எனும் மகத்தான நடிகையின் பிறந்தநாள்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago