’’முதன்முதலில் ஒரு ‘க்ளாப் போர்டு’ அடிக்க நான் பட்டபாடு; உதவி இயக்குநர் என்று முதன்முதலாக என் பெயர் வந்த படம்!’’ - இயக்குநர் பாரதிராஜாவின் ஃப்ளாஷ்பேக் 

By செய்திப்பிரிவு

’’முதன் முதலாக ‘க்ளாப் போர்டு’ அடித்த தருணத்தை மறக்கமுடியாது. அதேபோல், முதன்முதலாக படத்தின் டைட்டிலில், ‘உதவி இயக்குநர் பாரதிராஜா’ என்று வந்ததையும் மறக்கவே முடியாது’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

’என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதளச் சேனலின் வழியே, இயக்குநர் பாரதிராஜா தன் வாழ்வின் பல சுவாரஸ்யங்களைச் சொல்லி வருகிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘’என்னுடைய குரு புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த பிறகு உண்டான ஒரு அனுபவத்தைச் சொல்கிறேன். இதிலென்ன கொடுமையென்றால், இன்றைக்கு இருக்கிற உதவி இயக்குநர்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.

இன்றைக்கு என் அலுவலகம் இருக்குமிடம்... அப்போது ஜெமினி ஸ்டூடியோ. ஜெமினியின் ஒரு ஃப்ளோர். நான் முதன்முதலாக க்ளாப் அடித்த இடமும் இதுதான். அதாவது இன்றைக்கு என் அலுவலகம் இருக்கும் இடம்தான். வாணிஸ்ரீ அம்மா ஹீரோயின். ஏவி.எம்.ராஜன், நாகேஸ்வரராவ் ஹீரோஸ். தெலுங்கிற்கு நாகேஸ்வர ராவ்.

நானும் வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கிறேன். ஃபைலைத் தொடவே விடமாட்டேன் என்கிறார்கள். ஒரேயொரு அஸோஸியேட் டைரக்டர். அவர் வித்தியாசமான ஆள். ‘டேய்... அதெல்லாம் தொடக்கூடாது’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இப்படியே நின்றுகொண்டு வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கிறேன். ‘அப்சர்வேஷன் ஜாப்’ என்பார்களே. அப்படித்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்புறம்... நான்கு மாதம் கழித்துத்தான் க்ளாப்பையே தொடவிட்டார்கள்.

படாபட் ஜெயலட்சுமியின் அப்பா இவர். ஒருநாள் அழைத்து,’இந்தா... க்ளாப் போடு’ என்று க்ளாப் போர்டைக் கொடுத்தார். முதன் முதலாக க்ளாப் அடிக்கிறேன். எங்கே? இப்போது என் அலுவலகம் இருக்கும் இடம்தான், அப்போது சூட்டிங் ஃப்ளோர்.

ஏவி.எம்.ராஜனுக்கும் வாணிஸ்ரீக்கும் காட்சி. க்ளாப் போர்டில் எழுதிக்கொள்ளவேண்டும். ‘ஸ்டார்ட் சவுண்ட்’ என்று சொல்லுவார்கள். அதற்குப் பிறகு கேமிரா. அதன் பிறகுதான் க்ளாப் அடிக்கவேண்டும். எல்லாவற்றையும் மனதில் பதித்துக்கொண்டு, முதன்முறையாக க்ளாப் அடிக்க நிற்கிறேன். ’ஃபிப்ட்டீன் பை ஃபைவ், டேக் ஒன்’ என்று சொல்லவேண்டும். நான் க்ளாப் வைத்துக்கொண்டு ரெடியாக நிற்கிறேன். டைரக்டர் வேறு வேலையாக இருந்தார். என்னை கவனிக்கவில்லை. என்னைப் பார்த்ததும் ஷாக் அவருக்கு.

‘ஸ்டார்ட் சவுண்ட்’. சொல்லியாகிவிட்டது. ‘ஸ்டார்ட் கேமிரா’ என்று சொல்லவேண்டும். சொன்னவுடனே க்ளாப் அடிக்கவேண்டும். படபடப்புடன் தயாராக இருக்கிறேன். ’ஃபிப்ட்டீன்... ஃபிப்ட்டீன்... பை... ஃபைவ்...ஃபைவ்... டேக் ஒன்’ என்று அடித்துவிட்டு ஓடிவிட்டேன். ஷாட் முடிந்ததும் சிரித்தார்கள் பாருங்கள்... எல்லாரும்.
சவுண்ட் எஞ்சினியர், ‘அது யாருங்க?’என்று கேட்டார். என் சவுண்ட் அப்படிப் போயிருக்கிறது. ’பாரத்ராஜ்... நீங்கதானே’ என்று கேட்டார். ’ஆமாம் சார், இதுதான் முதல் தடவை க்ளாப் அடிக்கிறது’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். ’குட் குட்... நோ ப்ராப்ளம்’ என்றார். அங்கே ஆரம்பித்ததுதான் என் வேலை.

இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ‘ஃபிப்ட்டீன் பை ஃபைவைச் சொல்லமுடியவில்லை’. கூட்டத்தில் எனக்கொரு தயக்கம். என் வாய்ஸ் வேறு கரட்டுமுரட்டு வாய்ஸாக இருக்கிறதா? அதுதான் காரணம்.

அதன் பிறகு, மைசூர் லொகேஷன். இப்போது கொஞ்சம் தைரியம் வந்துவிட்டது. மைசூரில் சிவசமுத்திரம் என்றொரு இடம். முதன்முதலாக அந்த இடத்தையெல்லாம் பார்க்கிறேன்.

இரண்டு கேரக்டர் வாணிஸ்ரீக்கு. ஒருவர் ஏழை. இன்னொருவர் பணக்காரர். வீட்டில் வேலை செய்துகொண்டே இருப்பார். உடனே கற்பனைக்கு வருவார். ‘அம்மாமாமாமாமா...’ என்று சத்தமாகக் குரல் எழுப்புவார். அப்படியே பாட்டு வரும். பாத்திரம் தேய்த்துக்கொண்டே இருப்பார் வாணிஸ்ரீ. அம்மா என்று அழைப்பார். ‘கட்’ பண்ணினால். கரிக்கட்டா எனும் இடத்தில் பாடல். இங்கே அம்மா சொல்லி, அங்கே அம்மா வரும். ஷாட்டை எப்படி ஷிப்ட் பண்ணுவது என்பதை அப்போதுதான் அவரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அங்கேயிருந்து, கரிக்கட்டா, தலக்காடு, சிவசமுத்திரா அட்டகாசமான லோகேஷன்ஸ். பாட்டு முடித்துவிட்டு வரும்போது, நல்ல அனுபவமாக இருந்தது. அந்த அனுபவம்தான், பாட்டு எடுக்கும்போது எப்படி எடுக்கவேண்டும் என்பதை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

பிருந்தாவனில் ஒரு காட்சி. ‘என்னய்யா இது பிளாங்கா இருக்கே?’ என்றார். ‘ஒரு மரக்கிளையை வெட்டிட்டு வாங்கய்யா’ என்றார். நானும் இன்னொரு உதவி இயக்குநரும் தேடித்தேடி அலைந்தோம். மரத்தைக் கண்டுபிடித்து, கிளையை வெட்டிக்கொண்டு வர தேடிக்கொண்டே இருந்தோம். ஒரு பெரிய மரக்கிளையை வெட்டிக்கொண்டு வந்து பார்த்தால்... ‘பேக் அப்’ பண்ணி, கிளம்பிக்கொண்டிருந்தார்கள். ’பார்த்ராஜ்... எப்போ சொன்னேன். ஒருமணி நேரம் கழித்து எடுத்துட்டு வர்றியே?’ என்றார் இயக்குநர் புட்டண்ணா கனகல்.

பிறகு படம் முடிந்து, வெளியானது. ‘இருளும் ஒளியும்’ படம். இன்றைக்கும் பார்த்தீர்களென்றால், டைட்டிலில் ’உதவி டைரக்‌ஷன் பாரதிராஜா’என்று வரும். முதன்முதலாக, டைட்டிலில் என் பெயரைப் பார்த்துவிட்டு நான் பட்ட சந்தோஷம்... அற்புதமானது.

உடனே ஊருக்கெல்லாம் சொல்லி, ‘படத்தைப் பாருங்க, எம் பேர்லாம் வரும் பாருங்க’ என்றெல்லாம் சொன்னேன். மறக்கவே முடியாது அவற்றையெல்லாம்’’

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்