எப்போதோ வந்த வடிவேலுவின் காமெடி, பல வருடங்களுக்குப் பிறகு டிரெண்டானது. இன்றைய கணினி யுகத்தில் இது சாத்தியமாகலாம். ஆனால் அப்போது ஒட்டுமொத்த தமிழகமெங்கும் ஒரு பாடல்... ஒலித்தது. ‘பாட்டு நல்லாருக்கு’ என்றோ ‘நல்ல வரிகள்’ என்றோ, ‘ரேடியோல பாட்டு போடுறாங்க, கேப்போம்’ என்றோ மட்டுமே பாட்டு ஒலிபரப்பவில்லை. அதற்காக மட்டுமே கேட்கப்படவில்லை. பிரார்த்தனைக்காக, வேண்டுதலுக்காக, உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக ஒலிபரப்பப்பட்டது. எல்லோரின் பிரார்த்தனையாகவும் இப்படி திரும்பத்திரும்ப ஒலித்த அந்தப் பாடல்... ‘இறைவான் உன் மாளிகையில்...’. அப்படி பாடலை ஒலிக்கவிட்டு, பிரார்த்தனை செய்தது... எம்.ஜி.ஆருக்காக!
ஜெமினி பிரமாண்டமான செலவில் தயாரித்த வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சாணக்யாவின் இயக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, செளகார் ஜானகி முதலானோர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.வி. இசையமைக்க, வாலி பாடல்கள் எழுத எம்ஜிஆரின் நூறாவது படமாக வந்தது ‘ஒளிவிளக்கு’.
கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நல்ல மனமும் அன்பு குணமும் கொண்ட கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு. இன்றைக்கு கரோனா போல், அன்றைக்கு ஊரில் ஒரு நோய் வந்துவிட, ஊரே காலியாகிவிடும். ஒரு பங்களாவில் திருட வரும் எம்ஜிஆர், அங்கே உடல்நலமின்றி இருக்கும் செளகார் ஜானகியைப் பார்ப்பார். மனமிரங்கி உதவுவார். பிறகு ஒருகட்டத்தில் செளகாரை அழைத்துக்கொண்டு அடைக்கலம் தந்து காப்பார். கொஞ்சம் கொஞ்சமாக திருட்டுத் தொழிலை விடுவார்.
இதேகட்டத்தில், ஜெயலலிதாவை விரும்புவார். இவருடைய கொள்ளைக்கும்பல், குடிசைகளுக்கு தீவைத்துவிடும். எல்லோரையும் காப்பார். அப்படி ஒரு குழந்தையைக் காப்பாற்றும் போது, தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடுவார். செளகார் ஜானகி, எம்ஜிஆருக்காக, எம்ஜிஆர் குணமாக வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து பாடுவார்.
”இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ என்று மனமுருகி, கதறி, கண்ணீர்விட்டுப் பாடுவார். எம்ஜிஆர் குணமாவார்.
இந்திப் படத்தின் ரீமேக் இது. எம்ஜிஆரிஸம் கொண்ட கதை. தவிர, எம்ஜிஆருக்கு 100வது படமும் கூட. ‘தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்றொரு பாடல். அநேகமாக, எம்ஜிஆர் குடித்துவிட்டு நடித்த படமும் போதையில் பாடுகிற படமும் இதுவாகத்தான் இருக்கும். ‘ருக்குமணியே பறபற’ என்றொரு பாடலும் ஹிட்டானது. ’மாம்பழத் தோட்டம்’ என்றும் ‘நான் கண்ட கனவினில்’ என்றும் பாடல்கள் உண்டு. ஆனாலும் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ என்ற பாடல், இந்தப் படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டுப்போய்ச் சேர்த்தது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது.
படத்தின் டைட்டிலில் எம்ஜிஆர் பெயர், அடுத்து செளகார் ஜானகி பெயர், அதன் பின்னர் ஜெயலலிதா பெயர் என்று போடுவதாகத் திட்டமிட்டிருக்க, இதை அறிந்த ஜெயலலிதா எம்ஜிஆரிடம் சொல்ல, தயாரிப்பாளரிடம் சொல்ல, இயக்குநரிடம் சொல்ல... பிறகு எம்ஜிஆர் பெயரும் அடுத்து ஜெயலலிதா பெயரும் மூன்றாவதாக செளகார் ஜானகி பெயரும் இடம்பெற்றதாகச் சொல்லுவார்கள். இதை செளகார் ஜானகியும் சமீபத்திய பேட்டிகளில் கூட குறிப்பிட்டிருந்தார்.
1968 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி, வெளியானது ‘ஒளிவிளக்கு. இதன் பிறகு எம்ஜிஆர் எத்தனையோ படங்களில் நடித்தார். பிறகு கட்சி தொடங்கினார். 77ம் ஆண்டு ஆட்சியமைத்தார். பிறகு மீண்டும் தேர்தல் வந்தது. 80ம் ஆண்டு திரும்பவும் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் 84ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் வரும் நேரத்தில், அவருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. சென்னை மருத்துவமனை, அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சையில் இருந்தார்.
அப்போது, எம்ஜிஆருக்கு என்னென்ன நோய்களெல்லாம் இருக்கின்றன என்று தமிழகத்துக்குத் தெரிந்தது. மக்கள் கலங்கினார்கள். துடித்தார்கள். கதறினார்கள். வெடித்துக் கண்ணீர்விட்டு அழுதார்கள்.
எல்லோரும் ஒருமித்த மனதுடன் எம்ஜிஆர் குணமாகவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் முக்கிய அம்சம்... ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல்தான். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு,
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,
ஆண்டவனே உன் பாதங்களை - நான்
கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
முருகையா...
பன்னிரண்டு கண்களிலே
ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும்
இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை
அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால்
மண்ணுலகம் என்னாகும்.
மேகங்கள் கண் கலங்கும்
மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ
வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் - என்
உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
என்ற வரிகள் ஒவ்வொன்றும் எம்ஜிஆருக்காக, எம்ஜிஆரின் கேரக்டருக்காக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் கேரக்டருக்காக மட்டுமில்லாமல், எம்ஜிஆரின் இயல்பான குணத்தைக்கொண்டும் எழுதப்பட்டது. பி.சுசீலா, உருகி உருகிப் பாடியிருப்பார். அந்தப் பாடல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, எம்ஜிஆரின் உடல் நலனுக்காக, பூரண குணம் அடைவதற்காக, தமிழகம் முழுவதும் ஒலித்தது. படம் வெளியான போது கூட அந்தளவுக்கு இந்தப் பாடல் முக்கியத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அப்போது தியேட்டர்களில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, மோகன் என யார் நடித்த படங்கள் ஓடினாலும், படம் தொடங்குவதற்கு முன்னதாக, ‘ஒளிவிளக்கு’ படத்தின் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடல் காட்சி, ஒளிபரப்பாகும். மொத்த தியேட்டரும் எம்ஜிஆரைப் பார்த்து கதறியது. கைகூப்பியது. சூடமேற்றப்பட்டு, வேண்டிக்கொண்டது.
தமிழ் சினிமாவில், இப்படியொரு பாடல், ஒரு நடிகரின் திரையிலும் வாழ்விலும் மக்களுடனும் இரண்டறக் கலந்ததென்றால்... அநேகமாக இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
‘ஒளிவிளக்கு’ படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகின்றன. எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழாவெல்லாம் கொண்டாடப்பட்டு விட்டது. எம்ஜிஆரின் 200வது ஆண்டுவிழா கொண்டாடுகிற போதும் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடலும் அங்கம்வகிக்கும்.
ஆயிரக்கணக்கான பாடல்கள் ஹிட் கொடுத்த கவிஞர் வாலியின் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல், திருச்சி ஐயப்பன் கோயிலில் கல்வெட்டாக பதிக்கப்பட்டிருக்கிறது. ‘இறைவா உன் மாளிகை’யில் மக்கள் மனங்களில் கல்வெட்டாகவே பதிந்துவிட்டது.
சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர். அவரின் ‘இறைவா உன் மாளிகையில்’ பாடலும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பாடலாக அமைந்துவிட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago