அப்படியொரு குரல் எவருக்கும் இல்லை என்று உரத்த குரலில் சொல்லலாம். அதிலும் குறிப்பாக, இப்படியான உச்சஸ்தாயி கொண்ட பாடகி, தமிழ்த் திரையுலகில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்த் திரை இசையில், உச்சம் தொட்ட உச்சஸ்தாயி குரலின் மகாராணி... கே.பி.சுந்தராம்பாள்.
ஈரோடு அருகே கொடுமுடி சொந்த ஊர். சிறுமியாக இருந்த போது, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அப்படிச் சென்ற போது ஒருநாள்... அங்கே, கோயிலில் சிலர், பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிறுமி சுந்தராம்பாளுக்கும் பாடத் தோன்றியது. அங்கேயே... அப்போதே பாடினார். அந்தக் குரல், கோயிலின் பிரமாண்ட மதிலில் பட்டுத் தெறித்து எதிரொலித்தது.
கோயிலில் இருந்தவர்கள்,கோயிலுக்கு வெளியே இருந்தவர்கள் என எல்லோரும் சிறுமி சுந்தராம்பாளை நோக்கி ஓடிவந்தார்கள். சூழ்ந்துகொண்டார்கள். வெளியே இருந்து வந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்து, ‘யார் பாடினது யார் பாடினது?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ’ஒரு சிறுமியின் குரலா இப்படி கணீர்னு இருக்கு’ என்று வியந்தார்கள். பாராட்டினார்கள்.
சுந்தராம்பாள் குரல்... இளம் வயதிலேயே தனித்துவம் மிக்கதாகத்தான் இருந்தது. கணீரென இருந்தது. வெண்கலக் குரல் போல் இருந்தது. உச்சஸ்தாயியில் இருந்தது. கேட்டவர்கள், சிலிர்த்து உலகையே மறக்கும் வகையில் இருந்தது. சொந்த ஊரில், எல்லோராலும் பாராட்டப்பட்டார். கொண்டாடப்பட்டார்.
» நுரையீரல் செயல்பாடு, சுவாசம், உடல் வலிமையில் முன்னேற்றம்: எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் தகவல்
» 'முந்தானை முடிச்சு' ரீமேக்: நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்
பின்னர், கரூரில் ‘நல்லதங்காள்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது பத்து வயதுதான் அவருக்கு. நடிப்பிலும் கலங்கடித்தார். நடிப்பை விட பாட்டில் கரைந்து போனது கூட்டம். ஊர் ஊராக நாடகம் போட்டார்கள். சுந்தராம்பாளின் நடிப்புக்கும் பாட்டுக்குமாக ஒரு கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாக சேரத் தொடங்கியது. இதுதான், அவரை திரையுலகில் அடியெடுத்து வைக்க அச்சாரம் போட்டது.
நாடகங்களைப் பார்க்கவும் சுந்தராம்பாளின் கணீர்க் குரலில் பாடல்களைக் கேட்கவும் கூட்டம் அலைமோதின. நாடகங்களுக்கு ரிசர்வேஷனில் புக்கிங் நடந்தது. வெளிநாட்டில் நாடகங்கள் போடப்பட்டன. ‘சுந்தராம்பாள் உண்டுதானே’ என்று வெளிநாட்டில் கேட்டுக்கேட்டு புக் செய்தார்கள். கடல் கடந்தும் காந்தமென குரல் ஈர்த்தது.
பிறகு, கோடம்பாக்கம் சுந்தராம்பாளை சிகப்புக் கம்பளமிட்டு வரவேற்றது. ‘நந்தனார்’ படத்தில் நடித்தார். சுந்தராம்பாளின் அற்புதமான பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ஹைபிட்ச் என்று சொல்லப்படும் உச்சஸ்தாயியில் சுந்தராம்பாள் பாடியது போல், அவரளவுக்கு எவரும் இதுவரை பாடவில்லை என்று சொல்லிக் கொண்டாடி குதூகலித்தார்கள் ரசிகர்கள். அந்த உச்சஸ்தாயியை எவரும் தொடமுடியாது என்று இன்றைக்கு வரை கே.பி.சுந்தராம்பாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம்.
சுந்தராம்பாள் நடிப்பிலும், உச்சம் தொட்டார். ’இந்த மாதிரி கேரக்டர்தான் பண்ணமுடியும்’ என்று முத்திரை குத்தப்படுகிற உலகில், பால பார்ட், ஸ்த்ரீபார்ட், ராஜபார்ட் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து, புகழ்பெற்றார் சுந்தராம்பாள். திரையில், அவ்வைக் கிழவியையும் கவுந்தியடிகளையும் நம் முன்னே நடக்கவிட்டு, பாடச் செய்து, போதனைகள் நடத்தினார். கே.பி.எஸ். என்று சொல்லப்படும் கே.பி.சுந்தராம்பாள். அவரை சுந்தராம்பாளாகவே பார்க்கவில்லை. அவ்வையாராகத்தான் பார்த்தார்கள். ‘’நந்தனார்’ படத்தில், நந்தனாராக நடித்தார். எஸ்.எஸ்.வாசனின் ‘அவ்வையார்’ படத்தில் அவ்வையாராக நடித்தார். உடல் மொழியாலும் பேசும் மொழியாலும் அவ்வைக்கிழவியாகவே மாறிப் போனார். ரசிகர்கள் பிரமித்தார்கள். கரவொலி எழுப்பினார்கள்.
ஏ.பி.நாகராஜனின் ‘திருவிளையாடல்’ படத்தில், அவ்வைப்பாட்டியாக நடித்தார். ‘பழம் நீயப்பா’ என்ற பாடல் ஒலிக்காத ஆலயங்களே இல்லை. இன்றைக்கும் இவரின் ‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ’ என்று ஒலிக்காத இடமே இல்லை. ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுக்கு உருகாதவர்களே இல்லை.
‘மகாகவி காளிதாஸ்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்று இவர் நடித்த படங்களையும் பாடிய பாடல்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இவரின் குரலுக்கு நூறாயுசு. நூற்றாண்டுகள் கடந்தாலும் இருக்கிற தனி மவுசு குரல் இவருடையது.
ஒரு பக்கம் பக்திப்பாடல்கள்... இன்னொரு பக்கம் தேசபக்திப் பாடல்கள். சுந்தராம்பாளின் பாடல்கள், பக்தியூட்டின. தேசத்தை நேசிக்கச் செய்தன.
காந்திஜி, ஈரோட்டுப் பக்கம் வந்த தருணத்தில், இவரின் வீட்டில்தான் உணவருந்தினார். அப்போது, ‘சாப்பாடு மட்டும்தானா. இந்தத் தட்டு எங்களுக்குத்தானே’ என்றார். ‘தாராளமா எடுத்துக்கோங்க’ என்றார். அது தங்கத்தட்டு. காந்திஜி, அந்தத் தட்டை ஏலம் விட்டார். ஏலத்தில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்டத்துக்கும் மக்களுக்குமாகப் பயன்படுத்த நிதியில் சேர்த்தார் காந்திஜி.
சுந்தராம்பாள், தன் குரல்வளத்தால் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறார். மரியாதையையும் கவுரவத்தையும் அடைந்திருக்கிறார். அவரால் நமக்குக் கிடைத்தது... அற்புதமான, அழகான, கணீர்ப் பாடல்கள்.
எம்ஜிஆரும் சிவாஜியும் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், எம்ஜிஆரே வாங்காத சம்பளமான ஒருலட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றவர்... சுந்தராம்பாள் என்பது இவரின் குரலுக்குக் கிடைத்த இமாலய சாதனை.
அந்த உச்சஸ்தாயி காற்றின் கதவுகளைத் தட்டி, நம் செவிப்பறைகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
கே.பி.எஸ். எனப்படும் சுந்தராம்பாள், பிறந்தது1908ல். அடுத்தமாதம் அவரின் 112வது பிறந்தநாள். 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி காலமானார். அவர் இறந்து 40 வருடங்களாகிவிட்டன. ஆனாலென்ன... கே.பி.சுந்தராம்பாள் குரலுக்கு காலமுமில்லை; மறைவுமில்லை.
- இன்று கே.பி.சுந்தராம்பாள் நினைவு தினம் (செப்டம்பர் 19ம் தேதி).
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago