உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவைப் பணிவுடன் ஏற்கிறேன்: சூர்யா

By செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவைப் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்க நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வந்தபோது அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என கூறுகிறது’ எனக் கருத்து தெரிவித்து இருந்தார். சூர்யாவின் இந்தக் கருத்து நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த 13-ம் தேதி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வழக்கறிஞர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாமா என்பது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்து கோரப்பட்டது. ஆனால், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தேவையில்லை என தலைமை நீதிபதிக்கு விஜய் நாராயண் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதையடுத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு நேற்று பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு:

அர்ப்பணிப்பு உணர்வு

இந்த விஷயத்தில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். அதேநேரம் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நீதிபதிகளும், நீதித்துறை ஊழியர்களும், நீதிமன்றமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளதை கண்டிப்பாக பதிவு செய்ய விரும்புகிறோம்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் படிப்படியாக நேரடி விசாரணை முறை அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஆக.31 வரை கீழமை நீதிமன்றங்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 509 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 346 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்களும் திறக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் மொத்தம் 42,233 வழக்குகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரம் பாதிக்காத வகையில் எழும் நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கரோனா காலகட்டத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் சூர்யா நீதித்துறையை விமர்சித்து இருப்பது அவசியமில்லாதது. அவர், பொது விஷயங்களில் கருத்து தெரிவிக்கும்போது கவனமாகப் பேச வேண்டும். குறிப்பாக உண்மை நிலவரம் அறியாமல் நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது.

இதுபோல பொது தளங்களில் கருத்து தெரிவிக்கும் தனிநபர்கள் தகவல்களைச் சரிபார்த்து ஆராய்ந்த பிறகே பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தவறான கேள்விகளுக்கு இடம் தருவதுடன் தேவையற்ற விபரீதங்களையும் ஏற்படுத்திவிடும். அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள்ளடக்கியதுதான்.

மக்கள் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது அது அவமதிப்பாக மாறாத வகையில் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். சமூகத்துக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துவரும் சுயநேர்மை உடையவர்கள், மற்றவர்களின் பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளும் பணிவு உடையவர்களாக இருக்க வேண்டும். கரோனாவை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க கிடைத்த வாய்ப்பாக கருதாமல், ஒருவரோடு ஒருவர் உடன் நிற்பதற்கான வாய்ப்பாக கருத வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நம் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைக் காக்கும் நீதித்துறையின் மீது எனக்கு எப்போதும் உயர்ந்த மதிப்பு உண்டு. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள நியாயமான உத்தரவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்