ஹீரோவாக நடிப்பது என்பது மிகப்பெரிய பெருமைதான். ஒரு படத்தின் நீள அகலங்களும் ஹீரோவால் உயர்ந்துவிடுவது உண்டு. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்து வருகிறது. இதைத்தான் ‘மார்க்கெட் வேல்யூ’ என்பார்கள். ஆனால் எந்த நடிகராக இருந்தாலும், சுற்றியுள்ள விஷயங்கள் துணை நிற்கவேண்டும். கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், இயக்கம் என்று மட்டுமே இல்லாமல், உடன் நடிக்கக்கூடிய நடிகர்களும் ஹீரோவிற்கு துணைநிற்க வேண்டும். அப்படிப்பட்ட நடிகர்களை கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்றும் குணச்சித்திர நடிகர் என்றும் சொல்லுவார்கள். டெல்லி கணேஷ் அப்படிப்பட்ட உன்னத நடிகர்.
பொதுவாகவே ஹீரோவைப் பிடிக்காத நடிகர்கள் கூட இருக்கலாம். இந்த நடிகரைப் பிடிக்கும், அந்த ஹீரோவைப் பிடிக்காது என்றெல்லாம் சொல்லுவார்கள். இதெல்லாம் ஹீரோக்களுக்குத்தான். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், பாலையா, பூர்ணம் விஸ்வநாதன் என்று எல்லோருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியல் ரொம்பவே நீளம். அந்தப் பட்டியலில் தனியிடம் பிடித்திருப்பவர்... பிடித்தமான நடிகர்... டெல்லி கணேஷ்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடுதான் சொந்த ஊர். படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் வேலை. டெல்லியில் வேலை. அங்கே நாடகம் போட்டதுதான் கணேஷுக்கு பிள்ளையார் சுழி. பின்னர் சென்னைக்கு வந்தவர்... காத்தாடி ராமமூர்த்தியுடன் நட்பு ஏற்பட, அவரின் நாடகக் குழுவில் இணைந்தார்.
’’டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து, டிராமாக்களில் நடிக்கத் தொடங்கினேன். காத்தாடி ராமமூர்த்தியின் குழுவில் நடித்தேன். ‘டெளரி கல்யாணம் வைபோகமே’ நாடகம். விசுதான் எழுதியிருந்தார். இந்த நாடகத்துக்குப் பிறகு ‘பட்டினப்பிரவேசம்’ நாடகம் போட்டோம். இதைத்தான் பாலசந்தர் சார் படமாக்க முடிவு பண்ணினார்.
அந்தப் படத்தில் ‘ஜெய்சங்கரைப் போடலாமா, அசோகனைப் போடலாமா’ என்று பாலசந்தர் சார் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது, பாலசந்தரிடம், ‘கணேஷையே போடலாம் சார். நல்லாப் பண்ணுவான்’ என்று விசு சொன்னார். எனக்கு டெஸ்ட் வைத்து, ஓகே சொன்னார்.
பிறகு ’உனக்கு என்ன பெயர் வைக்கலாம்’ என்று என்னிடமே கேட்டார். ‘எம் பேரு கணேசன். அதுவே நல்லாருக்கு சார்’ என்று சொன்னேன். ’’கொஞ்சம் ஸ்டைலா இருக்கணும்யா பேரு. நெல்லைதான் சொந்த ஊரு. நெல்லை கணேஷ்னு வைச்சுக்கலாமா?’ன்னு கேக்கறே. நெல்லை கணேஷ் வேணாம்யா. அரசியல்வாதி பேரு மாதிரி இருக்கு’ என்றார்.
’சொந்த கிராமம் வல்லநாடு. அதனால வல்லை கணேஷ்னு வைக்கலாம்’னு சொன்னேன். ‘வல்லை கணேஷ்னா’ செக் வல்லை, பணம் வல்லைன்னு நெகட்டீவா ‘வல்லை வல்லை’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. வேணாம்யா. முன்னாடி டெல்லிலே இருந்தியே. டெல்லி கணேஷ்னு வைக்கறேன். நல்லாருக்கும்யா. நல்லாருப்பே’’ என்று சொல்லி பெயர் வைத்தார்’’ என்று சொல்கிறார் டெல்லி கணேஷ்.
ஆக, டெல்லிகணேஷின் சினிமா பிரவேசம் ‘பட்டினப்பிரவேசம்’ மூலமாகத்தான் அமைந்தது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக நல்ல கேரக்டர்கள் வர ஆரம்பித்தன. எந்தப் படத்தில் நடித்தாலும், எந்தக் கேரக்டர் நடித்தாலும் அதில் எவரையும் இமிடேட் செய்யாமல் நடிப்பதுதான் டெல்லி கணேஷின் முதல் பலமாக இருந்தது.
‘டெளரி கல்யாணம்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ என ஒருபக்கம் விசு தொடர்ந்து பயன்படுத்தினார். ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’, ‘உன்னால் முடியும் தம்பி’ என்று பாலசந்தர் பல படங்களில் கொடுத்ததெல்லாம் அற்புத கேரக்டர்கள். அதிலும் ’சிந்து பைரவி’யின் மிருதங்க குருமூர்த்தி கேரக்டர் மறக்கவே முடியாது.’புன்னகை மன்னன்’ சமையல்கார கேரக்டர்... கமலின் அப்பா கேரக்டர்... அற்புதமாகச் செய்திருப்பார்.
இயக்குநர் துரையின் ‘பசி’ படத்தில், குப்பத்தில் வாழ்கிற, சைக்கிள் ரிக்ஷா ஓட்டுகிற கதாபாத்திரத்தில், அட்டகாசம் பண்ணியிருப்பார். தொடர்ந்து சின்னதும் பெரிதுமாக நிறைய படங்களில் நடித்தார். அப்பாவாக நடித்தார். ‘பொல்லாதவன்’ படத்திலும் ‘மூன்று முகம்’ படத்திலும் பல படங்களிலும் போலீஸ் வேடத்தில் நடித்தார்.
கமலின் படங்களில் டெல்லி கணேஷுக்கு ஏதேனும் ஒரு வேடம் நிச்சயம் உண்டு. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நாகேஷை மெயின் வில்லனாக்கினார். டெல்லி கணேஷையும் வில்லனாக்கினார். ‘அவ்வை சண்முகி’யில் காதில் பூ வைத்துக்கொண்டு, சண்முகி மாமியை ஃபாலோ பண்ணுவதும் மணிவண்ணனிடம் உதை வாங்குவதும் என பிரமாதப் படுத்தியிருப்பார்.
‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் காமேஸ்வரனின் அப்பாவாக, சமையல் கலைஞராக இவர் அடிக்கும் லூட்டியில், வயிறு பதமாகிப் போகும். அதிலும் சாம்பாரில் விழுந்த ஒற்றை மீனை வைத்துக்கொண்டும் வெற்றிலைப்பெட்டியை வைத்துக்கொண்டும் டெல்லிகணேஷும் கமலுமாகச் சேர்ந்து நம்மை கொதிக்கக் கொதிக்க, சிரிக்க வைத்திருப்பார்கள்.
‘நாயகன்’ படத்தையும் வேலுநாயக்கரையும் யாரால்தான் மறக்கமுடியும்? தாராவிப் பகுதியின் ஐயராக வேலுநாயக்கருடனேயே இருப்பவராக அட்டகாசம் பண்ணியிருப்பார் நடிப்பில்! ஆஸ்பத்திரியில் அடிபட்டவர்களை பார்க்க கமல் வரும் போது, காயங்களுடன் வந்து, ‘ஒருவார்த்தை சொல்லலியே... எனக்கு எப்படித்தான் தைரியம் வந்துச்சோ தெரியல’ எனும் போதும் சரி... ‘சேரிக்கெல்லாம் ஆம்புலன்ஸ் வராதாம்’ என்று சொன்னதும் ‘வாங்கறோம் அஞ்சு வாங்கறோம்’ என்று கமல் சொல்ல... ‘அஞ்சு ஆம்புலன்ஸ்னா... ‘ என்று இழுப்பதும்... சிறிது மெளனத்துக்குப் பிறகு கமல் டெல்லி கணேஷை உட்கார ஜாடை காட்டுவதும், அவர் பவ்யம் காட்டுவதும்... அந்தக் கேரக்டரை டெல்லி கணேஷைத் தவிர வேறு எவரும் செய்யமுடியாது என்பதை நிரூபித்திருப்பார்.
சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ திரைப்படம்... பெயருக்கேற்ற மாதிரியான ‘ஆஹா’ படம். இதிலும் சமையல் கலைஞர் கேரக்டர். படத்தில் இரண்டு பேர் ஸ்கோர் செய்திருப்பார்கள். ஒன்று... விஜயகுமார். அடுத்தது... டெல்லி கணேஷ். அவர் வரும் காட்சிகளெல்லாம் அவருக்கே அவருக்கானது. ‘சத்யா’ படத்தில் ஆடிட்டராக வரும் ரெண்டு காட்சியிலும் அவர்தான் அசத்தியிருப்பார்.
முந்நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ‘லண்டன்’ படத்தில் வடிவேலுவுடன் இவர் செய்த லூட்டி, தியேட்டரில் விழுந்து எழுந்து குதித்துச் சிரித்து அடங்குவதற்குள் போதும்போதுமென்றாகிவிடும்.
விருதுகளும் பாராட்டுகளும் டெல்லிகணேஷ் வாழ்வில் புதிதில்லை. கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கிய டெல்லி கணேஷின் பயணம்... ‘நேர்கொண்ட பார்வை’யென கமல்,ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், அஜித், விஜய் காலம் வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
1977ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி வந்தது கே.பாலசந்தரின் ‘பட்டினப்பிரவேசம்’. டெல்லிகணேஷ் திரையுலகில் பிரவேசமான நாள் இன்று. அவரின் திரையுலகப் பயணத்துக்கு இது 43ம் ஆண்டு.
மகத்தான கலைஞன் டெல்லி கணேஷை மனதார வாழ்த்துவோம். இன்னும் இன்னுமாக, பல படங்கள்... பல கேரக்டர்கள் செய்து பேரும்புகழும் பெற வாழ்த்துவோம்.
வாழ்த்துகள் டெல்லிகணேஷ் சார்!
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago