புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
ரசிகர்களின் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்களில் எல்லோராலும் மதிக்கப்படும் விரும்பப்படும் இயக்குநர் என்று யார் என்று கேட்டால் யோசிக்காமல் வெற்றிமாறன் என்று சொல்லிவிடலாம். இன்று அவர் பிறந்த நாளை ஒட்டி சமூக வலைதளங்களில் சாமானிய ரசிகர்களிலிருந்து திரை விமர்சகர்கள் திரைப்படக் கோட்பாட்டாளர்கள் , அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பினரும், அனைத்து வயதினரும் வாழ்த்துச் செய்திகளையும் அவருடைய படங்களின் நினைவுகளையும் ஒரு இயக்குநராக வெற்றிமாறனின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறும் கட்டுரைகளையும் பகிர்ந்துவருகின்றனர்.
இன்று எல்லோருடைய டைம்லைனும் வெற்றிமாறன் பிறந்த நாள் சிறப்புப் பதிவுகளால் நிரம்பிவழிகின்றன. இதுவே வெற்றிமாறன் எல்லாத் தரப்பினரையும் ஈர்த்திருப்பதற்கான சான்று. வெற்றிமாறனின் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை விரும்பாதவர்கள் விமர்சனப் பார்வை கொண்டவர்கள் அல்லது முற்றிலும் நிராகரிப்பவர்கள்கூட ஒரு படைப்பாளியாகத் திரைப்பட இயக்குநராக அவருடைய அசாத்திய திறமையை அங்கீகரித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே இப்படிப்பட்ட புகழை அடைந்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
» தயாரிப்பில் புதிய ஆந்தாலஜி படம்: 5 முன்னணி இயக்குநர்கள் கூட்டணி
» உலக சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல்: ப்ரித்விராஜ் புகழாரம்
ஐந்து படங்களில் அளப்பரிய புகழ்
1980-கள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறப்படுவதற்குக் காரணமாக அமைந்த மகத்தான இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவிடம் திரைப்படங்களிலும், அவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிமாறன் 2007-ல் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றாலும் அவர் இயக்கிய இரண்டாம் படமான 'ஆடுகளம்' 2011-ல் வெளியானது.
மூன்று ஆண்டுக்கு மேல் இடைவெளி. அப்போது ஒரு பிரபல வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் “நான் 15 ஆண்டுகள் சினிமாவில் இயங்கினால் அதிகபட்சமாக ஏழு படங்களை இயக்கியிருப்பேன்” என்று கூறியிருந்தார் வெற்றிமாறன். இப்போது அவர் இயக்குநராகி 13 ஆண்டுகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்' என ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அடுத்தது சூரியை நாயகனாகக் கொண்ட படம் சூர்யாவை வைத்து இயக்கப் போகும் 'வாடிவாசல்' ஆகிய இரண்டு படங்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியாகலாம்.
எனவே 15 ஆண்டுகளில் ஏழு அல்லது அதற்கும் குறைவான படங்களையே இயக்கியிருப்பார் வெற்றிமாறன். இவ்வளவு குறைந்த படங்களில் அளப்பரிய புகழையும் அனைவரின் மரியாதையையும் வெற்றிமாறன் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு அவருடைய பல்வேறு தனிச் சிறப்புகளும் ஒரு இயக்குநராகவும் படைப்பாளியாகவும் அவருடைய தனித்தன்மை வாய்ந்த பார்வையும் குணநலன்களுமே காரணம்.
வாசிப்பால் வசப்பட்ட கலை மேன்மை
உதவி இயக்குநராக இருந்தபோது மிக ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் சீடராக இருந்ததால்தான் அவருடைய வாசிப்புப் பழக்கம் மேலும் மெருகேறியது. ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் முக்கியமான நூல்கள் அனைத்தையும் படித்தவர் வெற்றிமாறன்., பாலுமகேந்திரா நூலகத்தைத் தொடங்கியிருக்கும் எழுத்தாளர் அஜயன்பாலா அந்த நூலகத்துக்கான வழிகாட்டியாக வெற்றிமாறன் செயல்படுவதாகக் கூறியிருப்பதிலிருந்து புத்தகங்களுக்கும் வெற்றிமாறனுக்கும் இருக்கும் பிணைப்பைப் புரிந்துகொள்ளலாம்.
பொதுவாக எல்லா உதவி இயக்குநர்களுமே உலகத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பார்கள்.. வெற்றிமாறன் இதிலும் ஆழங்கால் பதித்தவர். அவருடைய முதல் படமான 'பொல்லாதவன்', சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்படமான 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்படத்தின் பாதிப்பில் உருவானதுதான். ஒரு சராசரி இளைஞனின் பைக் திருடுபோவது, அதன் பின்னணியில் இருக்கும் கஞ்சா கடத்தல் மாஃபியா அவர்களுக்கும் இந்த இளைஞனுக்கும் நிகழும் மோதல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் கமர்ஷியல் படமாகவே 'பொல்லாதவன்' திரைப்படத்தை உருவாக்கியிருப்பார் வெற்றிமாறன்.
ஆனால் அதிலும் கதைக்களம், கதாபாத்திரங்களின் பின்னணி, பேச்சு வழக்கு, கதை மாந்தர்களின் உடல் மொழி, பண்பாடு என அனைத்திலும் உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டுவந்திருப்பார். அதோடு நாயகன், வில்லன் இருவருடைய கோணத்திலிருந்தும் சொல்லப்படும் திரைக்கதை ஜாலமும் அனைவரையும் ஈர்த்தது. அந்தப் படத்தில் நிதானமான தாதாவாக வரும் செல்வம் கதாபாத்திர வடிவமைப்பும் அதில் கிஷோரின் நடிப்பும் வெற்றிமாறனை ஒரு தனித்தன்மை வாய்ந்த இயக்குநராக அடையாளம் காண்பித்தன. அந்தப் படத்தின் வெற்றியும் பாராட்டுரைகளும் வணிகச் சட்டகத்துக்குள்ளும் அதற்கான சமரசங்களை உள்ளடக்கியபடி மிகத் தரமான படங்களை வெற்றிகரமாகக் கொடுக்க முடியும் என்பதற்கான சாட்சியமாக நிற்கிறது.
விருதுகளைக் குவித்த களம்
அடுத்து மதுரை வட்டாரத்தில் நடக்கும் சேவல் சண்டை பந்தயத்தை மையமாக வைத்து மனிதர்களின் அடி ஆழத்தில் இருக்கும் வன்மத்தையும் பகையையும் சித்தரித்த 'ஆடுகளம்' திரைப்படமும் மேற்பரப்பில் ஒரு சுவாரஸ்யமான கமர்ஷியல் படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும் அடி ஆழத்தில் பேரிலக்கியங்களால் கையாளப்படும் மனித உணர்வுகள், சிறு கோபத்தால் மனிதன் அடையக்கூடிய கீழ்மைகள் அப்பாவி மனிதர்களின் சாதாரணமாக வெளிப்படும் உன்னதங்கள் ஆகியவற்றைப் பேசுவதாக அமைந்திருந்தது.
ஒரே படம் வணிக கேளிக்கைக்கானதாகவும் இலக்கியத் தரம் வாய்ந்ததாகவும் அமைந்திருந்த அதிசயம் 'ஆடுகளம்' படத்தில் நிகழ்ந்திருந்தது. இந்த இரண்டு அம்சங்களிலும் விமர்சனத்துக்குரிய விஷயங்கள் இல்லாமல் இல்லை, வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே 'ஆடுகளம்'தான் மிகச் சிறந்த படம் என்று கொண்டாடுபவர்கள் இருக்கின்றனர். அதே நேரம் சிறந்த இயக்கம். சிறந்த திரைக்கதை என வெற்றிமாறனுக்கு இரண்டு விருதுகள், நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது உட்பட ஆறு தேசிய விருதுகளை வென்ற அந்தப் படம் அதன் தகுதிக்கு அதிகமாகப் புகழப்படுகிறது என்று கருதுபவர்களும் கணிசமானோர் இருக்கிறார்கள்.
அதிகார வன்முறையைத் தோலுரித்த துணிச்சல்
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' காவல்துறை வன்முறையை சமரசமின்றி தோலுரித்த படம். அதன் முதல் பாதி எம்.சந்திரகுமார் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தான் தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகளை முன்வைத்து எழுதிய 'லாக்கப்' நாவலையும் இரண்டாம் பாதி 2012-ல் நிஜத்தில் நடைபெற்ற சில என்கவுன்ட்டர் கொலைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.
இரண்டையும் உறுத்தல் இல்லாமல் இணைத்து காவல்துறையினருக்கு இருக்கும் கேள்விகளற்ற அதிகாரத்தால் அப்பாவிகள் முதல் அதிகார மையத்துக்கு அணுக்கமாக இருப்பவர்கள் வரை அனைவருடைய உயிரும் ஊசலாட்டத்தில் இருப்பதைப் பதிவு செய்த மிகத் துணிச்சலான படம் 'விசாரணை'. 72-ம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாகத் திரையிடப்பட்ட இந்தப் படம் அங்கு விருதுகளையும் சர்வதேச திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது. அதோடு மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. தமிழ்நாட்டிலும் விமர்சகர்கள், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.
வடசென்னையின் வரலாறு
அடுத்ததாக வெற்றிமாறன் தன்னுடைய நீண்ட நாள் திட்டமான 'வட சென்னை' திரைப்படத்தை இயக்கினார். வடசென்னையில் நிலவும் ரவுடியிசம் அங்கு ரவுடியிசம் உருவாவதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல் காரணிகள், அவற்றால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வில் நிகழும் தாக்கங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருந்தார். உண்மையில் வட சென்னையிலிருந்த நிழல் உலகத்தின் 30-40 ஆண்டு வரலாற்றை மூன்று பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.
முதல் பாகம் மட்டுமே வெளியாகியிருக்கிறது. உள்ளகத்தில் மட்டுமல்லாமல் உருவாக்கத்திலும் மிகச் சிறந்த தரத்தில் அமைந்திருந்த இந்தப் படம் அனைத்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. குறிப்பாகச் சிறையில் சரிந்து விழுந்த சாமியானா கூரைக்குக் கீழே நடக்கும் கும்பல் மோதல் காட்சி உருவாக்கப்பட்ட விதம் உலகத் தரமானது என்று புகழப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் நில உரிமை, அவர்கள் வாழும் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிலத்தை அபகரிக்க முயலும் அவலம் ஆகிய சமகால மக்கள் பிரச்சினைகளையும் காத்திரமாகப் பதிவு செய்திருந்தார் வெற்றிமாறன்.
வெற்றிகரமான திரைப்படமான இலக்கியப் படைப்பு
இந்தப் படத்துக்கு அடுத்து எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை மையமாக வைத்து 'அசுரன்' திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். 1980-களிலும் 1960-களிலுமாக இரண்டு தளங்களில் நடக்கும் இந்தக் கதையில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் சாதியக் கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்மத்தை அதிகரிக்கும் காரணியாக இருப்பதையும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சி எனத் தீவிரமான சமூக அரசியல் பிரச்சினைகளை ஒரு கமர்ஷியல் மிகை நாயக சினிமாவின் சட்டகத்துக்குள் கச்சிதமாகப் பொருத்தியிருந்தார் வெற்றிமாறன். 'அசுரன்' படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அது பேசிய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தது. இந்தப் படத்தின் மூலம் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளை வெற்றிகரமான திரைப்படமாக உருமாற்றுவதற்கான சூத்திரத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
திரைப்படமாகும் நாவல்கள்
அடுத்ததாக மீரான் மைதீன் எழுதிய 'அஜ்னபி' நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் வெற்றிமாறன். அதோடு ஜல்லிக்கட்டுத் திருவிழாவை முன்வைத்து சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலைத் திரைப்படமாக்கப் போகிறார் வெற்றிமாறன். இதில் இன்றைய முதல் நிலை நட்சத்திரங்களில் முக்கியமானவரான சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த இருவரின் கூட்டணி அதுவும் ஒரு புகழ்பெற்ற இலக்கியப் படைப்பின் பின்னணியுடன் இணைந்திருப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 'காக்கா முட்டை', 'லென்ஸ்' போன்ற மிகத் தரமான திரைப்படங்களை 'உதயம் என்.ஹெச்.4' 'கொடி' உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.
வெற்றி ரகசியம்
ஒரு திரைப்பட இயக்குநராக சினிமா குறித்த ஆழமான புரிதலைப் பெற்றிருப்பவராக விமர்சனங்களுக்குக் காதுகொடுப்பவராகப் படத்துக்குப் படம் தன்னை அடுத்த கட்டத்துக்கு உயரும் படைப்பாளியாக இருக்கிறார் வெற்றிமாறன். சினிமா என்பது கலையும் வணிகமும் மட்டுமல்ல அது முதலில் ஒரு அறிவியல் என்று அவர் கூறியிருப்பது சினிமா என்னும் வடிவம் குறித்த அவருடைய உன்னதமான புரிதலை வெளிப்படுத்தப் போதுமானது. அதுவே அவருடைய திரைமொழி, உருவாக்கம் ஆகியவற்றில் வெளிப்படும் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளுக்குக் காரணமாகவும் அமைகிறது.
சீரியஸான சமூக அரசியல் பிரச்சினைகளை சுவாரஸ்யமான வெகுஜன திரைக்கதை சட்டகத்துக்குள் உள்ளடக்கி அபாரமான திரைமொழியுடன் உருவாக்குவதே ஒரு இயக்குநராக வெற்றிமாறனின் ஆகச் சிறந்த பங்களிப்பு. இது அவருடைய வருங்காலப் படங்களிலும் தொடரும். அவரிடமிருந்து இன்னும் பல தரமான சிறப்பான திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்று தைரியமாகக் கட்டியம் கூறலாம்.
வெற்றிமாறன் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி விருதுகளைக் குவிக்க இந்தப் பிறந்தநாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago