நடிகர் விஜயகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்க வைத்த கலைஞர் 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தென்னிந்திய சினிமாவில் மிக நீண்ட காலம் நடிகராகக் கோலோச்சியவரும் ஒரு நடிகராக பல பரிமாணங்களை வெளிப்படுத்தியவரும் பல கட்டப் பரிணாமங்களை அடைந்தவரும் பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவருமான நடிகர் விஜயகுமார் இன்று (ஆகஸ்ட் 29) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

முருகனாகத் தொடக்கம்

1943-ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவரான விஜயகுமார் 1961இல் சிவாஜி கணேசன் – பத்மினி நடித்த 'ஸ்ரீவள்ளி' படத்தில் இளம் முருகனாக நடித்தார். அதுவே அவருடைய நெடிய திரைப் பயணத்தின் தொடக்கமாகும். அதன் பிறகு ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். 1967-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற 'கந்தன் கருணை' படத்தில் முருகக் கடவுளாக நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமார்தான். ஆனால், பிறகு அவருக்குப் பதிலாக சிவகுமார் நடித்தார். விஜயகுமார் அந்தப் படத்தில் ஒரு சிறிய துணை வேடத்தில் நடித்தார்.

கவனம் ஈர்த்த 'தொடர்கதை'

1974-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் நாயகியைக் காதலித்து பிறகு அவருடைய தங்கையை மணந்துகொள்பவராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார். மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற அந்தப் படம் விஜயகுமாரின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. 1970-களிலும் 80களிலும் தொடர்ந்து பல முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரங்களிலும் இணை நாயகனாகவும் இரண்டாம் நாயகனாகவும் முதன்மைக் கதாநாயகனாகவும் எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் பல வகை நடிப்புப் பரிணாமங்களை வெளிப்படுத்தினார்.

சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவகுமார் ஆகியோர் கதாநாயகனாக நடித்த பல படங்களில் முக்கியத் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினிகாந்துடன் 'சங்கர் சலீம் சைமன்', போன்ற படங்களிலும் கமல் ஹாசனுடன் 'நீயா' உள்ளிட்ட படங்களிலும் இணை நாயகனாக நடித்தார். 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்', 'பகலில் ஓர் இரவு' உள்ளிட்ட படங்களில் முதன்மைக் கதாநாயகனாக நடித்தார். அப்போது முன்னணி நாயக நடிகராக நட்சத்திரமாக வளர்ந்துவந்த அனைவருடைய படங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்தார்.

கண்ணியமான தந்தை

1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அக்னி நட்சத்திரம்; விஜயகுமாரின் திரைவாழ்வில் அடுத்த முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் பிரபு, கார்த்திக் இருவரும் நாயகர்களாக நடித்திருந்தாலும் கதையின் மையக் கதாபாத்திரம் அவர்கள் இருவரின் தந்தையாக நடித்த விஜயகுமாருடையதுதான். இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு குடும்பங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் அதே நேரம் அவர்களுக்கிடையிலான இணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் தவிக்கும் நடுத்தர வயது மனிதராக மிக இயல்பாகப் பொருந்தினார். அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான குற்ற உணர்வு, பாசம், வயதுக்குரிய கண்ணியம் ஆகியவற்றை மிகையின்றி வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

'அக்னி நட்சத்திரம்' படத்தின் வெற்றி, சற்று முதிய வயதுடைய அதே நேரம் மரியாதைக்குரிய துணைக் கதாபாத்திரங்களிலும் பெரும்பாலும் நாயகன் அல்லது நாயகியின் தந்தையாக பல படங்களில் விஜயகுமார் நடிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது. 1989-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' தெலுங்குப் படத்தில் (தமிழில் 'இதயத்தைத் திருடாதே') நாயகியின் தந்தையாகவும் 1990-ல் வெளியான 'பணக்காரன்' படத்தில் நாயகனான ரஜினிகாந்தின் தந்தையாகவும் நடித்தார். 1990-களிலும் புத்தாயிரத்திலும் பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். அதே நேரம் தந்தை கதாபாத்திரத்துக்குள் முடங்கிவிடாமல் அவ்வப்போது சில மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து முத்திரை பதித்தார்.

தந்தையைத் தாண்டி

மணிரத்னம் கதை - திரைக்கதை எழுதி தயாரித்த 'சத்ரியன்' படத்தில் நாயகன் விஜயகாந்தின் வளர்ப்புத் தந்தை மற்றும் வழிகாட்டியாக காவல்துறை உயரதிகாரியாக அனைவரையும் ஈர்த்தார். பாரதிராஜா இயக்கத்தில் 1993-ல் வெளியான 'கிழக்குச் சீமையிலே' படத்தில் தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் பாசக்கார அண்ணனாக முதன்மைக் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். 'பாசமலர்' சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த அண்ணன் கதாபாத்திரம் 'கிழக்குச் சீமையிலே' விஜயகுமார் என்று சொன்னால் மிகையாகாது. அந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறப்பு விருதைப் பெற்றார்.

1994-ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான 'நாட்டாமை' படத்தில் நீதியையும் நியாயத்தையும் உயிருக்கு இணையாக மதிக்கும் நாட்டாமையாக நாயகன் சரத்குமாரின் தந்தையாக விஜயகுமார் நடித்திருந்தார். அவருக்கான அந்த அரை மணி நேரக் காட்சிகளே படத்தின் ஆகச் சிறந்த பகுதி என்று கூறும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரமும் அதில் விஜயகுமாரின் பொருத்தமான நடிப்பும் அமைந்திருந்தன. 'நாட்டாமை' படம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதற்கு விஜயகுமாரின் நடிப்பும் முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

1996-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'அந்திமந்தாரை' படத்தில் நடித்ததற்காக இரண்டாம் முறையாக தமிழக அரசின் சிறப்பு விருதை வென்றார். அதேபோல் 1998-ல் அதே ரவிகுமார்-சரத்குமார் கூட்டணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற 'நட்புக்காக' படத்திலும் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

1990-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் பல படங்களில் அண்ணனாக, அப்பாவாக, மாமனாராக உயரதிகாரியாக நடித்தார் விஜயகுமார். இவற்றுக்கிடையில் சுரேஷ் கிருஷ்ணாவின் 'சங்கமம்' படத்தில் அகங்காரம் பிடித்த பரதநாட்டிய ஆசான், 'ஜோடி' திரைப்படத்தில் கறாரான கர்நாடக சங்கீத விமர்சகர் போன்ற மாறுபட்ட துணைக் கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார்.

புத்தாயிரத்தில் புதிய பரிமாணங்கள்

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் வெளியான 'குஷி' படத்தில் நாயகி ஜோதிகாவின் தந்தையாக நெல்லைப் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவராக மாறுபட்ட நடிப்பைத் தந்திருந்தார் விஜயகுமார். 'ஆனந்தம்' படத்தில் சினேகாவின் தந்தையாக சற்று எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படியாக நாயகன்/நாயகியின் தந்தை என்னும் சட்டகத்துக்குள் பல வகையான வண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புத்தாயிரத்தின் பிறபகுதியில் தந்தை வேடங்களுடன் தாத்தா வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார்., முதலமைச்சர்/அமைச்சர், சமூகத்தில் மரியாதைக்குரிய அந்தஸ்தில் இருக்கும் பிரமுகர் போன்ற கண்ணியமான வேடங்களில் அதிகமாக நடிக்கத் தொடங்கினார். இப்போதுவரை இதுபோன்ற துணைக் கதாபாத்திரங்களில் நடித்தபடி தன் நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் நிறைய படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜயகுமார். இது தவிரத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இப்போது ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடரிலும் நடித்துவருகிறார்.

விஜயகுமாரின் காதல் மனைவி மஞ்சுளா முதலில் கதாநாயகியாகவும் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்தவர். அவருடைய மகன் அருண் விஜய் இன்று முன்னணிக் கதாநாயக நடிகர்களில் ஒருவர். மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி மூவரும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்கள். இப்படியாக விஜயகுமாரின் நடிப்புத் துறையில் நீங்காத் தடம் பதித்த குடும்பம். துணை நடிகராக, நாயகனாக, வில்லனாக, துணை நடிகராக, முதிய கதைமாந்தராக, பல பரிணாமங்களை எடுத்து தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் நடிகர் விஜயகுமார் இன்னும் பல படங்களில் நடித்து விருதுகளையும் ரசிகர்களின் பாராட்டுகளையும் குவிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்