தமிழ் சினிமாவில் இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக்கொள்ளாமல் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்கள் அரிதானவர்கள். அதிலும் நாயகன், இரண்டாம் கதாநாயகன், கதையின் நாயகன், துணைக் கதாபாத்திரம். நகைச்சுவை கலந்த கதாபாத்திரம், எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம், ஸ்டைலிஷான வில்லன், தர லோக்கலான வில்லன் என ஒரு நடிகருக்கு என்னென்ன சாத்தியங்கள் உண்டோ அனைத்திலும் கதாபாத்திரத்துக்குத் தகுந்தபடி உடலளவிலும் உள்ளத்தாலும் முழுமையாக உருமாறி சிறந்த நடிப்பைக் கொடுக்கும் கலைஞர்கள் மிகவும் அரிதானவர்கள். அத்தகைய மிக அரிதான நடிகர்களில் ஒருவர்தான் பிரசன்னா. அவர் இன்று (ஆகஸ்ட் 28) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
திருச்சியில் பிறந்து வளர்ந்தவரான பிரசன்னா பொறியியல் பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நடிகராவதற்கான திறமையும் வேட்கையும் அவரிடம் இருந்தன. புகழ்பெற்ற மணிரத்னம் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுசி கணேசன் இயக்கிய 'ஃபைவ் ஸ்டார்' படத்துக்கு நடிகர் தேர்வு நடந்தது. அதில் பங்கேற்றுத் தேர்வுபெற்றார். ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்றாலும் பிரசன்னாவின் கதாபாத்திரம்தான் படத்தின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்குக் கூடுதல் முக்கியத்துவத்துடன் அமைந்திருந்தது.
2002-ல் வெளியான 'ஃபைவ் ஸ்டார்' விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றாலும் அதற்குப் பிறகான பிரசன்னாவின் திரைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2004இல் வெளியான இயக்குநர் ராதாமோகனின் அறிமுகப் படமான 'அழகிய தீயே' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் பிரசன்னா. பிரகாஷ் ராஜ் தயாரித்திருந்த இந்தப் படம் பரவலான வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. குறிப்பாக பிரசன்னாவின் நடிப்பு பலரைக் கவர்ந்தது.
» புதிய காட்சிகள் சேர்த்து மீண்டும் வெளியாகவுள்ள அர்ஜுன் ரெட்டி
» 'சூரரைப் போற்று' வெளியீட்டு நிதி: திரைத்துறையினருக்கு ரூ.1.5 கோடி சூர்யா உதவி
மீண்டும் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் மணிரத்னத்தின் இன்னொரு உதவி இயக்குநர் வி.ப்ரியா இயக்கிய 'கண்ட நாள் முதல்' திரைப்படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்தார். வெற்றிபெற்ற அந்தப் படத்தின் மூலம் பிரசன்னாவின் மீதான கவனம் மேலும் அதிகரித்தது. இதற்குப் பிறகு டி.பி.கஜேந்திரன் இயக்கிய 'சீனா தானா 001' என்னும் நகைச்சுவைப் படத்தில் பொருத்தமான நாயகனாகவும், சித்திக் இயக்கிய 'சாது மிரண்டா' படத்தில் எதுவும் தெரியாத அப்பாவி போல் நடிக்கும் கொலைகார நாயகனாகவும் பிரசன்னாவின் நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படங்களின் மூலம் கதாநாயக வேடங்களில் பல வகையான நிறங்களைக் காண்பிக்க முடிந்த கலைஞராகவும் பன்முகத்திறமை வாய்ந்த நடிகராகவும் அடையாளம் காணப்பட்டார் பிரசன்னா.
நாயக நடிகராக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடிக்கும் துணிச்சல் பிரசன்னாவுக்கு இருந்தது. அந்தப் படத்தில் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் தந்திரத்துடன் சிரித்துக்கொண்டே நிதானமாகக் குற்றங்களைச் செய்து ஒவ்வொரு முறையும் சுயநலத்துடன் தான் மட்டும் தப்பித்துக் கொள்பவராக கச்சிதமாக நடித்திருந்தார் பிரசன்னா. விமர்சகர்கள் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் வணிக ரீதியான வெற்றியையும் பெற்ற 'அஞ்சாதே' பிரசன்னாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக நிலைபெற்றது.
இதைத் தொடர்ந்து பல வகையான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள், விமர்சகர்களின் நன்மதிப்பைப் பெற்ற நடிகராகப் பரிணமித்திருக்கிறார் பிரசன்னா. நாயகனாக நடித்த படங்களிலும் மற்றவர்கள் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தில் ஆண்மைக் குறைபாடு உள்ள நபராக நடித்திருந்தார். இவரும் சினேகாவும் முதல் முறையாக இணைந்து நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி வெளிப்படையாகப் பேசியது.
'நாணயம்' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாநாயகனாக, 'முரண்' படத்தில் எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட இணை நாயகனாக, 'பாணா காத்தாடி', 'பவர் பாண்டி', போன்ற படங்களில் துணை நடிகராக, 'துப்பறிவாளன்', 'நிபுணன்' போன்ற படங்களில் துணை நாயகனாக. 'புலிவால்' போன்ற படங்களில் குறைகளைக் கொண்ட சராசரி மனிதனாக, 'திருட்டு பயலே 2', 'மாஃபியா' போன்ற படங்களில் நவீன குற்றங்களைப் புரியும் வில்லனாக எனத் தொடர்ந்து பல வகையான கதாபாத்திரங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் பிரசன்னா. விமர்சகர்களின் பாராட்டையும் பெறுகிறார்.
நடிகர் தனுஷ் தான் எழுதி முதல் முறையாக இயக்கிய 'பவர் பாண்டி' படத்தில் கதையின் நாயகனான ராஜ்கிரணின் மகன் வேடத்துக்கு பிரசன்னாவை அணுகியிருக்கிறார். அதற்கு முதலில் தான் தயங்கியதாகவும் பிறகு தன்னை மனதில் வைத்தே அந்தக் கதாபாத்திரத்தை எழுதியதாக தனுஷ் சொன்னதால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் பிரசன்னா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதன் மூலம் ரசிகர்கள், விமர்சகர்களைத் தாண்டி திரைத் துறையில் இருப்பவர்கள் அதுவும் சாதனைக் கலைஞர்கள், இயக்குநர்களிடம்கூட ஒரு நடிகராக நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார் பிரசன்னா என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் திறமை வாய்ந்த நடிகர், இமேஜ் பார்க்காமல் நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேடிச் சென்று நடிப்பவர் என்றெல்லாம் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் பிரசன்னாவுக்கு உழைப்பு, திறமை, அர்ப்பணிப்பு என அனைத்தும் இருந்தும் உரிய இடமும் அங்கீகாரமும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே சினிமா ரசிகர்கள்., ஆர்வலர்கள், விமர்சகர்கள் பலரின் கருத்து. இது முற்றிலும் உண்மை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவருடைய திறமைக்கு இன்னும் பல நல்ல கதாபாத்திரங்களும் வெற்றிகளும் அவரைத் தேடி வரவேண்டும். இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் அவரை இன்னும் சிறப்பாக முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அது நடந்தால் பிரசன்னாவின் புகழ் இன்னும் பல படிகள் அதிகரிக்கும். அவர் பல விருதுகளையும் பெற்று தமிழ் சினிமாவுக்குப் பெருமை தேடித் தர முடியும்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்களின் உள்ளடக்கங்களுக்கான எல்லைகள் பன்மடங்கு விரிவடைந்திருக்கின்றன. நல்ல திரைப்படங்களை வித்தியாசமான முயற்சிகளை அவற்றுக்கான பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளும் பெருகியிருக்கின்றன. எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பதற்கான விருப்பமும் திறமையும் கொண்ட பிரசன்னா போன்ற கலைஞர்களுக்கு இது ஒரு பொற்காலம். அவர் மென்மேலும் பல நல்ல வாய்ப்புகளையும் வெற்றிகளையும் பெற்றுத் திரைத் துறையில் என்றும் மின்னும் நட்சத்திரமாகத் திகழ இந்தப் பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago