தமிழ் சினிமாவில் கடந்த நாற்பதாண்டுகளில் பல பரிமாணங்களை அடைந்து எப்போதும் முன்னணி அந்தஸ்தைத் தக்க வைத்திருக்கும் நடிகையான ராதிகா இன்று (ஆகஸ்ட் 21) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அப்பாவிப் பெண்ணாக அறிமுகம்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா 1978இல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். '16 வயதினிலே' படத்தின் தமிழ் சினிமாவையே தலை நிமிர்ந்து பார்க்க வைத்த பாரதிராஜா இயக்கிய இரண்டாம் படமான இதில் அப்பாவித்தனமும் துடுக்குத்தனமும் நிறைந்த கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார் ராதிகா. அடுத்த ஆண்டிலும் பாரதிராஜா இயக்கிய 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் நகர்ப்புறப் பெண்ணாக நடித்தார்.
வெற்றிகரமான கதாநாயகி
1981-ல் பாக்யராஜ் இயக்கி நடித்த 'இன்று போய் நாளை வா' ராதிகாவின் திரைவாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்த காதல் படமான அதில் ராதிகா நகைச்சுவை நடிப்பிலும் திறமையானவர் என்று அனைவருக்கும் தெரிந்தது. 1980களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன். விஜய்காந்த், மோகன், பாக்யராஜ் ஆகியோருடன் தொடர்ந்து நடித்து வந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் பல படங்களில் நாயகியாக நடித்தார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். ரஜினியுடன் 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் அன்பும் கண்டிப்பும் நிறைந்த குடும்பத் தலைவியாக முதிர்ச்சியாக நடித்திருந்தார்.
'ஊர்க் காவலன்' படத்தில் நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பியிருந்தார். கே.விஸ்வநாதன் இயக்கிய தெலுங்குத் திரைப்படம் 'ஸ்வாதி முத்யம்' திரைப்படத்தில் (தமிழில் 'சிப்பிக்குள் முத்து'), கமல் ஹாசனுடன் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகனுடன் 'ரெட்டை வால் குருவி' திரைப்படத்தில் நவீன சிந்தனைகள் கொண்ட நவநாகரீகப் பெண்ணாகச் சிறப்பாக நடித்திருந்தார். இவற்றுக்கிடையில் மகேந்திரனின் 'மெட்டி' போன்ற பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை-வசனம் எழுதிய 'பாசப் பறவைகள்' படம் அவருடைய அசாத்திய நடிப்புத் திறமையும் நீண்ட வசனங்களை சரியான உணர்ச்சி பாவங்களுடன் பேசும் வல்லமையையும் வெளிப்படுத்தியது.
கதாநாயகியைத் தாண்டிய பரிமாணங்கள்
1990களில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துவந்தார் என்றாலும் வயது முதிர்ந்த கதாபாத்திரங்கள். மன முதிர்ச்சி மிக்க கதாபாத்திரங்கள், நாயகியை மையப்படுத்திய கதைகள் ஆகியவற்றில் அதிகமாக நடித்தார் ராதிகா. இவற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். 1993-ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்குச் சீமையிலே' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி ராதிகாவின் இந்தப் பரிணாம மாற்றத்துக்குக் காரணமானது. அந்தப் படத்தில் அண்ணனின் அன்புக்கும் கணவனின் அதிகாரத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பெண்ணாக தன் உயிரோட்டத்துடன் நடித்திருந்தார் ராதிகா.
தமிழ் சினிமாவில் 'பாசமலர்' படத்துக்குப் பிறகு அண்ணன் – தங்கை உறவுக்கு மகுடம் சூட்டிய திரைக்காவியவமாக 'கிழக்குச் சீமையிலே' அறியப்படுவதற்கு அதில் அன்பின் திருவுருவான விருமாயியாக ராதிகா நடித்ததும் முக்கியக் காரணம். 'பசும்பொன்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்திருந்தார். இது தவிர 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நான் பெத்த மகனே', 'சூர்யவம்சம்' என பல வெற்றிப் படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்தார். 1998-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஜீன்ஸ்' திரைப்படத்தில் எதிர்மறை குணாம்சங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாலும் முத்திரை பதித்தார். அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பாலகுமாரனின் அழுத்தமான வசனங்களாலும் ராதிகாவின் நடிப்பாலும்தான் உயர்ந்து நின்றது என்று சொன்னால் மிகையில்லை.
பன்முகத்தன்மை மிக்க அம்மா
புத்தாயிரத்திலும் பல வகையான அழுத்தமான, முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைக் கதாபாத்திரங்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். ஆனால் இந்தக் காலகட்டத்தில் அவர் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியதால் திரைப்படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. 'உயிரிலே கலந்தது', 'ரோஜாக் கூட்டம்', 'கண்ணாமூச்சி ஏனடா' 'சென்னையில் ஒரு நாள்', 'பூஜை', 'நானும் ரவுடிதான்', 'தங்கமகன்', 'தெறி', 'தர்மதுரை', 'மிஸ்டர் லோக்கல்', 'வானம் கொட்டட்டும்' என பல படங்களில் கதாநாயகன்/நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார்.
இதில் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரத்தில் அம்மாவாக நடிப்பதிலும் பன்முகத்தன்மை காண்பித்திருப்பார். குறிப்பாக 'நானும் ரவுடிதான்' படத்தில் தமிழ் சினிமாவில் மிகச் சில நாயகி நடிகைகளுக்கே இருக்கும் அபார நகைச்சுவைத் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழக அரசின் விருதை மூன்றுமுறையும் ஆந்திர அரசின் நந்தி விருதை ஒரு முறையும் ஃபிலிம்ஃபே (தெற்கு) விருதை ஆறு முறையும் (வாழ்நாள் சாதனையாளர் உட்பட) வென்றுள்ளார்.
கவனம் கவர்ந்த தயாரிப்பாளர்
திரைத்துறையில் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார். இவர் தயாரித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றது. 'ஜித்தன்', 'மாரி' போன்ற கமர்ஷியல் வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் 'முதல் மரியாதை' ராதா, 'கருத்தம்மா' 'ராஜஸ்ரீ, 'விக்ரம்' லிசி ஆகியோருக்கு பின்னணிக் குரல் கொடுத்த குரல் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
சின்னத்திரையில் அசாத்திய சாதனை
சின்னத்திரையில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் ஒரு முன்னோடிச் சாதனையாளராக விளங்குகிறார். 1999இல் 'சித்தி' தொடர் மூலம் தமிழ் தொலைக்காட்சி உலகில் காலடி எடுத்து வைத்தார். அந்தத் தொடரின் மிகப் பிரம்மாண்ட வெற்றி நெடுந்தொடர்களுக்கு மிகப் பெரிய சந்தையும் ரசிகர் கூட்டமும் உருவாவதற்குக் காரணமாக அமைந்த தொடர்களில் ஒன்று. அதில் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சித்தி-2' வரை ஒன்பது நெடுந்தொடர்களைத் தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனைத்துமே நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரத்துக்கு அதிகமான அத்தியாயங்களைக் கொண்ட வெற்றிகரமான தொடர்கள். இந்தத் தொடர்களின் வெற்றியின் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழ்கிறார் ராதிகா. இதன் மூலம் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்குக் குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ஆளுமையாக இருக்கிறார். திரைப்படத் துறையிலும் தொலைக்காட்சித் துறையிலும் ஒரு நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் நீண்ட காலம் நீடித்து வெற்றிகரமாக இயங்கி வரும் ராதிகா பல முன்னோடிச் சாதனைகளை நிகழ்த்தியவர். அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago