பொதுமுடக்கத்தால் பிழைப்புக்கு வழியில்லாத மக்கள்; தேடிப்போய் உதவிடும் நகைச்சுவை நடிகர் சேசு!

By என்.சுவாமிநாதன்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் சேசு. இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார். சென்னை பள்ளிக்கரணையில் வசித்துவரும் சேசு, இந்த கரோனா காலத்தில் முகநூல் நண்பர்களின் பங்களிப்போடு, தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவி வருகிறார்.

இதோ இப்போது தனது இருசக்கர வாகனத்தில் மைக் வைத்து வீதி, வீதியாகச் சென்று தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டி வருகிறார் சேசு.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர், “கரோனா தொடக்கத்தில் இருந்தே சுத்துவட்டாரத்துல இருக்குற மக்களுக்கு உதவ ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு என்னோட முகநூல் நண்பர்கள்தான் பக்கபலமா இருக்காங்க. முதன் முதலில், எங்க வீடு இருக்கும் காம்பவுண்டில் 15 குடும்பங்களுக்கு அரிசி, பருப்புன்னு தேவையான மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தோம். கைக்குழந்தை இருந்த ஒரு வீட்டுக்கு மூணு மாசத்துக்குத் தேவையான பாலுக்குக் காசு கொடுத்தோம். எனது வேண்டுகோளை ஏத்துக்கிட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினரும், நடிகர் யோகிபாபுவும் இந்த உதவிகளைச் செஞ்சாங்க. அப்போது பயனாளிகள் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்ததும் கரோனா காலம் முழுசுக்கும் மக்களுக்கு ஏதாச்சும் நம்மாலான உதவிகளைப் பண்ணணும்னு முடிவெடுத்தேன்.

என்னோட கரோனா சேவைகளைத் தெரிஞ்சுகிட்டு முகநூல் நண்பர்கள் சிலர் தங்களோட திருமண நாள், பெற்றோரின் பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள் உள்ளிட்ட விசேஷங்களுக்கு யாருக்காவது உதவி செய்யச் சொல்லி பணம் அனுப்புவாங்க. தகுதிவாய்ந்த பயனாளிக்கு அந்த உதவியைச் செஞ்சுட்டு அதை அப்படியே வீடியோவா எடுத்து, உதவுனவங்களுக்கு அனுப்புவேன்.

அரிசிப் பைகளை சில்லறைக் கடைகளில் வாங்கினா விலை கூடுதலா இருக்கும். மொத்தக்கடையில் போய் வாங்குனா கூடுதலா ஒரு பயனாளிக்கு உதவ முடியும்னு மொத்தவிலைக் கடைக்குப் போய் வாங்குவேன். நான் இதய நோயாளி. டாக்டர் அதிக பாரத்தை தூக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காரு. ஆனா, இது மாதிரியான சேவைகள்தான் என்னை ஆரோக்கியமா வைச்சுருக்கு. அதான் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காம அரிசி மூட்டைகளை வாங்கிட்டுப்போய் கொடுப்பேன். சந்தானம் ரசிகர் மன்றமும் இதுக்கு உதவி செஞ்சாங்க.

எங்க பகுதியில் திருநங்கைகள் சேர்ந்து பாதாளக் காளியம்மன் கோயில் வைச்சுருக்காங்க. அதுக்கு மேற்கூரை இல்லாம மழையிலும், வெயிலிலும் சிரமப்படுவதாகச் சொன்னாங்க. இதுகுறித்து என் மூலமாத் தெரிந்துகொண்ட வெளிநாட்டில் இருக்கும் கிருஷ்ண பக்தர் சத்திய நாராயணனும் நடிகர் யோகிபாபுவும் சேர்ந்து மேற்கூரை கட்டித் தந்தாங்க. அந்த கோயிலின் விசேஷம் கடந்த வாரம் நடந்தது.

வழக்கமாக இந்த விசேஷ காலத்தில் சாமிக்குப் பிரசாதம் வைத்து அன்னதானம் நடக்கும். இந்த கரோனா காலத்தில் அன்னதானம் போட்டால் கூட்டம் கூடிடும். கூடவே மக்களிடம் வசதியில்லாத இந்த சூழலில் அன்னதானம் போடுவதற்குப்பதிலாக அந்தப் பணத்தில் அந்தப் பகுதிவாசிகளின் வீட்டுக்குப் போய் அரிசி, காய்கனிகளை வழங்க முடிவெடுத்தோம். அதை நான்தான் ஏரியாவில் நின்று மைக்கில் அறிவிச்சேன்.

இந்த மைக்கிலேயே கரோனா விழிப்புணர்வும் செய்யலாம்கிற ஐடியா அப்ப உதிச்சதுதான். அன்று முதலே தினசரி ஏதாவது ஒரு பகுதிக்குப் போய், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், தனிமனித இடைவெளியின் அவசியம் ஆகியவை குறித்து பிரச்சாரம் செய்துவருகிறேன். என்னோட இந்த சேவையைப் பார்த்துட்டு காவல்துறை துணை ஆணையர் சுந்தர்ராஜன் ரொம்பவே பாராட்டினாரு.

கரோனா காலத்தில் இன்னொரு சேவையும் செஞ்சுட்டு இருக்கேன். பள்ளிக்கூடங்கள் இப்போ மூடிக் கிடக்கு. எப்போ திறக்கும் என்பதும் தெரியாது. இப்படியான சூழலில் ஆன்லைன் வகுப்புக்கு குழந்தைகளுக்கு செல்போன் தேவை. இப்போது இருக்கும் சூழலில் எல்லா பெற்றோருக்கும் செல்போன் வாங்கிக்கொடுக்கும் சாத்தியம் இல்லை. இதனால் முகநூல் நண்பர்கள் தங்கள் பழைய செல்போனை என்னிடம் தருவார்கள். நான் அதைத் தேவையுள்ளவர்களிடம் கொண்டுபோய் கொடுப்பேன். அதில்கூட ஒரு நெகிழ்ச்சியான விஷயம் நடந்தது.

பாலாஜி சத்தியநாராயணன்னு ஒரு முகநூல் நண்பர், தன்னிடம் பழைய போன் இருப்பதாக அழைத்தார். நானும் போனேன். வீட்டுக்குப் போனதும், ‘இன்று எனது மகள் ஹரிணிக்கு பிறந்தநாள் அதற்காக இந்த புதுப் போனையே ஏதாவது ஏழையின் கல்விக்காகப் பரிசாகக் கொடுக்கிறேன்’ ன்னு நீட்டினார். கூடவே, ஒரு பழைய போனையும் தந்தார். அதன்மூலம் இன்னொரு குழந்தைக்கும் செல்போன் கிடைச்சது.

நண்பரின் மனைவிக்கு உடம்பு சரியில்லாமப்போக நடிகர் எஸ்.வீ.சேகர் கவனத்துக்குக் கொண்டுபோனேன். உடனே நிதி உதவி செஞ்சாரு. சேசுவைப் பொறுத்தவரை யாருக்காச்சும் உதவிசெஞ்சா இவரு உங்களுக்குக் கொடுத்ததுன்னு சொல்லி, பயனாளியோட நன்றி வீடியோ போட்டுருவாருன்னு எஸ்.வீ.சேகர் சாரே அவரோட சோஷியல் மீடியா பக்கத்தில் சொல்லியிருந்தாரு. நம்ம கையில் எதுவும் இல்லை சார். கஷ்டப்படுறவங்களோட வலியை நாலு பேருக்குச் சொல்லுறேன். அதன் மூலமா அவங்களுக்கு உதவுறதுக்கு ஒரு பாலமா இருக்குறதுல நிம்மதி கிடைக்குது.

கடலோரக் கவிதைகள் நாயகி ரேகா, திரெளபதி இயக்குநர் மோகன், இயக்குநர் பத்ரி, புதுக்கோட்டை நிரோஷிகா, ஈரோடு திருமலை, சிங்கப்பூர் திருமலை, ராஜகோபால் ஸ்ரீனிவாசன், நடிகர் கோவை அனுராதா, செல்வம், பிரகாஷ் ரங்கநாதன்னு இப்படியான நல்ல உள்ளங்கள்தான் என்னோட இந்த சேவைகளுக்கு முதுகெலும்பா இருக்குறாங்க” என்றார் சேசு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்