சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத் துறைக்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1975 ஆகஸ்ட் 15 அன்று வெளியான இயக்குநர் கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் அவர் திரைப்பட நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர் அதற்குப் பிறகு படிப்படியாக வில்லன் துணை நடிகர். இரண்டாம் நாயகன், நாயகன். நட்சத்திரம். பெரிய நட்சத்திரம். உச்ச நட்சத்திரம். பிராந்திய, தேச எல்லைகளைக் கடந்த உச்ச நட்சத்திரம் என நான்கரை தசாப்தங்களாக இந்திய சினிமாவில் கோலோச்சிவருகிறார்.
போதிய கவனம் பெறாத சிறப்பு
ரஜினி என்னும் திரை ஆளுமையின் வணிக சாதனைகளைப் பற்றி எண்ணற்ற கட்டுரைகள், அலசல்கள், சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டுவிட்டன.அதே நேரம் ரஜினி இந்திய சினிமாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பது போதுமான அளவு அலசப்படவில்லை. அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமை போதுமான அளவு கண்டுகொள்ளப்படவும் கொண்டாடப்படவும் இல்லை. இத்தனைக்கும் அவருடைய நடிப்புத் திறமையைப் பாராட்டி எழுதுபவர்கள் எப்போதும் இருந்துவந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதும் உண்மை என்றாலும் இது போதவே போதாது. இன்னும் “ரஜினியும் ஒரு நல்ல நடிகர்' என்றோ “ரஜினி ஒரு சிறந்த நடிகரும்கூட' என்றோ 'உம்' சேர்த்துச் சொல்ல வேண்டியிருப்பதிலிருந்தோ அவருடைய நடிப்புத் திறன் போதுமான அளவு அனைத்துத் தரப்பினராலும் உள்வாங்கப்படவில்லை என்பதை உணர்த்திவிடும்.
கிளாசிக் படங்களைத் தாண்டி
» விஜய் சார் பழகிய விதத்தை என்னால் நம்ப முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்
» ரஜினி - அஜித் தொலைபேசி உரையாடல் நடைபெற்றதா? - ஓர் விளக்கம்
பொதுவாக ரஜினியின் நடிப்புத் திறமை பற்றிப் பேசும்போதெல்லாம், 'முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபதுவரை', 'எங்கேயோ கேட்ட குரல்' ஆகிய ஒரு சில படங்கள் மட்டுமே குறிப்பிடப்படும். சினிமாவைக் கொஞ்சம் கூடுதலாகக் கவனித்து வருகிறவர்கள் இந்தப் பட்டியலில் 'மூன்று முடிச்சு', 'அவர்கள்', 'அவள் அப்படித்தான்', 'புவனா ஒரு கேள்விக்குறி' போன்ற கறுப்பு வெள்ளைப் படங்களையும் சேர்த்துக்கொள்வார்கள், மேலும் சிலர் 'ஜானி' படத்தின் காதல் காட்சிகள், 'கைகொடுக்கும் கை' படத்தின் அன்பான கணவன், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய படமான 'தில்லு முல்லு', 'நெற்றிக்கண்' படத்தில் பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் முதியவர் கதாபாத்திரம் என 'ரஜினி படம்' என்னும் சட்டகத்துக்கு வெளியே நிற்கும் கதைகள், கதாபாத்திரங்களை மட்டுமே ரஜினியின் சிறப்பான நடிப்பு வெளிப்பட்ட படங்களாகக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். அண்மைய ஆண்டுகளில் 'எந்திரன்' படத்தின் வில்லத்தனமான 'சிட்டி' ரோபோ, 'கபாலி' படத்தில் தொலைந்து போன மனைவியைத் தேடி ஏக்கத்துடனும் நீண்ட காலப் பிரிவின் வலியுடனும் ஒரு தீவிரமான காதலனின் ஆர்வத்துடனும் தேடி அலையும் நாயகன் கபாலி, பழைய காதலியைச் சந்திக்கும்போது ஏற்படும் கூச்சத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் 'காலா' திரைப்படத்தின் கரிகாலன் ஆகியவற்றில் 'பழைய' ரஜினியைக் மீண்டும் காண முடிந்ததாக விமர்சகர்களும் ரஜினியின் நடிப்புத் திறனை விரும்பும் ரசிகர்களும் கொண்டாடினார்கள். 'பழைய' ரஜினி என்று 'முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபதுவரை' ரஜினியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் மேலே குறிப்பிட்ட படங்கள் 1970களின் இறுதி ஆண்டுகளிலும் 80களின் தொடக்க ஆண்டுகளிலும் வெளியானவை. 1982-83லிருந்து ரஜினி அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் உள்ளடக்கிய வெகுஜனப் படங்களில் முதன்மை கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இடையில் அவருடைய 100ஆவது படமான 'ஸ்ரீராகவேந்திரா', சற்று விரிவான கெளரவத் தோற்றத்தில் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த்' போன்ற விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி வெற்றியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையை அளிக்கக்கூடிய திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார். ஆனால் இந்தப் படங்களிலும் ரஜினியின் அபார நடிப்புத் திறமை வெளிப்பட்ட தருணங்கள், 'எப்பேர்ப்பட்ட நடிகர் இவர்' என்று வியக்கவைக்கும் தருணங்கள் ஏராளம். நுணுக்கமாகப் பார்த்தால் ரஜினி நடித்த எல்லாப் படங்களிலும் இப்படிப்பட்ட தருணங்கள் இருக்கக்கூடும். இதற்குச் சில உதாரணங்களை மட்டும் பார்க்கலாம்.
நிகரற்ற நகைச்சுவை நாயகன்
தமிழ் சினிமாவுக்கு ஒரு நெடிய நகைச்சுவைப் பாரம்பரியம் உண்டு. ஆனால் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவைக்கான பிரத்யேக நடிகரைத் தாண்டி மற்ற நடிகர்களின் பங்களிப்பும் அவசியம் கதாநாயக நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகளின் பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் ரஜினி நகைச்சுவைக் காட்சிகளில் ஒரு பகுதி என்பதைத் தாண்டி தன்னளவிலேயே ஒரு நகைச்சுவைக் கலைஞர் என்று சொல்லத்தக்க அளவுக்கு உயர்ந்தவர். தமிழ் சினிமா வரலாற்றில் வேறெந்த நட்சத்திர நடிகரும் ரஜினி அளவுக்கு நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தியதில்லை. 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தில் பாம்பைப் பார்த்துப் பயப்படும் காட்சி தொடங்கி ரஜினி ஒற்றையாளாக அனைவரையும் வெடித்துச் சிரிக்க வைத்த காட்சிகள் ஏராளம். இந்த நகைச்சுவைத் திறன் அவரை குழந்தைகள் இடத்தில் கொண்டு சேர்த்தது அவரை சூப்பர் ஸ்டாராக்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. அதே நேரம் நகைச்சுவையும் ஒரு கலைதான் என்ற அளவில் ஒரு கலைஞராக ரஜினியின் தனிப்பெரும் சிறப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
பரிவைப் பெறும் அப்பாவி
'பாயும் புலி' (1983) படத்தின் தொடக்கக் காட்சிகளில் பெரிய மூக்குக்கண்ணாடி, வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் ஒரு அப்பாவி மனிதராகச் சிறப்பாக நடித்திருப்பார். அப்பாவியாக நடிக்கும்போது ஒரு அப்பாவி ஏற்படுத்த வேண்டிய பரிவைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துவது ரஜினியின் அசாத்தியத் திறமைகளில் ஒன்று.'அண்ணாமலை' (1992) இதற்கு இன்னுமொரு முக்கியமான உதாரணம். நண்பன் அசோக்குக்காக தன் நிலத்தை விட்டுக்கொடுத்து அதற்கான பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக 'இது கண்டிப்பா அசோக் பேர்லதானே ஓட்டல் கட்டப் போறீங்க: என்று கேட்கும்போது வெளிப்படும் அப்பாவித்தனம் படத்தில் அதற்குப் பிறகு அண்ணாமலைக்கு இழைக்கப்படவிருக்கும் துரோகங்கள் ரசிகர்களை இன்னும் தீவிரமாக உணர உதவியது. இப்படி ரஜினியின் சிறந்த அப்பாவித்தன நடிப்புக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
வலியை மறைக்கும் நடிப்பு
அசலாகவே அப்பாவியாக இருப்பது ஒரு வகை என்றால் தனக்கு நேர்ந்த அவமானத்தையோ துரோகத்தையோ தாங்கிக்கொண்டு அது தன்னை பாதிக்காததுபோல் நடிப்பது முற்றிலும் வேறுவகை. இந்த நடிப்பிலும் ரஜினி அசாத்தியத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 'தர்மதுரை' (1991 )படத்தில் ஒரு நவநாகரீக நிகழ்வுக்கு நவீன உடை என்று நம்பி கோமாளித்தனமான உடை அணிந்துவந்தபின் சுற்றியிருக்கும் பணக்காரர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதை உணர்ந்தும் உணராததுபோல் தானும் சேர்ந்து சிரிக்கும் காட்சியாகட்டும் 'படிக்காதவன்'(1985) படத்தில் தான் உயிருக்கு உயிராக நேசித்த தம்பியால் பலர் முன்னணியில் அவமானப்படுத்தப்பட்டபோது 'யெஸ் யெஸ்' என்று சொல்லிப் பொங்கிவரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு விரக்திச் சிரிப்பும் வேதனையின் வெடிப்புமாகச் சமாளிப்பதாகட்டும் இப்படி அசலான உணர்வுக்கு நேரெதிரான பாவனையின் மூலம் பார்வையாளர்களுக்கு அந்த உணர்வைக் கடத்தும் காட்சிகள் பலவற்றில் ரஜினி வெகு சிறப்பாக நடித்துள்ளார்.
பாசத்தைக் காட்டுவதில் தனிப் பாணி
அடுத்து சென்டிமெண்ட் காட்சிகளில் குறிப்பாக அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்துவது போல் நடிப்பதில் சிறந்த நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கிறது. ரஜினி அடங்கிய தொனியில் அன்பை வெளிப்படுத்துவார். 'படிக்காதவன்' படத்தில் தம்பியைக் காண அவனது கல்லூரிக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பவர் பேருந்தில் ஏறச் செல்லும்போதும் பேருந்து கிளம்பும்போதும் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு 'ஒழுங்கா சாப்பிடு', 'உடம்ப பாத்துக்கோ' என்று அறிவுரை வழங்கியபடி தன்னிடம் இருக்கும் பணத்தைத் தம்பியின் கையில் திணித்துக் கொண்டே இருப்பார். தமிழ் சினிமாவின் தலைசிறந்த சென்டிமெண்ட் காட்சிகளின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெற வேண்டிய காட்சி இது. இதை எழுதியது திரைக்கதை ஆசிரியராக இருக்கலாம் படமாக்கியது இயக்குநராகவோ இருக்கலாம். ஆனால் ரஜினி என்னும் அசாத்தியமான நடிகன் இல்லை என்றால் அந்தக் காட்சி இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கும்.
நடிப்பின் கருவியாகும் உடல்
ரஜினியின் நடிப்பைப் பற்றி எழுதும்போது அவர் மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய ஒரே படமான. 'தளபதி'யைத் தவிர்க்க முடியாது. இது மணி ரத்னம் பாணி ரஜினி படம்தான் என்றாலும் ரஜினியின் நடிப்பு வெகு சிறப்பாக வெளிப்பட்ட தருணங்களால் நிரம்பிய படமும்கூட. ரஜினியை வளர்த்த பாட்டி 'உங்கம்மா வந்து கேட்டா நா என்ன பதில் சொல்றது' என்று நொந்து கொள்ளும்போது 'எங்கம்மா… உன் கிட்ட வந்து… என்னப் பத்தி…. கேட்கப்போறா” என்று சற்று நக்கலாகக் கேட்டுவிட்டு பாட்டியின் கைகளைப் பிடித்து மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று “என்னப் பெத்த அம்மா நீ எங்க இருக்க”: என்று கத்தும் இடம் ஒரு புன்னகைக்கான காட்சியை ரஜினியின் நடிப்பு எப்படி மேலும் ரசிக்கவைக்கிறது என்பதற்கு உதாரணம் ; அதே படத்தில் தன்னைப் பெற்ற தாயான ஸ்ரீவித்யாவை நேரில் பார்க்கும்போது அதை வெளிப்படுத்த முடியாத தவிப்பை வேதனையை “சின்னத்தாய் அவள்” பாடலின் மூலம் இளையராஜாவின் இசையோடு ரஜினியின் கண்களைக் கொண்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பும் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடும். கலெக்டர் அரவிந்த் சாமி, காவலர்கள் தரப்புக்கும் தாதாக்களான மம்முட்டி-ரஜினி தரப்புக்கும் இடையிலான உரையாடல் காட்சியில் ரஜினியின் நடிப்பு, ஒரு நடிகன் உடலை அதிகமாக அசைக்காமல் வளைக்காமல் அதே நேரம் உடலை ஒரு கருவியாக எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதற்கான பாடம் என்றே சொல்லலாம்.
'முத்து' (1995) படத்தில் அதுவரை தன்னை உடன்பிறவா சகோதரன் போல் பாவித்துவந்த எஜமான், திடீரென்று 'வீட்டை விட்டு வெளிய போ' என்று சொல்லும் காட்சியில் அந்த அதிர்ச்சியை, ஏமாற்றத்தை. ஒன்றுமே புரியாத நிலையைப் பார்வையாலேயே வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி.
அசாத்தியமான அனிச்சை செயல் நடிப்பு
'சந்திரமுகி' படத்தில் வேட்டையராஜாவாக வரும் காட்சியில் 'லகலகலகலகலா' என்று நாக்கை அடித்தபடி ரஜினி உச்சரிக்கும் விதமே அந்தக் காட்சியைப் பெரிதாக வெற்றிபெறவைத்துவிட்டது. ஆனால் ஐந்து நிமிடத்துக்குக் குறைவான அந்தக் காட்சியில் அதைத் தாண்டியும் ரசிக்கப் பல விஷயங்கள் உள்ளன. உதாரணமாக பாடலின் முடிவில் வினித்தின் தலை வெட்டப்பட்ட பிறகு 'அவர் உடல் துடித்து விழுவதை குரூரமாக ரசித்துக்கொண்டே ';தனாக்குதகஜிம் ததீம்த தகஜிம்' என்று சொல்லியபடி அவிழ்ந்து விழுந்த கூந்தலை முடித்துப் போட்டுக்கொள்வார் ரஜினி. காட்சியில் அது ஒரு அனிச்சை செயல்தான். தன்னையறியாமல் செய்வதுதான் அனிச்சை செயல் ஆனால் திரை நடிப்பில் எதுவுமே இயல்பான அனிச்சை செயலாக இருக்க முடியாது தன்னுணர்வுடன்தான் செய்ய முடியும். தன்னுணர்வுடன் செய்யும் செயலையும் அனிச்சை செயல் என்று தோன்ற வைப்பதில்தான் நடிகனின் திறமை இருக்கிறது. இந்த கூந்தல் முடிப்பில் ரஜினி அதைச் சாதித்துக் காட்டினார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் கையில் இருக்கும் மளிகைப் பொருட்கள் பட்டியல் அடங்கிய நீண்ட காகிதத்தை அங்கவஸ்திரம் என்ற உணர்வில் ஒரு அனிச்சை செயலாகத் தோளில் போட்டுக்கொள்வார் கமல். அது சரிந்து விழுந்துகொண்டே இருக்கும். இருந்தாலும் பேசிக்கொண்டே இரண்டு மூன்றுமுறை அப்படி போட்டுக்கொள்வார். காமேஸ்வர்னாக கமலும் வேட்டையராஜாவாக ரஜினியும் அனிச்சை செயல் நடிப்பு என்ற ஒரே விஷயத்தை தமது பாணியில் வெகு சிறப்பாகக் கையாண்டார்கள்.
ரஜினியின் மிகப் பெரிய தோல்விப் படங்களில் ஒன்றான 'லிங்கா' படத்தில்கூட யாருக்காக உயிரைக் கொடுத்து உழைத்தாரோ அந்த மக்களாலேயே வெறுக்கப்பட்டுத் துரத்தப்படும்போதும் பிறகு அவர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்க வரும்போதும் வெளிப்பட்ட முதிர்ச்சியான அதே நேரம் மிகையில்லாத நடிப்பு ரஜினியின் கலைத்திறனுக்குக் காலத்தால் அழிக்க முடியாத சான்று.
மொத்தத்தில் ரஜினி மிகச் சிறந்த நடிகர் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அந்த நடிப்புத் திறன் அவரிடமிருந்து எங்கும் போய்விடவில்லை என்பதும் அவர் விரும்பியே வணிக வெற்றியை முதன்மைப்படுத்தும் பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அந்தப் படங்களிலும்கூட அவருக்குள் இருந்த சிறந்த நடிகர் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார் என்பதும் உண்மை. அவற்றை உணர்ந்து கொண்டாடுவதன் மூலம் ரஜினி என்னும் மாபெரும் ஆளுமையை இன்னும் சிறப்பாக கௌரவிக்க முடியும்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago