இந்திப் படங்களை தமிழில் ரீமேக் செய்வது ஒன்றும் புதிதல்ல. அறுபதுகளில், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்கள் வந்திருக்கின்றன. வெற்றியும் பெற்றிருக்கின்றன. அறுபதுகளின் மத்தியிலும் எழுபதுகளிலும் கே.பாலாஜி ஏராளமான படங்களைத் தயாரித்தார். மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அப்படித்தான் அசோகா பிரதர்ஸ், வள்ளி நாயகி பிலிம்ஸ் எனும் பேனரில் 79ம் ஆண்டில், ஒரு படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில். சிவாஜியும் ரஜினியும் நடித்தார்கள். படத்தின் நாயகிதான் தயாரிப்பாளர். அவர்... கே.ஆர்.விஜயா.
நல்ல கதை. குடும்பப் பின்னணியைச் சொன்ன கதை. அப்படியே கொஞ்சம் சென்டிமென்டும் கொஞ்சம் த்ரில்லிங்குமாக திரைக்கதை பின்னப்பட்டிருந்தது. சிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய டி.யோகானந்த், இந்தப் படத்தையும் இயக்கினார். இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.
இந்தி திரைப்பட உலகின் புகழ்பெற்ற கதாசிரியர்களான சலீம் - ஜாவேத் எனும் இருவரின் கதையில் 1974-ம் ஆண்டு வெளியானது ‘மஜ்பூர்’ எனும் திரைப்படம். அமிதாப், பிரான் முதலானவர்கள் நடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் உரிமையைப் பெற்று 1979-ம் ஆண்டு, கே.ஆர்.விஜயா, தமிழில் ரீமேக் செய்தார். அமிதாப் நடித்த வேடத்தில் சிவாஜி மிகச்சிறப்பாக நடித்திருந்தார். பிரான் நடித்த வேடத்துக்கு யாரைப் புக் செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, இயக்குநர் டி.யோகானந்திடம், ‘ரஜினியைப் போடேம்பா. நல்லாருக்குமே’ என்றார் சிவாஜி. இந்தி நடிகர் பிரான் செய்த கேரக்டரை ரஜினி செய்திருந்தார்.
சிவாஜி. டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வார். அவரின் தங்கை ஊனமுற்றவர். ஒரு தம்பியும் அம்மாவும் உண்டு. அவரின் காதலி வக்கீல் கே.ஆர்.விஜயா. அவரின் அண்ணன் ஜெய்கணேஷ்.
» திசை தெரியாமல் குழம்பும் திரையுலகம்: சேரன் ட்வீட்
» பாரதிராஜா விட்ட ‘கிழக்கே போகும் ரயில்’; ‘பூவரசம்பூ பூத்தாச்சு’க்கு 42 வயது!
சிவாஜிக்கு திடீர் திடீரென தலைவலி வரும். அந்த நிமிடத்தில், தலையே வெடித்துவிடுவது போலிருக்கும். துடித்துப் போய்விடுவார். அப்படியே நின்றுவிடுவார். இந்த உலகமே இருண்டுவிட்டதாக இருக்கும். இந்த நிலையில், மிகப்பெரிய பணக்காரர் ஒருவர், விமான டிக்கெட் புக் பண்ணியிருப்பார். அதை சிவாஜியிடம் வாங்கிச் செல்ல வருவார். அவரை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் இறக்கிவிடுவார்.
மறுநாள்... அந்தப் பணக்காரர் இறந்திருப்பார். விசாரணைக்காக சிவாஜியிடம் போலீஸ் வரும். விசாரிக்கும். இந்த நிலையில், பணக்காரரின் தம்பி மேஜர் சுந்தர்ராஜன், கொலையாளியைப் பற்றித் துப்புக் கொடுத்தால் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக அறிவித்திருப்பார்.
அடிக்கடி தலைவலியால் துடிக்கும் சிவாஜி, இதுதொடர்பாக மருத்துவரிடம் செல்ல, மூளையில் பிரச்சினை. ஆபரேஷன் செய்யவேண்டும் என்பார். ஆனால் ஆபரேஷனில் பிழைப்பது கடினம். ரிஸ்க் என்பார். தன் குடும்பம் குறித்து கவலைப்படுவார் சிவாஜி. அப்போது அவருக்கு ஒரு ஐடியா... ‘உங்கள் அண்ணனை கொலை செய்தது யார் என்று எனக்குத் தெரியும்’ என்று யாரோ பேசுவது போல் போனில் பேசுவார். அந்தத் தொகையை வக்கீல் தேங்காய் சீனிவாசனிடம் தரச் சொல்லுவார். அதேபோல், தேங்காய் சீனிவாசனுக்கு ஒரு கடிதம் எழுதுவார். அதற்குள் இன்னொரு கடிதமும் இருக்கும். அதில் முழு விவரங்களை எழுதியிருப்பார் சிவாஜி.
இதையடுத்து, ‘அந்தக் கொலையைச் செய்ததே நான் தான்’ என்று சிவாஜி சொல்ல, கைதாவார் சிவாஜி. அதற்கேற்றது போல், சில செட்டப்புகளையும் செய்திருப்பார். சிறையில் இருக்கும் சிவாஜி, இந்தவிஷயத்தை எவரிடமும் சொல்லமாட்டார். காதலியிடமும் கூட சொல்லமாட்டார்.
அவருக்கு அடிக்கடி வரும் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதில் அவர் உயிருக்கு எந்த ஆபத்துமின்றிப் பிழைத்துக் கொள்வார். அப்போது, வாழ ஆசை பிறக்கும். தப்பிப்பார். போலீஸ் தேடும். உண்மைக் கொலையாளியைப் பிடித்துக் கொடுத்தால், தான் தப்பித்துக் கொள்ளலாம் எனும் முடிவுக்கு வருவார் சிவாஜி. அப்படியான தேடலில், ரஜினியை சந்திப்பார். பின்னர், ரஜினி உதவியுடன் கொலையாளியைக் கண்டறிவார். சிவாஜிக்கு ரஜினி உயிரைக் கொடுத்து உண்மையை போலீஸுக்குச் சொல்லிவிட்டு, இறப்பார். அண்ணனை தம்பி மேஜர் சுந்தர்ராஜனே சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொன்றார் என்பது தெரியவரும். போலீஸ் கைது செய்யும். சிவாஜி நிம்மதியாக, குடும்பத்துடன் வாழ்வார் என்பதுடன் படம் நிறைவடையும்.
சிவாஜியின் நடிப்பு வழக்கம் போல் பிரமாதம். கே.ஆர்.விஜயாவின் நடிப்பும் பாந்தமாக இருக்கும். சிவாஜியின் தம்பியாக, பப்லு சிறுவனாக நடித்திருப்பார். இடைவேளைக்குப் பிறகு ரஜினி வந்ததும் படம் வேறொரு முகம் காட்டும். வருகிற காட்சிகளெல்லாம் அப்ளாஸ் அள்ளுவார் ரஜினி. திருடனாக, மைக்கேல் டிஸோஸா எனும் கேரக்டரில், படு ஸ்டைல் காட்டி அசத்தியிருப்பார்.
இளையராஜாவின் இசை, படத்துக்கு பலம். ‘திருத்தேரில் வரும் நிலவோ...’ பாடல் டூயட் பாடலாக மெலடியில் கிறங்கடித்தது. ‘எந்தன் பொன் வண்ணமே’ பாடல், கேட்கும் போதெல்லாம் என்னவோ செய்யும். ரஜினிக்கு ஒரு பாட்டு... ‘ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி வருவார். அவருடைய மைக்கேல் டிஸோஸா எனும் கேரக்டர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
’ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ எனும் பாடல் ரஜினிக்கு கொடுக்கப்பட்டது. திருத்தேரில் வரும் சிலையே, எந்தன் பொன்வண்ணமே முதலான எல்லாப் பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
படம், முழுவதுமாக எடுக்கப்பட்டது. சிவாஜிக்குத் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு, சிவாஜி உட்பட பலரும் அதிர்ந்துதான் போனார்கள். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் முழுக்கவே, ரஜினியைச் சுற்றித்தான் கதை இருந்தது. மேலும், ரஜினி தன் ஸ்டைலாலும் நடிப்பாலும் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் முடிந்து வெளியே வரும்போது, ரஜினியைத்தான் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
முன்னதாக, படம் வெளியாவதற்கு முன்பு படத்தைப் போட்டுப் பார்த்தார்கள். ரஜினிக்குத்தான் பேர் கிடைக்கும் என்று இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. ‘நல்லா வந்திருக்கு படம். நிச்சயம் ஜெயிச்சிரும்’ என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்றார் சிவாஜி. அப்போது இயக்குநரும் தயாரிப்பு தரப்பிலும், ‘சார், க்ளைமாக்ஸ் நேரத்தை வேணும்னா குறைச்சிடலாம். கொஞ்சம் கட் பண்ணிக்கலாம் சார்’ என்று சொன்னார்கள். உடனே சிவாஜி, ‘எதுக்கு கட் பண்றீங்க? கொஞ்சம் கூட குறைக்கக்கூடாது. ரஜினி நல்லாத்தானே பண்ணிருக்கான். அவனும் வளர்ந்துட்டிருக்கறவன். அவன் இன்னும் நல்லா வளரட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்றாராம்.
அவரின் பரந்த மனதை உணர்ந்து ‘நான் வாழவைப்பேன்’ யூனிட் மொத்தமும் நெகிழ்ந்து, நடிகர் திலகத்தைப் பாராட்டித்தள்ளியது.
இதற்கு முன்னதாக, சிவாஜியின் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ படத்தில் அவருடன் ரஜினி நடித்திருந்தார்.
1979ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது ‘நான் வாழவைப்பேன்’. படம் வெளியாகி, 41 வருடங்களானாலும், இன்றைக்கும் ‘எந்தன் பொன் வண்ணமே’வும் ‘ஆகாயம் கீழே பாதாளம் கீழே’யும் அப்படியே புத்தம்புது காப்பியாக மனதில் ரீங்கரிக்கிறது. கூடவே, மைக்கேல் டிஸோஸாவும் ஸ்டைல் காட்டி நிற்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago