வண்டி ஏதேனும் மக்கர் செய்தால், மெக்கானிடம் கொண்டுவிடுவார்கள். அவரும் வண்டியை சரிபண்ணிக் கொடுப்பார். எடுக்கப் போகும் படத்தின் கதை, நடுவே மக்கர் செய்தால், வேறு பாதைக்குக் கதையானது தாவினால், அவரைத்தான் கூப்பிடுவார்கள். அவரும் வருவார். கதை மொத்தத்தையும் சொல்லுவார்கள். முழுவதுமாகக் கேட்டுவிட்டு, கதையில் சின்னச் சின்ன மாற்றங்களைச் சொல்லுவார். இடைவேளைக்கு ஒரு டிவிஸ்ட் வைப்பார். பிற்பாதியின் திசையைக் கொஞ்சம் திருப்புவார். க்ளைமாக்ஸ் காட்சிக்கான நகாசுகளைப் பட்டியலிடுவார். அந்தப் படம் அவர் சொன்னபடியே எடுக்கப்படும். அவர் சொன்னது போலவே, படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். அப்படி அவர், கலங்கரை விளக்கமென, கதைக் கப்பலைத் திசை திருப்பிவிட்ட படங்கள் வெற்றியான கதை ஏராளம். அவற்றில் ஒரு துளி உதாரணம்... ‘அபூர்வ சகோதரர்கள்’. இப்படிப்பட்ட அபூர்வ சினிமாக்காரர்... பஞ்சு அருணாசலம்.
காரைக்குடிக்காரர். கவியரசு கண்ணதாசனின் உறவினர். கவியரசரின் அண்ணன் மகன். எழுத்து, இளம் வயதிலேயே சேர்ந்து வளர்ந்தது. கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகையில், புனைப்பெயரில் சிறுகதைகள் எழுதினார். அந்தக் கதையிலும் எழுத்து நடையிலும் தனித்துவம் இருந்தது. எவரின் சாயலும் இல்லாமல் பளிச்சிட்டது.
கவியரசு கண்ணதாசனின் உதவியாளராக, திரையுலகில் நுழைந்தார். பல்லாயிரக்கணக்கான பாட்டு எழுதிய கண்ணதாசன், பேனா பிடித்து, மோட்டுவளை பார்த்தெல்லாம் எழுதமாட்டார். கண்களை மூடிக்கொண்டால், இதயம் திறக்கும். வாய் திறப்பார். வார்த்தைகள் சந்தத்துக்குக் கட்டுப்பட்டு, வரிசைகட்டி வரும். அவர் சொல்லச் சொல்ல பஞ்சு அருணாசலம் எழுதுவார். இதுவும் ஒரு பாடமாகிப் புகுந்தது உள்ளே.
» நீங்கள் இல்லாமல் நான் இல்லை: 45 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ரஜினி நன்றி
» ஹன்சிகா பிறந்த நாள் ஸ்பெஷல்: அழகாலும் அன்பாலும் ஈர்த்தவர்!
இந்தப் பணி மட்டுமா?
ஏ.எல்.எஸ். ஸ்டூடியோவில், செட் உதவியாளராகப் பணியாற்றினார். இன்னும் சினிமாவின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’ என்ற பாடலை எம்ஜிஆருக்காக எழுதினார். ‘கலங்கரை விளக்கம்’ படத்துப் பாடல். ‘யோவ்... இது கண்ணதாசன் எழுதினது மாதிரி இருக்கே?’ என்று எம்ஜிஆர் வியந்து ரசித்தார். பஞ்சு அருணாசலம் எழுதிய ‘மணமகளே மணமகளே வா வா’ பாடலைப் பாடாத, ஒலிபரப்பாத திருமணங்களே அந்தக் காலத்தில் இல்லை.
இத்தனை அனுபவச் செறிவு இருந்தாலும், பஞ்சு அருணாசலத்துக்கு திரை வட்டாரத்தில் ஆரம்பத்தில் இவருக்கு ‘பாதிக்கதை பஞ்சு’ என்றுதான் பெயர். இவர் கதை எழுதினால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடும். ‘பஞ்சு ராசியில்லாதவர்பா’ என்றார்கள். இதனாலெல்லாம் பஞ்சுவின் மனம் கனத்துவிடவில்லை. சோர்ந்துவிடவில்லை. 12 வருடப் போராட்டம்... தொடர் தோல்வி... திரும்பிய பக்கமெல்லாம் அவமானம்... ஆனாலும் 12வது வருடத்தில் குறிஞ்சியெனப் பூத்தார் பஞ்சு அருணாசலம்.
படத்துக்கு இவர் கதை எழுதினால் அந்தப் படம் ஹிட்டு. பாட்டு எழுதினால், அந்தப் படம் வெற்றி. ’பஞ்சு அருணாசலம் கதை எழுதினால், அந்தப் படம் வெற்றிக்கு கியாரண்டி’ என்றார்கள். ஆனால் மகரிஷி, சுஜாதா முதலான எழுத்தாளர்களின் கதையை வாங்கி, ‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘காயத்ரி’, ‘ப்ரியா’ என்று இன்றைக்கும் பேர் சொல்லும் படங்களைக் கொடுத்தார். சிவகுமாருக்கு ஆண்ட்டி ஹீரோ ரோலும் ரஜினிக்கு குணச்சித்திர கதாபாத்திரமும் வழங்கினார். ரஜினியின் நடிப்பை வெளிப்படுத்திய படங்களில், ‘அண்ணே... நாகராஜண்ணே’ என்று சொல்லும், ‘புவனா ஒரு கேள்விக்குறி’க்கு தனியிடம் உண்டு.
இசையின் மீது சொல்லத் தெரியாத ஆர்வமும் வேகமும் இருந்தது. அதன் விளைவு... விஜய பாஸ்கர் என்றொரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தினார். நல்ல நல்ல பாடல்களைக் கொடுத்தார் இவரும். ஆனாலும் இசைத்தாகமும் தேடலும் அடங்கவில்லை. தன் தாகத்தையும் தேடலும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் உலகுக்குமான வடிகால் இசையைக் கொடுக்க வற்றாத ஜீவநதியைக் கண்டறிந்தார். அடையாளம் காட்டினார். ‘பாதிக்கதை பஞ்சு’ என்பதெல்லாம் எப்போதோ காணாமல் போயிருந்தது. ‘ராசியில்லாத பஞ்சு’ என்பதெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது. ‘இளையராஜாவை நமக்குத் தந்த பஞ்சு அருணாசலம்’ என்று கொண்டாடியது தமிழ் உலகம்.
எழுபதுகளின் மத்தியில் இருந்து எண்பதுகள் முழுமைக்கும் தொந்நூறுகளிலும் கூட, நல்ல படம், சூப்பர் படம், வெற்றிப் படம், மெகா வெற்றிப் படம் என்றெல்லாம் ஒரு பட்டியலெடுத்தால், அதில் முக்கால்வாசி படங்களில் ஏதேனும் ஒரு வகையில் தன் பங்கைக் கொடுத்திருப்பார் பஞ்சு அருணாசலம்.
இன்றைக்குப் படம் தயாரிக்காவிட்டாலும், ஏவிஎம் எனும் பிரமாண்ட நிறுவனத்தை இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் சொல்வார்கள் திரை வட்டாரத்தில். அந்த நிறுவனம் தயாரித்த பெரும்பான்மையான படங்களுக்கு ஒன்று கதை எழுதியிருப்பார். அல்லது வசனம் எழுதியிருப்பார். அல்லது பாட்டு எழுதிக் கொடுத்திருப்பார். அல்லது திரைக்கதை தீட்டியிருப்பார். அதுவும் இல்லையெனில், கதைகளைச் செப்பனிட்டுக் கொடுத்திருப்பார். கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’, ரஜினிக்கு ‘முரட்டுகாளை’ இவரின் கைவண்ணம்தான். ‘விழியிலே மலர்ந்தது’ம் ‘இதோ இதோ என் நெஞ்சினிலே’ பாடலும் என பாடலில் இவரின் பாணியே தனி.
பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரிலும் இன்னும் பல பெயரிலும் எத்தனையோ படங்கள். அத்தனையும் மக்கள் மனங்களில் இன்றைக்கும் கொலுவிருக்கின்றன. ‘தில்லுமுல்லு’வுக்குப் பிறகு ரஜினிக்குக் கிடைத்த காமெடிப் படமாக ‘தம்பிக்கு எந்த ஊரு’, ரஜினியை வேறொரு ரஜினியாக்கிய ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, கமலுக்கு ‘கல்யாண ராமன்’, ‘எல்லாம் இன்ப மயம்’ மாதிரியான படங்கள், நான்கு வேடங்களில் நடித்து இன்றைக்கும் காமெடி சரவெடிகளில் தூள் கிளப்பிய ‘மைக்கேல் மதன காமராஜன்’ மாதிரியான படங்கள் என எத்தனையோ படங்களைக் கொடுத்த பஞ்சு அருணாசலம், பஞ்சு எனும் பெயருக்கேற்ப மென்மையானவர்.
‘அன்னக்கிளி’யில் இளையராஜா வந்தார். இளையராஜாவைத் தந்தார். இந்திப் பாடல்களின் ஆதிக்கம் செயலிழந்து போனது. இந்த சரித்திரப் பின்னணிக்குள் இருக்கிற நாயகன் பஞ்சு அருணாசலம். ’அன்னக்கிளி’ தொடங்கி பிறகு அவர் தயாரித்த எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. அதுவொரு நன்றி. அதேசமயம், பஞ்சு அருணாசலத்தின் குணம்.
ஒருகட்டத்தில், பாட்டெழுதுவது குறைந்துவிட்டிருந்தது வாலிக்கு. ஒருநாள்... ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே. இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின. அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’.
தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட, ‘பஞ்சு அருணாசலம் எப்படி இருப்பார்’ என்பது கூட தெரியாது. அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி.
ஒரு மனிதர், எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் திரையுலகில் சாத்தியமே இல்லை. ஆனாலும் பஞ்சு அருணாசலம் எல்லோருக்கும் இனியர். இவர் பணியாற்றிய, கதையை சீர்படுத்திய படங்களை, தயாரித்த படங்களை, வரிசையாக பார்த்தாலே போதும். அது சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என உணர்ந்துவிடலாம்.
பஞ்சு அருணாசலம், சத்தமே இல்லாமல் சாதனைகள் செய்த சகலகலாவல்லவன். அவர் தொட்ட துறைகளும் எட்டிய சிகரங்களும்... இன்னொரு நூற்றாண்டு சினிமாவுக்கான பெருவிருட்சம். பஞ்சு அருணாசலம் விதை நெல்! அவர் உருவாக்கிய படங்களை சினிமா இலக்கணம் என்றும் சொல்லலாம். பஞ்சு அருணாசலம் பாணி என்றும் சொல்லலாம்.
இன்று (9.8.2020) பஞ்சு அருணாசலம் நினைவுதினம். சகலகலா பஞ்சு அருணாசலத்தைப் போற்றுவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago