எல்லோருக்கும் பிடித்த ‘இது நம்ம ஆளு’க்கு 32 வயது; பாக்யராஜின் முதல் இசை; பாலகுமாரனின் முதல் இயக்கம்! 

By வி. ராம்ஜி

சீரியஸான விஷயத்தை இலகுவாகவும் நகைச்சுவை ததும்பவும் படமாகச் சொல்லுவது என்பது சாதாரணமில்லை. தியேட்டரே நுனியில் உட்கார்ந்து, ‘உச்’ கொட்டிக்கொண்டிருக்கும் வேளையில், பொசுக்கென்று எல்லோரும் சிரித்துவிடுகிற காட்சியை வைப்பது மிகப்பெரிய ரிஸ்க். தவிர, தடக்கென்று இயல்பு மனநிலைக்கு ரசிகர்களை அழைத்துவரவும் இயலாது. ஆனால் அவருடைய ரசிகர்கள், அந்தப் படைப்பாளியின் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார்கள். தவிர, இப்படி ஏதாவது கனமான காட்சியில், ஏதாவது எக்குத்தப்பாகவும் ஏடாகூடமாகவும் இவர் செய்வார் என்று காத்திருந்தார்கள். அப்படி எதிர்பார்க்கவைத்ததுதான் அவருடைய அசாத்திய வெற்றி. ஜாதியாவது... மதமாவது என்கிற விஷயத்தை, குழந்தையின் கையில் சாக்லெட்டைக் கொடுத்துவிட்டு, சுருக்கென்று ஊசிபோடுவது போல் அப்படியொரு படமெடுத்தார். அவர்... கே.பாக்யராஜ். அந்தப் படம்... ‘இது நம்ம ஆளு’.

பட்டதாரி ஹீரோ. வேலை இல்லை. அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்யவேண்டும். பட்டணத்துக்கு வேலை தேடி வருகிறார். வந்த இடத்தில், பட்டதாரிக்கு கிடைப்பதோ சுண்டல் விற்கும் வேலை. ஆனால், முடி திருத்தும் தொழில் செய்பவர், சுண்டலுக்காக பூணூல் போட்டுக்கொண்டு பிராமணராக நடித்துப் பிழைக்கவேண்டும் என்பது நிபந்தனை. மனம் ஏற்க மறுக்கிறது.
ஆனால், பசியே வெல்கிறது. அதேசமயம், சுண்டலுக்காக பிராமண வேஷம் போடமாட்டேன் என்றவர், கணபதி ஹோமத்துக்கு ‘ஸ்வாஹ’ சொல்வதற்காக, அந்த வேஷம் போடுகிறார். அதுதான் அவரின் மொத்த வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. மந்திரம் தெரியாத அவருக்கு சீனிவாச சாஸ்திரிகள் அடைக்கலம் தருகிறார். தன் வீட்டின் பின் போர்ஷன் வீட்டைக் கொடுக்கிறார். கோயிலில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார். வேஷத்தைத் தொடரவேண்டியதாகிவிடுகிறது.

சாஸ்திரிகள் மிகுந்த ஆச்சாரமானவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவுகிறார். ஆனால் அந்தக் குடும்பத்துச் சிறுவன், இவரின் தவறி விழுந்த துண்டை எடுத்துக் கொடுத்தால் ஏற்க மறுக்கிறார். பட்டதாரியான கோபாலின் உதவி செய்யும் குணம் பார்த்து நெகிழ்கிறார். அதேசமயம், மண்ணில் விழுந்துவிட்ட மீன்களைத் தொட்டு எடுத்து, கூடையில் போடுவதை ஏற்க மறுக்கிறார்.
சீனிவாச சாஸ்திரிகளுக்கு ஒரு மகள். அவள்தான் நாயகி பானு. கோபாலின் வெள்ளந்தித்தனமும் இயலாமையும் ஏழ்மையும் அவருக்குள் அன்பெனச் சுரந்து, காதலென மலருகிறது. காதலை ஏற்க கோபாலுக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

கோபாலின் வேட டிராமாக்களை அறிந்தவர், சுண்டலுக்காக பூணூலும் சிலுவையும் குல்லாவும் போட்டு வியாபாரம் செய்யும் கிருஷ்ணய்யர் மட்டுமே! ஒருகட்டத்தில், கோபால் - பானுவின் காதலை வீடு ஏற்கிறது. பிராமண வேடம் போட்ட கோபால், அப்பா அம்மாவையும் செட்டப் செய்ய, திருமணமும் நடக்கிறது. அடுத்த நிமிடமே... கோபால் பிராமணரில்லை, நாவிதர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவர, சீனிவாச சாஸ்திரிகள், ‘பூணூலைக் கழற்றுடா’ என்கிறார். ‘இனி எம் பொண்ணைத் தொடறதில்லைன்னு சத்தியம் பண்ணு’ என்று கேட்டு, சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

இதையடுத்து, மகளையும் தலைமுழுகுகிறார். வீட்டைவிட்டு வெளியே வரும் பானுவை, கோபால் ஏற்க மறுக்கிறார். அருகில் தனி வீட்டில் இருக்கிறார். பானுவும் கோபாலும் ஒன்றுசேர்ந்தார்களா, சீனிவாச சாஸ்திரிகள் மகளையும் மருமகனையும் ஜாதியைக் கடந்து ஏற்றுக் கொண்டாரா? என்பதைச் சொல்லி ‘இது நம்ம ஆளு’ என்பதை உணர்த்துவதுதான் ‘இது நம்ம ஆளு’.
வாழைப்பழத்தில் ஊசி செருகுவது போல், படம் நெடுக, சரவெடிகளைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்.

கோபாலாக பாக்யராஜ். பானுவாக ஷோபனா. சீனிவாச சாஸ்திரிகளாக சோமயாஜுலு. பாக்யராஜின் பெற்றோராக... குமரிமுத்து - மனோரமா. கிருஷ்ணய்யராக கலைஞானம். படத்தில் இவர்கள்தான் மெயின் கேரக்டர்கள். இவர்களையும் சின்னச்சின்னதாக வருகிற கேரக்டர்களையும் வைத்துக்கொண்டுதான் திரி கிள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பார் பாக்யராஜ்.

ஷோபனா தமிழில் நடித்த மிகச்சிறந்த படங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமான படம். சோமயாஜுலுவுக்கு ‘சங்கராபரணம்’ படத்துக்குப் பின்னர், அப்படியொரு கதாபாத்திரம் அமைந்த படம். எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் குமரிமுத்துவுக்கு ‘இது நம்ம ஆளு’ ரொம்பவே ஸ்பெஷல். ஆச்சியின் முத்திரைப் படங்களின் நீண்டதான பட்டியலில், இந்தப் படமும் இடம் பெற்றிருக்கிறது.

ஊரில் இருந்து கிளம்பி வந்து, ஹோட்டல் முதலாளி எழுத்தாளர் பாலகுமாரனிடம் சாப்பிட்ட பில்லுக்கு கடிகாரத்தைக் கழற்றிக் கொடுப்பதிலிருந்தே தொடங்கிவிடுகிறது காமெடி சரவெடி. வயிற்றுப் பிழைப்புக்காக பிராமண வேஷம் போட்டுக் கொண்டு திருஷ்டி பூசணிக்காயை ஸ்டைலாகத் தாண்டிச் செல்வார். பசங்க விளையாடிக் கொண்டிருக்கும் கால்பந்து பறந்துவரும். அதை தன் தலையால் தட்டி விளையாடியபடியே வருவார். ’பச்சைமலை சாமி ஒண்ணு உச்சி மலை ஏறுதுன்னு’ என்று பாடிக்கொண்டே உற்சாகமாக வருவார்.

ஓட்டு மேலிருந்து விழும் காய்ந்த மாலையை, வைகுந்த மாலை என்று பெருமிதம் கொள்வார். பஞ்சபாத்திரம், தூபக்கால், கோமியம் தெரியாமல் முழிப்பார். மந்திரத்தின் இறுதியில் ‘ஸ்வாஹ’ சொல்லமுடியாமல் திணறுவார். ‘இலை எடுத்துண்டு வா கோபால்’ என்று சொன்னதை தனக்குத்தான் என்று நினைத்து சாப்பிட உட்கார்ந்துகொள்வார்.

வேலை கிடைத்ததும், வைத்திருந்த தாடியையெல்லாம் எடுத்துவிட்டு, மீசையெல்லாம் செதுக்கி, ‘சந்தையில மீனு வாங்கி மச்சான்’ என்று அக்ரஹாரத்தில் பாட்டுப்பாடியே வருவார். அக்ரஹாரத்துக்கு வந்த ரவுடிகளிடம் சண்டை போடுவார். சங்கீதம் தெரியும் என்பதாக அலட்டிக் கொள்வார். அம்மாவின் கண் ஆபரேஷனுக்குக் காசு கிடைத்தால் போதும் என்று ஷோபனாவிடம் இசைப் போட்டியில் பங்கேற்பார்.

‘செண்பகப்பூ விரித்தே கண்ணன் சாமரம் வீசுகிறான்’ என்று ஷோபனா அம்மாவுக்குப் பாட்டுச் சொல்லித் தருவார். இல்லாத அத்தைப் பெண்ணுக்கு இலவசமாகப் புடவை வாங்கி விற்றுவிடுவார். சமைப்பதாக பாவ்லா செய்து, கோயில் பிரசாதம் சாப்பிடுவார். சீனிவாச சாஸ்திரிகள் இருக்கும்போதே, விழுந்துவிட்டவர்களைத் தூக்கிவிடுவார். சிதறிக் கிடக்கும் மீன்களை எடுத்துக் கொடுப்பார். மீனின் வகைகளையும் சொல்லுவார்.

இடையே, ஷோபனாவின் காதலை ஏற்க முடியாமல் தவிப்பார். ஒருகட்டத்தில் காதல் தெரியவர, கல்யாணத்தில் முடியும். பொய்யான அப்பா, அம்மா. வீண் ஜபர்தஸ்தில் டுபாக்கூர் அப்பாவும் திருட்டு அம்மாவும் கண்டு மிரண்டுபோவார். உண்மையான அம்மா, அப்பாவால் குட்டு வெளிப்பட, ‘பெண்ணைத் தொடமாட்டேன்’ என்று சத்தியம் செய்வார்.

ஊர்ப் பஞ்சாயத்தில், வாய் பேச முடியாத பெண்ணுக்கு நீதி கிடைக்க வாதாடுவார். பிற்படுத்தப்பட்ட பெண், பிராமண வீட்டுக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததையும் ஞானசம்பந்தர் சரிதத்தையும் ஒப்பிட்டு விளக்குவார். கோயில் குருக்கள் மகளின் திருமணத்துக்குத் திருடிய அம்பாள் நகையை தான் திருடியதாக ஏற்றுக்கொள்வார். மாமனார் சோமயாஜுலுவை அவமரியாதை செய்த தர்மகர்த்தா குழுவினரை வெளுத்தெடுப்பார்.

இப்படி, தனக்கே உரிய பாணியில் கதையின் கனத்தைக் கூட்டிக்கொண்டே வருவதில் பாக்யராஜ் எப்போதுமே தனி ஆளுதான். இறுதியில், சத்தியத்தை மீறுவதும் மனைவியுடன் கூடுவதும் தற்கொலைக்கு முயன்று தீவைத்துக் கொண்ட ஸ்ரீமடத்தில் இருந்து சோமயாஜுலுவைக் காப்பாற்றுவதும், பின்னர், ஸ்ரீமடம், அன்பு இல்லமாக மாறுவதும் எல்லோரும் ஒன்றிணைவதும் என சுபம் போடுவார் பாக்யராஜ்.

கங்கை அமரன், எம்.எஸ்.வி., இளையராஜா, சங்கர் கணேஷ் என்றெல்லாம் தன் படங்களுக்கு இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திய பாக்யராஜ், இந்தப் படத்தில் முதன் முதலாக இசையமைத்தார். ஏற்கெனவே, அமலாவுடன் நடித்து, பாதியிலேயே நின்றுபோன ‘காவடிச்சிந்து’தான் முதல் இசையமைத்த படம் என்றாலும் அது பாதியில் நின்றதாலும் இதுவே வெளியானதாலும் இந்தப் படமே முதல் இசையமைத்த படம் எனும் பெயரை பாக்யராஜுக்கு வழங்கியது. ‘பச்சைமலை சாமி ஒண்ணு’ என்ற பாடலையும் சொந்தக் குரலில் பாடினார்.

பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தின் கதை விவாதங்களில் கலந்துகொண்ட எழுத்தாளர் பாலகுமாரன், இந்தப் படத்தை இயக்கினார். பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு, டைரக்‌ஷன் மேற்பார்வை என்று பணிகளைச் செய்தார்.
ஷோபனாவின் நடிப்பும் சோமயாஜுலுவின் நடிப்பும் பிரமாதம். சோமயாஜுலுவின் தந்தையாக டி.கே.சுப்ரமணியம் நடித்திருந்தார். இவர் பூர்ணிமா பாக்யராஜின் தாத்தா. ஷோபனாவின் அம்மா ஜானகியின் நடிப்பும் கச்சிதம். குமரிமுத்து அசத்தியிருப்பார். மனோரமா அற்புதம் பண்ணியிருப்பார். முக்கியமாக, கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் அதுவரை இருந்த கலைஞானத்தை, நடிகராக, கிருஷ்ணய்யராக அறிமுகப்படுத்தியிருப்பார் பாக்யராஜ். மனிதர், நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.
‘அம்மாடி இதுதான் காதலா?’, ‘பச்சைமலை சாமி ஒண்ணு’, ‘காமதேவன் ஆலயம்’, ‘நான் ஆளான தாமரை’, ‘சங்கீதம் பாட கேள்விஞானம் அது போதும்’ என்று எல்லாப் பாடல்களுமே செம ஹிட்டு. தவிர, கே.ஜே.யேசுதாஸ் பாடிய ‘கண்ணுறங்கு’ என்ற பாடல் இருப்பதாக, யூடியூப் சொல்கிறது. ஆனால் படத்தில் இந்தப் பாடல் இல்லை.

ஜாதிப் பிரிவினையைச் சொன்ன இந்தப் படம், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சொல்லபோனால், ‘முந்தானை முடிச்சு’ எப்படியான வெற்றியைத் தந்ததோ... அப்படியொரு பிரமாண்டமான வெற்றியைச் சந்தித்தது. பெரும்பான்மையானோர் ‘இது நம்ம ஆளு’ என்று படத்தையும் பாக்யராஜையும் கொண்டாடினார்கள்.

படத்தில், நடிப்பில் முதல் மார்க் சோமயாஜுலுவுக்குத்தான். மனிதரைப் பார்த்தால், வணங்கத் தோன்றும். அப்படியொரு கம்பீர கெளரவ கருணையையும் அனுஷ்டானத்தையும் காட்டியிருப்பார். க்ளைமாக்ஸில், அவரைக் காப்பாற்றிவிட்டு, பாக்யராஜ் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் பின்னே எரிந்துகொண்டிருக்கும் ஸ்ரீமடத்தின் ஓலையானது விழுந்துகொண்டே இருக்கும். பாக்யராஜுக்கும் அவருக்குமான அந்த அன்பு, மரியாதை, பிரியம் மிக அருமையாக சித்திரிக்கப்பட்டிருக்கும்.

படத்தின் லொகேஷனும் ராஜ்பிரீத்தின் ஒளிப்பதிவும் அழகு. அதேபோல ஷோபனாவும் அவரின் மூக்குக் கண்ணாடியும் ரொம்பவே பலம் சேர்த்தது, பானுவுக்கும் படத்துக்கும்!

1988ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது ‘இது நம்ம ஆளு’. படம் வெளியாகி, 32 ஆண்டுகளாகின்றன. இன்னமும் ‘பச்சை மலை சாமி’யையும் ‘ஆளான தாமரை’யையும் ‘இது நம்ம ஆளு’ படத்தையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்