இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் 50-வது படம்; ஏவிஎம், கமல், பஞ்சு அருணாசலம், இளையராஜா... ‘உயர்ந்த உள்ளம்’ 

By வி. ராம்ஜி

தமிழ் சினிமாவின் ஐகான்... அடையாளம்... பெருமிதம் என்று சொல்லப்படும் முக்கியமான விஷயங்களில் ஏவி.எம். நிறுவனமும் ஒன்று. கோடம்பாக்கம் என்றதும் நினைவுக்கு வருவதும் பிரமாண்டப் படங்கள் என்றால் நினைவுக்கு வருவதுமான ஏவி.எம். நிறுவனம்... தமிழ் சினிமாவின் ஆலமரம். இந்த ஆலமரத்தின் மிக முக்கியமான விழுது... எஸ்.பி.முத்துராமன்.

ஏவி.எம்.மின் ‘களத்தூர் கண்ணம்மா’, கமலுக்கு முதல் படம். எஸ்.பி.முத்துராமனுக்கும் ஒரு வகையில் இதுமுதல்படம். இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், உதவி இயக்குநர், எடிட்டிங் பணி, புரொடக்‌ஷன் பணி என ஒரு திரைப்படத்தின் சகல பணிகளுக்குள்ளேயும் புகுந்து கற்றுக் கொண்டார் எஸ்.பி.முத்துராமன்.

இதன் பின்னர், ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி முதலானோர் நடித்த ‘கனிமுத்து பாப்பா’ என்ற படத்தை 72ம் ஆண்டு முதன்முதலாக இயக்கினார் எஸ்.பி.எம். இதையடுத்து வரிசையாக ஜெய்சங்கர், முத்துராமன், கமலஹாசன் முதலானோரைக் கொண்டு படங்களை இயக்கினார்.

இதையடுத்து 80களில், ஏவிஎம்மின் ஆஸ்தான இயக்குநர் என்கிற அந்தஸ்துக்கு வந்தார் எஸ்.பி.முத்துராமன். ரஜினியை வைத்து ‘முரட்டுகாளை’, கமலை வைத்து ‘சகலகலா வல்லவன்’ என்று மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பின்னர் ரஜினியை வைத்து ஏராளமான படங்களை இயக்கினார். ஒருபக்கம், ஏவி.எம் படங்கள், இன்னொரு பக்கம் பஞ்சு அருணாசலத்தின் பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ் படங்கள், மற்றொரு பக்கம் பாலசந்தரின் கவிதாலயாவுக்கு படங்கள் என பிஸி இயக்குநராகவும் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் ரசிகர்களின் இயக்குநராகவும் என திரையுலகில் பேரெடுத்தார். நம்பிக்கைக்கு உரிய இயக்குநராகத் திகழ்ந்தார்.

முதன் முதலாக இயக்குநரானது 72ம் ஆண்டு. 85ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் திரையுலகில் மறக்கமுடியாத ஆண்டு. ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், கமல், அம்பிகா, ராதாரவி நடித்த ‘உயர்ந்த உள்ளம்’ படத்தை இயக்கினார். இது, அவரின் 50வது படம்.
85ம் ஆண்டில், ‘அந்த ஒரு நிமிடம்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘காக்கிசட்டை’, ‘மங்கம்மா சபதம்’ முதலான படங்களில் நடித்தார் கமல். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ‘உயர்ந்த உள்ளம்’ திரைப்படமும் இந்த வருடத்தில்தான் வெளியானது. ‘அந்த ஒரு நிமிடம்’ படத்தில் ஊர்வசி நாயகி. ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் ராதாவும் ரேவதியும் நாயகிகள். ‘மங்கம்மா சபதம்’ படத்தில் மாதவி. ‘காக்கி சட்டை’யிலும் ‘உயர்ந்த உள்ளம்’ படத்திலும் அம்பிகா நாயகி.

மிகப்பெரிய பணக்காரர் ஆனந்த் என்கிற கேரக்டர் கமலுக்கு. கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருப்பார் கமல். அவரின் இரக்ககுணத்தையும் ஏமாளித்தனத்தையும் புரிந்துகொண்டு, அவரிடம் வேலையாளாகவும் நண்பனாகவும் மாறி, அவரிடம் இருந்து பணத்தை அபகரிப்பார் ராதாரவி. செலவுக்கு மேல் செலவு செய்து வந்ததாலும் நண்பர்களிடம் சீட்டாடி ஏமாந்ததாலும் ஓட்டாண்டியாகிவிடுவார் கமல்.

இந்த நிலையில், வீட்டு வேலைக்காரர் வி.கே.ராமசாமியின் உறவுப் பெண் அம்பிகா மீது காதல். சொத்துகளை இழந்து, வீடு வாசலை இழந்து, வி.கே.ஆர். வீட்டில், குடிசையில் அடைக்கலமாவார். பின்னர், அம்பிகாவின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுவார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளுக்கு கேன்ஸர் என்றும் சொல்லி கமலிடம் பணம் பறித்திருப்பார் ராதாரவி. இறுதியில், அந்தப் பெண்ணை ராதாரவியுடன் சேர்த்துவைப்பார்; இந்த மோசமான உலகையும் புரிந்துகொள்வார்; உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் கமலை எல்லோரும் வியந்து பாராட்டுவார்கள் என்பதுடன் படம் நிறைவடையும்.

கமலின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. வழக்கம் போல் எஸ்.பி.எம். யூனிட். பஞ்சு அருணாசலத்தின் கதை வசனம் தெளிந்த நீரோடை. இளையராஜா வழக்கம்போல், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்திருந்தார். ‘என்ன வேணும் தின்னுங்கடா டோய்’, ‘ஓட்டைச் சட்டியை வைச்சிக்கிட்டு’, ‘எங்கே என் ஜீவனே’, ‘வந்தாள் மகாலட்சுமியே’, ‘காலைத் தென்றல் பாடிவரும்’ என்று எல்லாப் பாடல்களும் வெற்றி பெற்றன.

இந்தப் படத்துக்குக் கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில், ஏதோவொரு படப்பிடிப்பில், கமலுக்கு கையில் அடிபட்டிருக்கும் போல. படத்தை இப்போது பார்த்தாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதை உணரமுடியும். பல காட்சிகளில் கமல் வலதுகையை கொஞ்சம் தூக்கியபடியே வைத்திருப்பார். அந்தக் கையைக் கொண்டே ஆட்டம் போட்டிருப்பார். பாட்டுக்கு ஆடியிருப்பார். சண்டைக்காட்சிகளில் வெளுத்திருப்பார்.

கமல் - ராதாரவி, கமல் - அம்பிகா, கமல் - வி.கே.ராமசாமி போர்ஷன்கள் ரகிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். பங்களா ஏலத்துக்கு வரும் காட்சியில், கமலின் நடிப்பு அப்ளாஸ் அள்ளியது. ’வந்தாள் மகாலட்சுமியே’ பாடலும் நடனமும் படமாக்கப்பட்ட விதமும் ரசிக்கவைத்தது.

1985ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி வெளியானது ‘உயர்ந்த உள்ளம்’. ஏவிஎம், பஞ்சு அருணாசலம், கமல், இளையராஜா கூட்டணியுடன் களமிறங்கிய எஸ்.பி.முத்துராமனுக்கு இது 50வது படம்.

இன்னொரு கொசுறுத் தகவல்... இதே வருடத்தில்தான், 50வது படத்தை இயக்கிய வருடத்தில்தான் ரஜினியின் 100வது படமான ‘ஸ்ரீராகவேந்திரர்’ படத்தையும் இயக்கிக்கொடுத்தார் எஸ்.பி.முத்துராமன்.

ஆக, முதல் படம் இயக்கி, 48 வருடங்களாகின்றன. 50வது படத்தை இயக்கி, 35 வருடங்களாகின்றன.


ஆக்‌ஷன் படமோ மசாலா படமோ... குடும்பப் படமோ எது எடுத்தாலும் கண்ணியம் குறையாமல் இயக்கிய எஸ்.பி.முத்துராமனை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்