இந்திய வெகுஜன சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களை நட்சத்திரம், நடிகர் என்றோ மாஸ் ஸ்டார் கிளாஸ் ஆக்டர் என்றோ இரண்டாகப் பிரிக்கும் வழக்கம் இருக்கிறது. எம்ஜிஆர்-சிவாஜி காலத்திலிருந்து சமகால நடிகர்கள் இப்படி ஒரு இருமை சார்ந்து பிரித்து வைக்கப்படுவதுண்டு.
ஆனால். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாகக் கோலோச்சியவர்கள் எல்லோருமே நல்ல நடிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதேபோல் நல்ல நடிகர்கள் என்று அறியப்படும் கதாநாயகர்கள் பலரும் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இரண்டில் ஒரு தரப்புடன் அடையாளப்படுத்தப்படுகிறவர் இன்னொரு தரப்புக்கானதை தன் படங்களில் குறைத்துக்கொள்ள நிர்பந்திக்கப்படுவார்.
கமல் படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்றும் ரஜினி படத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று ரசிகர்களின் மனங்களைத் தயார்படுத்துவதில் வணிக சூத்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த இடர்பாடுகளையெல்லாம் தகர்த்தெறிந்த ஒரு நட்சத்திர நடிகராக உருவாகி நிற்கிறார் இன்று (ஜூலை 28) பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ்.
அறிமுகப் படமான 'துள்ளுவதோ இளமை' தொடங்கி 'பட்டாஸ்' வரை அவர் இதுவரை நடித்துள்ள படங்களை வைத்து தனுஷ் என்னும் கதாநாயக நடிகரை எந்த ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள்ளும் அடக்கிவிட முடியாது. இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றும் ஒரு கதாநாயக நடிகர் தனக்கென்று ஒரு மிகப் பெரிய ரசிகர் படையைக் கொண்ட நட்சத்திரமாகவும் உயர்ந்து நிற்பதே தனுஷின் தனிப்பெரும் சாதனை என்று சொல்லலாம்.
அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத, தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் விடலைச் சிறுவனாக கிட்டத்தட்ட அதே வயதுடைய தனுஷ் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார். அடுத்த படத்தில் பள்ளி முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லும் வாலிபனாக நடித்தார். ஆனால் முந்தைய படம்போல் அந்தப் படத்தில் விடலைத்தனமோ கல்லூரி மாணவர்களுக்குரிய கிண்டலும் கேலியும் நிரம்பிய வாழ்க்கையைக் கொண்டவராகவோ நடிக்கவில்லை. மாறாக அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த சிறு வயதில் பல கொடுமைகளை அனுபவித்த பொது சமூகத்தால் அன்னியனாகப் பார்க்கப்படும் தோற்றத்தையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட மனிதனாக ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரடித்தார்.
முதல் படத்தில் 'சினிமாவுக்கான முகமும் தோற்றமும் இல்லை' என்று விமர்சிக்கப்பட்டவர் இரண்டாம் படத்தில் திறமை வாய்ந்த நடிகராக கவனம்பெற்றுவிட்டார். அதைத் தொடர்ந்து நடிப்புத் திறமையை நிரூபிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களிலும் கனமான கதையம்சமுள்ள படங்களிலும் அல்லவா நடித்திருக்க வேண்டும். தனுஷ் அதைச் செய்யவில்லை. சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் 'திருடா திருடி' என்ற மசாலா படம் என்பதற்கான சர்வ லட்சணங்களும் பொருந்திய திரைப்படத்தில் நடித்தார். 'மன்மதராசா மன்மதாராசா' பாடலில் புயல்வேகக் குத்தாட்டம் போட்டார். படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. 'சுள்ளான்' படத்தில் காதைக் கிழிய வைக்கும் பஞ்ச் வசனங்களைப் பேசி இயற்பியல் என்ற ஒரு பாடம் இருப்பதையே மறந்துவிட்ட திரைச் சமூகத்தின் பிரதிநிதித்துவப்படுத்தும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். அதைத் தொடர்ந்து 'தேவதையைக் கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்' என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கமர்ஷியல் பாக்கேஜ் படங்களில் நடித்தார்.
திடீரென்று தடம் மாறி அண்ணனுடன் மீண்டும் கைகோத்து 'புதுப்பேட்டை' படத்தில் நடித்தார்., இந்தப் படத்தில் தனுஷின் பிரம்மாண்ட ஆகிருதி வெளிப்பட்டது. அதற்குப் பிறகு கிசுகிசுக்களில்கூட தனுஷை 'ஒல்லி நடிகர்' என்று எழுதத் தயங்கினார்கள். இடையில் மூத்த படைப்பாளி பாலுமகேந்திரா இயக்கிய 'ஒரு நாள் ஒரு கனவு' படத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தான் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை முழுமையாக உணர்ந்து கதாபாத்திரத்துக்கு தேவையானதை அப்படியே கொடுத்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான 'பொல்லாதவன்' பல காரணங்களுக்காக தனுஷின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம். அந்தப் படத்தில் அவர் எந்த அளவு மாஸ் ஹீரோவாக உயர்ந்தாரோ அதே அளவு அவருடைய நடிப்புத் திறமையும் பளிச்சிட்டது. தனக்குப் பதிலாக தன் தந்தையைத் தாக்கிய எதிரிகளை மருத்துவமனையில் எதிர்கொள்ளும்போது அற உணர்வு, ஆத்திரம். துணிச்சல், தன்னம்பிக்கை என அனைத்தையும் பார்வையாலேயே வெளிப்படுத்தும் அந்த ஒரு காட்சி தனுஷ் எப்பேர்ப்பட்ட நடிகர் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் 2011-ல் வெளியான 'ஆடுகளம்' படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் தனுஷ். பல நடிகர்களின் வாழ்நாள் கனவாகவும் இன்னும் பலருக்கு எப்போதும் நிறைவேறாக் கனவாகவும் ஆகிவிட்ட இந்த பெருமைக்குரிய விருதை மிக இளைய வயதில் பெற்றவர்களில் ஒருவர் தனுஷ்.
இந்த விருதுக்குப் பிறகு அவர் நடித்த படங்களான 'மாப்பிள்ளை', 'வேங்கை' இரண்டிலும் மசாலா தூக்கலாக இருந்தது. அதே சூட்டோடு செல்வராகவனின் 'மயக்கம் என்ன' படத்தில் உணர்ச்சிகரமான நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார்.
'மரியான்', 'ராஞ்னா' (இந்தி), 'ஷமிதாப்' (இந்தி) போன்ற படங்களில் அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.அதே நேரம் 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி' போன்ற படங்களின் மூலம் மாஸ் ஸ்டாராகவும் அசைக்க முடியாதை இடத்தைப் பெற்றார். இடையில் 'அநேகன்', 'கொடி' போன்ற மாஸ், கிளாஸ் அம்சங்களின் கலவையாகத் திகழும் படங்களிலும் நடித்தார். 'வட சென்னை', 'அசுரன்' போன்ற படங்கள் அரசியல், சாதிக் கொடுமை போன்ற மிகத் தீவிரமான விஷயங்களைப் பேசினாலும் அவற்றில் தனுஷின் மாஸ் நாயகத்தன்மைக்கு வலுசேர்க்கும் அம்சங்கள் ரசிக்கத்தக்க வகையில் இணைக்கப்பட்டிருந்தன. இந்தித் திரைப்படங்களின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றதோடு 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து ஒரு நடிகராக சர்வதேச அரங்கிலும் தடம் பதித்துவிட்டார்.
வணிக வெற்றி தோல்விகளை உள்ளடக்கிய இந்த பெருமைமிகு நெடும் பயணத்தில் மாஸ் நடிகருக்கான தேவைகளையும் கிளாஸ் ஆக்டருக்கான தேவைகளையும் ஒருங்கே வளர்த்துக்கொண்டு அடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் செல்கிறார் தனுஷ். 'அசுரன்' என்னும் கனமான படத்தில் இடைவேளை சண்டைக் காட்சியில் மாஸ் ஆடியன்சையும் 'வேலையில்லா பட்டதாரி' போன்ற கமர்ஷியல் படத்தின் இடைவேளைக் காட்சியில் அம்மா இறந்ததைப் பார்த்து மிகயுணர்ச்சிகொண்டு கதறி அழாமலேயே திடீரென்று அம்மாவைப் பறிகொடுத்த சோகத்தைப் பார்வையாளனுக்குக் கடத்தும் அசாத்தியமான நடிப்புத் திறமை கொண்ட கிளாஸ் ஆக்டராகவும் தனுஷால் உருமாற முடியும் என்பதே அவருடைய வெற்றி ரகசியம்.
இவை தவிர ஒரு நடிகராக தனுஷிடம் வேறு சில தனிச்சிறப்புகளும் உண்டு. ஆரம்பத்தில் ஒல்லியான உடலமைப்புக்காக விமர்சிக்கப்பட்டவர் 'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்', 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'வட சென்னை', 'அசுரன்' போன்ற பல படங்களின் மூலம் ஒல்லியாக இருப்பதே அவருடைய தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் என்று நிரூபித்தார். அண்டை வீட்டுப் பையனுக்கான அனைத்து இலக்கணங்களுடனும் இருந்த தனுஷ் அப்படித் தோன்றும் படங்களிலேயே யதார்த்த வாழ்வை மீறிய நாயகனாக (larger than life hero) உருமாறும் ஜாலத்திலும் கில்லாடியாக இருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த அனைத்து படங்களிலும் குறிப்பாக 'வட சென்னை' படத்தில் இதை அழுத்தமாக உணரலாம்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் 'ஜகமே தந்திரம்', மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்', இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் 'அத்ரங்கி ரே' என வெளியாகத் தயாராகிக்கொண்டிருக்கும் தனுஷ் படங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இவை எத்தகைய படங்களாக இருக்கும் இவற்றில் தனுஷிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை ஊகிக்கவே முடியாது. தன்னுடைய பல படங்களில் புதுப் புது பரிமாணங்களை வெளிப்படுத்தி ஆச்சரியங்களை அள்ளிக்கொடுத்துள்ள தனுஷ் வரவிருக்கும் படங்களிலும் அதைச் செய்திருப்பார் என்று திடமாக நம்பலாம்.
தனுஷ் இன்னும் பல நல்ல படங்களைக் கொடுத்துப் பல வெற்றிகளையும் விருதுகளையும் குவிக்க இந்தப் பிறந்தநாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago