மக்கள் சேவையாற்றும் பொது வாழ்க்கையிலும், மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கலை உலகிலும் "மூன்றெழுத்து" முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. மக்களுக்குப் பிடித்ததெல்லாம் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா, சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., இப்படி எத்தனையோ... அதுபோலத்தான் தமிழ்த் திரையிலகில் இன்னொரு "மூன்றெழுத்து" ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி, அதை நினைக்கும்போதெல்லாம் வசந்தகாலத்திற்கு வரவேற்புரை எழுதும்... மனதுக்குள் தேவதைகள் ஊர்வலம் போவார்கள்.... அந்த மூன்றெழுத்து இயக்கிய படங்களின் காட்சிகளை நினைக்கும்போது உணர்ச்சிகள் உச்சம் தொடும்...
அந்த மூன்றெழுத்து... ஸ்ரீதர்....
கதாநாயகர்கள் வேகமாக ஓடி, தொட்டுக்கொண்டிருந்த திரைப்படத்தின் வெற்றிக்கோட்டை, அவர்களைவிட வேகமாக ஓடித் தொட்ட முதல் இயக்குநர் ஸ்ரீதர்... டைட்டில் கார்டில் கதாநாயகன் பெயர் காட்டப்படும்போது கரவொலிகள் காதைப் பிளக்கும்.... விசில் சத்தங்கள் விண்ணைத் தொடும்... தமிழ் சினிமாவின் எழுதப்பட்ட வரலாறு இது... பின்னாளில் இந்த வரலாற்றை மாற்றினார் ஸ்ரீதர்.. ஒரு இயக்குநரின் பெயர் டைட்டில் கார்டில் வரும்போது கரவொலிகள் பாராட்டுரைகளாக எழுந்து ஒரு எழுதப்படாத வரலாறு முதன்முதலாக அரங்கேறியது... அதற்கு முதல் சொந்தக்காரர் ஸ்ரீதர்...
» குருவியைப் பாதுகாக்க ஒரு மாதமாக இருளில் வாழும் கிராமமக்கள்
» சேற்றில் சிக்கி இறக்கும் யானைகளுக்கு யார் பொறுப்பு?- வனத்துறை மீது வருத்தப்படும் சூழலியலாளர்கள்
திரையுலகத்தை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரீதர், 1933-ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே கலைத்தாகம் கொண்ட ஸ்ரீதர், நாடகங்கள் எழுதத் தொடங்கினார். தாகம் தணியவில்லை... 17 வயதான நிலையில் தான் எழுதிய கதை ஒன்றை எடுத்துக் கொண்டு சினிமா வாய்ப்புத் தேடி ஒரு பெரிய சினிமா நிறுவனத்தில் நுழைகிறார் ஸ்ரீதர்...
அங்கிருந்த ஒருவரிடம் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கதையைக் கொடுக்கிறார். ஆனால், அங்கிருந்தவர், சின்னப்பையனாக இருந்த ஸ்ரீதரை நிராகரித்து அனுப்பிவிடுகிறார். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் நிலை தடுமாறினார் ஸ்ரீதர்... ஆனால், சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற தடம் மாறாமல் தொடர்ந்து முயன்றார். அப்போது நிராகரிக்கப்பட்ட ஸ்ரீதரின் கதை நாடகமாய் நடத்தப்பட்டு வெற்றி பெற்று பின்பு சினிமாவாகவும் தயாரிக்கப்பட்டது. இந்தியில் தயாரிப்பதற்காக அதே கதையை அதிக விலை கொடுத்த வாங்கியது, ஸ்ரீதரின் கதையை முதலில் நிராகரித்த அதே நிறுவனம்... ஸ்ரீதரின் கதையை முதன்முதலாக நிராகரித்தவர் புகழ் பெற்ற இயக்குநர் ப.நீலகண்டன்... நிராகரித்த நிறுவனம் ஏவிஎம்.
முதலில் நிராகரிக்கப்படுகிற மனிதர்கள்தான் தங்கள் திறமையால் உலகில் முன்நிறுத்தப்படுகிறார்கள்... ஸ்ரீதரும் இதற்கு ஓர் உதாரணம்...
ஸ்ரீதரின் முதல் கதையான 'ரத்தபாசம்' முதலில் நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ் பெற்றது... ஸ்ரீதரின் இளமைத்துடிப்பான வசனங்கள் இதயத்தைச் சுண்டி இழுத்தன... "பிராணநாதா", "சுவாமி" என்ற பழங்கால வசனங்கள் நொண்டி விழுந்தன... திரைத்தமிழ் வசனம் ஸ்ரீதரால், "ஞானஸ்தானம்" பெற்றது...
'அமரதீபம்', 'உத்தமபுத்திரன்', 'புனர்ஜென்மம்', 'எதிர்பாராதது' போன்ற திரைப்படங்கள் மூலம் ஸ்ரீதரின் அழகுத் தமிழ் வசனங்கள் ரசிகர்களின் மனதை ஆட்சி செய்யத் தொடங்கின.
1957 ஆம் ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுத்தார் ஸ்ரீதர்... காலமெல்லாம் மறக்கமுடியாத கல்யாண பரிசைத் தந்தார்...இயல்பான வசனங்கள்... இதயத்தை உருக்கும் இயக்கம்... மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பொருள் நிறைந்த பாடல்கள்... கல்யாண பரிசு தமிழ் ரசிகர்களுக்கு கலையான பரிசாக இருந்தது...
சென்டிமென்ட்டுகளால் சூழப்பட்ட சினிமா உலகில் ஸ்ரீதரும் சிக்கினார். எட்டெழுத்து ஆகாது என்பதால் கல்யாணப்பரிசில் "ப்" எடுக்கப்பட்டு "கல்யாண பரிசு" என்ற ஏழு எழுத்துகளில் படம் வெளியானது... ஏழு எழுத்துகளில் வெளியான 'கல்யாண பரிசு' வெள்ளிவிழா கண்டு அமோக வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றியது.
கலையுலகத்தில் ஒரு அலையைப் போல எழுந்தார் ஸ்ரீதர்... ஸ்ரீதரால் தமிழ்த் திரையுலகம் வேறு ஒரு பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்தது... அந்தப் பாதையில் காதல் இருந்தது... கவிதை சுரந்தது... பூக்கள் சிரித்தது... பூகம்பம் வெடித்தது... மயிலிறகு வருடியது... மனதையெல்லாம் திருடியது...
'கல்யாண பரிசு' வெற்றியைத் தொடர்ந்து, 'போலீஸ்காரன் மகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சுமைதாங்கி', 'ஊட்டிவரை உறவு' என ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த படங்களெல்லாம் விஸ்வரூப வெற்றியைப் பெற்றன.
'நெஞ்சில் ஓர் ஆலயம்'... இந்தியாவில் வெளியான படங்களில் சிறந்த 10 படங்கள் எனத் தேர்வு செய்யப்பட்டால், அதில் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' நிச்சயமாய் இடம்பெறும். எண்ணற்ற நினைவுகளைச் சுமந்து, எப்போதும் நிறைமாதக் கர்ப்பிணி போல் கனக்கும் நெஞ்சத்திற்குத்தான் எத்தனை வலிகள்?... அதைச் சொல்ல ஏது மொழிகள்?... ஆனால் ஸ்ரீதர் அந்த வலிகளைத் தன்மொழியில் சொல்லியிருப்பார், அந்தப் படத்தில்...
நெஞ்சை உருக்கும் படங்களைக் கொடுத்த ஸ்ரீதரால், 'காதலிக்க நேரமில்லை' என்ற காமெடிப் படத்தையும் தர முடிந்தது...
1965-ம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' வெற்றியைக் குவித்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து 'சிவந்தமண்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இது முதன்முதலாக வெளிநாடுகளுக்குச் சென்று எடுக்கப்பட்ட தமிழ்ப் படம்.
'மீண்டசொர்க்கம்', 'கலைக்கோயில்', 'கொடிமலர்' என ஸ்ரீதரின் படப்பட்டியல் நீளும்... தமிழ் சினிமாவை எப்போதும் ஆளும்...
1970-களிலும் ஸ்ரீதரின் கலைக்கரம், அலைக்கரமாய் எழுந்தது. கமல், ரஜினியை இணைத்து இளமையை ஊஞ்சலாட வைத்தவர், 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற கவிதை ததும்பும் திரைப்படத்தையும் எடுத்தார்.
பொருள் நிறைந்த பல படங்களை படைத்திருந்தாலும், ஒரு காலத்தில் அவரைப் பொருளாதாரம் கைவிட்டது. அவரது கலைக்குரல் சன்னமாக ஒலிக்கத் தொடங்கியது. அப்போது, அவருக்கு உரிமைக்குரலாய் எழுந்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சன்னமாக ஒலித்த ஸ்ரீதரின் குரல், 'உரிமைக் குரலாக' எழுந்தது. மீனவ நண்பனாய் வந்து ஸ்ரீதரை மீட்டெடுத்தது.
30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி காட்சி அமைப்பிலும், கேமரா கோணங்களிலும், புதுமைகளைப் புகுத்தியவர் ஸ்ரீதர். சித்ராலயா என்ற அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட வரிகள் இவைதான்... "அலைகடலில் சிறிய தோனி... கலையுலகில் எங்கள் புதிய பாணி".
பின்னால் வந்த பல இயக்குநர்களுக்கு, ஸ்ரீதரின் படங்கள்தான் பாடங்களாயின..
கலையுலகின் மீது காதல் வயப்பட்ட ஸ்ரீதர் என்ற கலைத் தோனி, பல கலைஞர்களுக்கு ஏணி...
கட்டுரையாளர்: லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: vijayanlawrence64@gmail.com
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago