விடலைப்பருவக்காரர்களை நாயக, நாயகியாகக் காட்டியதெல்லாம் எழுபதுகளுக்கு முன்பு வரை நடக்காத காரியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் என்று நடித்துக் கொண்டிருந்தார்கள். கமலும் ரஜினியும் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில், ‘மணிப்பயல்’ மாதிரி சிறுவர்களின் கதை வந்ததே தவிர, டீன் ஏஜ்காரர்களைக் கொண்ட கதைகள் பெரிதாக வந்தமாதிரி தெரியவில்லை.
’மாணவன்’ என்றொரு படம் வந்தது.பின்னர் இயக்குநர் ஸ்ரீதரின் ‘ஓ... மஞ்சு’ திரைப்படம் வந்தது. சேகர் (மாஸ்டர் சேகர்), கவிதா முதலானோர் நடித்த இந்தப் படம், சபலம், சலனம் என்று அந்தரங்க சிந்தனைகளையும் விஷயத்தையும் அதிகமாக எடுத்துக்காட்டியது. கவிதாவுக்கு இதுதான் முதல் படம்.
பின்னர், பாலுமகேந்திராவின் முதன் முதலாக தமிழில் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம், விடலைப் பருவத்தினரின் மொத்த சிந்தனைகளையும் எடுத்துக் காட்டியது. கொஞ்சம் எல்லை தாண்டியிருந்தால், ‘ஓ... மஞ்சு’ மாதிரி இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கும். மிக ஜாக்கிரதையாக கையாண்டிருந்தார் பாலுமகேந்திரா.
81ம் ஆண்டு, ஜூலை 3ம் தேதி ‘பன்னீர் புஷ்பங்கள்’ வந்தது. பாரதி வாசு இயக்கினார்கள் (சந்தான பாரதி - பி.வாசு). சுரேஷ், சாந்திகிருஷ்ணாவுக்கு முதல் படம். இளையராஜாவின் இசையும் கங்கை அமரனின் பாடல்களும் ஊட்டி லொகேஷனும் பிரதாப் போத்தனின் கேரக்டரும் முக்கியமாக, ‘இது காதலே இல்லை, வெறும் ஈர்ப்புதான்’ என்று சொன்னதும் படத்தை இன்றைக்கும் நினைவு அடுக்குகளில் சேமித்துவைத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
அதே 81ம் ஆண்டு, அதே ஜூலை மாதத்தில், இன்னொரு படம் வந்தது. இளையராஜா தயாரித்த அந்தப் படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கினார். மணிவண்ணன் கதை வசனத்தில் வெளியான அந்தப் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. கார்த்திக், ராதா, தியாகராஜன், சில்க் ஸ்மிதா, கமலாகாமேஷ் முதலானோர் நடித்திருந்தார்கள். முதலானோர் என்று சொல்வதே தவறுதான். படத்தில் அவ்வளவே அவ்வளவுதான் கேரக்டர்கள். கார்த்திக் நண்பர்களையும் தியாகராஜன் வீட்டு வேலைக்கார தம்பதியும் சேர்த்துக் கொண்டாலும் கூட, கேரக்டர்கள் குறைவுதான்.
படம் வெளிவருவதற்கு முன்பு, ‘நடிகர் முத்துராமனோட பையன் நடிச்சிருக்காராம்பா’ என்றும் ‘அம்பிகான்னு ஒரு நடிகை நடிக்கிறாங்களே, அவங்க தங்கச்சிதான் ஹீரோயினாம்’... என்பதுதான் பேச்சாக இருந்தது. படம் வெளியான பிறகு, படத்தைப் பார்த்த பிறகு, இயக்குநரைப் பற்றிய பேச்சுதான் அதிகமாயிற்று. பாரதிராஜா ஏற்படுத்திய தாக்கம் அது.
ஊரில் பணக்காரர், தடாலடிக்காரர் தியாகராஜன். அவரின் மனைவி சில்க் ஸ்மிதா. தியாகராஜனின் தங்கை ராதா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கிராமத்துக்கு வருகிறார். ஊரில் அம்மாவின் அரவணைப்பில் வளரும் கார்த்திக். அவரின் அம்மா கமலா காமேஷ். ஏழைக் குடும்பம். ஹீரோ கார்த்திக் பிராமணக் குடும்பம். ஹீரோயின் ராதா கிறிஸ்தவக் குடும்பம்.
முதல் சந்திப்பில் முறைத்துக் கொள்கிறார்கள். அடுத்து முட்டிக் கொள்கிறார்கள். பின்னர், சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதன் பின்னர், இருவருக்கும் ஈர்ப்பு மேலிடுகிறது. அது ஒருகட்டத்தில்,காதலாக வளர்கிறது. பரம சாதுவான கார்த்திக், கோபக்கார தியாகராஜனை எதிர்த்தாரா, பயந்தாரா, காதலை கைவிட்டாரா, கைப்பிடித்தாரா? தாட்பூட் தஞ்சாவூர் என்று குதிக்கும் தியாகராஜன் என்ன செய்தார்?, கணவனை இழந்து, பரிதாபமாக வாழும் ஏழைத்தாய் கமலா காமேஷ் இதை எப்படி எதிர்கொண்டார்? தியாகராஜனின் மனைவி சில்க் ஸ்மிதா, காதலை எதிர்க்கும் கணவனுக்கு பக்கபலமாக இருந்தாரா, அல்லது கணவனின் தங்கை காதலை பச்சைக் கொடி காட்டி வரவேற்றாரா? என்கிற கேள்விகளையெல்லாம் நம்மைக் கேட்கவே விடாமல், அழகிய திரைக்கதையில் அட்டகாசமாய் கொடுத்திருந்ததுதான் ‘அலைகள் ஓய்வதில்லை’.
குறைந்த ஆடையுடன் ஆற்றில் குளிக்க வருவார் ராதா. அடுத்த காட்சியிலேயே, பாட்டு கற்றுக் கொள்ள வரும்போது இதெல்லாம் மாறிவிடும். இதேபோல், பாறைக்குகைக்குள்ளேயும் தியாகராஜன் வீட்டு மொட்டைமாடியிலும் கார்த்திக்கும் ராதாவும் தனிமையில், இருட்டில் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் அங்கே காமம், சபலம்,சலனம் எதுவுமே காட்சிப்படுத்தியிருக்கமாட்டார்.
பூக்களே ஆடைகளாக இருவரையும் அலங்கரித்திருக்கும். ஆனால், அடுத்து ராதாவுக்காக கார்த்திக் கறி சாப்பிடுவார். கார்த்திக்கிற்காக ராதா கறி சாப்பிடுவதையே விட்டிருப்பார். இப்படி படம் நெடுக, காதலை மட்டுமே சொல்லிக் கொண்டு வந்ததில், கிறுகிறுத்துப் போனார்கள் அன்றைய டீன் ஏஜ்காரர்கள்.
தியாகராஜன், - சில்க் ஸ்மிதாவுக்கு பதிலாக, சந்திரசேகரும் வடிவுக்கரசியும் நடிப்பதாகத்தான் இருந்ததாம். பின்னர் கால்ஷீட் பிரச்சினையால் மாறியது என்று வடிவுக்கரசியை பேட்டி எடுத்தபோது தெரிவித்தார். அதேசமயம், டேவிட், டேவிட் மனைவி கேரக்டர்களுக்கு இருவரும் அப்படியே கிறிஸ்தவர்களாகவே பொருந்திப்போயிருப்பார்கள். பல படங்களில், கவுன் போட்டுக்கொள்ளச் செய்துவிடுவார்கள். ஆனால் சில்க் ஸ்மிதா படம் முழுக்க புடவையில்தான் வருவார். அதுவரை இருந்த இமேஜையெல்லாம் துடைத்து, உடைத்தார் பாரதிராஜா.
பரிதாப அம்மாவுக்கு கமலா காமேஷ் என்பது இங்கிருந்துதான் தொடங்கியதோ என்னவோ. படம் பார்க்கும் போது, ‘அய்யோ பாவம், ஏம்பா தியாகராஜா, அந்த அம்மாவைப் போய் மிரட்டுறியே’ என்று ரசிகர்கள் கத்தினார்கள். அந்தளவுக்கு மனமிரங்கினார்கள் ரசிகர்கள். கார்த்திக்கிற்கும் அந்த வேடமும் நன்றாகவே பொருந்தியது. வயசும் ஒரு காரணம்.
சென்னையில் ஸ்கூல் ஸ்கூலாக ஹீரோவைத் தேடினார் பாரதிராஜா. ஆனால் கிடைத்தபாடில்லை. மறுநாள் முட்டம் போகவேண்டும். ஷூட்டிங் ஆரம்பிக்கவேண்டும். வீட்டுக்குப் போகும் போது, கார் பஞ்சர். அப்போது காத்திருந்த வேளையில், எதிரே உள்ளவீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார். மறுநாள் ஷூட்டிங்கிறகு ‘பேக்’ பண்ணி கூட்டிக்கொண்டு வந்துவிட்டார். அவர்தான் கார்த்திக்.
சைக்கிளில், பசங்களெல்லாம் கூச்சலுடன் வருவார்கள். கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் மரியாதையும் பவ்யமுமாக சட்டென்று பணிவுடன் பேசுவார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில், தேவாலயத்தைப் பார்த்து கமலாகாமேஷ் வேண்டிக்கொள்வார். பாதிரியார் கேட்பார். ‘ஏதாவது ஒரு சாமி, நல்லது பண்ணினாப் போதும்’ என்பார்.
அதேபோல், தங்கை ராதாவை அக்ரஹாரத்துக்குச் சென்று சங்கீதம் கற்க அனுப்புவார். பின்னர், கமலா காமேஷ் வீட்டுக்கு வந்திருக்கும்போது மரியாதையாகவே பேசுவார். முதலில் காதல் விஷயம் அறிந்த கமலா காமேஷ் பதறிப்போவார். இங்கே சில்க் ஸ்மிதாவோ கண்டிப்பும் எச்சரிக்கையும் செய்வார். தியாகராஜனுக்குத் தெரியும் போது, விரட்டி விரட்டி அடிப்பார். அதுவரைக்கும் சில்க், தியாகராஜன் பக்கம்தான்.
வீட்டு வேலைக்காரன் வெளியே சென்ற தருணத்தில், வேலைக்காரியிடம் தகாது நடக்கிற கணவனைக் கண்டு நொந்துபோவார் சில்க். வேலைக்காரனை வீட்டுக்குப் போகவிடாமல், தடுத்துக் கலங்குவார். ‘மனுசங்க இருக்கற இடத்தைத் தேடி போறோம்’ என்று மனைவியை அழைத்துக் கொண்டு வேலைக்காரர் கிளம்புவார். பணம் தருவார் தியாகராஜன். ‘இதை உங்க பொண்டாட்டிகிட்ட கொடுங்க’ என்பார். பொளேரென்றாகிவிடும் சில்க்கிற்கு.
இதையடுத்துதான் ராதாவின் பேச்சு. ‘பணத்தைப் பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு, மனசைப் பாத்து காதலிக்கிற எங்களைப் புரிஞ்சுக்க முடியாது’ என்பார். அப்போது ராதாவின் காதலுக்கு துணை போவார் சில்க்.
தியாகராஜனை அழைத்து அறிவுரை சொல்லுவார் பாதிரியார். ‘ரெண்டுபேரையும் சேர்த்து வைச்சிரு’ என்பார். மறுப்பார். ஆவேசப்படுவார். ‘உனக்கு மதம் பிடிச்சிருக்கு’ என்பார் பாதிரியார். ‘ஆமாம், எனக்கு என் மதம் பிடிச்சிருக்கு’ என்பார் தியாகராஜன்.
கடைசியில், ஊரே திரண்டு வந்து அவர்களைப் பிடிக்க துரத்தும். கார்த்திக்கும் ராதாவும் தங்கள் மத அடையாளங்களைத் துறப்பார்கள். ஓயாத அலை கூட ஒருநிமிடம் நின்று பார்த்து பிரமித்துவிடும். தெறித்துப் போனார்கள் ரசிகர்கள். அதனால்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ காதல் காவியமாயிற்று.
இதன் வேறொரு வடிவமாக... பல வருடங்கள் கழித்து, விக்ரமன் இயக்கிய ‘பூவே பூச்சூடவா’ படத்தில், இந்து கிறிஸ்தவராக மாறுவார்; கிறிஸ்தவர் இந்துவாக மாறுவார். ‘இப்போ என்ன செய்வீங்க?’ என்கிற க்ளைமாக்ஸும் பேசப்பட்டது.
ஒளிப்பதிவாளர் கண்ணனின் கண்களுக்கு முத்தமிடத் தோன்றும். இப்போது கண்ணன் நம்மிடையே இல்லை. மணிவண்ணனின் கதை, வசனம் எழுதிய கைகளுக்கு மோதிரமே போடலாம். அவருமில்லை. கார்த்திக்கிற்கும் ராதாவிற்கும் போடலாம் ஒரு சபாஷ். தியாகராஜனின் புல்லட் கூட மிரட்டியெடுக்கும். சில்க்கிற்கு இதையடுத்து, ‘கோழி கூவுது’, ‘கொக்கரக்கோ’, ‘மூன்றாம் பிறை’ மாதிரியான நல்ல,நடிக்கும் படங்கள் கிடைத்தன. கமலாகாமேஷின் எளிய நடிப்பு பதறச் செய்தது. இதன் பின்னர், இப்படியான கேரக்டர்களில் 400 படங்களுக்கும் மேல் நடித்தார் அவர்.
முதன்முதலாக ‘நிழல்கள்’ படத்திற்கு கதை, வசனம் எழுதினார் மணிவண்ணன். படம் போகவில்லை. அடுத்த படத்துக்கும் மணிவண்ணனையே கதை, வசனம் எழுதச் செய்தார் பாரதிராஜா. அவர் மணிவண்ணனையும் நம்பினார். தன்னையும் நம்பினார். விளைவு... பிரமாண்ட வெற்றி. அந்த வேலைக்கார கேரக்டரைச் செய்தவர்... பின்னாளில் இயக்குநரான கே.ரங்கராஜ்.
‘வாடி என் கப்பக்கிழங்கே’ அன்றைய தேதிக்கு மட்டுமின்றி அடுத்த பத்துவருடத்துக்கு செம குத்துப்பாட்டாக அமைந்தது. ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல் மெல்லிசைக் காதல் உணர்வு. ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ துள்ளலிசைக் காதல் வெளிப்பாடு. ‘தரிசனம் கிடைக்காதா’ காதலை ஏற்காத துக்கம். ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ காதல் தவிப்பின் பெருந்துக்கம். அப்போது காதலித்தவர்களுக்கும் இப்போது கேட்பவர்களுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கச் செய்வதுமான இசையை வழங்கியிருந்தார் இளையராஜா. படம் நெடுக பின்னணி இசையில், புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் என காதலும் சேர்த்தும் இழைய இழையக் கொடுத்திருப்பார்.
படம் முழுக்க பாரதிராஜாவின் ராஜாங்கம். வேலைக்கார சம்பவத்தில் டாப் ஆங்கிள் ஷாட்டில், ஏழை பணக்கார பேதத்தைக் காட்டிவிடுவார். கக்கத்தில் வெங்காய டெக்னிக்கை அன்றைய விடலைகள், காதலுக்கும் பள்ளி வாத்தியாருக்கு பயந்துமாக செய்தவர்கள் ஏராளம். கார்த்திக், ராதாவைச் சுற்றிலும் ஆற்றில், தாமரையை சுற்றவிட்டிருப்பதும் அந்த பூக்களால் ஆடை அல்லது போர்வையும் என பாரதிராஜா டச் படம் நெடுக நிறைந்திருக்கும்.
இருநூறுநாளைத் தாண்டி ஓடிய படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. 1981ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி வெளியானது இந்தப் படம். வெளியாகி 39 வருடங்களாகியும் படம் குறித்த அலைகள் மனதில் இன்னும் ஓயவே இல்லை.
இந்தப் படம் பற்றிய நினைப்பு வரும்போதெல்லாம் பாரதிராஜா மீது, சற்றே ஒரு செல்லக்கோபம் வரும்.
அந்த ‘புத்தம் புதுக்காலை’ பாடலை கட் பண்ணாமல் படத்தில் வைத்திருக்கலாமே பாரதிராஜா சார்?
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago