இப்போது போல வாரந்தோறும் பல படங்கள் ரிலீஸாகும் காலம் அல்ல அது. பண்டிகை நாட்களைக் கடந்து பிற நாட்களில் ஓரிரு படங்கள் அவ்வப்போது ரிலீஸாகும். அப்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (12-07-1990) ரிலீஸான இரு படங்கள், போட்டி போட்டுக்கொண்டு மாபெரும் வெற்றி பெற்றன. அந்த இரு படங்கள் ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’.
அப்போதெல்லாம் படங்கள் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் அடங்கிய கேசட் வெளியாகிவிடும். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, பாடல்கள் நம் மனத்தில் ஆழமாக ஊடுருவிவிடும். படம் எப்போது வரும், எப்போது பார்ப்போம் என்ற கேள்விகளைப் பாடல்களே உருவாக்கிவிடும். ‘கிழக்கு வாசல்’, ‘அஞ்சலி’ என இரு படங்களின் இசையும் இசைஞானி இளையராஜாதான். ‘கிழக்கு வாசல்’ முழுக்க முழுக்க கிராமியப் பின்னணியோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையையும் அதில் சாதியப் பின்னணியையும் திரைக்கதையாகக் கொண்ட படம்.
‘அஞ்சலி’ இதற்கு நேர்மாறான படம். நகரச் சூழலில் ஒரு குடும்பத்தில் மூன்று வயதுக் குழந்தைக்கும் தாய்க்கும் ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் இடையே நடக்கும் ஒரு கதைக்களம். இந்த நேர் எதிர்மாறான இந்தப் படங்களில் தன் டிரேட் மார்க் இசையை இளையராஜா வழங்கியிருந்தார். ‘தாங்கிடத்தத்த, தரிகிடதத்த என்று தொடங்கும் வீட்டுக்கு வீட்டுக்கு...’, ‘தளுக்கி தளுக்கி வந்து...’, ‘பாடிப் பறந்த கிளி...’ ‘வந்ததே ஓ...’, ‘பச்ச மல பூவு...’ என ஒவ்வொரு பாடலிலும் கிராமிய மனத்துடன் கூடிய இசைக் கோவை ‘கிழக்கு வாச’லைக் காணும் ஆவலை அதிகமாகவே தூண்டியிருந்தது.
» நா.முத்துக்குமார் பிறந்த நாள் நினைவுகள்: காலத்தால் அறுக்க முடியாத கவிதை உறவு
» இயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்தத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் படைப்பாளி
இன்னொரு புறம் இளையராஜாவின் 500-ம் படமான ‘அஞ்சலி’யில், ‘மொட்டை மாடி மொட்டை மாடி...’, ‘வீட்டுக்கு வீடு சம்திங்...’, ‘ராத்திரி நேரத்தில்...’, ‘இரவு நிலவு...’, ‘அஞ்சலி அஞ்சலி...’, ‘வானம் நமக்கு...’, ‘வேகம் வேகம் போகும் போகும்...’ என 7 ஸ்வரங்களும் டிஸ்கோ, ராப், ஸ்டீரியோ பின்னணியில் வேகமாகப் பயணிக்கும் பாடல்கள், படம் வருவதற்கு முன்பே முணுமுணுக்க வைத்தன.
‘கிழக்கு வாச’லில் கார்த்திக், ரேவதி, குஷ்பு, விஜயகுமார், ஜனகராஜ், மனோரமா, சின்னிஜெயந்த், சண்முகசுந்தரம், தியாகு என ஒரே நட்சத்திரக் கூட்டம். ‘அஞ்சலி’யில் பிரபு (கவுரவத் தோற்றம்), ரகுவரன், ரேவதி, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், பேபி ஷாமிலி மற்றும் குழந்தைகள் என சின்ன காம்போதான். திருச்சியில் ஒரே வளாகத்தில் 5 தியேட்டர்களைக் கொண்ட மாரீஸ் போர்ட் திரையரங்கில் ‘கிழக்கு வாசல்’ வெளியானது. ‘அஞ்சலி’ ரம்பா-ஊர்வசி வளாகத்தில் வெளியானது. படம் வெளியான பிறகு இரு படங்களைக் காணவும் ஒரே கூட்டம். 12 வயதுச் சிறுவனாக இருந்த நான் இரு படங்களையும் காணும் ஆவலில் இருந்தேன்.
ஆனால், ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகப் படம் ஓடியதால், ஒவ்வொரு முறையும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய நினைவுகள் நன்றாக உள்ளன. ஒரு வழியாக ‘அஞ்சலி’யைப் பார்த்துவிட்டாலும், ‘கிழக்கு வாச’லை உடனே காண முடியாமல் ஏமாந்து போனேன். ‘கிழக்கு வாசல்’ படம் 100 நாட்களுக்கு மேல் கடந்து ‘பி சென்டர்’ எனச் சொல்லப்படும் திருச்சி பேலஸ் தியேட்டரில் ஓடியபோதுதான், என்னுடைய தந்தை குடும்பத்தோடு அந்தப் படத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார். ஒருவழியாக ‘கிழக்கு வாச’லைப் பார்த்த மன நிறைவு அப்போதுதான் ஏற்பட்டது.
சிறு வயதில் இசைக்காகவும் நகைச்சுவைக்காகவும் நாயகனுக்காகவும் பார்த்த இந்த இரு படங்களையும், பின்னாளில் பல முறை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இந்த இரு படங்களுமே 1990-களில் மிகப் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள். அப்போது வளர்ந்துகொண்டிருந்த இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இசைஞானி இளையராஜாவுடன் கூட்டணி அமைத்த இரண்டாம் படம் ‘கிழக்கு வாசல்’. அதற்கு வஞ்சனையே இல்லாமல் இளையராஜாவின் ராஜ கீதம், கிழக்கு வாசலின் வெற்றியை உறுதி செய்தது.
டி.எஃப்.டி. படித்து சினிமாவுக்கு வந்த இளைஞர்களுக்கு அப்போது நல்ல வரவேற்பு இருந்த காலத்தில் ஆர்.வி. உதயகுமாருக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்த படம் ‘கிழக்கு வாசல்’. ஏறுமுகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த நடிகர் கார்த்திக்குக்கு ‘பொன்னுரங்கம்’ கதாபாத்திரம் பெரும் திருப்புமுனையைத் தந்தது. ‘தாயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் தாசிகுலப் பெண்ணாகவும், தன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளும் பெண்ணாகவும் ரேவதி அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்துகாட்டியிருந்தார்.
இந்தப் படத்தில் பெண்ணியம் சார்ந்த கருத்துகள் பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக, பெண்கள் போகப் பொருளாகக் காட்டப்படும் பெண்ணடிமைத்தனம், தாசிகுலம், சாதி பேதம் ஆகியவற்றோடு காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, அதற்கும் மேல் இசை போன்ற அம்சங்கள் சேர்ந்து ‘கிழக்கு வாச’லைப் பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கியதில் வியப்பில்லை.
இதேபோல மணிரத்னத்தின் ‘அஞ்சலி’ படம் வழக்கம்போல ரசிகர்களை ஈர்த்தது. ‘நாயகன்’, ‘இதயத்தை திருடாதே’ படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய படம் ‘அஞ்சலி’. கணவன் மேல் சந்தேகப்படும் மனைவி. அந்தச் சந்தேகம், அடுத்த கட்டத்துக்குத் திரைக்கதையை இட்டுச் செல்லும். முற்றிலும் புதுமையான, திருப்புமுனையாக ‘அஞ்சலி’ எனும் 3 வயதுக் குழந்தையின் பக்கம் திருப்பி, அதன்பிறகு அந்தக் குழந்தையைச் சுற்றியே திரைக்கதை பயணிக்கும். கணவன் - மனைவியாக ரகுவரன் - ரேவதி. கவுரவத் தோற்றத்தில் பிரபு. தொடக்கத்தில் ‘மெளன ராகம்’ படத்தின் சீக்வல்கள் அதிகம் காணப்படும் ‘அஞ்சலி’ படத்தில் நடிகர் ரகுவரன் பாத்திரத்தில் மோகன் நடிக்க இருந்ததும் ஒரு உபரித் தகவல்.
இந்தப் படத்தின் இயக்கம், இசை ஆகியவற்றைத் தாண்டி அந்தக் காலகட்டத்தில் பேச வைத்தது 3 வயதுக் குழந்தையான ஷாமிலி எப்படி நடித்தார் என்பதுதான். அதுவும் மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக. அதுவே படத்தின் வெற்றிக்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது. பல விருதுகளை வென்ற ‘அஞ்சலி’, இந்தியாவிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கெனப் பரிந்துரைக்கப்பட்டது. ஒரே ஆண்டு, ஒரே நாளில் வெளியான இந்த இரு படங்களின் இன்னொரு ஒற்றுமையை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆமாம், இந்த இரு படங்களின் கதாநாயகியும் ரேவதிதான். 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் தடம் பதித்த இந்த இரு படங்களும், 90-களில் தமிழ் சினிமாவின் போக்குக்கும் காரணங்களாக அமைந்தன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago