தெலுங்கு சினிமாவின் மிகப் பிரபலமான இசையமைப்பாளரும் மரகதமணி என்று தமிழர்களால் அறியப்படுபவருமான எம்.எம்.கீரவாணி இன்று (ஜூலை 4) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1990-ல் தொடங்கி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிவரும் இவர் தமிழ். மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் பணியாற்றி தேசிய அளவில் மதிப்புக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய முழுப் பெயர் கொடூரி மரகதமணி கீரவாணி. தமிழ்த் திரைப்படங்களுக்கு மரகதமணி என்ற பெயரைப் பயன்படுத்தினார். எனவே தமிழர்களுக்கு இவர் மரகதமணி தான்.
'க்ஷண'த்தில் நிகழ்ந்த மாற்றம்
1987-ல் தெலுங்கு இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தியின் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1990-ல் 'கல்கி' என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு நம்மூரைச் சேர்ந்த மெளலி இயக்கத்தில் வெளியான 'மனசு மகாத்மா' என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1991-ல் வெளியான 'க்ஷண க்ஷணம்' என்ற படமே இவர் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக நிலைபெற உதவியது.
» கடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: சிம்ரன் நெகிழ்ச்சி
» 'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு: சசிகுமார் நெகிழ்ச்சி
சிகரத்தின் அறிமுகம்
அதே ஆண்டு தமிழில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தன் 'அழகன்' படத்துக்கு இவரை இசையமைப்பாளராக்கினார். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா', 'சாதி மல்லி பூச்சரமே' போன்ற காதல் மெலடி பாடல்கள், 'துடிக்கிறதே நெஞ்சம்' என்ற துடிப்பான இசையைக் கொண்ட பாடல் 'கோழி கூவும் நேரம் ஆச்சு' என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.
1992-ல் பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்துக்கும் மரகதமணி இசையமைத்தார். இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. தொடர்ந்து வசந்த் இயக்கத்தில் பாலச்சந்தர் தயாரித்த 'நீ பாதி நான் பாதி' படத்துக்கும் பாலச்சந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராகத் திகழ்ந்தவர் அர்ஜுன் நடித்து இயக்கிய 'சேவகன்', 'பாட்டொன்று கேட்டேன்', 'கொண்டாட்டம்' ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்தார்.
மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி - ஸ்ரீதேவி நடித்த 'தேவராகம்' படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன. இந்தியில் 'கிரிமினல்', ஷாருக் கான் நடித்த 'பஹேலி' (பாடல்கள் மட்டும்), பிபாஷா பாசு நடித்த 'ஜிஸ்ம்' உள்பட பத்துக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
பல்துறைச் சாதனையாளர்
தெலுங்கு சினிமாவில் இன்றுவரை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளராகவும் மதிப்புமிக்க மூத்த கலைஞருக்கான மதிப்பைப் பெற்றவர் மரகதமணி. 1997-ல் வெளியான 'அன்னமய்யா' படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். பல ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணிப் பாடகராகவும் பாடலாசிரியராகவும் முத்திரை பதித்துள்ளார். இசைக்காக மட்டுமில்லாமல் இந்த இரு துறைகளிலும் ஃபிலிம்ஃபேர். நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் முதல் படமான 'அழகன்' படத்துக்கே தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார்.
'பாகுபலி' பெற்றுத் தந்த பெரும்புகழ்
தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிக பிரபலமடைந்தவர் மரகதமணி. இவற்றில் 'விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக சாதனை படைத்த 'பாகுபலி' படங்கள் மூலம் தேசிய சர்வதேச கவனத்தை ஈர்த்தார். 'பாகுபலி' இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஒன்றுவிட்ட சகோதரரான மரகதமணி அவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்மொழி தெலுங்கில் தலை சிறந்த இசையமைப்பாளராகவும் தமிழ் உட்பட மற்ற பல மொழிகளில் கவனம் ஈர்த்த இசையமைப்பாளராகவும் திகழும் மரகதமணி இசைத் துறையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago