சமூக ஊடக ட்ரெண்டில் வந்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நாள் வரக்கூடாது: சாய் பல்லவி சாடல்

By செய்திப்பிரிவு

சமூக ஊடக ட்ரெண்டில் வந்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நாள் வரக்கூடாது என்று தனது ட்விட்டர் பதிவில் சாய் பல்லவி சாடியுள்ளார்.

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கோர சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 30-ம் தேதி முதல், 7 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

போலீஸார் சிறுமியைத் தேடி வந்த நிலையில் தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.

சிறுமியின் மரணம் தொடர்பாக, நீதி கேட்கும் கோரிக்கை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சாய் பல்லவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"மனித இனத்தின் மீது இருந்த நம்பிக்கை வேகமாக மோசமடைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவ நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். பலவீனமானவர்கள் என்று நாம் நினைப்பவர்களைக் காயப்படுத்துகிறோம். நமது அரக்கத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக் குழந்தைகளைக் கொல்கிறோம்.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைப் பார்த்து, அதைச் சரி செய்ய எதுவும் செய்ய முடியாத ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை வாழும் நமது இனம், சுத்தமாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று கடந்துபோகும் ஒவ்வொரு நாளும் இயற்கை நம்மிடம் சொல்வதைப் போல இருக்கிறது.

இந்த மனிதத்தன்மையற்ற உலகம் இன்னொரு குழந்தைக்கு உயிர் கொடுக்கத் தகுதியற்றது. ஒரு குற்றம் ஊடக வெளிச்சத்தில், சமூக ஊடக ட்ரெண்டில் வந்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என்ற நாள் வரக்கூடாது என்று நான் வேண்டுகிறேன்.

கொடூரமான குற்றங்கள் பல நடக்கின்றன. அதில் ஒன்றை நாம் அங்கீகரிக்க ஹேஷ்டேக் தேவைப்படும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பதால் புகார் அளிக்கப்படாமல், கவனிக்கப்படாமல் போகும் குற்றங்கள் என்ன ஆகும்?"

இவ்வாறு சாய் பல்லவி கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE