’மல... அண்ணாமல’ ; 28 வருடங்கள் கழித்தும் மலையுச்சியில் நிற்கிறான் ‘அண்ணாமலை’!  

By வி. ராம்ஜி

ஒரு ஹீரோயிஸப் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ படங்கள் உதாரணமாய் இருக்கின்றன. அப்படி ஹீரோயிஸத்துடன் வந்த படங்கள்தான், மாஸ் படங்கள் என்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கலெக்‌ஷனிலும் மக்களின் மனங்களுடனான கனெக்‌ஷனிலும் இன்றைக்கும் கொடிகட்டிப்பறக்கும் படங்களாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவின் அப்படியான அதிரிபுதிரி மாஸ் ஹீரொ படமாக இன்றைக்கும் ‘அண்ணாமலை’ படத்தை அண்ணாந்து பார்த்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

’அபூர்வ ராகங்கள்’ படத்தை அடுத்து வந்த ரஜினியின் படங்கள் ஒவ்வொன்றுமே, ரஜினியின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தின. ‘மூன்று முடிச்சு’ படத்தின் கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது. ‘அவர்கள்’ படத்தின் ராமநாதன் கேரக்டர், சாடிஸத்தை தோலுரித்துக் காட்டியது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’யில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘சதுரங்கம்’ படத்திலும் ‘ஆறு புஷ்பங்கள்’ படத்திலும் ‘கவிக்குயில்’ படத்திலும் மெல்லிய மனம் கொண்ட, பயந்த சுபாவம் கொண்ட ரஜினியை இன்றைய ரசிகர்கள் பார்த்தால், வியந்துதான் போவார்கள்.

’பைரவி’யும் ‘பில்லா’வும் அவரை கமர்ஷியல் சந்தைகளின் நாயகனாக வடிவமைத்தது. நடுவே, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார் என்றாலும் ரஜினிக்கும் திரைத் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ரஜினி எனும் குதிரையை, பந்தயக்குதிரையாகப் பார்ப்பதில் விருப்பமும் லாபமும் கொண்டிருந்தார்கள். ‘தில்லுமுல்லு’ மாதிரி ‘தப்புத்தாளங்கள்’ மாதிரி படங்கள் பண்ணினாலும் ‘குப்பத்து ராஜா’, ‘மாங்குடி மைனர்’ மாதிரியான படங்கள்தான் சினிமாவின் தேவையாக இருந்தன.

‘பைரவி’ போல, ‘பில்லா’ போல, ‘முரட்டுகாளை’யும் கங்கா சந்திரமுகியாக கொஞ்சம்கொஞ்சமாக மாறியது போல், ரஜினியை கமர்ஷியல் கோட்டைக்குள் அழைத்துச் சென்றது. தொடர்ந்து அப்படியான படங்கள் வந்தன. வசூல் குவித்தன. நூறு படங்களைக் கடந்து பறந்துகொண்டிருந்தார் ரஜினி. தன் ஆசைக்காக ‘ராகவேந்திரர்’ பண்ணிவிட்டு, கமர்ஷியல் குதிரையில் ஏறி சவாரி செய்தார்.
இந்த மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டின் உச்சக்கட்டமாக வந்ததுதான் ‘அண்ணாமலை’.

கே.பாலசந்தரின் ‘கவிதாலயா’வுக்காக ரஜினி பண்ணியதுதான் ‘அண்ணாமலை’. திருவண்ணாமலை, கிரிவலம், ரமண மகரிஷி என்பதெல்லாம் ரஜினியை ஈர்த்திருந்ததால், ‘அண்ணாமலை’ என டைட்டில் வைக்கப்பட்டது. பாலசந்தரின் சிஷ்யரான இயக்குநர் வஸந்த், ரஜினியை வைத்து இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து தனி முத்திரை பதித்த வஸந்த், மாஸ் ஹீரோ முத்திரைக்குள் வந்தாரா... அல்லது ரஜினியை வேறொரு ரஜினியாகக் காட்ட முனைந்தாரா... தெரியவில்லை. அதன் பிறகு இன்னொரு சிஷ்யரான சுரேஷ்கிருஷ்ணா இயக்குநர் என அறிவிக்கப்பட்டார்.

சுரேஷ் கிருஷ்ணாவை, தன் ‘சத்யா’ படத்தின் மூலம் இயக்குநராக்கினார் கமல். பின்னர், ‘இந்துருடு சந்துருடு’ என்ற தெலுங்குப் படத்தையும் சுரேஷ் கிருஷ்ணாவை இயக்கவைத்தார். இந்த ‘அண்ணாமலை’ படம், இப்படியொரு காலம் கடந்த படமாக நிற்கும் என ரஜினியே கூட நினைத்திருக்கமாட்டார்.
கதையென்னவோ எம்ஜிஆர் காலத்து கதைதான். அதை படமாக்கிய விதத்தில் மாஸ் காட்டினார் சுரேஷ் கிருஷ்ணா. தன் நடிப்பால் தூக்கிக்கொண்டு போய் நிறுத்தியதுதான் ரஜினி மேஜிக்.

பால்கார அண்ணாமலைக்கும் பணக்கார அசோக்கிற்குமான நட்பில் ஆரம்பித்து பின்னர் துரோகத்தில் வெடித்து, தொழிலிலும் ஸ்டேட்டஸிலும் உயர்வுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுகிற டெம்ப்ளேட் ஹீரோயிஸக் கதைதான் ‘அண்ணாமலை’. ஆனால் இப்படி டெம்ப்ளேட் சதுரவட்டங்களுக்குள் நிறுத்திவிடாமல் மலையளவு உயர்ந்து நின்றதுதான் ரஜினியின் மேஜிக்.

படத்தின் முதல் பலமாக சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் இடம் பிடித்தது. ஒருபக்கம் ரஜினியின் குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்புப் பாசம், குஷ்புவைப் பார்ப்பதிலும் பாம்பு பார்ப்பதிலுமாக உள்ள காமெடி கலாட்டா, ராதாரவியின் சைலண்டான வில்லத்தனம், ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்துக்குள் என்னென்ன அடங்கவேண்டுமோ அவை அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதை காட்சியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்ததுதான் சுரேஷ்கிருஷ்ணாவின் சாமர்த்தியம்; திறமை.

பால்காரர், தோளில் துண்டு, சைக்கிள் எனும் விஷயங்கள் சி செண்டர் ஆடியன்ஸை படத்துடன் கனெக்ட் செய்வதற்கு பெரிதும் உதவின. ஆனால் பால்காரராக, தோளில் துண்டுடன் சைக்கிளில் சுற்றுவது ரஜினியாக இருந்ததால்தான் இவையெல்லாம் எடுபட்டது.

ரஜினிக்கு, அரசியல் குறித்த கோபங்களும் விமர்சனங்களும் அப்போதே இருந்திருக்கின்றன. அல்லது அப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றன. இன்றைக்கு படத்தைப் பார்க்கும் போது, அவர் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது புரியும். ரஜினி தொடைதட்டிப் பேசிய சபதம், இன்றைக்கும் மேடைகளில் பேசப்படுகிறது.கைதட்டல் வாங்கப் பயன்படுத்தப்படுகிறது.

கதை சரியாக இருக்கலாம். வசனம் அழுத்தமாக இருக்கலாம். நடிப்பு பிரமாதமாக இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட காட்சிப்படுத்துதல் எனும் விஷயம் என்பதுதான் திரையின் பலம். சினிமாவின் மாயாஜாலம். அந்த மாயாஜாலங்கள் அனைத்தும் ‘அண்ணாமலை’யில் கனகச்சிதமாகக் கையாளப்பட்டிருக்கும்.

அதேபோல், ரஜினியின் காஸ்ட்யூம் கொள்ளை அழகு. ‘பில்லா’வில் இருந்தே கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நிறைய படங்களில் வலம் வந்தார் என்றாலும் ‘அண்ணாமலை’யின் கோட், தனி கெத்தாக அமைந்திருந்தது. கூலிங்கிளாஸ் இன்னும் மெருகு கூட்டியது.

பில்டப் என்பது சாதாரண விஷயமல்ல. அதுதான் காட்சியை வீரியப்படுத்திக்காட்டும். ஹீரோயிஸத்துக்கு பெரிதும் உதவும். அதுவரை தலைவர் பதவியில் இருந்த சரத்பாபு இனி இல்லை என்பதும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிப்பு வரும். அதையடுத்து மிக ஸ்டைலாக ரஜினியின் நடந்து வரும் கால்களை, ரஜினியின் மார்பில் இருந்து படம் பிடித்திருப்பார்கள். அடுத்து பக்கவாட்டுப் பகுதியில் இருந்து ரஜினியின் நடை காட்டப்படும். பின்பகுதியில் இருந்து கேமிரா ரஜினி நடையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து வரும். பின்னர் ரஜினியின் முகம் காட்டப்படும். ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போடுவார். வாயில் இருந்து சிகரெட் புகை பரவி வந்துகொண்டே இருக்கும்.இந்தக் காட்சி இத்துடன் முடிந்ததா என்றால் இல்லை.

ராதாரவியும் சரத்பாபுவும் அங்கிருந்து கவிழ்ந்த முகத்துடன் வெளியேறுவார்கள். எஸ்கலேட்டரில் இறங்குவார்கள். ரஜினி பக்கத்து எஸ்கலேட்டரில் ஏறுவார். பின்னணியில், முன்பு செய்த சபத வசனம் ஓடிக்கொண்டிருக்கும். ரஜினி ஏறிவிடுவார். சரத்பாபு இறங்கியிருப்பார். இத்துடன் இந்தக் காட்சி முடிந்ததா என்றால் அதுவும் இல்லை.


அப்போது ரஜினி கை நீட்டுவார். க்ளோஸப். விரல் சொடுக்குவார். க்ளோஸப். பின்னணியில் ராதாரவி, சரத்பாபு. திரும்பி, அண்ணாந்து ரஜினியைப் பார்ப்பார்கள். ரஜினி எங்கோ பார்த்துக்கொண்டு, ஸ்டைலாகத் திரும்புவார். ‘மலடா... அண்ணாமலை’ என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்குச் சென்றுவிடுவார். ஆனால் கைத்தட்டலும் விசிலும் ஓய்வதற்குதான் சில நிமிடங்களாயின.

‘வந்தேண்டா பால்காரன்’ பாட்டு பாடாதவர்களே இல்லை. தேவாதான் இசை. ரஜினியும் தேவாவும் இணைந்து பிரமிக்க வைத்த படம். வைரமுத்து எல்லாப் பாடல்களிலும் வானம் தொட்டிருந்தார். உச்சம் தொட்டிருந்தார். ‘ரஜினி எண்ட்ரி ஆகும்போது, ஒரு பாட்டு’ என்பது ‘அண்ணாமலை’க்குப் பிறகும் ‘வந்தேண்டா பால்காரனுக்குப்’ பிறகும் எழுதப்படாத சட்டமாயிற்று.

‘அண்ணாமலை அண்ணாமலை’ பாட்டும் ஹிட்டு. ‘வெற்றி நிச்சயம் வேத சத்தியம்’ பாட்டு, ஜெயிக்கத் துடிப்பவர்களுக்கும் துரோகத்தில் தவித்தவர்களுக்குமான எனர்ஜி பூஸ்டர் வரிகள். இதை படமாக்கிய விதமும் மிரட்டல்.

‘கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்’ என்கிற ராதாரவியின் அசால்ட் வசனம், மிகப்பிரபலம். வில்லனுக்கு மேனரிஸம், வில்லனுக்கு பஞ்ச் டயலாக் என வந்ததும் ‘அண்ணாமலை’யைப் போலவே பின்னர் விஸ்வரூபமெடுத்தது.

குஷ்பு, அந்தத் தேதியில் வாண்டட் நாயகி. கால்ஷீட் கிடைக்க வரிசை நிற்கும். கிடைத்தால், அந்தப் படம் ஹிட்டு. அவரைப் பார்க்கவே தியேட்டர்கள் திருவிழாவாகும். குஷ்புவின் முக்கியமான படங்களில் இதுவும் உண்டு. ‘கொண்டையில் தாழம்பூ’ பாடலும் பாட்டுக்குள் ரஜினி என்று வருவதும் மேட்டரே இல்லை. ஆனால் குஷ்புவின் பெயர் பாடல் வரிகளாக வந்ததுதான் குஷ்புவின் ராணிபரிபாலனத்துக்குச் சான்று.

ஒரு மாஸ் படத்தில் என்ன இருக்கவேண்டுமோ அவையெல்லாம் ‘அண்ணாமலை’யில் உண்டு. ஒரு ஹீரோயிஸ படத்துக்கு என்ன தேவையோ அவையெல்லாம் இதில் இருந்தன. உயரத்தில் இருக்கும் ரஜினியை, மலையளவுக்கு ‘அண்ணாமலை’ உயர்த்தியது என்பதும் உண்மை.

ரஜினி - தேவா - வைரமுத்து கூட்டணி ஒன்று உருவானதும் இங்கேதான். சுரேஷ்கிருஷ்ணாவை கமர்ஷியல் இயக்குநர் விசிட்டிங்கார்டு கொடுத்து, அடுத்த உயரத்துக்கு அவரை அழைத்துச் சென்றதும் ‘அண்ணாமலை’தான்!

1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி வெளியானது ‘அண்ணாமலை’. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாள், இருநூறு நாளைக் கடந்து ஹவுஸ்புல் கலெக்‌ஷனைக் கொடுத்தது.

இன்னும் பல வருடங்கள் கழித்து, ‘அண்ணாமலை’ படத்தை எந்த ஹீரோவாவது ரீமேக் செய்ய ஆசைப்படலாம். 28 வருடங்கள் கழித்தும் இப்போதும் மனதில் மலையென அமர்ந்திருக்கிற ‘அண்ணாமலை’யின் வெற்றி, அப்படி ரீமேக் செய்யத் தூண்டலாம். ஆனால், ‘மல... அண்ணாமலை’ என்று அது ஹிட்டடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்குறிதான் ரஜினி எனும் மேஜிக் எனும் ஆச்சரியக்குறி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்