10 ஆண்டுகளை நிறைவு செய்த 'களவாணி': கலகலப்பான கிராமத்துக் காதல் 

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

அறிமுக இயக்குநர், புதிய நடிகர்-நடிகைகள், பிரபலமாகியிராத தொழில்நுட்பக் கலைஞர் என எந்த வகையான நட்சத்திர மதிப்பும் இல்லாமல் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து ஆல் சென்டர் ஹிட் ஆவதோடு ரசிகர்களுக்கு மிகப் பிடித்த படங்களாகவும் எப்போதும் நினைவுகூரப்படும் கல்ட் அந்தஸ்தையும் பெற்றுவிடுவதுண்டு. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றான 'களவாணி' வெளியான நாள் இன்று (ஜூன் 25). இன்றோடு அந்தப் படம் வெளியாகி பத்தாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இருந்தாலும் அந்தப் படத்தின் பாடல்களும் காட்சிகளும் இப்போது பார்த்தாலும் புதுப் பொலிவு மாறாமல் இருக்கின்றன.

மதுரையிலிருந்து தஞ்சைக்கு

2008-ல் வெளியான 'சுப்பிரமணியபுரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டக் கதைகளை எடுப்பது தமிழ் சினிமாவில் ஒரு புதிய ட்ரெண்டாக உருவான நிலையில் காவிரி நதி பாயும் தஞ்சை மண்ணுக்கு கேமராவை எடுத்துச் சென்ற வகையில் கதைக்களத்தின் மூலமாகவே புதிய ட்ரெண்டை உருவாக்கினார் இயக்குநர் சற்குணம். இதுவே அவருடைய அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களை இணைக்கும் காதல்

தஞ்சை மாவட்டத்தின் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு கிராமங்களை எப்படி ஒரு காதல் ஒன்றிணைக்கிறது என்பதே 'களவாணி' படத்தின் கதை. ஆனால் இது காதல் கதை மட்டுமல்ல. துபாயிலிருந்தபடி குடும்பத்துக்கு பணம் அனுப்பும் நடுத்தர வயது குடும்பத் தலைவர்கள், வெட்டியாக ஊர்சுற்றி பெண்களிடமும் அப்பாவி ஆண்களிடமும் வம்பு வளர்க்கும் இளந்தாரிகள், பம்பு செட் குளியல், மோட்டார் ரூமுக்குள் ஒளிந்து கொண்டபடி வளர்க்கப்படும் காதல், ரெக்கார்ட் டான்ஸ், கிராமங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடத்தும் சாக்கில் வியாபாரிகளிடம் பணம் வசூலித்து டாஸ்மாக்கில் கப்பம் கட்டும் இளசுகள் என இந்தக் காலத்தின் தஞ்சை கிராமத்து கலாச்சாரப் பதிவாகவும் அமைந்தது 'களவாணி'.

பள்ளிக்கு சைக்கிளில் வரும் ஓவியாவை மைனரைப் போல் சுற்றித் திரியும் விமல் காதலில் கவிழ்க்க முயல்வது முதலில் சில 'மொக்கை' வாங்கி பின் வெற்றிபெறுவதும் அந்தக் காதலுக்கு வரும் எதிர்ப்பும் அந்த எதிர்ப்பை எல்லாம் கடந்து காதல் வெற்றி பெறுவதும் அதன் மூலம் இரண்டு குடும்பங்களும் கிராமங்களும் ஒன்று சேர்வதுமாக முழுக்க முழுக்க கலகலப்பான படமாக அமைந்திருந்தது 'களவாணி'.

தேசிய கீதமான 'பொம்ம பொம்மா'

'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா எம் மகன் டாப்பா வருவான்' என்று ஊதாரியாகத் திரியும் மகனை விட்டுக்கொடுக்காமல் பேசும் அம்மாவாக சரண்யா, கண்டிப்பு கலந்த நேசத்தைக் காட்டும் தந்தையாக இளவரசு, நாயகன் மற்றும் நண்பர்களிடம் வாண்டடாக சென்று சிக்கி வம்பில் மாட்டிக்கொள்ளும் கஞ்சா கருப்பு, அண்ணனால் மிரட்டப்பட்டாலும் அவனுடன் சண்டை போட்டாலும் அவன் மீது அன்பு இருக்கும் நாயகனின் தங்கை என படத்தின் துணைக் கதாபாத்திரங்கள் பலவும் மனதில் நீங்கா இடம்பிடித்தன. எஸ்.எஸ்.குமரன் இசையில் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் ஹரீஷ் ராகவேந்திரா-ஸ்ரீமதுமிதா குரலில் 'ஒருமுறை இரு முறை' பாடலும் 'பொம்ம பொம்மா' என்ற ஹம்மிங்கும் இளசுகளின் தேசிய கீதமானது.

அழகான காதல், இயல்பான நகைச்சுவை, அருமையான பாடல், புல்வெளிகளைப் பதிவு செய்த நிலக்காட்சிகள் என அனைத்து வயதினரும் ரசிப்பதற்கான தரமான ஜனரஞ்சகப் படமாக அமைந்திருந்தது 'களவாணி'. அதனாலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

பெருமைக்குரிய அறிமுகங்கள்

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் சற்குணம், தமிழ் சினிமாவில் மதிப்புக்குரிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவர் இயக்கிய இரண்டாம் படமான 'வாகை சூடவா' சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. தனுஷை வைத்து 'நையாண்டி' படத்தை இயக்கினார்.

‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய ஓவியா அதன் பிறகு பல படங்களில் நாயகியாகவும் இரண்டாம் நாயகியாகவும் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று தமிழக இளைஞர்களின் பெரும் மதிப்பையும் அன்பையும் பெற்றுவிட்டார். சமூக ஊடகங்களில் இப்போதும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது இவருடைய ரசிகர் படையான 'ஓவியா ஆர்மி'.

இந்தப் படத்தின் நாயகனான விமல் இதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படமே அவரை கவனிக்கத்தக்க கதாநாயகனாக்கியது. இதன் பிறகு அவர் சின்ன பட்ஜெட் படங்கள் பலவற்றில் நடித்தார். அவற்றில் பல வெற்றிப் படங்களும் அமைந்தன. 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமடைந்த நடிகர் சூரிக்கு இந்தப் படம் கூடுதல் கவனம் பெற்றுத் தந்தது.

இப்படிப் பல காரணங்களுக்காக நினைவுகூரத்தக்க 'களவாணி' இறுதிவரை கவலைகளை மறந்து ஜாலியாக ரசிக்கத்தக்க கிராமத்து காதல்-நகைச்சுவைப் படமாக தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்