’’இதுதான் பாக்யராஜ் ஸ்டைல்னு சொல்றாங்க!’’  - பேட்டி எடுத்த சாந்தனுவிடம் பாக்யராஜ் ஜாலி ப்ளாஷ்பேக்

By வி. ராம்ஜி

’டேட் சன் பிரஸண்ட்ஸ்’ சார்பில், நடிகர் சாந்தனு, அவரின் தந்தையும் இயக்குநருமான கே.பாக்யராஜை, தந்தையர் தினத்தை முன்னிட்டு பேட்டி எடுத்தார்.

‘’எல்லோரும் என்னிடம் கேட்பார்கள்... எவ்ளோ பெரிய டைரக்டர், உங்க அப்பா. அவர்கிட்ட என்ன பேசிக்குவீங்க?’ என்றுதான் கேட்பார்கள். உண்மையைச் சொல்லணும்னா... நானும் அப்பாவும் ரொம்பப் பேசிக்க மாட்டோம். எப்பவாவது சேர்ந்து சாப்பிட உக்கார்ந்தா, அப்போ, சினிமா பத்தி பேசிக்குவோம், அவ்ளோதான்.

இன்னிக்கி தந்தையர் தினம். அதனால, அப்பாகிட்ட ஒரு பேட்டி. இது உங்களுக்காக நான் எடுக்கும் பேட்டி. உங்களால்தான் இந்தப் பேட்டி’’ என்று முன்னுரையுடன் தொடங்குகிறது இந்த வீடியோ.

உள்ளே அறையில், பியானோ வாசித்துக் கொண்டிருக்கிறார் நடிகர், கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கே.பாக்யராஜ். அவருக்கு தந்தையர் தின வாழ்த்துகளைச் சொன்னார் சாந்தனு.

‘என்னப்பா பண்ணிட்டிருக்கீங்க? ஏ.ஆர்.ரஹ்மான் ரெண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியிருக்கார். இருக்கறது ஏழு ஸ்வரம். இளையராஜா எட்டாவது ஸ்வரம்னு கொண்டாடப்படுறார். இப்போ, பியானா கத்துக்கிட்டு, யாரை ஜெயிக்க நினைக்கிறீங்க?’ என்று சாந்தனு கேட்க... ‘’தெரிஞ்சோ தெரியாமலோ எனக்குள்ளேருந்து டியூன்ஸ் வருது. அதை யார்கிட்டயாவது கொடுத்து, வாசிக்கச் சொல்லிக் கேக்கறதைவிட, நாமளே கத்துக்கிட்டு, வாசிப்போமேனு, இந்த கரோனா டைம்ல முயற்சி பண்ணிட்டிருக்கேன்.

ஒரு விஷயத்தைக் கத்துக்கும் போது, கண்டிப்பா அதுல ஃபெயிலியர்னு ஒண்ணு வரும். ஆனா, கத்துக்காமலே முயற்சி பண்ணாம விட்டா... அது நிச்சயமான தோல்வியாயிரும். அதனால, கத்துக்கிட்டிருக்கேன். நீயும் கத்துக்கிட்டேன்னா, நாளைக்கி பியானோ வாசிக்கிற காட்சி நீ நடிக்கிற படத்துல உனக்கு வந்துச்சுன்னா, யூஸ்ஃபுல்லா இருக்கும். அதனால சாயந்திரத்துல, எங்கிட்ட பியானோ கத்துக்கோ’’ என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

உடனே சாந்தனு, ‘’நான் கத்துக்கறது இருக்கட்டும். எல்லாருமே உங்களைக் கலாய்க்கிற ஒரேயொரு விஷயம்... டான்ஸ். இதெல்லாம் கத்துக்கறீங்க. ஆனா டான்ஸ் கத்துக்கணும்னு ஒருவாட்டியாவது தோணியிருக்கா? வாங்க... ஈவினிங் வாங்க, நான் வேணா உங்களுக்கு டிரெயினிங் தரேன்’’ என்றார்.

‘’இத்தனை வயசுக்குப் பிறகு டான்ஸ் கத்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்’’ என்று பாக்யராஜ் கேட்க, ‘நீங்கதானே சொன்னீங்க. கத்துக்கறதுக்கு வயசே இல்லைன்னு...’ என்று சாந்தனு மடக்க, ‘நீ என்னை கலாய்க்கணும்னு முடிவு பண்ணிட்டு வந்து பேசுறே. இன்னிக்கு ஃபாதர்ஸ் டே. எங்கிட்ட பேசணும்னு வந்திருக்கே. வேணும்னா, பியானோலேருந்து எந்திருச்சு வரேன், பேசுவோம்பா’ என்று பாக்யராஜ் சொன்னார். ‘வாங்கப்பா’ என்றார் சாந்தனு.

அதையடுத்து, இருவரும் நேருக்கு நேராக அமர்ந்துகொண்டார்கள்.

’கேள்விகளை நீ கேட்கிறாயா? நான் கேட்கட்டுமா?’என்று பாக்யராஜ் கேட்க, ‘ஃபாதர்ஸ் டே ஸ்பெஷல். நான் கேக்கறேன். நீங்க இதைப் பாக்கற ரசிகர்களுக்கு பதில் சொல்லுங்க’’ என்று சொல்ல... பேட்டி தொடங்குகிறது.

’’உங்க பையனா, சினிமா ரசிகனா கேக்கறேன்... எங்கேயோ ஒரு சின்னகிராமம், பாப்பநாயக்கன் பாளையத்திலேருந்து வந்து, தனக்கென்று ஒரு டிராக்கை சினிமாவில் கிரியேட் பண்ணிக்கிட்டு, யுனிக்கா ஒரு ஃபிலிம் மேக்கர்னு பேரெடுத்து, கோலிவுட்ல ரஜினி சார்லேருந்து, கமல் சார்லேருந்து எல்லார் கூடவும் ஒர்க் பண்ணி, இங்கே மட்டுமில்லாம, பாலிவுட் போய் அமிதாப், அனில்கபூர்னு ஒர்க் பண்ணி, எம்ஜிஆர், சிவாஜி சார்னு கூட நெருக்கமாப் பழகி, பாக்யராஜ்னு ஒரு பிராண்ட் உருவாக்கியிருக்கீங்க. பாக்யராஜ் ஃபிலிம் மேக்கிங்னு உருவாக்கியிருக்கீங்க.

கே.பாலசந்தர் படம், பாரதிராஜா படம், மணிரத்னம் படம்னு சொல்ற மாதிரி, பாக்யராஜ் படம்.என்ன அது? எப்படி அது?’’ என்று சாந்தனு கேள்வி எழுப்பினார்.

‘’அப்பலாம், அதாவது நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி, வரணும்னு நினைச்சிட்டிருந்த சமயத்திலெல்லாம் எம்ஜிஆர் படம், சிவாஜி படம்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்புறமா, இது ஸ்ரீதர் சார் படம், பந்துலு சார் படம், பீம்சிங் சார் படம், எஸ்.பாலசந்தர் படம், கே.பாலசந்தர் படம்னு அப்பவே அப்படி சொன்னாங்க. அப்புறம் அவரோட சந்ததி மாதிரி நாங்களெல்லாம் வந்தோம்.

பாக்யராஜ் படம்னு பெருசா நான் ஒண்ணும் நினைக்கலை. நம்ம லைஃப்ல நாம என்ன பாக்கறோமோ அதுதான்னு பண்ணினேன். வாழ்க்கைதான் சினிமா, சினிமாதான் வாழ்க்கைன்னு நினைக்கிறவன் நான். வாழ்க்கைல என்ன நடக்குதோ, எதை சந்திக்கிறோமோ அதைத்தான் எடுத்தேன். ஒரு பத்து இருபது சதவிகிதம் கற்பனை சேர்த்துக்குவேன். ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் பண்ண ஆரம்பிச்சேன்.

ஷாட் எப்படி வைக்கணும், எப்படி எடுத்தா ஜனங்களுக்கு ஈஸியாப் புரியும்னு அந்த டெக்னிக்கையெல்லாம் எங்க டைரக்டர்கிட்டேருந்து (இயக்குநர் பாரதிராஜா) எனக்கு வந்தது. ஆனா, சினிமா அப்படின்னா என்னங்கறதெல்லாம், நான் முன்னால சொன்னேனே... அந்த டைரக்டரோட படங்களையெல்லாம் பார்த்துப் பார்த்து மைண்ட்ல ஏறிருச்சு எனக்கு.

அதனால, என்னை அறியாமலே, சினிமாவுல இப்படிச் சொன்னா நல்லாருக்கும்னு எனக்குத் தோணுச்சு. இயல்பா என்ன நடக்குதோ, வாழ்க்கைல என்ன நடக்குதோ, என்ன சந்திக்கிறோமோ அப்படிப் பண்ணனும்னு நினைச்சேன். படம் பாக்கும் போதே, அடையாளப்படுத்தி சொல்லுவாங்க தெரியுமா... ‘எங்க வீட்டுப் பக்கத்து வீட்ல இப்படித்தான், இப்படி ஒரு ஆளை நான் பாத்திருக்கேன்’ன்னெல்லாம் சொல்லுவாங்க.அதனால, நேர்ல பாக்கற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கணும்னு ஒரு ஐடியா எனக்கு அப்பலேருந்தே இருந்துச்சு. என்னோட கேரக்டரும் அப்படித்தான் இருந்துச்சு. ஒரு அசகாயசூரனா, அப்படிப் பண்ற மாதிரி இப்படிப் பண்ற மாதிரிலாம் இருக்காது. சாதாரணமான ஒரு ஆளு... கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருக்கும், கொஞ்சம் அசட்டுத்தனமும் இருக்கும். அப்புறம் புத்திசாலித்தனத்தோட எப்படித் தப்பிக்கிறார்னு ரொம்ப நேச்சுரலாத்தான் இருக்கும்.

’இப்படிலாம் நடக்குமாப்பா’ன்னு சொல்லிடக்கூடாது. லாஜிக்கோட இருக்கணும். இப்படி இருக்க சான்ஸ் இருக்குன்னு சொல்லணும். அப்படித்தான் என் மேக்கிங் இருந்துச்சு. இவர் பண்ணினா நல்லாருக்கும்னு சொல்லுற மாதிரி அது அமைஞ்சிச்சு. இதெல்லாம், இங்கே மட்டுமில்லாம, தெலுங்கு ரீமேக், கன்னட ரீமேக், இந்தி ரீமேக்னு எல்லா இடங்கள்லயும் இதே சக்ஸஸ் வந்துச்சு. அப்படீன்னா, நாம எடுத்த விஷயம், சொல்ற விதம் கரெக்ட். அதை ஃபாலோ பண்ணிருவோம்னு அந்த விஷயத்தைக் கெட்டியாப் புடிச்சிட்டேன். இதை பாக்யராஜ் ஸ்டைல்னு நினைச்சாலும் சரி. பாக்யராஜோட யுக்தின்னு நினைச்சாலும் சரி. என் அஸிஸ்டெண்டுகளுக்கும் இதுஇதுன்னு சொல்லிட்டேன். அவங்களும் நிறைய பேர் அதை ஃபாலோ பண்ணினாங்க. சிலர், அதுல இன்னும் கூடுதலா சேத்துக்கிட்டு பண்ணினாங்க.

ரியல் லைஃப்ல இருக்கிற பிராப்ளம், ரியல் லைஃப்ல இருக்கிற கேரக்டர்ஸ்... இதெல்லாம்தான் நம்மைப் பாதிச்சிருக்கும். அப்படிப் பாதிப்புலேருந்துதான் ‘கரு’வை எடுத்தேன். அதுக்குள்ளே கண்ணுக்கு முன்னாடி சந்திச்ச மனிதர்கள், அவங்களோட பிரச்சினைகள் எல்லாத்தையும் கொண்டுதான் கேரக்டர்கள் அமைச்சேன். அதனாலதான் என் படத்துல வில்லனுக்கு பெருசா வேலை இருக்காது. பிரச்சினை வில்லனா வந்து சேந்துரும்.

பி.எஸ். வீரப்பா சிரிச்சுக்கிட்டே வில்லத்தனம் பண்ணுவாரு. நம்பியார் கையைப் பிசைஞ்சுக்கிட்டே வில்லத்தனம் பண்ணுவாரு. நமக்கு ஒரு பயம் வருமில்லையா? அந்த பயத்தை கதைல வர்ற பிரச்சினைகளே ஏற்படுத்திரும்.

மலையுச்சில சண்டை நடக்கும். அருவி கொட்டும். பாறைகள் இருக்கும். அப்போ என்ன எஃபெக்ட்டோ, அந்த எஃபெக்ட் கதைல, காட்சிகள்ல, பிரச்சினைகள்ல வந்துரும். ‘அந்த 7 நாட்கள்’ல, பாலக்காட்டு மாதவனை ராஜேஷ் கேரக்டர் கூட்டிட்டுப் போவாரு. உள்ளே அம்பிகாவைப் பாத்ததும் என்ன நடக்கும், சேருவாங்களா என்னன்னு ஒரு டென்ஷன் வந்துரும். அந்த டென்ஷனோடதான் சீட் நுனில உக்கார்ந்து படம் பாத்தாங்க’’ என்று விளக்கினார் பாக்யராஜ்.

‘’அப்படீன்னா, ‘அந்த 7 நாட்கள்’, ‘ராசுக்குட்டி’ன்னு கேரக்டர்களெல்லாமே வாழ்க்கைல நீங்க சந்திச்ச கேரக்டர்கள்தானா?’’ என்று கேட்டார் சாந்தனு.
’நிச்சயமா. ‘ராசுக்குட்டி’ கேரக்டர் மாதிரி நிறைய பேரைப் பாக்கலாம். லாயர் மாதிரி, இன்ஸ்பெக்டர் மாதிரி ஒரு ஆசைல போட்டோ எடுத்து வைச்சுக்குவாங்க. நம்ம கலைஞானம் அண்ணனே, பராசக்தி சிவாஜி மாதிரி ஒரு போட்டோ, சிகரெட் புடிச்சிக்கிட்டு ஒரு போட்டோன்னு நிறைய போட்டோ எடுத்து வைச்சிருந்தாரு. இப்படி நிறைய கேரக்டர்ஸை பாத்திருக்கேன். இப்படி பாத்த கேரக்டர்ஸைத்தான் படங்கள்ல வைச்சேன்’’ என்று விவரித்தார் பாக்யராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்