தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. நன்கு அறியப்பட்ட இயக்குநர்கள் நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாமல் புதுமுக இயக்குநர்களும் நடிகர்களும் நடித்த காதல் படங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியாகி ஆரவார வெற்றியைப் பெற்றுவிடுவதுண்டு. அப்படி ஒரு காதல் படம்தான் 'ஜெயம்'. 2003 ஜூன் 21 அன்று வெளியான இந்தப் படத்தை 17 ஆண்டுகள் கடந்த பிறகும் பெருமையுடன் நினைவுகூரப் பல காரணங்கள் உள்ளன.
திருட்டு விசிடியை முறியடித்த வெற்றி
'ஜெயம்' வெளியான காலகட்டத்தில் திருட்டு விசிடிக்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவின் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தது. இன்றைய தமிழ் ராக்கர்ஸின் முந்தைய வடிவம் விசிடி. படம் வெளியான ஒரு சில நாட்களில் கள்ளச் சந்தையில் புதிய படங்களில் விசிடிக்கள் கிடைக்கத் தொடங்கிவிடும். இனி திரையரங்குகளின் வருங்காலம் அவ்வளவுதான் என்று அப்போதே முடிவுரை எழுதத் தொடங்கிவிட்டார்கள். பெரிய நட்சத்திரங்களின் படங்களே கல்லா கட்டுமா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. அப்படி இருக்க அறிமுக இயக்குநர், நாயகன். நாயகியைக் கொண்டு வெளியான இந்தப் படத்தின் வெற்றி தரமான படம் என்றால் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி வருவார்கள் என்று நிரூபித்தது. அன்று முதல் இன்றுவரை எந்த வகையான கள்ளச் சந்தைகளாலும் பாதிக்கப்படாமல் தரமான படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதேபோல் பெரிய நட்சத்திரப் படை இருந்தாலும் கதை-திரைக்கதைதான் ஒரு படத்தின் உயிர்நாடி என்பதையும் 'ஜெயம்' படத்தின் அமோக வெற்றி மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.
» ஏழு முறை நிராகரிக்கப்பட்ட பிறகு உருவான ‘சக் தே இந்தியா’ பாடல்: இசையமைப்பாளர் சலீம் பகிர்வு
ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்
தேஜா இயக்கத்தில் தெலுங்கில் இதே தலைப்புடன் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் மறு ஆக்கம்தான் 'ஜெயம்'. சிறுநகரச் சூழல்,. எளிய பின்னணியைக்கொண்ட நாயகன், சற்றே வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி, கல்லூரிக்கு இருவரும் ரயிலில் செல்லும்போது நண்பர்களின் உதவியுடன் படிப்படியாக வளரும் காதல், நாயகியின் முறைப்பையன் வடிவத்தில் வரும் எதிர்ப்பு, அதனால் ஏற்படும் பிரிவு, உயிர் ஆபத்து அதையெல்லாம் தாண்டி வெற்றிபெறும் உண்மையான காதல் என்பதுதான் கதை. ஆனால் 'ட்லக்கா' பாஷை, நாயகி வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு நுழைந்து கயிற்றில் தொங்கிக்கொண்டு நாயகன் பாட்டுப் பாடுவது, நாயகி கையை நீட்டி 'போய்யா… போ…” என்று சொல்வது எனப் பல விஷயங்கள் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தன. குடும்ப சென்டிமென்ட், நண்பர்களுடன் நகைச்சுவை, சிறப்பான பாடல்கள் வண்ணமயமான காட்சி அமைப்புகள் என ஒரு ஜனரஞ்சக காதல் படத்துக்கு ஏற்ற திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததே இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
சாதித்துக் காட்டிய ஜெயம் சகோதரர்கள்
இந்தப் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவுக்கு ஜெயம் சகோதரர்கள் அறிமுகமானார்கள். தமிழ் சினிமாவில் உடன் பிறந்த சகோதரர்கள் திரைத்துறைக்குள் வந்தாலும் அவர்களில் இருவரும் வெற்றிபெறுவது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. மூத்த படத்தொகுப்பாளர் மோகனின் மகன்களான ராஜா-ரவி சகோதரர்கள் அப்படிப்பட்ட அரிதான சாதனையை நிகழ்த்திக்காட்டினர். அண்ணன் இயக்குநராகவும் தம்பி நாயக நடிகராகவும் சாதித்து இன்றுவரை முன்னணி அந்தஸ்தைத் தக்கவைத்திருக்கின்றனர்.
தரமான ஜனரஞ்சகப் படங்களின் இயக்குநர்
'ஜெயம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன் தம்பி ஜெயம் ரவியை நாயகனாக வைத்து 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'தில்லாலங்கடி' என ஜனரஞ்சகமான அம்சங்களுடன் அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படங்களைக் கொடுத்தார் ராஜா. இவற்றில் 'தில்லாலங்கடி' தவிர மற்றவை அனைத்துமே வெற்றிபெற்றன. அனைத்தும் ரீமேக் படங்கள் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கேற்ற கதைகளைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிகர் தேர்வு, பாடல்களின் படமாக்கம். தமிழுக்கேற்ற நகைச்சுவை சென்டிமென்ட் காட்சிகள் என மாற்றங்கள் செய்து இந்தப் படங்கள் அனைவரும் ரசிக்கத்தக்க வெற்றிப் படங்களாவதை உறுதி செய்தார் ராஜா.
ரீமேக் படங்களை மட்டுமே எடுப்பவர் என்ற விமர்சனத்தை 'தனி ஒருவன்' படத்தின் மூலம் உடைத்தார் ராஜா. மிகப் பெரிய வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது இந்தப் படம்.
அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து 'வேலைக்காரன்' படத்தை இயக்கினார் ராஜா. இப்போது பிரசாந்தை வைத்து 'அந்தாதுன்' இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கப் போகிறார். 'தனி ஒருவன் 2' படத்தை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
வெவ்வேறு கதைகளில் நடித்த வெற்றி நாயகன்
'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி ஒரு நாயக நடிகராக இன்றுவரை முன்னணி அந்தஸ்தைத் தக்கவைத்திருக்கிறார். அண்ணன் இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் எஸ்.பி.ஜனநாதன், ஜீவா, எழில், பிரபுதேவா, சமுத்திரக்கனி, அமீர் என மற்ற பல முக்கியமான இயக்குநர்களுடனும் புதிய இயக்குநர்கள் பலருடனும் கைகோத்து பல வித்தியாசமான படங்களையும் வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.
ஜனநாதனின் 'பேராண்மை' படத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞராக நடித்து தனது அபார நடிப்புத் திறமையையும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப உருமாறும் திறமையையும் நிரூபித்தார். 'எங்கேயும் காதல்' படத்தில் நாடு நாடாகப் பறக்கும் பெரும் பணக்காரராகவும் 'பூலோகம்' படத்தில் வட சென்னை பாக்ஸராகவும் இரு வேறு எல்லைகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் நடித்துக் காட்டினார். கடந்த ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தில் 15 ஆண்டு கோமாவில் இருந்துவிட்டு மீண்ட இளைஞராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஜெயம் ரவியின் நட்சத்திர மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
உயரம், கச்சிதமான உடற்கட்டு நடனம், நகைச்சுவை, சென்டிமென்ட், நடிப்பு, வித்தியாசமான கதைத் தேர்வு, எல்லா விதமான இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றுவது என அனைத்து வகையிலும் ஒரு நாயக நடிகருக்கான எதிர்பார்ப்பை நிறைவேற்றிவருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கும் வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியின் மதிப்பு வேறோரு தளத்துக்கு உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago