“மனிதத்தைத் தன் பாடல்கள் மூலம் உலகுக்குச் சொன்ன பாப் மார்லி, இன்றைக்கு வெறும் டி-ஷர்ட் மாடலாக மாற்றப்பட்டுள்ளார். வருத்தத்துக்குரிய விஷயம் இது. அவரைப் பற்றி நம் சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஆரோக்கியமான பார்வை உருவாக வேண்டும். அதற்கான சிறிய முயற்சிதான் இந்த மார்லி பாடல்” என்று பேசத் தொடங்குகிறார் இசையமைப்பாளர் டென்மா.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் தன் இசையால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் டென்மா. நீலம் பண்பாட்டு மையத்தின் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இவரது இன்னொரு அடையாளம்.
அவருடனான உரையாடலில் இருந்து சில பகுதிகள்:
மார்லி பாடலுக்கான அவசியத்தை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?
’’வாழ்க்கையில் உடைந்துபோய் நம்பிக்கை இழந்து நின்ற பல தருணங்களில் பாப் மார்லியின் பாடல்கள் எனக்கு நம்பிக்கையூட்டி இருக்கின்றன. தற்போது கரோனா, பொதுமுடக்கம் என்று இறுக்கமான சூழலில் பலரும் துவண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, மனதுக்கு இதமான பாடல்களைத் தொடர்ந்து வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். அந்த வகையில் முதல் பாடலாக என் ஆசான் பாப் மார்லிக்கு ஒரு வணக்கம் வைத்து இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இதில் எனக்கு உறுதுணையாக என் நண்பர் கானா முத்து இருந்தார்.
அப்படியென்றால், இந்த வரிசையில் இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கலாமா?
கண்டிப்பாக. இந்த வரிசையில் காதல், நட்பு, சமூகக் கருத்து என்று பல உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களை வெளியிடும் யோசனையில் உள்ளேன். தற்போது மார்லி பாடல் ஆடியோ வடிவில்தான் வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் வீடியோ வடிவமாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.
இன்று நான் ஒரு திரைப்பட இசையமைப்பாளராக இருந்தாலும், எனக்குத் தனி இசை மீது ஆர்வம் குறையவில்லை. நான் தனி இசைக் கலைஞராக ‘குரங்கன்’, ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ போன்ற குழுக்களிலிருந்து செய்த விஷயங்களைத் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய தனியிசைப் பாடல்கள் தொடர்ந்து வெளிவரும்.
பாப் மார்லியைப் பற்றி இங்கே இருக்கும் பார்வையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் முன்பு சொன்னது போல் பாப் மார்லி ஒரு ஃபேஷன் அடையாளமாக மாறிவிட்டார். மார்லி மட்டுமல்ல சே குவேரா, புத்தர், பெரியார் எல்லாரும் ஃபேஷன் அடையாளமாக மாறிவருகின்றனர். இத்துடன் சேர்ந்து தவறான கற்பிதங்களும் புகுத்தப்படுகின்றன. அப்படித்தான் மார்லி என்றாலே போதை மனிதர், கஞ்சாவுக்கு ஆதரவானவர் என்ற கருத்து இங்கு நிலவுகிறது.
மார்லி வாழ்ந்த சமூகமும், காலமும் வேறு. அவர் கடைப்பிடித்த ரஸ்த்தாஃபாரி மதத்தின் நம்பிக்கைகளை நம்முடைய சமூகத்தில் பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் பிரச்சினை இருக்கும்போது மார்லியை அழைத்து வந்து அமைதி வேண்டி நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த அளவுக்கு ஒரு சமாதானப் புறாவைப் போல வாழ்ந்த பாப் மார்லியிடம் நாம் கற்றுகொள்ள வேண்டியது அன்பும் கருணையும் பொங்கும் மனிதத்தைத்தான்!
இந்தக் கரோனா காலகட்டத்தில் தனி இசைக் கலைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது?
பல தனி இசைக் கலைஞர்கள் பொருளாதார ரீதியாகக் கஷ்டத்தில்தான் உள்ளார்கள். தனி இசைக் கலைஞர்களுக்கு என்று எந்த அமைப்பும் இல்லாததால் அவர்களுக்கான உதவி கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தனி இசைக் கலைஞர்களுக்கு என்று ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று முயற்சி செய்தோம், நடைமுறைச் சிக்கல் காரணமாக அது சாத்தியப்படவில்லை. இப்போதைக்குத் தனி இசைக் கலைஞர்களுக்கு ஒரே துணை அவர்களது இசைதான். இந்தக் காலகட்டத்தில் தனி இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம், முடிக்காமலிருந்த பல பாடல்களை முடிக்க நேரம் கிடைத்தது மட்டும்தான்.
உங்கள் இசையை மீண்டும் சினிமாவில் எப்போது கேட்கலாம்?
மூன்று படங்களுக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்தக் கரோனா கஷ்டம் எல்லாம் ஒழிந்த பின்பு சினிமாவில் என் இசையைக் கேட்கலாம். அதுவரை என் தனி இசையின் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!’’ என்றார் டென்மா.
-க.விக்னேஷ்வரன்
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago