குடும்பத்தினரிடம் ஆதரவு இல்லை; பீட்டரை ஒப்புக்கொண்ட தருணம்: 3-வது திருமணம் குறித்து மனம் திறக்கும் வனிதா விஜயகுமார்

By செய்திப்பிரிவு

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு ராஜ்கிரணுடம் ‘மாணிக்கம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சினையின் மூலம் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் பீட்டர் பால் என்பவரைத் தான் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''அனைவருக்கும் காதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய வாழ்வில் இத்தனை கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் என் ஆழ்மனதில் திருமணத்தைப் பற்றிய உள்ளுணர்வை நான் நம்பினேன். இரண்டு பேர் ஒருவரை ஒருவர் காதலிக்கும்போது, அதுதான் அவர்களது உறவின் தொடக்கம். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது, அது அவர்களது வாழ்வின் கொண்டாட்டம் மட்டுமல்ல, அவர்களது உறவின் தீவிரத்தை இந்த உலகத்துக்குச் செய்யும் அறிவிப்பும் கூட.

இந்த ஆண்டு எனக்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இந்தக் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு நமது வாழ்க்கை குறித்த அதிக புரிதல்களையும், நமக்கான முன்னுரிமைகளையும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த 4 மாதங்களும், உணர்ச்சிகளும், ஏற்ற இறக்கங்களும், கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற சரியான ஆணைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு கனவு இருக்கும். என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது.

பீட்டர் பால்.

அவர் என்னுடைய கனவிலிருந்து வெளியேறி என் வாழ்க்கையில் நுழைகிறார். எனக்கே தெரியாத வெற்றிடத்தை நிரப்பியுள்ளார். அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாகவும், முழுமையாகவும் உணர்கிறேன். என் வாழ்வில் ஒரு நண்பராக வந்த அவர், ஊரடங்கின்போது என்னுடைய யூ டியூப் சேனலின் தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் நான் தொலைந்துபோன சமயங்களில் எனக்கு உதவி செய்தார். நான் மிகவும் நிம்மதியாக, அமைதியாக இருக்கும் வகையில் பிரச்சினைகளைச் சரி செய்தார். என் குழந்தைகள்தான் எப்போதும் என்னுடைய முன்னுரிமை என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைத் திருமணம் செய்துகொள்வது பற்றி என்னிடம் அவர் கேட்டபோது எனக்கு வார்த்தைகள் வரவில்லை. (ஆனால் என் மனத்துக்குள் நான் ‘சரி’ என்று கத்தினேன்).

என் குழந்தைகளிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் அவர்களிடம் சென்று கேட்டபோது அவர்களும் சரி என்று சந்தோஷத்தில் கத்தினார்கள். அவர்கள் இதைக் கூறியதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த சிறந்த தருணம். அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவர் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒற்றைத் தாயாக இருப்பது என்பது நான் தேர்ந்தெடுத்ததோ அல்லது சாதித்ததோ அல்ல. அது ஒரு நீண்ட வலிமிகுந்த ஒரு போராட்டம். குறிப்பாக என்னுடைய குடும்பம் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து எனக்கு எந்தவித ஆதரவோ உதவியோ கிடைக்கவில்லை.

என்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக நான் என் வாழ்க்கையை வாழ்ந்தேன். இதனால் முடிவுகளை எடுப்பதில் குழப்பங்களும் பயமும் இருந்தது. முதல் முறையாக எனக்காகவும், என்னுடைய மகிழ்ச்சிக்காகவும் நான் என் வாழ்க்கையை வாழ முடிவெடுத்துள்ளேன். வாழ்க்கையை முழுமையாக வாழவும், என்னுடைய கரங்களை என்றென்றும் பற்றிப்பிடிக்கும் ஒருவரையும் தேர்ந்தெடுத்துள்ளேன்.

என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு ஆதவரளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் எனக்காக நீங்கள் மகிழ்வீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் ஆசீர்வாதமே எனக்கு முக்கியம்.

பீட்டர் பால் யார் என்று கேட்பவர்களுக்காக...

அவர் ஒரு தொழில்முறை இயக்குநர். என் இதயத்தைத் திருடி காதலில் விழவைத்த அன்பான, அளிமையான, பாசமான, நேர்மையான ஒரு மனிதர். மிக விரைவில் அவரது படைப்புகளைத் திரையில் நீங்கள் காண்பீர்கள்.

அனைத்து சிங்கிள்களுக்கும் மனமார்ந்த ஒரு அறிவுரை. நீங்கள் கண்டுபிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏற்ற ஒருவரைத் தொடர்ந்து தேடுங்கள். உங்களுக்காக ஒரு மாயாஜாலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட நிகழ்வாக எங்கள் திருமணம நடக்கவுள்ளது. என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்காக திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் திருமணத்துக்குப் பிறகு வெளியிடுவோம்''.

இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்