இயக்குநர் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்: கமர்ஷியல் சினிமா ரசனையை மேம்படுத்திய இயக்குநர்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1980-களில் பல முக்கியமான இயக்குநர்கள் சினிமாவில் தமது படைப்பாளுமையால் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு 1990-களில் புதிய அலை இயக்குநர்கள் உருவாகிவந்தார்கள். ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய வெகுஜனப் படங்களை வெவ்வேறு வகைமைகளில் கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பதில் இவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினார்கள்.

மசாலா படம் என்பது தாண்டி நட்சத்திரக் கதாநாயகர்களின் இமேஜுக்கு ஏற்ற மாஸ் படங்களும் பரபர ஆக்‌ஷன் படங்களும் எதிர்மறைக் குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்களை நாயகனாகக் கொண்ட படங்களும் இந்தக் காலகட்டத்தில் அதிகமாகின. இந்த மாற்றங்களுக்கு முக்கியப் பங்களித்த வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவரான சரண் இன்று (ஜூன் 16) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

விஷுவல் கம்யூனிகேஷன் டிப்ளமோ படித்துவிட்டு ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றிவந்த சரண் சிறுவயது முதலே சினிமாக் காதல் கொண்டிருந்தார். அவர் மிகவும் வியந்து போற்றிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்திரிடமே உதவி இயக்குநராக இணைந்து அந்த மேதையிடமிருந்து சினிமா எடுக்கக் கற்றுக்கொள்ளும் பொக்கிஷ வாய்ப்பைப் பெற்றார். 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இணைந்தவர் அதன் பிறகு பல படங்களில் அவரது உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

அஜித்தின் திருப்புமுனை

1997-ல் ஐந்து படங்களில் நடித்திருந்தார் அஜித் குமார். ஐந்து படங்களும் தோல்வியைத் தழுவியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு நாயக நடிகராக அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியானது. இந்தச் சூழலில்தான் அஜித்தை நாயகனாக வைத்துப் படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் சரண். அஜித்தை ஆணழகனாக நிலை நிறுத்திய படமாக அமைந்தது சரணின் முதல் படமான 'காதல் மன்னன்'. வேறொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டுவிட்ட பெண் நாயகனால் கவரப்பட்டு இறுதியில் அவனுடன் இணைவது போன்ற கதைக்களம்.

சற்று கவனம் பிசகியிருந்தாலும் விகற்பமாகியிருக்கக்கூடிய இந்தக் கதைக்களத்தை மிகவும் முதிர்ச்சியாகவும் அனைவரும் ரசிக்கும் வகையிலும் கையாண்டிருந்தார் சரண். அதேநேரம் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் போன்ற ஜனரஞ்சக அம்சங்களுக்கும் குறையில்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை நடிகராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த இசை மேதைக்குள் ஒளிந்திருந்த நடிகனை சினிமா உலகம் கண்டுகொண்டு அதற்குப் பிறகு பல படங்களில் பயன்படுத்திக்கொண்டது. விமர்சகர்களின் பாராட்டையும் நல்ல வசூலையும் குவித்த 'காதல் மன்னன்' சரணுக்கு அருமையான தொடக்கமாகவும் அஜித்துக்கு முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்தப் படத்தில் சரணுடன் இணைந்து அறிமுகமானார் இசையமைப்பாளர் பரத்வாஜ். பாடல்கள் வெற்றி பெற்றன. சரணின் ஆஸ்தான இசையமைப்பாளரானார் பரத்வாஜ்.

சரணின் இரண்டாம் படமும் அஜித்துடனே அமைந்தது. அஜித்துக்கு 25-வது படமும் அதுவே. ஆம் அஜித்தை ஒரு ஆக்‌ஷன் நாயகனாக நிலைநிறுத்திய படமான 'அமர்க்களம்'தான்! இந்தப் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

மூன்றாவது படமாக பிரசாந்த், சிம்ரன், லைலாவை வைத்து 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தை இயக்கினார் சரண். எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தயங்கிய சிம்ரன், கதையைக் கேட்டவுடன் நடிக்கச் சம்மதித்தார். படத்தில் சிம்ரனின் நடிப்புத் திறமை மிகச் சிறப்பாக வெளிப்பட்டது. வில்லி என்றாலும் அவருடைய கதாபாத்திரமும் நடிப்புமே அதிக கவனத்தை ஈர்த்தது. படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அப்போது முன்னணிக் கதாநாயகியாகத் திகழ்ந்த சிம்ரனை எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் துணிச்சலும் அதைச் சிறப்பாகச் செய்துகாட்டிய திறமையும் சரணின் தனித்தன்மை வாய்ந்த பார்வையையும் ரசனையையும் உலகுக்கு உணர்த்தின.

அடுத்து பாரதிராஜா தயாரிப்பில் அவருடைய மகன் மனோஜை நாயகனாக வைத்து 'அல்லி அர்ஜுனா' என்னும் படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் வெற்றிபெற்றன. படம் தோல்வியடைந்தது. அதே நேரம் அதன் மாறுபட்ட கதையம்சத்துக்காகச் சிலரால் பாராட்டப்பட்டது.

எல்லோருக்கும் பிடித்த 'ஜெமினி'

பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் படத்தை இயக்க ஒப்பந்தமானார் சரண். 'ஜெமினி' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்தார். திருந்தி வாழ விரும்பும் ரவுடியின் கதைதான் என்றாலும் அதை அருமையான மாஸ் காட்சிகள், பரபரப்பான சண்டைக்காட்சிகள், அழகான காதல் காட்சிகள், மனதைத் தொடும் சென்டிமென்ட் காட்சிகள், வண்ணமயமான பாடல்கள் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் கலந்து எல்லோருக்கும் பிடித்த படமாக்கியிருந்தார். மிகப் பெரிய வெற்றிப் படமாக்கியிருந்தார் சரண். விக்ரமின் நட்சத்திர மதிப்பை உயர்த்திய படங்களில் இதுவும் ஒன்று.

மாதவனுடன் இணைந்து 'ஜேஜே' என்னும் காதல் படத்தைக் கொடுத்தார். அந்தப் படத்திலும் ரசனையான காதல் காட்சிகள், அழகான பாடல்கள், கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சென்டிமென்ட் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் சரி விகிதத்தில் இருந்தது.

முத்திரை பதித்த முன்னாபாய் ரீமேக்

இதற்குப் பிறகு முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் வாய்ப்பைப் பெற்றார். அந்த வாய்ப்பு ஒரு ரீமேக் வடிவில் வந்தது. சஞ்சய் தத் நடித்து இந்தியில் வெற்றிபெற்றிருந்த 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' படத்தை தமிழில் கமலை நாயகனாக வைத்து இயக்கினார். கமலின் அசாத்திய நடிப்பும் கிரேசி மோகனின் அசத்தலான காமெடி வசனங்களும் கைகொடுக்க சரணின் திரைக்கதையும் படமாக்கமும் வழக்கம்போல் பட்டையைக் கிளப்ப 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் வெற்றிபெற்றது.

தல ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து

'வசூல்ராஜா' படத்தைத் தொடங்குவதற்கு முன்பே அஜித்துடன் மீண்டும் இணைந்து 'அட்டகாசம்' என்னும் படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருந்தார். 'வசூல்ராஜா' படம் 2004 சுதந்திர தின விடுமுறைக்கு வெளியானது. அதே ஆண்டு தீபாவளிக்கு சரணின் அட்டகாசத்துடன் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளியாக அமைந்தது. தூத்துக்குடி தாதா, சென்னையில் ட்ரைவிங் ஸ்கூல் நடத்துபவர் என அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த அந்தப் படமும் 'தலபோல வருமா', 'தல தீபாவளி' போன்ற பாடல்களும் அஜித் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.

நிழலுலக அரசியல் படம்

சரண் இயக்கிய படங்களில் முக்கியமான இன்னொரு படம் 'வட்டாரம்'. ஆர்யா நாயகனாக நடித்திருந்த இந்தப் படம் அஜித்தின் 'வரலாறு', சிலம்பரசனின் 'வல்லவன்' ஆகிய படங்களுடன் 2006 தீபாவளிக்கு வெளியானபோது கவனம் ஈர்க்கத் தவறிவிட்டது. ஆனால் தாதாக்களின் உலகத்தில் எளியவனாகப் புகுந்து துரோகத்தைத் துரோகத்தால் வெல்லும் தனிமனிதனின் கதையை திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், ஜனரஞ்சகமான பாடல்கள் என மிகச் சிறப்பான திரைப்படமாக்கியிருப்பார் சரண். படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டு நிழலுலகப் படங்களுக்கு இணையான தரத்துடன் அமைந்திருக்கும். நிழலுலக அதிகார அரசியலைப் பேசிய படங்களில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது 'வட்டாரம்'.

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக அஜித்துடன் நான்காம் முறையாக இணைந்து 'அசல்' என்னும் படத்தை இயக்கினார். ஃப்ரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்கும் கதை. ஸ்டைலிஷான காட்சி அமைப்புகள், அஜித் ரசிகர்களுக்குத் தீனி போடும் மாஸ் காட்சிகள் ஆகியவை இருந்தாலும் அந்தப் படம் வெற்றிபெறவில்லை.

தனித்தன்மையைக் கைவிடாதவர்

சரணின் திரைப்படப் பட்டியல் அவர் தன்னை எந்த வகைமைக்குள்ளும் அடக்கிக்கொள்ளாமல் எல்லா ஜானர்களைச் சேர்ந்த படங்களையும் கொடுத்திருப்பதோடு புதிய ஜானர்களையும் சோதித்துப் பார்த்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நட்சத்திர நடிகர்களுடன் இணைந்தாலும், தன்னுடைய தனித்தன்மையைக் கைவிடாத படங்களையே கொடுத்திருக்கிறார். மாஸ் படங்கள் என்றாலும் கதாநாயகி, குணச்சித்திர நடிகர்கள், வில்லன் என அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அவற்றில் சரணின் முத்திரையும் பதித்திருக்கும். சரணின் வசனங்களுக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.

அதேபோல் பரத்வாஜ் - வைரமுத்து கூட்டணியில் அருமையான பாடல்களைப் பெற்றுவிடுவார். தன்னுடைய படமாக்கலின் மூலம் அந்தப் பாடல்களின் சிறப்பை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுவார். இப்படியாக தன் திறமையின் மூலம் தனித்தன்மையின் மூலமும் தமிழ் வெகுஜன (கமர்ஷியல்) திரைப்படங்களில் ரசனையை மேம்படுத்தியவர். அவற்றின் மீதான மதிப்பைக் கூட்டியவர் சரண்.

இப்படி பல திறமைகளையும் தனித்தன்மைகளையும் பெற்றுள்ள சரண் இன்னும் பல திரைப்படங்களை இயக்கி மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்