தமிழ் சினிமாவில் 1975-ல் கால்பதித்து 1980-களில் படிப்படியாக உயர்ந்து உச்ச நட்சத்திரமாகி ஆகி 1990-களில் வசூல் சக்கரவர்த்தியாகி இந்திய சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டு இன்றுவரை இந்திய அளவில் பெரும் மதிப்பு மிக்கவராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
1990-களின் தொடக்கத்தில் 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் அறிமுகமாகி இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு புதிய இலக்கணம் வகுத்தவராகவும் வசூல் சாதனைப் படங்களை மட்டுமே கொடுத்தவராக இந்திய அளவில் இயக்குநர்களில் ஒரு உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர் ஷங்கர்.
இந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களும் ஒன்றிணைவார்களா என்ற ரசிகர்களின் கனவும் திரைத்துறையினரின் எதிர்பார்ப்பும் நிறைவேறியது. 2007 ஜூன் 15 அன்று ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியானது.
எட்டு ஆண்டுக் காத்திருப்பு
ஷங்கரின் ஐந்தாவது படமாக 1999-ல் வெளியான 'முதல்வன்' படத்திலேயே ரஜினிதான் நாயகனாக நடித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது 'படையப்பா' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாலும் அப்போது நிலவிய சூழலில் அரசியல் தொடர்பான படத்தில் நடித்தால் தேவையற்ற சர்ச்சைகள் வரும் என்று கருதியதாலும் ரஜினி அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அர்ஜுன் அதில் சாதாரண மனிதனாக இருந்து தமிழக முதல்வராக உயரும் நாயகன் புகழேந்தியாக நடித்தார். படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே ஆண்டு வெளியான 'படையப்பா' படமும் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. இதன் மூலம் ரஜினி, ஷங்கர் இருவருடைய வணிக மதிப்பும் பன்மடங்கு பெருகியது. அப்போதிலிருந்து ஒவ்வொரு முறை ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்பும் அதை ஷங்கர் இயக்கக்கூடும் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகும். ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ஆனால், இந்த ஏக்கம் நிறைவேற எட்டு ஆண்டுகள் ஆயின.
இதற்கிடையில் ரஜினியின் 'பாபா' தோல்வி அடைந்திருந்தது. ஷங்கரின் 'பாய்ஸ்' படமும் தோல்வியடைந்ததோடு பல சர்ச்சைகளையும் கிளப்பியிருந்தது. 2005-ல் வெளியான 'சந்திரமுகி', 'அந்நியன்' படங்களின் மூலம் முறையே ரஜினி, ஷங்கர் இருவரும் அந்தச் சரிவிலிருந்து அநாயசமாக மீண்டனர். அந்த நேரத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய ஏவிஎம் நிறுவனத்துக்குப் படம் நடிக்க ரஜினி சம்மதித்தார்.
'முரட்டுக் காளை', 'போக்கிரி ராஜா', 'பாயும் புலி', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மிஸ்டர் பாரத்', 'மனிதன்', 'ராஜா சின்ன ரோஜா', 'எஜமான்' என ஏவிஎம் நிறுவனத்துக்கு ரஜினி நடித்துக்கொடுத்த எட்டுப் படங்களும் வெற்றிப் படங்கள். 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் நடிக்கத் தயாரானார் ரஜினி. படத்தை இயக்க ஷங்கர் ஒப்பந்தமானார். ஆக, தமிழ் சினிமாவில் பல முக்கிய சாதனைகளை நிகழ்த்திய பாரம்பரிய ஏவிஎம் நிறுவனத்தின் மூலமாகத்தான் ரஜினி-ஷங்கர் இணையும் ரசிகர்களின் நீண்டநாள் கனவு நனவானது.
ஏவிஎம்-ரஜினி-தொடரும் வெற்றிகள்
தமிழ் சினிமாவின் தொடக்கக் கால தளகர்த்தர்களில் ஒருவரான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் தொடங்கப்பட்ட ஏவிஎம் நிறுவனத்தின் 60-ம் ஆண்டில் மெய்யப்பச் செட்டியாரின் நூறாம் பிறந்த நாள் ஆண்டில் 'சிவாஜி' திரைப்படம் வெளியானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற படத்துக்கு 'சிவாஜி' தலைப்பு வைக்கப்பட்டது. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்பதால் படத்தின் தலைப்பு ரசிகர்கள் மனத்துக்குக் கூடுதல் நெருக்கமானது.
சுஜாதாவும் ரஜினியும்
'சிவாஜி' படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியம் மற்றும் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்த எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்களைப் பேசி நடித்தார் ரஜினி. சுஜாதா எழுதிய 'காயத்ரி', 'ப்ரியா' ஆகிய இரண்டு நாவல்கள் 1970களில் திரைப்பட வடிவம் எடுத்தபோது அவற்றில் ரஜினி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர அவர் வசனம் எழுதிய 'நினைத்தாலே இனிக்கும்' படத்திலும் முக்கிய இணை வேடத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் ரஜினி-சுஜாதா இணை சாத்தியமானது.
புதிய அனுபவம் அளித்த பாடல்கள்
ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. படம் வெளியாவதற்கு முன்பான எதிர்பார்ப்பை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றன. 'பல்லேலக்கா', 'அதிரடிக்காரன்' போன்ற அதிரடி மாஸ் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசை ராகத்தை மையமாகக் கொண்ட 'மாலே மணிவண்ணா', 'சஹானா சாரல்' போன்ற பாடல்களும் 'சிவாஜி' ஆல்பத்தில் இடம்பெற்றிருந்தது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. படத்தில் ரஹ்மானின் தீம் மியூசிக்கும் பின்னணி இசையும் அவருடைய பங்களிப்பை மேலும் சிறப்பாக்கின.
தேசிய அளவில் எதிர்பார்ப்பு
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மட்டுமல்லாமல் மும்பை, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது 'சிவாஜி'. மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிவந்த 24 மணி நேர ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின் தொடக்கக் காலம் அது. முதன்முறையாக அவை ஒரு தமிழ்ப் படத்துக்கு சிறப்புத் தொகுப்புகளையும் பிரபலங்களின் பைட்களையும் வெளியிட்டது 'சிவாஜி' படத்துக்குத்தான் இருக்க முடியும். இதுவே ரஜினியின் தேசிய அளவிலான பிரபல்யத்துக்குச் சான்றாக அமைந்தது.
எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிய படம்
'சிவாஜி' படத்தில் வெளிநாட்டில் பல ஆண்டுகள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை தாய்மண்ணில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மருத்துவம் கொடுப்பதற்கான லட்சியத்துடன் தமிழகம் திரும்பும் என்.ஆர்.ஐ ஆக ரஜினி நடித்திருந்தார். படத்தின் முதல் பாதியில் 1980-களின் படங்களில் இருந்ததைப் போல் படிய வாரிய தலையுடன் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதோடு 'சும்மா அதிருதுல்ல', 'சிங்கம் சிங்கிளாதான் வரும்' போன்ற அசத்தலான பன்ச் வசனங்களை இடம்பெறச் செய்திருந்தார் ஷங்கர். ரஜினி-விவேக் கூட்டணி நகைச்சுவையிலும் பட்டையைக் கிளப்பியது.
அன்றைய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ஸ்ரேயா அழகையும் பாடல்களில் மெல்லிய கவர்ச்சியையும் அளித்திருந்தார். தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடிகள் அதிகரித்துக்கொண்டே போகும்வகையில் ஜனரஞ்சக அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரைக்கதையை அமைத்திருந்தார் ஷங்கர். குறிப்பாக கடைசிக் காட்சிகளில் மொட்டை பாஸ் எம்ஜிஆர் ஆக ரஜினி தோன்றியது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. ஒரே படத்தில 'சிவாஜி'யையும் 'எம்.ஜி.ஆர்.'ஐயும் பார்த்த திருப்தியையும் கொடுத்தன.
பொதுவாக இரண்டு பெரும் தலைகள் இணையும் படங்கள் இரண்டு தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்பதால் ஏற்படும் கூடுதல் எதிர்பார்ப்பையும் முழுமையாக நிறைவேற்றுவது மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. அந்த அரிதான திரைப்படங்களில் ஒன்று 'சிவாஜி'.
அரசு அதிகாரிகளிடம் நிலவும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒரு தனிமனிதனின் போராட்டத்தைக் கதையாக எடுத்து அதில் ரஜினிக்குத் தேவையான மாஸ் விவகாரங்களையும் தன்னிடம் எதிர்பார்க்கப்படும் சமூகப் பிரச்சினை சார்ந்த கதையம்சத்தையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளையும் பாடல்கள், நகைச்சுவை காதல், சென்டிமென்ட் உள்ளிட்ட ஜனரஞ்சக அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை முற்றிலும் நிறைவேற்றியிருந்தார் இயக்குநர் ஷங்கர். 'சிவாஜி' ரஜினி படமாக இருக்குமா, ஷங்கர் படமாக இருக்குமோ என்று கேட்கப்பட்டபோது 'இது ஷங்கர் - ரஜினி' படமாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் ஷங்கர். அதுவே உண்மையானது. ரஜினி, ஷங்கர் ஆகிய இரண்டு மாபெரும் ஆளுமைகளின் ரசிகர்களுக்கும் முழு திருப்தி அளித்தது.
என்றைக்கும் மறக்காது
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ரஜினியும் ஷங்கரும் மீண்டும் இணைந்து 'எந்திரன்', '2.0' (எந்திரன் இரண்டாம் பாகம்) ஆகிய இரண்டு பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டனர். இதில் 'எந்திரன்' இந்திய அளவில் மிகப் பெரிய வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்தது. 'சிவாஜி'யில் தொடங்கிய இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எப்படியாகினும் இதன் தொடக்கமாக அமைந்த 'சிவாஜி' படமும் அது ரசிகர்களுக்கு அளித்த திருப்தியும் நிகழ்த்திய சாதனைகளும் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago