அறம் சார்ந்த படங்கள் குறைந்துவிட்டன: கரு.பழனியப்பன் நேர்காணல்

By மகராசன் மோகன்

புதுமுக இயக்குநர் சந்திராவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘கள்ளன்’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார் கரு.பழனியப்பன். தேனி, கம்பம், தென் கேரளப் பகுதிகளில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இப்படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந் தவரை சந்தித்தோம்.

இயக்குநர் கரு.பழனியப்பனை இனி நடிகராகத்தான் பார்க்க முடியுமா?

‘மந்திரப் புன்னகை’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து நான் நடிப்பதற்காக கதை கள் வந்தன. சந்திரா சொன்ன கதை நாயகனைச் சார்ந்து இல்லாமல் களம் சார்ந்து இருந்ததால் அதில் நடிக்க முடிவெடுத்தேன். இது வேட்டை சமூகம் பற்றிய கதை.

விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பிருந்த சமூகம் இது. இன்றைக்கு அந்த சமூகம் இல்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் கதை. இந்த ‘கள்ளன்’ கதையை அடுத்து மேலும் இரண்டு புதிய கதைகளைக் கேட்டிருக்கிறேன், அந்தக் கதைகளும் பிடித்திருக்கின்றன. இதற்கிடையே ‘கிராமஃபோன்’ என்ற பெயரை வைத்து ஒரு கதையை எழுதியிருக்கிறேன். இப்போதைக்கு சூழல் நடிப்பு சார்ந்து நகர்வதால், இதையடுத்து என் படத்தை இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.

இயக்குநராக இருந்து நடிகராக மாறியிருப்பது எந்த மாதிரியான அனுபவமாக இருக்கிறது?

10 ஆண்டுகளில் 5 படங்கள் இயக்கியிருக்கிறேன். பதற்றம் இல்லாமல் படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறவன், நான். தொடர்ந்து படம் இயக்கி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீண்ட நாட்கள் இயக்குநராக இருக்க வேண்டும். அதனால்தான் நிதானமாக படங்களை இயக்குகிறேன். அதற்காக நிறைய அவகாசம் எடுத்துக்கொள் கிறேன். வீட்டில் பல ஆண்டுகளாக அம்மா சமைத்திருப் பார். மருமகள் வந்ததும் அவர் சமைக்கட்டுமே என்று சமையல் அறைக்கு போவதை கொஞ்சம் குறைத்துக்கொள்வார். இயக்குநர், நடிகராக இருப்பதும் அப்படித்தான். தேவைப்படும்போது நமக்குள்ளேயே சின்னச் சின்ன மாற்றங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

இப்போது இளம் இயக்குநர்கள் தனி கவனத்தைப் பெறுகிறார்களே?

சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனாலும், நான் என்னை புதிய இயக்குநராகத்தான் நினைக்கிறேன். தற்போதைய சினிமாவில் தொழில்நுட்பரீதியாக பல விஷயங்கள் பிரமாதப்படுத்துவதாக படிக்கிறேன். அறிகிறேன். இருந்தாலும் அறம் சார்ந்த படங்கள் குறைந்துவிட்டன. சினிமாவில் அறம் சொல்லத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அறமும் சொல்லலாம் என்பதே என் ஆசை. நானே அது மாதிரி படங்களை எடுத்தேனா என்பதும் கேள்விதான். இன்றைக்கு வெற்றி பெற்ற பல படங்கள் அறத்தை சொல்லியதில்லை. அதைப் பற்றி நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டிய தருணம் இது.

உங்களது நடிப்பில் ‘மந்திரப் புன்னகை’ படம் வெளியானபோது நீங்கள் இயக்கத்திலேயே கவனம் செலுத்தலாம் என்று விமர்சனம் வந்ததே?

பிறர் சொல்வதில் நான் அதிகம் அக்கறை செலுத்துவதில்லை. சினிமாவுக்கு வந்து பார்த்திபனிடம் உதவியாளராக சேர்ந்ததும், ஏன் அவரிடம் சேர்ந்தீர்கள் என்றார்கள். முதல் படத்தில் காந்த் நடித்தபோது இவரா ஹீரோ என்றார்கள். இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். அதைப் பற்றி அதிகம் யோசிக்கக்கூடாது. இங்கே ஒரு நடிகன் 5 தோல்விகளை சந்தித்தால் தாங்கிக்கொள்ள முடியும். அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வரும். ஆனால், ஒரு இயக்குநர் 5 தோல்விகளை சந்தித்தால் சினிமாவில் இருக்க முடியாது. இயக்குநர் கரு.பழனியப்பனை காப்பாற்ற வேண்டும் என்றால் நடிகர் கரு.பழனியப்பனை தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.

நீங்கள் நடிக்கும் படத்தை சந்திரா இயக்குகிறார். பெண் இயக்குநர்களுக்கான இடம் இங்கே எப்படி இருக்கிறது?

இந்தப் படத்தின் கதையை படித்தால் இதை பெண் இயக்குகிறாரா? ஆண் இயக்குகிறாரா? என்ற எண்ணமே வராது. அப்படித்தான் கதையையும், களத்தையும் வடிவமைத்திருக்கிறார் சந்திரா. இயக்குநர் அமீரிடம் சினிமா பயின்றவர் அவர். எழுத்தாளர், கவிஞர். இந்தக் கதையை அவர் எழுதி முடித்து சில முக்கியமானவர்களிடம் படிக்கக் கொடுத்தபோது, அவரது திறமைக்கு வெகுவாக பாராட்டுகள் குவிந்தன.

சினிமாவில் இன்றைக்கு படித்தவர்கள் நிறைந் திருக்கிறார்கள். அதனால் இங்கே பெண்கள் சுதந்திர மாகவே இருக்கிறார்கள். நடிகை ராதா ஒருமுறை கூறும்போது, ‘பெண்கள் பாதுகாப்பாக இருப்பது சினிமாவில்தான். இங்கேதான் எப்போதும் 100 பேர் மத்தியில் பணிபுரிய முடிகிறது’ என்றார். இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

வசனங்களிலும், காட்சிகளிலும் ஆபாசம் தெறிக்கும் படங்களும் சமீபத்தில் நல்ல வெற்றியடைந்திருக்கிறதே?

‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தைத்தான் மறைமுகமாக கேட்கிறீங்க. அந்த வகைப் படங்களும் இருந்துவிட்டு போகட்டுமே. அந்தப் படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றதில் ஏன் மகிழ்ச்சி என்றால்... ‘ஏ’ சான்றிதழ் பெறவே கூடாது. பெற்றால் 30 சதவீதம் அரசுக்கு வரி கட்டவேண்டும் என்று நட்சத்திர நடிகர்களின் படங்களே ‘யூ’ சான்றிதழ் பெற்று அரசின் வரிச்சலுகையை பயன்படுத்த முயற்சிக்கும்போது ஒரு ‘ஏ’ சான்றிதழ் படம் ஒரே வாரத்தில் நிறைய சம்பாதிப்பது மகிழ்ச்சிதானே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்