ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் 'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 70 நாட்கள் கடந்தும் திறக்கப்படவில்லை. இதனிடையே தமிழகத்தில் சில தினங்களாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியே வகுப்புகள் எடுத்து வருகின்றன.
இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக 'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா, 'ஆன்லைன் வகுப்புகளுக்கு வேண்டும் அவசரக்கால சட்டம்' என்ற பெயரில் நீண்ட பதிவொன்றைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
» புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அன்பே அவர்களுக்காக உழைக்கக் காரணம்: சோனு சூட்
» 'டெனட்' படத்தில் டிம்பிள் கபாடியா நடிப்பு அற்புதம்: சக நடிகர் புகழாரம்
"ஆறாம் வகுப்பு படிக்கும் அகிலன் கண்களைக் கசக்கியபடி தலைவலிக்கிறது என்று சொல்ல, நான்காம் வகுப்பு வெரொனிகா கண்களில் நீர்க்கசிவு என்று கண்ணயர, பித்தம் என்றும் தூசு தும்பல் என்றும் அலட்சயிக்கிறோம். கழுத்து வலியும் இடுப்பு வலியும், தூக்கமின்மையும் இந்த பள்ளிப்பருவ பிஞ்சுகளுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் வரக் காத்திருக்கின்றன.
ஒரு பக்கம் கரோனா கொத்துக்கொத்தான உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்க, அமைதியான முறையில் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் நம் குழந்தைகளின் மீது உடல்-மன- சமூக ரீதியான சவால்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
10-வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எட்டு மணி நேரம், இடைநிலை மாணவர்களுக்கு ஆறு மணி நேர வகுப்புகள், சனிக்கிழமையானால் பரீட்சைகள், நர்சரி தாண்டாத வாண்டுகளுக்கும் மூன்று அரை மணி நேர வகுப்புகள் என இந்த மார்க் வாங்கும் இயந்திரங்களுக்கு வெள்ளையடிக்கும் வேலை களைகட்ட ஆரம்பித்திருக்கின்றன.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் (NIMHANS) இயக்குநர் கங்காதரன், ‘உலக சுகாதார மையத்தின் ஆதாரங்களைக் காட்டி குழந்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்னணு காணொலிகளைப் பார்க்கக்கூடாதென்றும் ஆன்லைன் வகுப்புகள் தடை செய்யப்பட வேண்டும்’ என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் தனஸ்ரீ ரத்ரா, ‘கண்களுக்கு அருகில் வைத்துப் பார்க்கப்படும் போன்கள் மற்றும் லேப்டாப்களினால் கிட்டப்பார்வை கோளாறுகளும், ஏற்கெனவே கோளாறுகள் உள்ள குழந்தைகளுக்கு பவர் அதிகரிக்கும் அபாயமும் உருவாகும்’ எனவும் எச்சரிக்கிறார்.
அமெரிக்க குழந்தை வளர்ப்பு கல்வியகம், ‘மொபைல் போன்களின் மூலமாக வெளியேறும் கதிர்வீச்சுகளினால் மண்டைக்கூட்டில் உள்ள எலும்புத்தசைகளில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு பத்து மடங்கு பாதிப்புகள் உருவாகும் என்றும் இதனால் நாளடைவில் புற்றுநோய், மூளைக்கட்டி ஆகியவை வரக்கூடும் என்றும் கூறுகிறது.
இவை அனைத்தும் போக, அதிகப்படியான நேரத்தை மொபைல், கணினி மற்றும் தொலைக்காட்சி பார்க்க செலவிடும் குழந்தைகளுக்கு படைப்புத்திறன் குறைபாடு, பழகுவதில் உள்ள சிக்கல்கள், தூக்கமின்மை, கவனக்குறைபாடு, உடல் எடை அதிகரிப்பு எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.
தமிழக அரசு காலையில் இயற்றும் ‘ஆன்லைன் பாடங்கள் நடத்தக்கூடாது’ என்ற சட்டத்தை மாலையில் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. அரசு, முடிவுகளை பள்ளிகளிடமே விட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பள்ளி மேலிட மேதாவிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
மின்னணு உபகரணங்களைக் குழந்தைகள் பார்க்கும்போது என்ன ஆகும் என்பதை விளக்க, தட்டியவுடன் கொட்டும் தகவல்கள் நூற்றுக்கணக்கில் இருக்க, எங்கிருந்து பிறக்கின்றன இந்த விபரீத சிந்தனைகள்? இதில் நான் படம் காட்டுகிறேன், காணொலி அனுப்புகிறேன் என்று பள்ளி செயலாளர்கள், தொழில்நுட்பத்தை வைத்து மிகப்பெரிய புரட்சியைக் கொண்டுவந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்புகளில் தூரத்தில் திரையில் தெரியும் ஸ்மார்ட் போர்டைப் பார்ப்பதும், வீட்டிலுள்ள கணினியிலோ போனிலோ அருகிலிருந்து பார்ப்பதும் ஒன்றாகாது என்று இவர்களுக்கு யார் புரிய வைக்கப்போகிறார்கள்?
பத்து வயதுச் சிறுவர்களின் கண்பார்வையைச் சவாலாக்கி, அவர்களின் படைப்புத்திறனைக் கேள்விக்குறியாக்கி, அடுத்த மூன்றே மாதங்களில் மாணவர்களின் ஒட்டுமொத்த உடல்ரீதியான மனரீதியான பாதிப்புகளை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்குவது தான் புரட்சிகரத்திட்டமா?
இத்திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான பங்குதாரர் பாசத்துக்குரிய பெற்றோர். தன் பிள்ளையின் படிப்பு போய்விடுமே என்று ஆதங்கப்படுவோர், கட்டிய ஃபீஸுக்கு கண்டதையும் கறந்துவிடமாட்டோமா என்று அலைவோர், பெத்த கடனுக்கு மொபைல் போனோடு போகட்டும், என்னை ஆளை விட்டால் சரி என்று எகிறுவோர், பள்ளி என்ன சொன்னாலும் தலையாட்டுவோர் என்று விதவிதமானவர்கள் இருக்க, வேறுபுறம் விஷயம் தெரிந்தும், நமக்கேன் வம்பு என்று மௌனம் காப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அரசு, பள்ளிகள், பெற்றோர்கள் என மும்முனைத்தாக்குதலோடு இந்த ஆன்லைன் வகுப்புகளை வடிவமைத்துத் தரும் செயலி (App) நிறுவனங்களும் இதில் பெரிய லாபத்தைக்கொண்டாட, வரிந்துகட்டிக்கொண்டு இறங்கி இருக்கின்றன. லாக்டவுன் 5.0 ல், மொபைல் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கத் தகவல்.
இவற்றை ஒரு ஓரம் வைத்து விட்டு சமூகரீதியான சிக்கலைப் பார்ப்போம்.
மொபைல்களும் லேப்டாப்களும் இருந்து இணையத்தொடர்பு இல்லாத குழந்தைகள் எத்தனை? லாக்டவுனிற்கு எங்கோ எப்போதோ தங்கள் கிராமங்களில் தஞ்சம் புகுந்துவிட்ட சிறார்கள், ஆன்லைன் வகுப்புகளுக்கு எங்கே போவார்கள்? எத்தனையோ கனவுகளோடு, கீழ்நடுத்தரமும் நடுத்தரமும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க இந்த கரோனா நேரத்தில் நெட் பேக்குக்கு எங்கே போவார்கள்? இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் தங்கள் போனையோ லேப்டாப்பையோ ஒரு குழந்தைக்குக் கொடுத்து விட்டு மற்றொரு குழந்தைக்கு என்ன செய்வார்கள்? இத்தனை குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு வரும்போது விடுபட்ட எந்தப் பாடத்தை யார் எடுப்பார்கள்? ஆன்லைன் வகுப்புக்கு இணைய வழியின்றி தற்கொலை செய்துகொண்ட கேரள தலித் மாணவிக்கு அடுத்து இங்கும் அக்கொடுமை அரங்கேற வேண்டுமா?
இந்திய அரசியலமைப்பு Article 14-ன் படி, பாகுபாடற்ற கல்விக்கான அடிப்படை உரிமையை உலுக்கும் குற்றம் அல்லவா? கரோனாவால் பசியும் பிணியும் பீடித்திருக்கும் இந்த வேளையில் இந்த சூசகக்குற்றம் நியாயம் தானா?
இவற்றுக்கு நடுவில் தவிக்கும் ஆசிரியர்களின் நிலையும் பரிதாபம் தான். குழந்தைகளுக்கு ஆறு மணி நேரம் என்றால் இவர்களுக்கு எட்டு மணி நேரம். குழந்தைகளுக்கு ‘மைனஸ் 1’ பார்வைக்கோளாறு எனில் ஆசிரியர்களுக்கு ‘மைனஸ் 3’. இது கண்ணாடி வணிகமா? மொபைல் வணிகமா? செயலிகளின் வணிகமா? அல்லது கல்வி எனும் பெருவணிகத்தின் புது பரிணாமமா?
ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் மீது உடல் மற்றும், உளரீதியான வன்முறையைச் செலுத்த இவர்கள் அனைவருக்கும் யார் அதிகாரம் கொடுத்தது?
இன்னும் காலம் கடந்துவிடவில்லை. அரசும் பள்ளிகளும் இணைந்து, இந்த ஆன்லைன் கல்வி முறையை உடனே சீர்படுத்தவேண்டும்.
1. ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு இமெயில் மூலமாக வீட்டுப்பாடம் அளித்து, பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். பெற்றோருக்கு கூடுதல் சுமையாக இருந்தாலும் உண்மையிலேயே விருப்பப்படும் பெற்றோர்கள் இம்முறையை சிரமேற்கொண்டு பயன்படுத்தலாம்
2. ஆன்லைன் வீடியோக்களைத் தவிர்த்துவிட்டு ஆன்லைன் ரேடியோக்களை முயற்சி செய்யலாம். சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் நலந்தாவே என்ற தொண்டு நிறுவனத்தோடு இணைந்து ஆடியோ பாடங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துகின்றன. அரசு நினைத்தால் அதைவிடப் பெரிய அளவில் இதை அனைவருக்கும் கொண்டுவரலாம். அதற்குக் காலம் எடுக்குமெனில், தற்போது உள்ள செயலிகளில் காணொலியை அணைத்துவிட்டு வெறும் கேட்பதோடு சுருக்கிக்கொள்ளலாம்.
3. குறைந்த பட்சம் ‘எங்கள் பிள்ளைகள் கல்வியொளி பெற்றேத் தீரவேண்டும் என்று தகிக்கும் பள்ளி சீலர்கள் 5 -6 மணி நேரத்தை 1-2 என்று குறைத்துக்கொண்டு, நான்கு 30 நிமிடங்களாகவோ, எட்டு 15 நிமிடங்களாகவோ குறைக்கும் பட்சத்தில் பிள்ளைகளின் கண்ணும், அறிவும் உள்ளமும் சிறிதளவேனும் தப்பும்.
உண்மையிலேயே இவை எதுவும் சிறந்த தீர்வாகாது. கரோனா பல்லாயிரம் இன்னல்களைத் தந்தாலும், எப்படி சில ஆண்களைச் சமைக்க வைத்ததோ, எப்படி சில பெண்களை தங்கள் கணவன்மார்களைப் புரிந்து கொள்ள வைத்ததோ, எப்படி சில பெற்றோர்களைப் பிள்ளைகளிடமும் சில பிள்ளைகளை பெற்றோர்களிடம் நாள் முழுக்கக் கொண்டு சேர்த்து நன்மை பாராட்டியதோ, கல்விக்கும் ஒரு நன்மையைச் செய்திருக்கிறது என்று எடுத்துக் கொண்டு, கல்வியமைப்பில் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளை சமையல் பற்றியும், தோட்டங்களைப் பற்றியும், வீட்டுப்பூச்சிகள், பறவைகள் பற்றியும், வீட்டிலுள்ள பெரியோர்களின் வரலாறு பற்றியும் வீட்டுப்பாடங்களை அளிக்கலாம். மார்க் வாங்கும் இயந்திர நிலையில் இருந்து மனித நிலைக்குத் திரும்பிக்கொணர இந்த லாக்டவுனை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்காது.
“புத்தகங்களே! எங்கள் பிள்ளைகளைக் கிழித்து விடாதீர்கள்!“ என்று அப்துல் ரகுமான் கவிதை பாடினார். புத்தகங்களே பிள்ளைகளை கிழிக்கக்கூடும் எனில் ஆன்லைன் என்னென்ன செய்யக்கூடும்?
பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசே! இந்த ஆன்லைன் கல்வியை சீரமைக்கப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். பள்ளிகளைப் பணித்து ஆன்லைன் கல்விமுறையை உடனே சீர்படுத்துங்கள். பெற்றோர்களே! இந்த அரசும் பள்ளிகளும் எவ்வளவு நிர்பந்தித்தாலும், உங்கள் வீட்டில் வளர்பவர்கள் கண்பார்வை அவசியமுள்ள ஐ.பி.எஸ்.ஆகவோ விமானியாகவோ ஆகக்கூடும். படைப்பாற்றல் மிக்க பொறியாளராகவோ, கலை வல்லுநராகவோ ஆகக்கூடும். குழந்தைகள் வீட்டில் வளரும் விலைமதிப்பே இல்லாத பொக்கிஷம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! கையடக்க செல்லிடப்பேசியும் மடியடக்க மடிக்கணினியும் உங்கள் ஆணைக்குத்தான் காத்திருக்கின்றன. கரோனா என்ற பேயிடமிருந்து காப்பாற்றி, நீண்ட நெடிய ஆன்லைன் வகுப்பு எனும் பிசாசிடம் பிள்ளைகளைக் கொடுத்துவிடாதீர்கள்"
இவ்வாறு இயக்குநர் பிரம்மா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago