கரோனா அச்சுறுத்தலில் ரசிகர்களின் தொடர் உதவி: சூர்யா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலிலும் தனது ரசிகர்கள் தொடர்ச்சியாக உதவி செய்து வருவது தொடர்பாக சூர்யா நெகிழ்ச்சியுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தினசரித் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

அவர்களுக்கு மாநில அரசு மட்டுமன்றி, நடிகர்களின் ரசிகர்களும் உதவுவதற்காகக் களத்தில் இறங்கினார்கள். அதில் குறிப்பாக இப்போது வரை சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் தொடர்ச்சியாக உதவிகள் செய்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தினமும் வெளியாகி வருகின்றன.

தனது ரசிகர்கள் உதவி செய்து வருவது தொடர்பாக, சூர்யாவும் ஒரு பேட்டியில் பெருமையாகப் பேசியிருந்தார். இதனிடையே ரசிகர்களின் தொடர் உதவி தொடர்பாக சூர்யா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்த மாதிரியான தருணத்தில் தொடர்ச்சியாக வேலை செய்வது சாதாரணமான விஷயமே அல்ல. இதை யாருக்காவது நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமது மன திருப்திக்காகப் பண்ணுவது. தொடர்ந்து எவ்வளவு நாள் செய்ய முடியும் என்று பாருங்கள். தன்னை வருத்திக் கொள்ளாமல் செய்யப் பாருங்கள். பாதுகாப்பாகவும் இருங்கள். நிஜமாகவே யாருக்கு ரொம்பக் கஷ்டம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் போய்ச் சேருகிறதா என்று ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பார்த்தேன். அதைக் கூடுமானவரைத் தவிர்க்கப் பாருங்கள். நிறைய தம்பிகள் நிறைய இடங்களில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் செய்வதைக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டே இருப்பது சாதாரணமான விஷயமல்ல. ஒரு நிகழ்வு, ஒரு நாள் பண்ணுவது வேறு. வாழ்த்துகள். மனதார வாழ்த்துகள்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE