நண்பர்களுடனான அன்றாட உரையாடல்களில் ஏதேனும் ஒரு புள்ளியில் இளையராஜா வந்து விடுகிறார். “இந்தப் படத்தில் இப்படி ஒரு பாடலை இளையராஜா உருவாக்கியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா?” என்று அவ்வப்போது பரிமாறிக்கொள்ளப்படும் அரிய பாடல்கள், இளையராஜாவின் தீவிர ரசிகர்களுக்கே வியப்பூட்டுபவை. “இந்தப் பாடலை இதுவரை கேட்டிராமல் இருந்துவிட்டோமே” என்றோ, “இந்தப் பாடலின் நுட்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோமே” என்றோ மெலிதான குற்றவுணர்வை ஏற்படுத்திவிடக்கூடியவை.
அப்படியான உரையாடல் ஒன்றின்போது, “இளையராஜாவை எந்த வரையறைக்குள்ளும் எளிதாக அடக்கிவிட முடியாது” என்று ஒரு நண்பர் சொன்னார். எந்த ஒரு மேதையைப் பற்றியும் பொதுவாகச் சொல்லப்படும் வார்த்தைகள்தான் இவை. ஆனால், ராஜாவைப் பொறுத்தவரை இந்த வார்த்தைகள் கூடுதல் அடர்த்தியும், கனமும் கொண்டவை. அந்த அளவுக்குப் பன்முகத்தன்மையுடன் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர் இளையராஜா. ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பரவும் காற்றைப் போல, ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு பாணியிலான இசை வடிவங்களை, இசைக்கோர்வைகளை அதனதன் உச்சம் தொட்டு நிகழ்த்திக் காட்டியவர் அவர்.
வியக்கவைக்கும் பன்முகத்தன்மை
கண்ணதாசன் கடைசியாக எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல் தொடர்பாக ஒரு பேட்டியில் குறிப்பிட்ட இளையராஜா, அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட நாளில் மேலும் இரண்டு பாடல்களைத் தன்னுடைய இசையில் கண்ணதாசன் எழுதினார் என்று குறிப்பிடுகிறார். ஒன்று ‘கூந்தலிலே மேகம் வந்து’ (பாலநாகம்மா), இன்னொன்று ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்ற ‘ராஜா ராணி ஜாக்கி…’ பாடல்.
மூன்றும் வெவ்வேறு சூழலுக்கானவை, வெவ்வேறு உணர்வுகளைச் சுட்டுபவை. வெவ்வேறு நிறங்களைக் கொண்டவை. குறிப்பாக, ‘ராஜா ராணி ஜாக்கி’ பாடலின் முகப்பு இசை அதிநவீனத் தன்மை கொண்டது. குவென்டின் டாரன்டினோ அறிமுகப்படுத்தும் அலட்சியமான அதிரடி நாயகன் ஒருவனுக்கான தீம் இசைக்கு நிகரானது. இந்தப் பன்முகத் தன்மைதான் இளையராஜாவின் தனிச் சிறப்பு.
» சரஸ்வதியின் புதல்வன் இளையராஜா: பாரதிராஜா புகழாரம்
» மணிரத்னம் பிறந்த நாள் ஸ்பெஷல்: தமிழ் சினிமாவின் தேசியப் பெருமை
இத்தனைக்கும் அசாத்தியமான உற்பத்தித் திறனுடன், ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்குக்கூட இசையமைத்திருக்கிறார் இளையராஜா. எந்தத் தேதியில் எந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது, எந்தப் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு நடந்தது என்று இளையராஜாவின் இசைக்குழுவினரே யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது - இளையராஜா உட்பட.
அந்த அளவுக்கு ஏராளமான பாடல்களை, இசைக்கோர்வைகளை உருவாக்கிய இளையராஜா, அந்தந்தப் படங்களின் தொடர்ச்சித் தன்மை (continuity) கொஞ்சம் கூடக் குலைந்துவிடாமல் பார்த்துக்கொண்டார். அந்தந்தப் படத்துக்கான பிரத்யேக நிறத்தைத் தக்க வைத்துக்கொண்டார். இது மிகப் பெரிய சாதனை. தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலகட்டத்திலும் எந்த ஓர் இசையமைப்பாளருக்கும் சாத்தியமாகாத விஷயமும்கூட.
தண்ணீரைப் போன்றவர்
இளையராஜாவைப் பொறுத்தவரை இவையெல்லாம் சாத்தியமானதற்கு முக்கியக் காரணம், அவர் ஓர் அசாத்திய மேதை என்பது மட்டுமல்ல, “நான் தண்ணீர் மாதிரியானவன். எந்தப் பாத்திரத்தில் போடுகிறீர்களோ அந்தப் பாத்திரத்தின் தன்மையை எடுத்துக்கொள்கிறேன்” என்று பேசுபவர். அதனால்தான், கதைக்கு, சூழலுக்குத் தகுந்த இசையை அவரால் எளிதாக, மிகத் துரிதமாக உருவாக்க முடிகிறது.
இசையைப் பொறுத்தவரை மேதைகள் என அறியப்படுபவர்களின் படைப்பாக்கப் பட்டியல்கள் குறைவாகவே இருக்கும். அதிக ஆண்டுகள் படைப்புலகில் இயங்கினாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைப்புகளையே தருவார்கள். இந்தித் திரையுலகின் முக்கிய ஆளுமையான நவ்ஷாத் ஓர் உதாரணம். 1940-லிருந்து 1990-கள் வரை இசையமைப்பில் ஈடுபட்ட நவ்ஷாத், மொத்தமாக இசையமைத்த படங்களின் பட்டியல் 100-க்குள் அடங்கிவிடும்.
ஆனால், இளையராஜாவின் பட்டியல் 1,000-ஐக் கடந்தது. பாடல்களின் எண்ணிக்கை, 6,000-க்குக் குறையாது. ஹிட் அடித்த பாடல்கள், அதிகம் கவனம் பெறாத – அதேசமயம் நுட்பமான இசைக்கோர்வைகள் கொண்ட பாடல்கள், மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படும் பின்னணி இசைக்கோர்வைகள் என்று ஏராளமான படைப்புகளைத் தந்தவர் இளையராஜா.
சட்டகங்களுக்குள் அடங்காதவர்
இளையராஜாவுக்கு இசைஞானி எனும் பட்டம் கிடைத்தது 1988-ல். அவர் நினைத்திருந்தால், அந்தப் புள்ளியிலிருந்து சாஸ்திரிய இசையை அடிப்படையாகக் கொண்ட கதைகளை மட்டும் தேர்வுசெய்து இசையமைத்து தனக்குக் கொடுக்கப்பட்ட பட்டத்துக்கு ‘நியாயம் சேர்க்க’ முயன்றிருக்கலாம். செமி கிளாசிக்கல் எனும் வடிவத்தைத் தாண்டி, கர்நாடக இசை – மேற்கத்திய இசையின் சரிவிகிதக் கலவையாக ஃபியூஷன் இசைக்கோர்வைகளை அவர் அதீத நுட்பத்துடன் உருவாக்கிக்கொண்டிருந்த காலம்தான் அது. பால் மரியா போன்ற மேற்கத்திய இசை மேதைகளுடனான உரையாடலில், மேற்கத்திய இசையைவிட இந்தியாவின் சாஸ்திரிய இசைதான் சிறந்தது என்கிற ரீதியில் பேசக்கூடியவரும்கூட.
ஆனால், சாஸ்திரிய இசை எனும் ஒற்றை அடையாளத்துக்குள் ஒளிந்துகொள்ளாமல் வெவ்வேறு இசை வடிவங்களைக் கொண்டு வெற்றிகரமான இசையைத் தரவே அவர் விரும்பினார். ஆரம்பத்திலிருந்தே ஒரு சட்டகத்துக்குள் அடைக்கப்படுவதை அவர் விரும்பியதில்லை. இலக்கண மரபுகளை மீறாமல் அதன் எல்லைகளுக்குள்ளேயே இயங்க வேண்டும் என்று அவர் அஞ்சிக்கொண்டிருக்கவில்லை. “சட்டம், வரையறைகளுக்குள்ளேயே இயங்கும் ஒருவன் கலைஞனாகப் பரிணமிக்க முடியாது” என்று பிரேம் - ரமேஷ் எழுதிய ‘இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்’ நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு பேட்டியில் இளையராஜா கூறியிருக்கிறார். மரபுகளை முழுமையாக உள்வாங்கி, தேவைக்கேற்ப அவற்றை மீறும் அவரது துணிச்சல், கறாரான விமர்சகரான சுப்புடுவை வியக்க வைத்தது.
எல்லா வடிவங்களிலும் விற்பன்னர்
‘என்னுள்ளில் எங்கோ’ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) போன்ற நுட்பமான பாடலை ஒரு மேதையால்தான் தர முடியும். வேறொரு மேதையாக இருந்தால், அதே படத்தில் ‘வெத்தல வெத்தல வெத்தலையோ’, ‘மாமேன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்’ போன்ற கிராமியப் பாடல்களைத் தர முடியாது. ஆனால், இளையராஜாவால் அது முடியும். ஏனெனில், அவர் தன் எல்லாப் படைப்புகளையும் சம அளவிலேயே மதித்தவர். “இளையராஜாவின் இசையில் மேதாவிலாசத்தைப் பார்க்க முடியாது. காட்சிக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துவார்” என்பார் சுப்புடு. அதுதான் இளையராஜாவின் பலம்.
‘அன்னக்கிளி’, ‘16 வயதினிலே’ போன்ற படங்களைத் தொடர்ந்து, ‘கிராமிய இசை மட்டும்தான் தெரியும் போலும்’ என்று பேசியவர்களை, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ப்ரியா’ போன்ற படங்களில் மேற்கத்திய இசைக்கோர்வைகள் மூலம் வாயடைக்கச் செய்தவர். சாஸ்திரிய இசையில் தனக்கு இருக்கும் ஆழமான அறிவை ‘ராஜபார்வை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் வெளிப்படுத்தினார். மேற்கத்திய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி, தமிழக நிலப்பரப்புகளை உருவகப்படுத்தினார்.
தனது தொடர்ச்சியான படைப்பு வெளிப்பாட்டின் மூலம், தமிழ் சினிமா வணிகத்தின் வளர்ச்சியில் அதிகபட்ச உத்தரவாதம் தரும் கருவியாகவும் இருந்தார். அதனால்தான், படத்தின் போஸ்டரில் பிரதானமாக இடம்பிடிக்கின்ற, கட்-அவுட்டில் இடம்பெறும் ஆளுமையாகத் திரைத் துறையில் அவரால் கோலோச்ச முடிந்தது.
அடங்காத கலைத் தாகம்
‘மணிச்சித்திரதாழு’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைத் தனக்குத் தராதது ஏன் என்று ஃபாசிலிடம் உரிமையுடன் கடிந்து கொண்டிருக்கிறார் ராஜா. அன்றாடம் நான்கைந்து பாடல்கள், ஒன்றிரண்டு படங்களின் பின்னணி இசைச் சேர்ப்பு என்று நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த ராஜா, தனது அசுரப் பசிக்கான தீனி கிடைக்கும் படங்களுக்கும் காத்திருக்கவே செய்தார். அதனால்தான், கமல்ஹாசனின் பங்களிப்பில் வெளிவந்த ’தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘ஹேராம்’, ‘விருமாண்டி’, பிரியதர்ஷன் இயக்கிய ‘காலாபானி’, நாசரின் ‘அவதாரம்’, சுரேஷ் அஞ்சலின் ‘குரு’ போன்ற படங்கள் எழுப்பிய சவால்களை ஏற்று அற்புதமான இசைக்கோர்வைகளைத் தந்தார்.
தனது பணியில், படைப்பாக்கத்தில் எத்தனை நேர்மையையும், கறார்த்தன்மையையும் அவர் கடைப்பிடித்திருப்பார் என்பதை, அவரது சமீப காலத்திய மேடைக் கச்சேரி நிகழ்வுகளில் நம்மால் உணர முடியும். அந்த அர்ப்பணிப்புதான் அவரது இசைக்கு இறவாத் தன்மையைத் தந்திருக்கிறது. அதனால்தான், அவரது இசையைக் கொண்டாடும் ரசிகர்களின் வாழ்த்துப்பாக்கள் சமூக வலைதளங்களின் டைம்லைனை நிறைத்திருக்கின்றன.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளையராஜாவே!
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago