சினிமாவில் எல்லோருக்கும் சிறந்த அறிமுகம் அமைந்துவிடவதில்லை. அப்படியே அமைந்தாலும் அந்த அறிமுகப் படம் எதிர்பார்த்த வெற்றியும் நற்பெயரும் பெற்றுவிடுவதில்லை. அறிமுகப் படத்தில் அரிதாகக் கிடைக்கும் வெற்றியையும் நற்பெயரையும் அடுத்தடுத்த படங்களில் தக்கவைத்துவிடுவதில்லை. இப்படித் தக்கவைத்த பிறகும் சில பின்னடைவுகள் ஏற்படுவதை அனைவராலும் தவிர்க்க முடிந்துவிடுவதில்லை. அந்தப் பின்னடைவுகளையும் அதனால் ஏற்படும் இடைவெளிகளையும் கடந்த பிறகும் மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்து ரசிகர்களாலும் திரைப்படத் துறையினராலும் மதிக்கப்படும் ஆளுமையாகவும் முன்னணி நடிகராகவும் தொடர்ந்து முன்னிலை வகிப்பது மிக மிக அரிதான சாதனை. அப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியவரான நடிகர் மாதவனுக்கு இன்று (ஜூன் 1) பிறந்த நாள்.
கிடைத்தான் கனவு நாயகன்
2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற மணிரத்னம் இயக்கிய ’ அலைபாயுதே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழில் அறிமுகமானார் மாதவன். அதற்கு முன்பு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்தி, கன்னட மொழிகளில் தலா ஒரு படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தமிழில் முதல் படத்திலேயே கதாநாயகன்! அதுவும் மணிரத்னம் படம்! சினிமா துறையில் இன்றைக்கும் பலருடைய வாழ்நாள் கனவு முதல் படத்திலேயே நனவானது.
அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் சாகாவரம் பெற்ற காதல் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. ரசிகர்கள், குறிப்பாக இளம்பெண்கள், முதல் பார்வையிலேயே மாதவனால் கவரப்பட்டனர். பல பெண்களின் கனவு நாயகனானார் மாதவன். இத்தனைக்கும் ‘அலைபாயுதே’ படத்தில் நடித்தபோது மாதவன் 30 வயதை நெருங்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த நேரத்தில் அவருடைய உண்மையான வயதைச் சொல்லி இருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அந்த அளவு ஒரு கல்லூரி மாணவனுக்கான இளமைத் தோற்றத்துடன் இருந்தார். அடுத்த ஆண்டு வெளியான ‘மின்னலே’ படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்த காட்சிகள் திரையில் பட்டாசாக வெடித்தன. அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அடுத்ததாக மணிரத்னம் தயாரிப்பில ஆழகம் பெருமாள் இயக்கிய ‘டும் டும் டும்’ படமும் வெற்றி பெற்றது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் அரவிந்த் சாமி, அப்பாஸ் வரிசையில் காதல் படங்களுக்கேற்ற சாக்லேட் பாய் ஹீரோவாக மாதவன் கொண்டாடப்பட்டார்.
காதல் படங்களைக் கடந்து...
ஆனால் தொடர் வெற்றிகளுக்குப் பிறகும் மாதவன் ‘சாக்லேட் பாய்’ அந்தஸ்துடன் நின்றுவிடவில்லை. மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் நிறைந்த படத்தில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தின் வெற்றியின் மூலம் ஆக்ஷன் படங்களிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தார். அப்போது முன்னணி இயக்குநர்களான விக்ரமன் (’பிரியமான தோழி’), சரண் (’ஜே ஜே’), கே.எஸ்.ரவிகுமார் (’எதிரி’), சுந்தர்.சி (‘ரெண்டு’) ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இந்தப் படங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.
இவற்றுக்கிடையில் ‘அன்பே சிவம்’ படத்தில் கமல் ஹாசனுடன் துணை நாயகனாக நடித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆயுத எழுத்து’ படத்தில் முற்றிலும் எதிர்மறை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றாலும் வணிக வெற்றியைப் பெறவில்லை.
மேதமையைப் போற்றும் கலைஞன்
இந்தப் படங்களில் நடித்தது குறித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பேட்டியில் பேசும்போது “மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற மேதைகளிடம் சினிமா கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அவர்களுடன் பணியாற்றும் நல்வாய்ப்பை நான் தவறவிடவே மாட்டேன். எனக்கு என்ன கதாபாத்திரம், படத்தின் வணிக வெற்றி எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்” என்று சொன்னார் மாதவன். இதிலிருந்தே ஒரு நடிகராக அவருடைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ளலாம்.
இடையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. சீமான் இயக்கத்தில் ‘தம்பி’ படத்தில் தன் இமேஜுக்கு முற்றிலும் வேறான கதாபாத்திரத்தில் நடித்தார். முழுக்க முழுக்க தமிழ் பேசினார். அந்தப் படம் முழுவதும் கண்களை இமைக்காமல் நடித்தார். எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடிப்பதற்குத் தேவையான எப்பேற்பட்ட உருமாற்றத்துக்கும் தான் தயார் என்பதை ’தம்பி’ படத்தின் மூலம் நிரூபித்தார்.
நல்ல படங்களில் பங்கேற்கும் முனைப்பு
பெரிதும் பாராட்டப்பட்ட மராத்தி படமான ‘டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை தமிழுக்குக் கொண்டுவந்ததில் பெரும் பங்காற்றினார் மாதவன். அந்தப் படத்தில் நடித்ததோடு வசனமும் எழுதினார். இணைத்தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல படைப்புகளை தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசேர்க்கும் பாராட்டத்தக்க உத்வேகம் அவருக்கு இருப்பது இந்தப் படத்தின் மூலம் புலனானது.
விக்ரம் குமார் இயக்கிய தமிழ்/ இந்தி இருமொழிப் படமான ‘13பி’/’யாவரும் நலம்’ தமிழ் சினிமாவில் இதுவரை வந்துள்ள பேய்ப் படங்களில் கதை, உருவாக்கம் தொழில்நுட்பத் தரம் என அனைத்து வகைகளிலும் உயர்ந்து நிற்கும் படைப்பு. அந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது.
மீண்டும் ‘மன்மதன் அம்பு’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார். காதலியைச் சந்தேகப்படுவது, நம்பியவர்களை ஏமாற்றுவது. குடித்துவிட்டு சலம்புவது என படம் முழுக்க ஒரு கேலிக்குரிய செய்கைகளில் ஈடுபடும் கதாபாத்திரத்திலேயே நடித்தார். அந்தப் படம் வெற்றியடையவில்லை. ஆனால், மாதவன் மிகச் சிறப்பாக நடித்த படங்களில் அதுவும் ஒன்று. குறிப்பாக இரண்டாம் பாதியில் மதுபோதையில் ஆழ்ந்திருப்பவரைக் கண்முன் நிறுத்தியிருப்பார்.
அடுத்ததாக லிங்குசாமி இயக்கிய ‘வேட்டை’ படத்திலும் இரண்டாம் நாயகனாக நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டார்.
அசத்தலான மறுவருகை
2016இல் மணி ரத்னத்தின் உதவி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச் சுற்று’படத்தில் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவனின் மறுவருகை நிகழ்ந்தது. அந்தப் படத்தில் அவருடைய கட்டுக்கோப்பான உடலமைப்பும் அதற்காக அவருடைய மெனக்கெடலும் ரசிகர்களை வியக்க வைத்தது. யாரையும் மதிக்காத, விதிகளுக்கு கட்டுப்படாத, அசலான திறமைசாலிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் பயிற்சியாளராக அசாத்தியமாக நடித்து ரசிகர்களை அசத்தினார். படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அடுத்த ஆண்டு வீரமும் விவேகமும் திமிரும் நிறைந்த காவல்துறை அதிகாரியாக ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். நரைத்த தாடியையும் தாண்டி தோற்றத்தில் இளமை கொப்பளித்தது. என்கவுன்ட்டர் கொலைகள் செய்யத் தயங்காத காவல் அதிகாரியாகவும் இந்தக் கொலைகளால் ஏற்படும் மனித இழப்புகள், குற்றங்களுக்குப் பின்னால் இயங்கும் சுயநல அரசியல் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு திருந்தும் மனிதராக சிறப்பாக நடித்திருந்தார்.
பாலிவுட்டில் சாதித்த தமிழர்
தொடக்கக் காலத்திலிருந்தே இந்திப் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். ‘ரங் தே பசந்தி’, ‘த்ரீ இடியட்ஸ்’ என அமீர் கானின் மிக முக்கியமான திரைப்படங்களிலும் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி மணிரத்னம் இயக்கிய ‘குரு’ திரைப்படத்திலும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நாயகனாக நடித்த இந்திப் படங்களில் கங்கணா ரணாவத்துடன் இணைந்து நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ என்கிற அதன் இரண்டாம் பாகமும் வெற்றிபெற்றது. இந்த வெற்றிகள், மூலமும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் நல்ல படங்களுடன் தன்னை எப்படியாவது இணைத்துக்கொள்ளும் பண்பு ஆகியவற்றின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரை ஆளுமைகளின் அன்புக்குரிய தமிழராகவும் விளங்குகிறார் மாதவன்.
நடிக்க வருபவர்களுக்கான பாடம்
நட்சத்திர அந்தஸ்து, கதாநாயகனாக நடித்துக்கொண்டிருப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகராகவும் நல்ல படங்களில் பங்கேற்பதுமே மாதவனுக்கு முக்கியமானவையாக இருந்திருக்கின்றன என்பதற்கு அவரது படங்களே சாட்சி. இமேஜ் பற்றி கவலைப்படாமல் இருப்பது, நாயகன், குணச்சித்திரம், வில்லன் என எல்லா வகையான கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிப்பைத் தருவது. கதாபாத்திரத்துக்குத் தேவையான உருமாற்றத்தைத் திரையில் நிகழ்த்திக் காட்டுவது, அதற்காக உழைப்பது, நல்ல கதைகளுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருப்பது ஆகியவை நடிகராக விரும்புபவர்கள் மாதவனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
இயக்குநர் மாதவன்
தற்போது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ என்ற தமிழ், இந்தி, ஆங்கில மும்மொழிப் படத்தில் நம்பி நாராயணனாக நடித்துவருகிறார் மாதவன். அந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதிக்க உள்ளார்.
ஒரு நடிகராக மாதவனின் வெற்றிப் பயணம் தொடரவும் இயக்குநராக முத்திரை பதிக்கவும் இந்தப் பிறந்த நாளில் மாதவனை மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago